குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 26, 2009

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை முன்வைத்து !

ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் சமீபத்தில் படித்தேன். அந்த நாவலில் ஒரு கேரக்டர், அதன் பெயர் முத்தம்மை. அவலட்சனமானவள். முத்தமாளுக்கு வேலை பிச்சை எடுப்பது. அவளுக்கு பிள்ளை பிறக்க வைத்து, அந்தப் பிள்ளைகளை பெற்று பிச்சைக்கு விடுவதுடன், அந்தப் பிள்ளைகளை வேறு ஆட்களுக்கு விற்றும் விடுவார் பண்டாரம்.

முத்தம்மையோடு அகோரமானவர்களை இணைய விடுவது (அரேஞ்டு மேரேஜ்ஜுகள் நினைவுக்கு வருகிறது) அதன் காரணமாய் பிறக்கும் உருப்படிகளை வைத்துப் பிச்சை எடுப்பது போன்ற சம்பவங்களை நாவலில் எழுதி இருப்பார்.

நாவலின் கடைசியில் முத்தம்மையோடு இணைய விடுவது அவள் பெற்ற பிள்ளையை. படிக்கவே படுபயங்கரமாக இருக்கும் அந்த நாவல் எனக்குள் உருவாக்கிய கேள்விகள் பலப்பல.
அதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே.

நாமும் இப்படித்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து முதலாளித்துவ பகாசுர கம்பெனிகளிடம் வேலை என்ற பெயரில் அடிமைகளாய் நம் பிள்ளைகளை விற்கின்றோமா?

நாம் தான் முத்தம்மாளா?


ஜெயமோகன், ஏழாம் உலகம்

காட்டுமிராண்டிகளின் கூட்டம்




ஜூவியில் வெளியான கட்டுரையைப் படித்ததும் ஆண்களின் உருவில் நடமாடும் அயோக்கியர்களை எண்ணி மனம் பேதலித்தே விட்டது.

அந்தக் கட்டுரை கீழே ( நன்றி ஜூவி)



வாய்பேச முடியாத வெகுளிப் பெண் ஒருவரை, எந்த அயோக்கியனோ தொடர்ந்து சீரழித்து கர்ப்பிணியாக்க... கேட்பாரின்றித் தொடர்ந்த இந்த கொடுமையின் விளைவால் இதுவரை நான்கு குழந்தை களைப் பெற்றெடுத்திருக்கிறாள், அந்த பரிதாபப் பெண்! எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல்!) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது! அந்த நாவல்போல, குழந்தைகள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு ஒரே ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி யில் இருந்து பட்டுக்கோட்டை பிரதான சாலையில் இருக்கிறது பாண்டிசத்திரம். அங்கிருந்து கிழக்கில் இரண்டு கிலோமீட்டர்

தூரம் சென்றால், செம்பியமங்கலம் கிராமம்... இங்குதான் தற்போது நான்காவது குழந்தை யைப் பெற்றிருக்கிறார் சித்ரா என்ற அந்த பேச இயலாத பெண். நாம் அங்கு சென்று விஷயத்தை விசாரித்ததுமே, விஜயா என்பவரின் வீட்டைக் காட்டினார்கள் கிராமத்தினர்.

அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டில் ஒரு ஓரமாக சாக்கு விரித்து அதில் சித்ராவை படுக்க வைத் திருந்தனர். கந்தல் துணியாக தாய் சித்ரா சுருண்டிருக்க, ரோஜா குவியலாக ஆண் குழந்தை ஒன்று தாயருகில் கண்மூடித் துயில் கொண்டிருந்தது!

அடைக்கலம் கொடுத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஊரு நெடும்பலம். அங்கே ஒத்த தெருன்னும் சொல்வாங்க. உண்மையான முகவரி தெரியாது. எங்க ஊரு வீடுகளுக்கு முன்னாடி வந்து நின்னு சோறு கேக்கும். இரக்கப்பட்டு சோறு தண்ணி குடுப்போம். அப்பப்ப இது கர்ப்பம் ஆயிடும். யாரு காரணம்னு கேட்டா, 'அண்ணன், மாமா'ன்னு பொதுவா ஏதேதோ சொல்லும்.

இதுக்கு முந்தி இப்படி இதுக்கு போன இடத்துல ரோடு, வாசல்னு மூணு குழந்தை பிறந்திருக்கு. அப்பல்லாம் பக்கத்துல இருக்கவங்க, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி கொஞ்ச நாள் அவங்க வீட்லலேயே வெச்சிருந்துட்டு, யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா தூக்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. இப்படித்தான் அந்த மூணு குழந்தைகளையும் தோப்புத்துறை, பஞ்சநதிக்குளம், தம்பிக்கோட்டைனு மூணு ஊர்ல இருந்து வந்த குழந்தை இல்லாதவங்க தூக்கிட்டுப் போயிட்டாங்க.

கடந்த பதினேழாம் தேதி ராத்திரி, வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்க வீட்டு முன்னாடி வந்துசோத்துக்கு நின்னுச்சு. நானும் சோறு குடுத்தேன். அத சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போன வுடனே அலறல் சத்தம். பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா... வெளியிலயே பிரசவம்! உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க..!'' என்றார்.

ராஜாத்தி என்பவர் நம்மிடம், ''தெனமும் சாப்பாடு கேட்டு எங்கூருக்கு வர்ற சித்ரா, இடையில சிலநாள் வரமாட்டா. அந்த மாதிரி சமயங்களில்தான் யாரோ பாவிங்க இவளை எங்கேயாச்சும் கொண்டுபோய் வச்சிருந்து தப்பா நடக்கறாங்க போலிருக்கு. கேக்கவும் பாக்கவும் ஆளு இல்ல. அவளுக்கு பேச வேற வராதுங் கறதை எல்லாம் பயன்படுத்திதான் அந்த மிருகங்கள் அவளை இந்த நெலைமைக்கு ஆளாக்கி இருக் கணும். நீங்களாவது இந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு, ஒண்ணா சேர்த்து வைங்க. அப்படி இல்லைன்னா இந்தப் பொண்ணையாச்சும் ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்க!'' என்றார்.

நாம் வந்திருக்கும் தகவல் அறிந்த செம்பியமங்கலம் கிராம மக்கள் அங்கு கூடியதோடு இதே கோரிக் கையைத்தான் நம்முன் வைத்தனர்.

இதற்கிடையில், அருகிலிருக்கும் எடையூரை சேர்ந்த மாதவன் - தவமணி தம்பதி, 'பிறந்திருக்கும் இந்தக் குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்...' என்று கேட்டு, அங்கு வந்து சேர்ந்தனர். நம்மிடம் அவர்கள், ''எங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சி. குழந்தை இல்ல. எங்ககிட்ட இந்தக் குழந்தையைக் குடுத்தா, எங்க புள்ளையாவே வளர்ப்போம்...'' என்றனர் ஊர்க்காரர்களிடம்.

நாம் சித்ராவிடம் அவருடைய குழந்தை யைக் காட்டி,''இதுக்கு அப்பா யாரு?'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா?'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடித்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்?) என்றார். குழந்தையை பக்குவமாகத் தூக்கக்கூட சித்ராவுக்குத் தெரியவில்லை. தவமணிதான் குழந்தையைத் தூக்கித் தாயிடம் கொடுத்துப் பால் கொடுக்க வைத்தார்.

நாம் அன்று மாலை 6 மணிக்கு அங்கிருந்தபடியே திருவாரூர் மாவட்ட கலெக்டர் எம்.சந்திரசேகரனை தொடர்புகொண்டு இந்த அநியாயத்தைத் தவிப்போடு சொன்னோம். பதறிப்போன அவர், ''முதலில் தாயையும் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுவோம். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நாளை காலை அதிகாரிகளை அங்கு வரச்சொல்கிறேன்!'' என்றார் நிஜமான அக்கறையோடு.

மறுநாள் காலை நாம் மறுபடி அங்கு சென்றோம். திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம், செம்பியமங்கலத்தில் காத்திருந்து, 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்ற, குழந்தையைத் தத்தெடுக்க வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதி, ''நாங்களும் வந்திருந்து பார்த்துக் கொள்கிறோம்...'' எனக் குழந்தையை கையிலேந்திக் கொண்டனர். இதற்குள் கலெக்டர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேசிவிட... நாமும் திருவாரூர் சென்றோம். கூடவே திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரமும் வந்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாயையும் சேயையும் பரிசோதித்துவிட்டு அங்கேயே ஒரு வார்டில் அனுமதித்தனர். நாம் மீண்டும் கலெக்டரிடம் தொடர்பு கொண்டோம். ''மருத்துவர்கள் சொல்லும்வரை சித்ரா அங்கேயே இருக்கட்டும். பிறகு அந்தப் பெண்ணை காட்டூர் அருகிலிருக்கும் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அங்கு அவரை சேர்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு, அந்தப் பெண்ணைக் கேட்டு, அந்த குழந்தைக்கு அப்பா யார் எனக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கிறேன்....'' என நம்மிடம் உறுதியளித்தார்.

கலெக்டர் சந்திரசேகரனுக்கும், தாசில்தார் சிதம்பரத்துக்கும், தத்து எடுக்கத் தயாராக வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதிக்கும், யாரோ ஒரு பெண்ணை அநாதை என நினைக்காமல் தன் வீட்டுப் பெண்போல் பராமரித்து வைத்திருந்த விஜயாவுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த செம்பியமங்கலம் கிராம மக்களுக்கும் நமது சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

'ஏழாம் உலகம் என்பது வேதாளங்களுக்குச் சொந்தம்' என்று தன் நாவலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். ஆதரவில்லாத ஒரு பெண்ணிடம் தன் காமவெறியைத் தீர்த்துக் கொள்ளும் அந்த கோழை வேதாளம் என்றைக்குச் சிக்கினாலும் சரி... சட்டம் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு திரும்பினோம்!


என்ன செய்தாலும் திருந்தாத ஜென்மம் மானிடர் ஜென்மம்.