குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, March 28, 2023

நிலம் (107) - நத்தம் நிலங்கள் அரசுக்கு சொந்தமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நத்தம் நிலத்தினை அரசு உரிமை கொண்டாட முடியாது. அரசு என்றால் அரசு அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கார்ப்பொரேஷன் ஆகியவை எந்த நிலையிலும் நத்தம் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேறக்கோரி உத்தரவு இட முடியாது.

ஆனால் சமீப காலமாக, ஊராட்சி தலைவர்கள் பலர் முறைகேடாக, லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓக்கள் மூலம் தொடர்பில்லாதவர்களின் பெயர்களில் பட்டாக்கள் வாங்கி விடுகிறார்கள் என்றும் படிக்காத பாமரர்களை, நத்தம் புறம்போக்கு என்றுச் சொல்லி, நிலத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள் என்றும் பலர் எனக்கு அழைக்கும் போது தெரிந்து கொண்டேன். பல வி.ஏ.ஓக்கள் நத்தம் நில பட்டாக்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. 

இது பற்றிய ஏதேனும் உதவி தேவைப்பட்டால், என்னை அணுகலாம். ஆலோசனை கட்டணம் உண்டு. 

நத்தம் நிலப்பிரச்சினை வந்தால் கவலைப்பட வேண்டாம். 

சென்னை உயர் நீதிமன்றம், நத்தம் நிலமெடுப்பிற்காக நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்தது. காரணம் நிலமெடுப்பின் போது கூட, அந்த நிலம் நத்தமாக இருக்கும் போது, அரசால் ஒன்றும் செய்யவே முடியாது.

வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுரமீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்து, ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்த அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேருக்கு தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். தாசில்தாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக்கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று வாதாடினார்.

தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "அந்த நிலம் ஆதிதிராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா ஏதும் வழங்கவில்லை என்றும் நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும். ஆனால் இவர்கள் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகை பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் எனவே, நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது" என்றும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர், ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கு வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம். உரிய சட்ட விதிகளை பின்பற்றி, நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 14.03.2023 அன்று வழங்கப்பட்டது. வழக்கு எண் : W.P.31688 of 2022 and W.M.P.Nos.31131 & 31132 of 2022.ஆகவே நத்தம் நிலங்கள் குறித்து அரசோ அல்லது அரசு அமைப்புகளோ எந்த உத்தரவும் இடமுடியாது என்று அறிந்து கொள்க.

லீகல் டிரேசிங்க், சர்வே மற்றும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற ஆலோசனை பெற அழைக்கவும். மிகச் சரியான தீர்வு வழங்கப்படும்.

Friday, March 24, 2023

நாய் - மனிதன் - கடவுள்

நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை. 

அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது? 

என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா?

நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும். நான் நேரில் கண்டது. பசிக்கும் போது, அங்கு வந்து படுத்துக் கொண்டு, எடுத்துச் சாப்பிடும். இந்த அறிவு அதற்கு எங்கணம் வந்தது?

அவைகள் இயற்கையுடன் வாழ்கின்றன.

ஆனால் மனிதனுக்கு நோய் வந்தால் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபஞ்சர், வர்மம் போன்று பல வகையான மருத்துவத்தை எடுக்கிறான். நாயை விட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏன் இந்த அறிவு இல்லை. நோய் தீர ஏன் பிறரை நாடுகிறான்?  அவனுக்கே அவன் உடம்பு தனியாகிப் போனது ஏன்? எப்போதேனும் யோசித்திருக்கின்றீகளா?

இதற்கொரு விடை காணலாம்.

முதலில் மதம் என்றால் மதம் தான் என்பதை அறியுங்கள். எனக்கு பல சாமியார்களுடன் சிறு வயதிலிருந்து பழகும் நாட்கள் இருந்தன. அவர்கள் மூலம் நான் கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் - கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார். 

மனிதனே கடவுள் என்பது தான் என் நினைப்பு. 

என்னில் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் யாரோ நானும் அதே. உங்களையும் என்னையும் பிரிப்பது நம் அறிவு. 

உடலுக்கு வலி தெரியாது. மனதுக்குத்தான் வலி தெரியும் அல்லவா?

மதம் என்றால் மதம் தான். மதப்புராணத்தையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு சில விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக பைபிளை எடுத்துக் கொள்வோம்.


பைபிளில் சொல்லப்பட்டபடி, ஆதாமை ஏவாள் தோட்டத்திலிருக்கும் ஆப்பிளை எடுத்து உண்ணச் சொல்வாள். ஆதாம் ஆப்பிளை உண்ட பிறகு - இருவரும் நிர்வாணமாக இருப்பதை அறிந்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். அதாவது இருவருக்கும் அறிவு வந்து விட்டது என்று படித்திருக்கிறோம்.

அதேதான்..

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். ஆம், மனிதன் இயற்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டான். அது எப்படி, எப்போது நிகழ்ந்தது என்று இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். சரியான, துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை. 

கடவுள் யாரையும் படைப்பதும் இல்லை, கணக்கு வழக்கு பார்ப்பதும் இல்லை, வரவு செலவு கணக்குகள், பாவம் புண்ணியம் போன்றவைகள் எதையும் பார்ப்பதில்லை. 

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழத்தான் தெரியவில்லை. ஒன்று எதிர்காலத்தில் வாழ்கிறான். இல்லையெனில் இறந்தகாலத்தில் வாழ்கிறான் என்கிறார்கள் அறிவாளர்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினைத் துண்டித்ததில் பெரும் பங்கு வகிப்பது மனிதனின் அறிவு. அதை மனம் என்கிறார்கள். 

இதை மீண்டும் அடைவது எப்படி? அதைக் கண்டுபிடித்து விட்டால் இன்று நம்மிடையே வாழும் ஸ்ரீராம், ஜோதி சுவாமி போல மாறலாம்.

அவர் பெயர் ஸ்ரீராம். ஆந்திராவில் வசிக்கிறார் என்று நினைவு. இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடிகர் ராஜேஷ் யூடியூப் சேனலில் பார்த்தேன். அவர் காலத்தின் முன்பும் பின்பும் சென்று வருவதை ஒருவர் பகிர்ந்து கொண்டார். 

அதாவது அவர் தன் நண்பரிடம் ஒரு கவரைக் கொடுத்து, ஒரு வாரம் சென்ற பிறகு பிரித்துப் பார்க்கும் படி சொல்லி இருக்கிறார். அவ்வாறு பிரித்துப் பார்த்த போது, கடந்த வாரத்தில் நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தில் எழுதி இருந்ததாம். இது உண்மை என்றால் எதிர்காலத்துக்குள் சென்று வந்திருக்கிறார் ஸ்ரீராம் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜோதி சுவாமி பல முறை விடிகாலையில் பேசும் போது, தூக்கத்தின் போது அவர் கேட்ட ஒலிகள், அசைவுகள், ஆட்கள் மீண்டும் தென்படுகிறார்கள் ஆண்டவனே என்று சொல்லி இருக்கிறார். எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் சென்று வருகிறார் என்று இப்போது புரிகிறது.

ஒரு தடவை சுவாமியும் நானும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தேய்த்துக் குளிக்க ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, புத்தம் புது பீர்க்கங்காய் குடலைக் கொடுத்தார். தேய்த்து விட்டு செடியோரம் வீசிய போது கண் முன்னாலே மறைந்து போனது கண்டு மண்டை காய்ந்தேன். அப்போதெல்லாம் உணர்ந்து கொள்ளும் தெளிவு எனக்கு வரவில்லை.

இதே போல ஸ்ரீராம் அவர்களும் போட்டோவில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததாகப் பேட்டியில் சொன்னார்கள். இது எப்படி சாத்தியமானது என்ற ரகசியம் தெரிந்து விடின் மனிதர்கள் எவரும் துன்பத்தில் உழன்று கிடக்கமாட்டார்கள்.

இயற்கையினுடனான தொடர்பினை மனிதன் இணைத்துக் கொள்வதற்கான வழி கிடைத்து விட்டால் எல்லாம் சுகமே.

இது பற்றி யோசித்துப் பாருங்கள். 

அவ்வளவுதான்.

Wednesday, March 15, 2023

பேராசியர்களுக்கு தகுதி குறைப்பு - யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் அக்கிரமம்

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என இந்தியா மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்  யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் சேர்மன் மமிடாலா ஜகதீஷ் குமார் - ராவ்  ஒரு  நயவஞ்சகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

ஜகதீஷ் குமார் மீது 2017ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கல்லூரியில் பணி செய்து வந்த சைத்ய பிரபா தாஸ் என்ற தலித் அசோசியட் புரபசரை, புரபசராக தகுதி உயர்த்த முடியாது என்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஜகதீஷ் குமார் ராவ் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாதி பார்த்துதான் தகுதி உயர்வு வழங்குகிறார் என்று கேரவன் மேகசின் கட்டுரை எழுதி இருக்கிறது. 

படிக்க மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கனவுகளுக்கும், வாழ்விற்கும் வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக என்று எல்லோருக்கும் தெரியும். 

ஏழை மாணவர்கள் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து விடக்கூடாது என்ற கொள்கைக்காக, கீழ்சாதி என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் மனம் மகிழும் வண்ணம், ஏழைகளான இந்திய மக்களின் புதல்வர்களின் கல்வியை தடுப்பதற்காக, நரித்தனமாக நுழைவுத் தேர்வுகளை தகுதி என உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 

பல மொழி, பல வகையான நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒன்றிய மாநிலங்களின் கல்வியில் தலையிட்டு மாணவர்கள் பலரைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதா ஒரு எடுத்துக்காட்டு.

கல்லூரியில் புரபஸராக தகுதி உயர்ந்த முன்பு இருந்த பி.ஹெச்.டி படிப்பு என்ற தகுதி தேவையில்லை என்கிறார் ஜகதீஷ் குமார் சேர்மன். 

மாஸ்டர் டிகிரி படித்தாலே போதும், புரபஸர். பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லையாம்.

மாணவர்கள் படிக்க நுழைவுத் தேர்வு தகுதி எனில் கல்லூரி புரபசர்களுக்கு தகுதி தேவையில்லையா?