குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 25, 2024

மனு - மனு நீதி சோழன் - மனுதர்மம் - என்ன உண்மை?

அன்பு நண்பர்களே,

மனுதர்மம், மனுவின் தர்மம், சனாதன தர்மம் ஆகியவை  எப்படி? எங்கனம்? இங்கு பரப்பப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கவிருக்கிறேன்.  கொடுமை என்னவென்றால் மனிதர்களின் தற்பெருமை ஒரு இனத்தை எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தி இருக்கிறது எனும் அசரடிக்கும் உண்மையை எழுதிக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போல ஆதாரங்களுடன். 

விரைவில் அந்தப் பதிவு.


Friday, May 24, 2024

இர்பானுக்கு மன்னிப்பு - சட்டம் பிரபலமானவர்களின் காலடியில் புதைக்கப்படுமா?

இர்பான் என்ற ஒரு தனி நபர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கேலிக்கு ஆட்படுத்தி இருக்கிறார். பிரபலமாக இருப்போர் தன் செயலைப் பலரும் கவனிப்பார்கள் என்ற நினைவு இல்லாமல் இருப்பார்கள் என்று நம்ப நாமொன்றும் முட்டாள்கள் இல்லை.

உலகெங்கும் சுற்றிச் சுற்றி சாப்பிட்டு - அது சரியில்லை, இது சரியில்லை, இங்கே நல்லா இருக்கு, அங்கே நல்லா இருக்கு என பல ஹோட்டல்கள் நடத்தியவர் போலவும், சமையல் கலையில் உலகளவில் தேர்ந்தவர் போலவும் - பல வீடியோக்களைப் போட்டு காசு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபர் - தான் செய்த செயல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரியாமல் வீடியோ போட்டார் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் - அதை சட்டம் ஏற்றுக் கொண்டால் - சட்டம் செத்துப் போனது போல் ஆகும்.

இர்பான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர். வீடியோ எடுக்கும் போது அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்ற சட்டம் பற்றித் தெரியாதா? 

இவரின் மனைவி மருத்துவமனைக்கு ஆலோசனைக்குச் சென்றிருப்பாரே அப்போது ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்று தெரியாமலா வீடியோ எடுத்தனர்.

தெரியாமல் செய்து விட்டேன். மன்னிப்பு  தாருங்கள் என்றால் - சட்டம் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இனி எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பே தண்டனை என்றால் சிறைச்சாலை எதற்கு? 

காவல்துறை எதற்கு? 

வக்கீல்கள் எதற்கு? 

நீதிமன்றம் எதற்கு? 

நீதிபதி எதற்கு? 

விசாரணை எதற்கு? 

எதுவும் தேவையில்லையே. தேவையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தினை ஏன் செலவு செய்ய வேண்டும்.

தெரியாமல் ஹெல்மெட் போடவில்லை - போக்குவரத்துக் காவல்துறை மன்னிக்குமா?

போர்சே காரை தெரியாமல் எடுத்து இருவரைக் கொன்று விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் ஊழல் செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

தெரியாமல் கொலை செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?

இவருக்கு மன்னிப்பு வழங்கினால் சட்டம் தன் மதிப்பை இழக்கும். நீதிமன்றம் தன் மாண்பை இழக்கும். சட்டசபைகளில் சட்டம் இயற்றி, ஆளுநர்களிடம் போராடி சட்டமியற்றினால் இர்பான் போன்றவர்கள் அதை மீறினால் சட்டசபைக்கு என்ன மரியாதை? 

சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதிக்கு என்ன மரியாதை?

ஏன் மக்கள் ஓட்டுப்போட வேண்டும்? சட்டசபை எதற்கு? ஜனாதிபதி எதற்கு? எல்லாவற்றையும் நீக்கி விடலாமா?

இர்பானின் திமிர் இது. 

தன்னை மீடியாவில் பேசுபொருளாக மாற்றவும், எப்போதும் தனக்கொரு ஹைப் இருக்க வேண்டுமென்பதற்காகவும் - இதைப் போன்ற சட்டத்தினை மீறும் வீடியோவை இர்பான் போட்டிருக்கிறார்.

இவருக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை எனில் தமிழக அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதப்படும் நிலை உண்டாகும்.

என்ன வேண்டுமானாலும் செய்வேன் - செய்து விட்டு மன்னிப்புக் கேட்பேன்  என்றால் அவனுக்கு சட்டம் என்ன செய்யும் என்று சட்டப்படி காட்ட வேண்டும். இல்லையெனில் சட்டம் பிரபலங்களின் காலடியில் புதைக்கப்படும்.

இவரைப் பாலோ செய்யும் இளம் தலைமுறையினருக்கு சட்டத்தை மீறினால் - மன்னிப்புக் கேட்டால் போதும் என்ற எண்ணம் ஏற்படும். அது சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல சமுதாயத்தில் தேவையற்ற அமைதியின்மையை உண்டாக்கும்.

தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவர் மீது சட்டப்படியான கடுமையான தண்டணையைப் பெற்றுத் தர வேண்டும்.

உணவுகளைப் பற்றி வீடியோக்களில் பேசும் இர்பான் - என்ன படித்திருக்கிறார்? உணவுகள் பற்றியும், அந்த உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் பற்றியும் - அதன் பின் விளைவுகள் பற்றியும் தெரிந்திருக்கிறாரா? பின் எப்படி அந்த உணவு நன்றாக இருக்கிறது, இது சுமாராக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்? 

இவரின் வீடியோக்களில் காட்டப்படும் உணவகங்களை - தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆராய்ந்திருக்கிறதா?  இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வரும் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - சட்டத்தினை மீறும் அனைவருக்கும் - அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்.

சவுக்கு சங்கரும் ஃபெலிக்ஸும் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா சட்டம்? இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இவர்கள் இருவருக்கும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்...!


Wednesday, May 22, 2024

சவுக்கு சங்கர் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு - உண்மை என்ன?

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சவுக்கு சங்கரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, காவல்துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி என்கிறீர்களா?

சங்கரின் ஆரம்பகாலத்திலிருந்து நான் அவரைக் கவனித்து வருகிறேன். அவரின் கட்டுரைகளைப் படித்தும் வருகிறேன். முன்னாள் நீதிபதி செல்வத்தைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து, த ரிப்போர்ட்டர்ஸ் கலக்டிவ் எனும் இணையதளத்தில் வெளியாகும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, சவுக்கு ஆன்லைனில் பதிப்பித்த போதெல்லாம் படித்திருக்கிறேன்.

சங்கர் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஊழல் உளவு அரசியல் புத்தகத்தைப் படித்த போது அறிய முடிந்தது. இந்தப் புத்தகத்தை அவன் பட்டும்படாமல், சொல்ல வந்த எதையும் சொல்லாமல், ஒப்புக்குச் சப்பாணியாக வெளியிட்டிருந்தான். படித்த போதே தெரிந்தது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறான் இவன் என்பது.

தொடர்ந்து அவனின் அடுத்த கட்டம் அரசியலை நோக்கியும், தனியார் செய்திகளில் அடிபட்ட பணக்காரர்கள் பக்கம் திரும்பியது. சோர்ஸ் என்றொரு வார்த்தையை வைத்துக் கொண்டு, பலரையும் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்ததை நாமெல்லாம் பார்த்தோம்.

ஒரு வருடத்திற்கு முன்பு, நினைவில் இல்லாத ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஃபெலிக்ஸிடம் பேசிய போது, நானொரு ஏழை என்று என்னிடம் சொன்னான்.  ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை அதுவும் ஒருவருடத்திற்குள் வாங்கி வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ் என்று செய்தி வெளியாகி உள்ளது.

ஃபெலிக்ஸின் யூடியூப் சானலில் சங்கர் பேசிய போது, இதன் பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது என்று புரிந்தது. அன்றிலிருந்து அவனது வீடியோவைப் பார்ப்பதுமில்லை. அவனது இணையதளத்தினைப் படிப்பதும் இல்லை.

ஒவ்வொரு தேர்தலும் தான் இவனைப் போன்றவர்களுக்கு டார்கெட். 

தேர்தல்களின் போது சோஷியல் மீடியா மூலம் அரைகுறை அல்லு சில்லுகளை இவர்களால் டார்கெட் செய்யப்படும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட விடாமல் செய்யலாம் என்ற திட்டத்திற்காக, வாட்சப் வாலிப வாலிபிகளை மூளைச் சலவை செய்வதற்காக - இவர் தன்னை ஒரு உண்மை பத்திரிகைகாரராக பதிவு செய்து வந்திருக்கிறார். வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கையில் ஃபேஸ்புக் மெட்டா நிறுவனம் போலி செய்திகளை விளம்பரமாக்கியதை அனுமதித்துள்ளது என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.


https://www.theguardian.com/world/article/2024/may/20/revealed-meta-approved-political-ads-in-india-that-incited-violence#:~:text=Revealed%3A%20Meta%20approved%20political%20ads%20in%20India%20that%20incited%20violence,-Exclusive%3A%20Ads%20containing&text=The%20Facebook%20and%20Instagram%20owner,shared%20exclusively%20with%20the%20Guardian.

மேலே இருக்கும் இணைப்பினைச் சொடுக்கி கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள்.

இப்படி பலரைப் பற்றியும் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்பி, உண்மையை தெரிந்து கொள்ள விடாமல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் கொடுக்கும் காசுக்கு தன்னை நம்பிய மக்களின் முதுகில் குத்தியிருக்கிறார்கள் இந்த இருவரும்.

உள் அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடியாத, தெரியாத மக்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்தும், இன்னும் பல ரகசியமான வேலைகளைச் செய்து, பாலோயர்களை அதிகப்படுத்தியும் வந்திருக்கிறார்கள் இருவரும்.

இவர்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உண்டு என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதன் காரணமாக கட்சிகளிடம் பணம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.

ஒரு துரோகியின் கட்சியும், ஒரு இனத்துரோகியின் கட்சியும் இவனுக்கு கோடிக்கணக்கான ரூபாயை - திமுகவைப் பற்றி அவதூறு பேசவும்,  ஓட்டுக்கள் கிடைக்கா வண்ணம், சாமர்த்தியமாக போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் மற்றும் பல யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்து விட்டதை அறிந்த பின்னால், காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்டால் சொல்ல வேண்டுமே என்பதற்காக, பக்காவாக பிளான் போட்டு, ஒரு அவதூறு வீடியோவை வெளியிட்டு, கைது செய்ய வைத்து, காவல்துறைப் பாதுகாப்புடன் ஜெயிலுக்குள் அடைக்கலமாகி விட்டனர் என்றே நம்பத் தோன்றுகிறது.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம். இவர்களைப் போன்ற மக்களை ஏமாற்றி போலிப் பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் துரோகத்தையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களை நம்பவே கூடாது.

திருடனுக்கு தேள் கொட்டியது போல அந்த இரு கட்சி துரோகிகளும் கள்ள மவுனத்தில் இருப்பர். இவர்கள் இருவரும் கணக்கு கொடுக்காமல், எல்லாம் செலவாகி விட்டது என்றுச் சொல்லி விடுவார்கள்.

அடுத்த தேர்தலுக்கு மற்றொரு கட்சியிடமிருந்து பணம் பெற்று, வழக்கம் போல அறியாமையால் கிடக்கும் மக்களை ஏமாற்றுவர்.

மேலும் இதோ தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி. படித்து வையுங்கள்.

Monday, May 20, 2024

நீதியின் அநீதி - இரண்டாவது நூல்

 அன்பு நண்பர்களே!

அனைவருக்கும் வணக்கம்.  குறுஞ்செய்தி மாத இதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்த போது எழுதிய தொடர் “நீதியின் அநீதி”.

இந்தியாவில் நடந்த மதம் தொடர்பான கலவரங்களின் பின்பு மனிதர்கள் தன் சக மனிதர்களைக் கொன்றொழித்ததன் இரத்தம் படிந்த இந்திய வரலாற்றின் மனம் பதற வைக்கும் படுகொலைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

இந்த புத்தகத்தை அமேசானில் வெளியிட்டிருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

கிண்டில் அன்லிமிடெட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசம. வரும் மூன்று நாட்களுக்கு இலவசமாய் படிக்க புரோமோசன் இருக்கிறது. படித்துப் பார்த்து விட்டு, மெயில் அனுப்புங்கள். 

தங்கவேல் மாணிக்கம்

20.05.2024


இணைப்பு : நீதியின் அநீதி

Saturday, May 4, 2024

இந்திய ஊடகங்கள் அழிக்கப்பட்டன - பத்திரிக்கை துறை விலைக்கு வாங்கப்பட்டது

இந்தியாவின் பத்திரிக்கை துறை அழிக்கப்பட்டது டிசம்பர் 30, 2022ம் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது ஆர்.சீனிவாசன் அவர்களின் கட்டுரை. 

அன்றைய தினம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிப்பிற்குரிய செய்தி நிறுவனமான என்டிடிவியின் முழு கட்டுப்பாட்டையும் செல்வாக்குமிக்க - மற்றும் பலராலும் சர்ச்சைக்குரிய நிறுவனராக விமர்சிக்கப்படும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, அப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆன அவரது அதானி எண்டர்பிரைசஸ் மூலம், என்.டி.டி.வியின்  27.26 சதவீத கூடுதல் பங்குகளை வாங்கிய பிறகு, முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பிரபல செய்தியாளர் பிரனாய் ராய் வெளியேற்றப்பட்டார்.

அவரிடம் என்.டி.டிவியின் நிறுவனப் பங்குகளில் 64.71 சதவீதம் உள்ளது. என்.டி.டி.வியை கொல்லைப்புறமாக ஆக்கிரமித்த அதானி, சில மாதங்களுக்கு முன்பு, இவரின் ஊடக நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசாங்க நட்பு ஊடகவியலாளர்களை பணியமர்த்தியது.

அதானியின் அடுத்த டார்கெட் தி குவிண்ட் பத்திரிக்கை. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு விட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு குயிண்டில்லியன் பிசினஸ் மீடியாவின் 49 சதவீத பங்குகளை அதானியின் ஏஎம்ஜி நிறுவனம் வாங்கியது. 

பதினைந்து வருடங்களாக, பத்திரிக்கைத் துறையில் தனி ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களை பல வித உபாயங்களைப் பயன்படுத்தி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இதற்கு மோடி அரசு உறுதுணையாக இருந்தது என்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே உள்ளது. கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இந்த ஊடகங்கள் மூலம் எவ்வளவு அளவு பணம் புரளுகிறது என்ற துல்லியமான கணக்குகள் உள்ளன. ஊடகங்களை அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏன் விலைக்கு வாங்கி ஆக்கிரமிக்கப்படுகின்றன எனில் எந்த ஒரு உண்மையும் இந்தியர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற நரித்தந்திரத்தினை தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசையால் இத்தகைய அறமற்ற செயல்களை செயல்படுத்துகிறார்கள்.


இந்தியாவில் தற்போதுள்ள பெரும்பான்மையான ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது கார்பொரேட் நிறுவனங்களும், மோடியின் அரசும். தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டார் மோடி என்கிறது இந்தக் கட்டுரை. 

இனி ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளில் போலிகளும், பொய்களும் தான் இருக்கும். உண்மையைப் பேசக்கூடிய ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் இந்தியாவில் என்கிறது மேலும் இந்தக் கட்டுரை.

மிக மோசமாக கருத்துச் சுதந்திரத்தை மோடி அரசு நசுக்கி, இந்திய மக்களைப் பயத்தில் வைத்திருக்கிறது என்கின்றன பல பத்திரிக்கைச் செய்திகள். கருத்துக்கு எதிர்கருத்துச் சொன்னால் - தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டு, சிபிஐ, இடி, வருமான வரித்துறையினர், போலிச் செய்திகள் மூலம் நசுக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள்.

எது எப்படி இருந்தாலும் உண்மை என்றும் உறங்குவதில்லை. எது உலகை இயக்கி வருகிறதோ அது ஒவ்வொரு செயலுக்குமான பலனைக் கொடுத்தே தீரும் என்பதை வரலாற்றில் படித்து வருகிறோம்.

பார்க்கலாம் அறம் வெல்லுமா? இல்லை அதிகாரப்பணம் வெல்லுமா? என.

வாழ்க வளமுடன்...!

நன்றி : திரு.சீனிவாசன் மற்றும் 360இன்ஃபோ இணையதளம்

Thursday, May 2, 2024

கேள்விகள் - உச்ச நீதிமன்றத்துக்கு இது அழகா?


02.05.2024 தினதந்தி நாழிதழ் செய்தி

படித்து விட்டீர்களா?

இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள். 

''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.

1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிமன்றம் மதச்சாயத்துடன் இருக்கிறதோ என்ற ஐயத்தை மக்களிடம் தோற்று வித்திருக்கிறது. இந்து மதம் என்பது பற்றிய தெளிவான வரலாறு உள்ளது. அந்த வரலாற்றில் இந்து மதம் என்ற சொல் எப்படி வந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்தியா என ஒரு முழு நாடாக என்றுமே இருந்ததில்லை என்பதால், தனித்தனியான சாம்ராஜ்யங்கள் தான் இந்தியக் கண்டத்தில் ஆண்டு வந்தன. இவைகளை எல்லாம் ஒன்றாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் முழு வரலாறாக, இந்திய வரலாறு என்னும் பெயரில், முதலில் ஹென்றி எலியட்டு என்னும் கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் 1867-77. 

ஆங்கிலேயர்களால் இந்த உப கண்டத்தில் புழக்கத்தில் இருந்த மதங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதின் விளைவாக சகல மதங்களையும் ஒரே மதமாக ஹிந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தனர். 

ஹிந்து மதம் என்பது ஒற்றை மதமல்ல. அது பல மதங்கள் சேர்ந்த மாலை போன்றது. இதில் சனாதனம் என்பது ஒரு மலர். முதலில் ருத்ரன் வழிபாடு இருந்தது. அது பின்னாளில் சைவம் என்று அழைத்தார்கள். சைவத்திற்கு எதிர் மறையான புனையப்பட்ட கதைகளை மூலாதாரமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டவைகள் வைணவம், சமணம், புத்தம் ஆகியவை. இந்த மதங்களின் முறையற்ற கலப்பே இன்றைக்கு ஹிந்து மதம் என்றழைக்கப் படுகின்றது. 

இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் 28.05.2021ம் தேதியில் தினமணியில் எழுதிய நாம் சைவர்களா? இந்துக்களா? என்ற கட்டுரையில், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். 

அதென்ன ஆறு சமயங்கள்? 

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

இப்படியான வரலாறு கொண்டதுதான் இந்து மதம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு சமயம் அல்லது மதத்தில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.

மருதத் தினை - நல்லாவூர் கிழார் எழுதிய அகநானூறு நூலில் பாடல் 86,  லைவன் தோழியிடம் சொன்னது என கீழே உள்ள பாடல் உள்ளது. இப்பாடலில் தமிழர் திருமணத்தில் அக்னி பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. 

உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்

கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்  

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடிக்

‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர

ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல் 

கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ

முயங்கல் விருப்பொடு, முகம் புதை திறப்ப

அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ, ‘நின்

நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என 

இன் நகை இருக்கை பின் யான் வினவலின்

செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர

அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து

ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்

மடங் கொள் மதைஇய நோக்கின்  

ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

என்கிறது அகநானூறு பாடல். இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

உளுந்தம் பருப்பைச் சேர்த்துச் சமைத்த பொங்கலோடு குவிந்த சோற்றுத் திரளை உண்ணுதல் ஒரு பக்கம். வரிசையாகக் கால்களை ஊன்றிய பெரிய பந்தலில், புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ”கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக” என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக்  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  

இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ”பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ” என்று அவளை வாழ்த்தி,  என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன்,  நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.

”உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு” என்றேன்.   இனிய மகிழ்ச்சியுடன்,  நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

அக நானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளபடி அக்னி வலமும் இல்லை. தாலி கட்டுதலும் இல்லை. தமிழர் வாழ்வில் அக்னி முன்பு ஏழு அடிகள் நடந்து திருமணம் செய்வித்தல் என்பது இல்லவே இல்லை என இப்பாடலைச் சாட்சியாக கொள்ளலாம். 

அதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வரும் தமிழர்களின் திருமண முறைகள் மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவி மணம் மற்றும் மடலேறி மணம் ஆகியவைகள்.

இந்த தீர்ப்பினை ஒட்டி எழும்பும் கேள்விகள்:

சார் பதிவாளரிடம் பதிவு செய்யும் திருமணங்களின் நிலை இனி என்ன? 

கிராமங்களில் கோவிலில் மாலை சூடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன?

கொங்கு பகுதியில் அக்னி இன்றி பாடல் பாடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன? 

இதற்கு முன்பு காதல் திருமணம் செய்து பதிவு செய்தவர்களின் பதிவு ரத்தாகுமா? 

பதில் தருமா நீதிமன்றம் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

பல கேள்விகளை எழுப்புகிறது இந்தச் செய்தியும் - தீர்ப்பும்.

பல்வேறு மதங்களின் கூட்டுக் கலவையான இந்து மத திருமணங்களை சட்டம் இயற்றி அதன் படி பதிவு செய்ய அரசு முனைகிறது. ஆனால் இந்த தீர்ப்பு அதையும் செல்லாதாக்கி விடுகிறது என்பது கவலைக்குரியதாகும். 

ஒரு சமயத்தின் திருமண நிகழ்வுகளைப் பிற சமயங்களைச் சேர்ந்தவரும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தீர்ப்பு கொண்டு செல்கிறது.

உச்ச நீதிமன்றம் சட்டத்தின் படி இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தை இந்திய மக்கள் மனதில் விதைத்துள்ளது இந்த தீர்ப்பு.

வாழ்க வளமுடன்..!

இந்தப் பதிவு எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. தீர்ப்புக்கான விமர்சனமும் அல்ல.

Tuesday, April 2, 2024

சற்குருவென அழைக்கவும் - ஜக்கி வாசுதேவ்

ஈஷா - சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பேட்டியின் போது, ”சர்ச்சுக்கு போனால் ஃபாதர், மசூதிக்குப் போனால் மவுலானா என்றும் அழைக்கிறீர்கள் அல்லவா அது போல என்ன சற்குரு என அழையுங்களேன்” என்று சொன்னார். அவர் வாதம் சரியானதுதான். பிற மதத்துக்காரர்களை அழைக்கும் போது, என்னையும் அழைத்தால் என்ன? 

ஒரு ஷார்ட்டில் விஜய்டிவி நீயா? நானா? கோபிநாத்திடம், கார்பொரேட் பணியிலிருந்து வெளியேறி சொந்த தொழில் செய்யும் ஒருவர், யாரோ ஒருவரின் கைவிரலின் பட்டமாக இருக்க விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்பி வேலையை விட்டேன் என்றார். அதற்கு கோபிநாத் சுதந்திரமான பட்டம் எங்காவது சென்று சிக்கிக் கொள்ளுமே என்றார். கோபிநாத்தின் வாதமும் சரியானதுதான். 

பட்டத்தை உதாரணமாகச் சொன்னால் பட்டத்தின் இயல்பை வாதமாக வைக்கும் கோபிநாத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? 

இருவரும் பேசியதற்கு காரணம் - அகங்காரம்.  அகங்காரம் அதிகமானால் தான் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்ற போலித் திமிரும் கூட வந்து விடும். 

இவர்களைப் போல எத்தனை எத்தனையோ ஆட்கள் பூமியில் வந்து பேசி, வாதமிட்டு சென்று விட்டார்கள். வாழும் காலத்தில் கூட தன் நிலை அறியாதவர்களாய் வாழ்ந்து சென்று விடுகிறார்கள். நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கும் ஆட்கள் இவர்கள்.

இருக்கட்டும். மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டவைகளுக்கு விளக்கம் கீழே வரும். 

அதற்கு முன்பு ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைப் பார்க்கலாம்.

கேஜிஎஃப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? 

கோலார் தங்க வயல். அந்தப் பக்கமாக, ஆண்டர்சன் பேட் என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்த கேசவனானந்தா சுவாமிகள் அங்கு சென்று சாந்தி ஆசிரமத்தினை துவக்கினார்.

ஆசிரமத்தின் வாயிலாக அன்னதானம் போன்ற பல தொண்டுகளைச் செய்து வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் பக்கமாக ஜீவசமாதி ஆகி விட்டார். இவரின் சீடர் பெயர் கோதண்டராம சிவயோகி.

கேசவனானந்தா சுவாமிகளின் மீது பெரும் பக்தி கொண்டவர். எங்கெங்கோ சென்று தன் குருநாதரின் சிலையொன்றினை வடித்து சாந்தி ஆசிரமத்திற்கு கொண்டு வந்து, பிரதிஸ்டை செய்யும்படி கேட்டிருக்கிறார்.

அப்போது இருந்த ஆசிரம நிர்வாகிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அச்சிலையை அங்கிருந்த ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியில் வைத்து விட்டு, இந்தச் சிலையை பிரதிஸ்டை செய்யவதற்கு, வரவேண்டிய ஆள் வருவான் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

நிற்க.

அமைதி குடிகொண்டிருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நம் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்கு வந்து விடுவோம்.

எனது குருநாதர் ஜோதி சுவாமி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கோலார் தங்க வயலில் இருந்து வந்த பக்தர்கள் மேற்கண்ட கோலார் தங்கவயல் கேசவானந்தா சுவாமிகள் சிலை பற்றிய சம்பவத்தை அவரிடம் விவரித்திருக்கின்றனர்.

காரணமின்றி காரியமில்லை அல்லவா?

”குருநாதரிடம் கேட்கிறேன், அவர் சொன்னால் நான் அங்கு வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, குருநாதரிடம் சென்று கேட்டிருக்கிறார். 

”நீதான் பிரதிஸ்டை செய்யனும், அதை எப்படி செய்யனும் எனச் சொல்கிறேன் அதன்படி செய்” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருநாதர்.

ஜோதி சுவாமி பக்தர்களுடன் கோலார் தங்கவயல் ஆண்டர்சன் பேட்டிலிருக்கும் சாந்தி ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

22.02.2016ம் ஆண்டு தண்ணீருக்குள் இருந்த சுவாமி கேசவனானந்தா சுவாமிகளின் திருமேனியை எடுத்து வைத்திருக்கிறார். நைவேத்தியம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நைவேத்தியமாக படைத்த பால் தம்ளரில் குறைந்து இருப்பதை பக்தர்களும், சுவாமியும் கண்டிருக்கின்றனர்.


(கோலார் தங்கவயலில் இருக்கும் சாந்தி ஆசிரமத்தில் உள்ள சுவாமி கேசவனானந்தாவின் திருமேனி. கல்வெட்டில் நம் குருநாதரின் பெயர் பொறித்திருப்பதைப் பார்க்கவும்)

”ஆண்டவனே, ஒரு சில கற்கள் பாலை உறிஞ்சும் பார்த்திருக்கிறேன். ஆனால் சுவாமியின் வாயின் அருகில் பால் நிறைந்த தம்ளரை கொண்டு சென்ற போது பால் தானாகவே குறைந்தது” என்றார் என்னிடம்.  சொல்லி விட்டு சிரித்தார். எதற்குதான் அவ்வப்போது சிரிக்கிறாரோ தெரியவில்லை.

மறு நாள் உலக வழக்கப்படி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்த நிகழ்வில் ஜோதி சுவாமிக்கு ஒருவர் மாலையிட்டிருக்கிறார். அவர் அந்த மாலையை எடுத்து போட்டவருக்கே திரும்ப போட்டு விட, இப்படியெல்லாம் செய்யக்கூடாது அது மரியாதை செய்தவரை அவமானம் செய்தது போலாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் மாலை, மரியாதை, சகல ஸ்ரீ, சற்குரு பட்டமெல்லாம் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதி சுவாமி அவர்களிடம், ”என் குரு என்னிடம் சொன்னது, நீ எப்போதும் சீடனாகத்தான் இருக்க வேண்டும், உன் முன்னால் இருப்பவர்கள் தான் உனக்கு குரு, ஆகவே குருவிற்குதான் மாலை சென்று சேர வேண்டும். சீடனுக்கு அல்ல என்பதால் மாலையை குருவிற்குதான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், கோபிநாத்  பற்றிய பத்திகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். கோபிநாத்துக்கு விஷயதானம் செய்கிறவர்கள் யார்?  என்று யோசித்துப் பாருங்கள். இத்துடன் இதை முடித்து விடலாம். 

கோசாலை..!

மாலைப்பொழுது. பொழுது மசங்கிய நேரம், சிட்டுக்குருவிகளின் சத்தம் இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருந்தது. மெல்லிய சூடில்லா காற்று வீசிக் கொண்டிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”இதெல்லாம், ராமகிருஷ்ணர் பரம்பரை ஆண்டவனே” என்றார்.

”புரியவில்லை சாமி” என்றேன்.

”காளி கோவிலில் அர்ச்சகரான பகவான் ராமகிருஷ்ணர், பூஜை சாமான்களை கங்கையில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற பக்தர்கள், சுவாமி இதை நீங்கள் தானா செய்ய வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பகவான், பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாதல்லவா, பின்னால் வரக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்” என்று சொன்னாராம்.

”ஓ...! புரிந்தது சாமி” என்றேன்.

அம்புட்டுதான்.

வாழ்க வளமுடன்...!


Thursday, February 29, 2024

மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறதா மோடி அரசு?

பாஜக ஆளும் மாநிலங்களில் B.A., B.Sc.,B.Com., ஆகிய படிப்புகளை நான்கு ஆண்டுகளாக மாற்றி விட்டார்கள். ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளை நான்கு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளாக மாற்றி விட்டார்கள். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு பொதுத்தேர்வு. 

பி.காம் படிப்புக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களின் மாணாக்கர்கள் மூன்று ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் பாஜக மாநிலங்களில் படித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படித்திருப்பார்கள். வெளி நாடுகளில் மேற்படிப்புக்குச் செல்லும் மாணாக்கர்களுக்கு பெரிய பிரச்சினைக்கு வித்திடும். இந்த சிறு தெளிவு கூட இல்லாமல் இருக்கிறது மோடி அரசின் கல்வித்துறை.

இது மட்டுமல்ல மோடி அரசு பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட கல்வி நிலையங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. பெயர் மாற்றத்தால் என்ன நடந்து விடப்போகிறதோ தெரியவில்லை. 

தேசிய தேர்வு முகமை என்ற ஒன்றிய அரசு நிறுவனம்,  ஐ.ஐ.டி(#IIT) மற்றும் என்.ஐ.டி(NIT) சேர்க்கைக்காக வருடம் தோறும் நடத்தும் நுழைவுத் தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஒருவருக்கும் ரூ.500 கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நுழைவுத் தேர்வுக்கு சுமார் 60 கோடி கட்டணத்தைக் கொள்ளை அடிக்கிறது தேசிய தேர்வு முகமை.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிறுவன கார்ப்பொரேட்டுகளுக்கு பயனளிக்கு விதமாக தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ.மெயின் தேர்வு ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடத்துகிறார்கள். 

ஏன் தெரியுமா? 

ஏப்ரல், மே மாதங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்த பிறகு ஜே.இ.இ மெயின் தேர்வு வைக்கலாம். ஆனால் நுழைவுத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டிக்கான மாணவர் சேர்க்கை ஜூனில் தான் நடக்கிறது. 

அதற்குள் ஏன் அவசரப்படுத்துகிறது ஒன்றிய அரசு?

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு, நுழைவுத் தேர்வை நடத்தி, ரிசல்ட் வெளியாகும் போது, மதிப்பெண் குறைந்தால் மாணவர்களுக்கு பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது மோடி அரசு.

இதற்குப் பின்னால் பெரும் பிசினஸ் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், ஜனவரி,பிப்ரவரியில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்கச் செய்ய உதவும் மார்க்கெட்டிங் உத்திக்காகவே ஜனவரியில் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஜே.இ.இ.மெயின் தேர்வில் 2013 முதல் 2018 வரை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தலா 30 கேள்விகள் கேட்க்கப்பட்டது. இப்போது தலா 20 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மற்றும் 10 நியூமெரிக்கல் கேள்விகள் எனவும், இதில் ஐந்து கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும் என்கிறார்கள். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கும் போது, இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மா நில மாணவர்கள் எப்படி சரியாக பதில் அளிக்க முடியும்? என்று யோசிக்க மாட்டார்களா? யோசிக்க மாட்டார்கள். 

தேசிய தேர்வு முகமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வெளியிடுவதை சதவீதத்திலிருந்து சதவிகித முறைக்கு மாற்றி மக்களை ஏமாற்றுகிறது.

The key difference between percentage and percentile is the percentage is a mathematical value presented out of 100 and percentile is the per cent of values below a specific value. The percentage is a means of comparing quantities. A percentile is used to display position or rank.

ஆனந்த விகடனில் வெளியான JEE தேர்வு என்ற பெயரில் நடக்கும் மோசடி பற்றி தா. நெடுஞ்செழியன் அவர்களின் கட்டுரையை வாசித்த போது அதிர்ச்சி உண்டானது. அக்கட்டுரை எப்படி மோடி அரசு இந்திய மாணவர்களைப் படிக்க விடாமல் நுழைவுத் தேர்வு நடத்தி விரட்டி அடிக்கிறது என்ற அப்பட்டமான உண்மையை உரைத்தது. இதோ அவரின் கட்டுரையில் ஒரு பாரா மக்களுக்காக...!


மோடி அரசு என்ன சாதிக்க துடிக்கிறது? ஏன் இப்படியான குழப்பமான நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க முயலுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் நயவஞ்சக திட்டம் தான் என்ன? 

எதுவும் புரியவில்லை.

ஒரே நாடு, ஒரே கல்வி எப்படி மொழி வழி மாநிலங்களில் சரியாகும்? 

மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொண்டு, இத்தனை அக்கிரமங்களை ஏன் நிகழ்த்துகிறது. 

பெற்றோர்களுக்கு ஏன் இத்தனை மன உளைச்சலைத் தருகிறது மோடி அரசு? 

ஏன்?

இதோ கீழே கட்டுரையாளரின் பதில்....!

நன்றி : ஆனந்த விகடன், நன்றி கல்வியாளர் திரு. நெடுஞ்செழியன். இப்பதிவு ஆனந்த விகடனின் கட்டுரை எல்லோருக்கும் சென்று சேர வேண்டுமென்று சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.  முழுக்கட்டுரையை ஆனந்த விகடனில் படிக்கவும். 

வாழ்க வளமுடன்..!


கட்டுரை இணைப்பு :

https://www.vikatan.com/education/higher-education/karpathu-ulagalavu-educational-series-39-jee-exam-fraud?utm_source=magazine-page

Tuesday, February 27, 2024

பிரசாந்த் கிஷோர் மற்றும் புதிய தலைமுறை டிவி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. டிவி, யூடியூப்பர்கள், செய்திதாள்கள், பத்திரிக்கைகள், உதிரி புதிரி கட்சிகளின் மாநாடுகள், சாதி வீதி கட்சிகளின் பேட்டிகள், கட்சித் தாவல்கள், தொண்டர்கள் விலகல் சேர்க்கை என பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

இது எதுவும் தெரியாமல் இந்தியாவில் பல கோடிப் பேர் வாழ்க்கை நடத்தி, வாழ்ந்தும் செத்துப் போகிறார்கள். விதி அல்ல சதி.

இந்திய டெலிவிஷன்கள், யூடியூப்பர்களின் பேட்டியில் பிரசாந்த் கிஷோர் பிஜேபி வெற்றி பெறும் என்று மக்கள் மனதில் திடீரென்று தோன்றி பதிய வைக்கிறார்.

புதிய தலைமுறை டெலிவிஷனில் கருத்துக் கணிப்பு என்றுச் சொல்லி ஒரு விஷயத்தை மக்களின் மனதில் பதிய வைக்க முனைகிறார்கள்.


சமீபகாலமாக பல இடங்களில் பல உதிரி புதிரி கட்சிகள், நாடாளுமன்ற மழைக்காளான்களாய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என தொடர்ச்சியாய் செய்திகள். கொடிகள், விளம்பரங்கள் என பிசியாக விட்டார்கள். 

நாடாளுமன்ற தேர்தல் பேருந்துக்குள் சீட் பிடிக்க துண்டு.

ஏன்? பணமின்றி ஓரணுவும் அசைவதில்லை உலகிலே.

மக்களை மூளைச் சலவை செய்யத்துவங்கி உள்ளார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். 

அதுவல்ல இது. 

மேலே சொல்லப்பட்ட தகவல்களை உண்மையாக்க துல்லியமான திட்டங்கள் உருவாக்கி செயலாக்கப்படுகின்றன. உண்மை தேர்தலுக்கு முன்பு விரட்டி அடிக்கப்படும். வதந்திகள் அரசாளும்.

மக்கள் சிந்திக்க வேண்டும். 

எது? என்ன? ஏன்? யார்? எதற்காக? கேள்விகளை உங்களுக்குள் இருக்கும் தகவல்களை நோக்கி கேளுங்கள். அவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள். அதுவே சொல்லும் விடையை.

ஒரு செய்தி, உருவாக்கப்படுகிறது.  பின்னர் அச்செய்தி உண்மையாக்கப்படுகிறது. 

யோசித்துப் பாருங்கள். 

எல்லாமும் புரியும். 

அரசியலும் புரியும்.

நாம் எங்கிருக்கிறோம் என்ற அப்பட்டமான உண்மையும் புரியும்.

வாழ்க வளமுடன்..!
Thursday, February 15, 2024

நிலம் (114) - கோவை மாஸ்டர் பிளான் ரிலீஸ்

கோவை உள்ளூர் திட்டக்குழுமம் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளது. வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தை - LPA என்றும் அழைக்கலாம். அதாவது நகர எல்லைக்குள் இருக்கும் நிலங்களின் சர்வே நம்பர்களில் எந்தெந்த சர்வே நம்பர் வீடு கட்டலாம், கமர்சியல் நிலம் எது, கல்வி நிலங்கள் எவை, தார்ச்சாலைகள் செல்லும் சர்வே எண்கள், நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள சர்வே எண்கள், தண்ணீர் செல்லும் பாதை, சாலைகள் செல்லும் சர்வே எண்கள்  மற்றும் விவசாய நிலங்கள் எவையெவை என்ற விபரங்களை  நகர திட்ட அலுவலகம் வெளியிடுவார்கள். அதைத்தான் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் செய்திருக்கிறது. இதே போல பல கார்ப்பொரேஷன்களுக்கும் புதிய மாஸ்டர் பிளான் வெளியாகி உள்ளது.

பொதுமக்களிடம் நேரிடையாக பாதிப்பை உண்டாக்கும் இந்த மாஸ்டர் பிளான் என்னவென்று பலருக்கும் தெரியாது.

கோவையில் இரு மாஸ்டர் பிளான்கள் - 1992 பின்னர் 2012 என நினைவு - இந்த இரு மாஸ்டர் பிளான்களில் எதை மக்கள் பயன்படுத்துவது என பெரும் குழப்பம் நிலவியது. ஜெயலலிதா 2012 பிளானை நிறுத்தி விட்டார் என்றுச் செய்தி. அது உண்மையா எனத் தெரியாது. இதற்குப் பின்னால் பெரும் வேலைகள் உள்ளன. அதையெல்லாம் பொது வெளியில் எழுத முடியாது. 

ஆனால் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் 2012 பிளானைத்தான் செயல்படுத்தியதை நான் கண்டேன். ஏனென்றால் டிடிசிபி பிளாட் அப்ரூவல் பணிகளைச் செய்தவன் என்ற வகையில் தெரிய வந்தது. 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னால் இந்த மாஸ்டர் பிளான் வெளியிட்டிருப்பது மக்கள் மீதான அவர்களின் அக்கரையைக் காட்டுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த மாஸ்டர் பிளானை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியினை கிளிக் செய்து பார்க்கவும்.

www.coimbatorelpa.com

இது எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியாது. ஆகவே டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கோவை மாவட்டத்தின் வெகு முக்கியமான அரசு ஆவணங்கள் இவை. 

இதில் முக்கியமாக சாலைகள் செல்லும் சர்வே எண்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சாலைகளின் சர்வே எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஹாக்கா கிராமங்கள் பற்றிய விபரமும் இருக்கின்றது.

பலருக்கும் பெரும் குழப்பமாய் இருப்பது வார்டுகள். 

ரெவின்யூ வார்டுகள் என்பது வேறு. ஓட்டுப் போட உள்ள வார்டுகள் வேறு.

அதே போல ரெவின்யூ கிராமங்கள் என்பது தனி, கிராமங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

கொரலேசன் சர்வே நம்பர்கள் வேறு உண்டு. அந்த நம்பர்களைத்தான் இந்த புதிய மாஸ்டர் பிளானில் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று வேறு பார்க்க வேண்டும். 

கிராம புல எண்களையும், அதற்குரிய டவுன் சர்வே எண்களையும் ஒப்பீடு செய்து கொள்வது முக்கியம்.

இனி நிலம் வாங்கும் முன்பு, தொடர்புடைய நிலத்தின் பயன்பாடு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது பற்றிய ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் குறிப்பிட்ட காலத்துக்குள் தகுந்த ஆதாரங்களுடன் கணபதியில் இருக்கும் அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சாலை ஓரமாக நிலம் வாங்கி விடாதீர்கள். கவனம் தேவை. எனக்கு வரும் அழைப்புகள் எதிர்காலத்தில் விலை உயரும் என சாலை ஓரமாக நிலம் கேட்கிறார்கள். அதற்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆகவே கவனம்.

முன்பெல்லாம் டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நிலமெடுப்பின் போது விட்டு விடுவார்கள். புதிய நிலெமெடுப்பில் அதெல்லாம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. 

நம்மிடைய இருக்கும் பலரும் காது வழிச் செய்திகளையே ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். எதுவாக இருந்தாலும் ஆவணங்கள் இன்றி முன்னெடுக்காதீர்கள்.

இப்போதைய காலம் அவ்வளவு எளிதானதல்ல. ஏமாற்றும் பேர்வழிகள் பலர் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். 

கவனமாய் இருப்பது உங்கள் பொறுப்பு. 

வாழ்க வளமுடன்..!

காளப்பட்டி கிராமத்தில் வரக்கூடிய எதிர்கால சாலைகள் அமையவுள்ள சர்வே எண்கள் கீழே உள்ளன.

இது கெஜட்டில் வெளியான ஆர்டர் காப்பி. ரெபரென்சுக்காக வெளியிட்டுள்ளேன்.Saturday, February 10, 2024

மித்ரே சிவா - உனக்குள் ஒரு ரகசியம் - ஓர் அலசல்

ஆனந்த விகடன் அடுத்த சுவாமி ஜியை, தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தொடரை ஆரம்பித்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை தற்போது பிரபலமாக இருக்கும் பல சுவாமி ஜீக்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார்கள். பிரபல்யம் அடைகிறார்கள். ஏதேனும் டீல் இருக்குமோ?

மித்ரே சிவா அவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவருடன் நேரில் பேசி இருக்கிறேன். அவரின் மனைவி கொடுத்த ஃப்ரூட் சாலட் அற்புதம். 

திடீரென்று விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தேன் மித்ரே சிவா எழுதிய உனக்குள் ஒரு ரகசியம் படித்தேன். 

அவரின் கருத்துக்கள் சில.

திட்டம் என்பது நம் அறிவுக்குள் உதிக்கிறது

அறிவு நிலையானது. ஆனால் வாழ்க்கை நிலையானதல்ல

முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செயல்படுகிறபோது நிறைய விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். மனத்தைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்.

கோயம்புத்தூருக்குக் காரில் செல்வது திட்டம். அந்தப் பயணத்தில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும். பயணத்தின் இடையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாகனம் பழுதாகலாம், பயணம் தடைப்படலாம், பாதையில் பிரச்னை ஏற்படலாம். எது நிகழ்ந்தாலும் அதற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றியபடி பயணத்தைத் தொடர வேண்டும். மாறாக, பயணத்தை ஆரம்பிக்கும்போதே கோயம்புத்தூரில் வாழ்வதுபோல் கற்பனை செய்யக் கூடாது. அங்கு தங்குமிடம், சாப்பிடும் உணவு என்று கற்பனை செய்து நிகழ்காலத்திலேயே அதை வாழ ஆரம்பித்துவிட்டால் செயல்பாட்டில் கவனம் சிதறிவிடும். இதுதான் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு.

இந்தக் கணத்தில் நிதர்சனத்துக்குள் நீங்கள் ஆழமாகச் செல்லச் செல்ல, நீங்கள் நினைப்பதெல்லாம் சுலபமாக முடியும்.

நிற்க..!

அறிவு நிலையானது. வாழ்க்கை நிலையற்றது - 

அறிவு நிலையானதாம். அறிவு என்பதே ஒரு குப்பை என்பார் ஓஷோ. எவராலோ எந்தக் காலத்திலோ கொடுத்த விஷயம் தான் அறிவு. அறிவு எப்படி நிலையாக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இது என்னவென்று?

மனதைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்? - எப்போது தெரியுமா திட்டத்தினைச் செயல்படுத்தும் போது. 

மனதை ஆளத் தெரிந்தவனுக்கு திட்டம் எதற்கு, காசு பணம் எதற்கு?  

கோவைக்கு காரில் செல்வது ஒரு செயல். செயலைச் செய்பவர்களின் மன நிலையைப் பொறுத்து ஒவ்வொன்றும் மாறும். 

கோவைக்குப் பயணம் செல்பவர்கள் எதற்கு கோவையில் வாழணும்? - இதென்ன ஒப்பீடு?

மனதுக்குள் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன். 

கனவு காணாமல், அக்கனவுக்குள் வாழாமல் எதுவும் சாத்தியப்படாது என்று பல அறிஞர்கள் சொல்லி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிகச் சரியானது எது என்பதை அறிந்து கொள்ள முயலுங்கள். பிசினஸ் எது? ஆன்மீகம் எது? அறிவுரை எது? என்று ஆராய்ந்து பாருங்கள்.

விஜய் கட்சி அவல அரசியல் நகைச்சுவை

யுவராணியுடன் கபடி விளையாடி, மறைந்து போன ஸ்ரீ வித்யா முதுகைத் தடவி தமிழ் திரைப்படக் காவியங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த விஜய், அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு தமிழக வெற்றிக் கழகம்.

வெளியான படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. மார்க்கெட்டிங்க் செலவு செய்து போலி ஹைப்பில் எத்தனை நாள் ஓட்ட முடியும்?  இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை. சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தினைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம்.

மோடியின் பரிவாரங்கள் - அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மேலும் கவர்னர் பதவிப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நீதி கோலமான்கள் வரிசைகளின் பயமுறுத்தல்.

ஜோசப் விஜய் என்று நூலிபானின் கூவல்.

இந்த ஆபத்தெல்லாம் வந்து விட்டால் என்ன செய்வது? 

தூத்துக்குடியில் கொஞ்சம் உதவினார் போலும். அங்கே எவனோ ஒரு குசும்புக்காரன் வருங்கால முதல்வரேன்னு கூவியிருப்பான் போல.

ஒரே ஒரு அறிக்கை. கட்சி துவங்கியாச்சு.

இப்படியெல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும். 

ஊடக விபச்சாரகர்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நாதாரி விஜய் முதலமைச்சராவாராம் என்று பேட்டி. யூ டியூப்புகளில் பொய்கள் மட்டுமில்லை பல்லுப் படாமல் பேசுவதும் பெருகி வழிகின்றன.

ஆனானப் பட்ட சிவாஜி அரசியல் கதையே கந்தலானது. 

காமராஜருக்கே இலையே இல்லை என்று அனுப்பி விட்டது தமிழ் நாடு. 

கமல்ஹாசனுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

சிரஞ்சீவி காரு தொழிலைப் பார்க்கப் போயிட்டாரு.

இப்போது இவரு கடை விரிக்க வந்துட்டாரு.

பெயரைப் பாரு... ! 

தமிழக வெற்றிக் கழகம் - அது எங்கே இருக்குன்னுவாது தெரியுமா இவருக்கு?

மக்களுக்கு நல்லது பண்ணுன்னு இவரை எல்லாம் எவன் அழைச்சான்னு தெரியலை. 

அவல அரசியல் நகைச்சுவை.


நிலம் (113) - கோவை கணபதியில் நிலம் ஆக்கிரமிப்பு

எல்லோருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாக பத்திரிக்கை வேலையில் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிக்கை வேலை அது. மாதத்தில் பதினைந்து நாட்களை விழுங்கி விடுகிறது. 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் பத்திரிக்கை தொழில். ஆகையால் அதிலிருந்து விடை பெற்றேன். இனி வழமை போல பதிவுகள் வரும்.

இதோ கோவையில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு. கணபதி சி.எம். நகரில் சதுரடி ரூ.10000 என்று ரியல் எஸ்டேட் வெப்பில் படித்தேன். இந்த ஆக்கிரமிப்பு பற்றி படித்ததும் அதிர்ந்தேன்.

இதே போலத்தான் கோவில்பாளையம் ஆதித்யா கல்லூரியின் பின்புறமிருந்த ஒரு என்.ஆர்.ஐயின் இடத்தை சாதுரியமாக அபகரித்தனர். ஒரு வருடம் அலைந்து பட்டா மாற்றிக் கொடுத்தேன். பெரும் அலைச்சல் வேலை அது.

இனி அந்த ஆக்கிரமிப்புச் செய்தி. நன்றி : நவ் இந்தியர் டைம்ஸ்இந்தச் செய்தியில் ஆடிட்டர் ராஜாராமுக்கே இந்தக் கதி என்றால் பிறருக்குச் சொல்லவும் வேண்டுமோ? குற்றவாளிகள் வழக்கை ரத்துச் செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருப்பது என்ன தெரியுமா? சட்டம். சட்டத்தை அமலாக்கும் நபர்கள். இதற்குப் பின்னாலே பெரும் போராட்டம் இருந்திருக்கும். பெரும் வலி இருந்திருக்கும். பெரும் பணம் செலவாயிருக்கும். 

திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடமிருந்தும் பொதுமக்கள் தப்பிப்பது பெரும் வேதனை தரும் வேலை. எங்கும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணம் கொடுத்தால் பிணம் கூட உயிருடன் இருக்கிறது என சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆகவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். 

உடனே அரசு சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான். ஆட்சியாளர்களுக்கு இதைப் போன்ற செய்திகள் கவனத்தில் கிடைப்பதே இல்லை. அப்படிக் கவனிக்கவும் முடியாது. ஏனெனில் அரசியல் என்பது அத்தனைச் சுலபமல்ல.

வாழ்க வளமுடன்