சின்னஞ் சிறிய பிராய மனசு. தெளிந்த நீரோடை போல இன்றைக்கு நினைத்தாலும் மனதை வருடும். அத்தகைய மனசு இருந்த இடத்தில் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் மனசு இருக்கிறது. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்து அனுபவித்து தெளிந்த நீரோடை போன்ற மனதை அழுக்கு நிறைந்த சாக்கடையாக மாற்றிக் கொண்டே வருகிறோம்.
எனக்குள் உறைந்து கிடக்கும் அற்புதமான ஓவியம் சின்னஞ் சிறிய வயதில் நான் வளர்ந்த வீடு. என் வீடு அல்ல அது. என் தாய் பிறந்த வீடு அது. அகலமான கற்கள் பாவிய வாசல். மூன்று புறமும் செங்கற்கள் வைத்து அழகாக பூசப்பட்டிருக்கும். தெற்கு வாசல் வீடு. வடக்கேயும் வாசல் இருக்கும். வடக்குப் பக்கம் குடத்தடி. வரிசையாக குடங்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும். குடத்தடியில் ஒரு மாமரம் இருக்கும். அழகான பூக்களைச் சொரிந்து கொண்டிருக்கும். இடது பக்கமாய் குப்பைக் கிடங்கு. கிடங்கினை ஒட்டியவாறு தென்புறமாய் கிழமேலாய் ஒரு கூரை வீடு. வேலைக்காரர்கள் தங்கிக் கொள்ளவும், ஆட்டுக்குட்டிகளையும், மாடுகளையும் கட்டி வைப்பதற்கு இருக்கும். குடத்தடியைத் தாண்டி கிழமேலாய் பெரிய வைக்கோல் போர் இருக்கும். இதற்கு வடக்குப் பக்கமாய் நான்கு பேர் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் அடங்காத அளவில் பெரிய மாமரம். அதன் வடக்கே காசாலட்டு மாமரமும், ஒட்டு மாமரமும், பாவற்காய் போலவே காய்க்கும் ஒரு மாமரமும் வட மேற்கு மூலையில் தண்ணீர் வற்றவே வற்றாத கிணறும் அதைத்தாண்டி ஒரு பெரிய பனைமரமும் இருந்தது.
பெரிய அகலமான ஓட்டு வீடு. திண்ணை, நடு வீடு, இரண்டு பக்கமும் இரண்டு அறைகள், பிறகு சமையல் கட்டு என்று பார்ப்பதற்கே படு ரகளையாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் அந்த வீட்டினை இடிக்கப் போகிறார் மாமா. அருகில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். பழையது ஆனால் குப்பைக் கூடைக்குத்தானே போக வேண்டும்.
வீட்டில் மாடுகளும், செம்மறி ஆடுகளும் அதிகம். பால் மாடும், கன்றுகளும் இருக்கும். வண்டி மாடுகள் இரண்டு ஜோடி இருக்கும். மழைக்காலங்களில் வயற்காடுகளில் இருந்து புற்கள் அறுத்துக் கொண்டு வந்து ஆட்டுகுட்டிக்கும் மாடுகளுக்கும் போடுவார்கள். கரக் கரக் என்று வாய் கொள்ளாமல் ஆட்டுக்குட்டிகளும் மாடுகளும் தின்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாய் பேசாத ஜீவன்களுக்கு உணவிடுவதையும், அதுகள் வாய் கொள்ளாமல் தின்பதையும் காண்பதை விட மகிழ்ச்சியான தருணங்கள் ஏதுமில்லை.
கோடைக்காலங்களில் ஆட்டுக்குட்டிகளையும், மாட்டு மந்தையினையும் வேலைக்காரர்கள் புல் மேய அழைத்துச் சென்று மாலையில் அத்தனையையும் கொண்டு வந்து கயிற்றில் கட்டி வைப்பார்கள்.
ஒரு கோடை நாள் என்று நினைக்கிறேன். வீட்டில் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று விட்டனர். ஜெயராசு எங்கோ சென்று விட்டான். நான் மட்டுமே இருந்தேன். கொட்டகைப் பக்கம் வந்து பார்த்தால் பசியில் ஆட்டுக்குட்டிகள் கத்திக் கொண்டிருந்தன. எனக்கு மனசுக்குப் பொறுக்கவில்லை. ஜெயராசு எங்காவது ஒதுங்கப்போயிருப்பான் போல. கொலுசு ராவுத்தர் வீட்டின் அருகில் தரையில் படர்ந்து இருக்கும் புற்களைச் செத்தி எடுத்து வந்து கொடுக்கலாம் என்று நினைத்து உழவாரத்தை வைத்து தரையோடு தரையாக படர்ந்து கிடந்த புற்களை செத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக செத்தச் செத்த புற்கள் கையோடு வந்தன. எடுத்து மண்ணை உதறி விட்டு அருகில் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டே வந்தேன். புற்களைப் பூமியில் இருந்து பறித்த போது அதன் வேர்கள் அறுந்து கூடையில் விழும் போது எழுந்த அற்புதமான வாசம் என்னைத் தழுவியது. மனது சிலிர்த்தது. மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் புற்களைச் செத்தினேன். கொண்டு வந்து ஆட்டுக்குட்டிகளிடையே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு செத்தையாக எடுத்து ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கொடுக்கையில் அதுகள் கடித்து மெல்லுகையில் எழுந்த வாசம் இன்றைக்கும் என்னை விடாது சூழ்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்து போன ஒரு நாளில், பெரியசாமி கவுண்டர் தன் வீட்டுத் தோட்டத்தில் சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டியைக் கட்டி வைத்திருந்தார். அழகான சிறு ஆட்டுக்குட்டி அது. அருகில் வேப்பந்தழைகளைக் கட்டி வைத்திருந்தார். இழந்து போன எதையோ மீண்டும் பார்த்தைப் போல இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு நானமர்ந்திருந்த கட்டிலில் கட்டி வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் அதன் தலையில் கையால் தட்டிக் கொண்டிருந்தேன். அது கோபமாய் பின்னே போவதும் பின்னர் முன்னே வந்து கால்களை உயரத் தூக்கி முட்டுவதுமாய் இருந்தது. நீண்ட நேரம் அது கூட விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் புல்லைத்தான் காணவில்லை. கவுண்டர் எங்காவது உழவாரம் வைத்திருக்கின்றாரா என்று தேடின என் கண்கள்.
“அங்கே என்னத்தை அப்படித் தேடுறீங்க?” என்றாள் மனைவி.
பிளாக்கைப் படிக்கும் அன்பு நண்பர்களே! ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களின் சின்னஞ் சிறிய பிள்ளைப் பிராயத்து நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வாருங்கள். ஏதோ ஒரு வாசம் அந்தப் பிராயத்திலிருந்து விடாது உங்களையே சுற்றிக் கொண்டிருப்பது நினைவில் வருகிறதா? வரும்!
இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது உழவாரமும் அந்தப் புற்களின் வாசமும்?