குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, January 26, 2019

நிலம் (49) - சத்தமின்றி அமலாகும் நில உச்சரவரம்புச் சட்டம்

பொங்கல் அலுப்புகள், இனிப்புகள், கசப்புகள், அசதிகள் எல்லாம் உள்ளத்தை விட்டு அகன்றிருக்கும். காலம் தான் எல்லாவற்றுக்குமான விடையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ’இன்றைய நிலை, நாளை இல்லை. நாளையோ நம் கையில் இல்லை’ என்கிறார்கள் முதியோர்கள். ஆம் வாழ்க்கை எவரிடமும் கேட்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. (உண்மையில் அது நகரவும் இல்லை, நகர்த்தவும் இல்லை. நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)

வாழ்வியல் சூழல்கள் கற்பிதங்களுக்கான கற்பனைகளோடு இயைந்து மனிதனை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாய வலையிலிருந்து எந்தக் காலத்திலும் வெளி வர  முடியாது. கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்க வேண்டும் என உலகம் கேனத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் நலனுக்காக உருவான கட்டுப்பாடுகள், இப்போது மனிதன் கட்டுப்பாடுகளுக்காக வாழ வேண்டும் என மாறிப்போனது. 

அரசியல் செம கேவலமாக இருக்கிறது. கொலை கொள்ளை வரைச் சென்றிருக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள். என்ன மாதிரியான அரசியல் இது என்றே தெரியவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து நாற்றமடிக்கிறது. மக்கள் அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து சுகம் சுகம் என்று பாடிக் கொண்டலைகின்றார்கள்.

இதற்கிடையில் கோவையில் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தின் இயக்குனர் எனது பிளாக்கைப் படித்து விட்டு என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். பெரிசு ஏன் சிறிசுவைச் சந்திக்கணும்? தீர்க்க இயலா ஏதோ பெரும் பிரச்சினை போலும், வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு வரச்சொன்னேன்.

பெரிசுகள் எப்போதும் சூதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். நாம் தான் சூட்டின் மீது உட்கார்ந்திருப்பது போல கவனமாக இருக்க வேண்டும். மனசில ஓரமாக் வச்சுக்கங்க.

என்னைப் பற்றி விசாரித்து விட்டு, மெதுவாக ஆரம்பித்தார் அவர் கம்பெனியின் வேலைகள், தொழில்கள், அதன் வளர்ச்சிகள், பிரச்சினைகள் எனத் தொடர்ந்தது அவரின் பேச்சு. இதையெல்லாம் ஏதோ நம் மீது கொண்ட பிரியத்தின் மீதான காரணத்தால் சொல்கிறார் என்று நினைக்க நானென்ன சசிகலாவா? சிரித்துக் கொண்டேன். நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றாராம் அவர். ஆகையால் இந்தச் சின்ன வேலையை என்னைப் போல ஆட்களிடம் கொடுத்து ஃபாலோ செய்யச் சொல்லி முடிப்பது அவரின் வாடிக்கையாம். இப்படித்தான் தொடர்ந்தது பேச்சு. 

பெரிய பிரச்சினையுடன் ஆள் வந்திருக்கிறார் என்று நன்கு புலப்பட்டது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என என்னை நம்ப வைக்கவும், எனக்கு நேரமில்லாத காரணத்தால் தான் இதை உன்னிடம் தர உள்ளேன், அந்தளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மை எனவும் நான் அறிய வேண்டுமென விளக்கிக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமெனில் பத்து மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள். ஆள் அந்த வகையானவர். 

இன்னொரு கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. யூடியூப்பில் என்னிடம் விற்பனைக்கு வந்த ஒரு தென்னந்தோப்பைப் பற்றி விபரம் வெளியிட்டிருந்தேன். வெளி நாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் போன்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல இடம் எங்கே இருக்கிறது? என்பார்கள். சொல்வேன். விலை என்ன என்று கேட்பார்கள்? சொல்வேன். அந்த விலையா அந்த இடத்தில் என்பார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருப்பேன். சரி என வைத்து விடுவார்கள். இப்படித்தான் ஒரு லேடி போனில் அழைத்தது. எந்த ஊரில் இருந்து பேசுகின்றீர்கள் என்று கேட்டேன். கோவையிலிருந்துதான் என்றார். பொய் பேசுறவங்களிடம் நான் தொடர்ந்து பேசுவதில்லை என அழைப்பை நிறுத்தினேன். அது துபாய் அழைப்பு. அடுத்த நொடியில் இன்னொரு அழைப்பு. என் மனைவி பேசிக் கொண்டிருக்கிற போது எப்படி நீங்கள் அழைப்பை நிறுத்தலாம் என்றார் ஒருவர். நானென்ன அவர் வீட்டு வேலைக்காரனா? செம டென்சனாகி விட்டது. நான் கொடுத்த சவுண்ட் எஃபெக்டில் ஆள் குரலை இறக்க தொடர்பை துண்டித்தேன். இப்படியான தொல்லைகளும் இருக்கின்றன.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். போனில் அழைத்து எனக்கு இன்ன தேவை என்பார்கள், இடம் சொல்வார்கள், அவர்களின் முதலீட்டுத் தொகையைச் சொல்வார்கள். நான் அவருக்காகச் செய்யப் போகும் வேலைகளையும்,  எனது கட்டணத்தையும் விவரிப்பேன். அடுத்த இரண்டொரு நாட்களில் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்து விடும். அவரின் தேவை அவரின் முழு அளவில் எந்த வித சிக்கலும் இன்றி நிறைவேறும். இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதையெல்லாம் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் எழுதுவேன் படித்து மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி பெரிசுவின் பிரச்சினைக்கு வரலாம்.

வினோபாவா ஆச்சாரிய யக்ஞம் மூலமாக தமிழக மெங்கும் எடுக்கட்ட நிலங்கள் தற்போது ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன என்று எனக்குத் தெரியும். அதே போல நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசு தற்போது பட்டாவில் அரசு நிலம் என குறிப்பிட்டு வருகிறது என்பதும் எனக்குத் தெரியும். பெரும் தனக்காரர்களின் அனேக சொத்துக்கள் சத்தமில்லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அப்போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. உட்கார்ந்த இடத்தில் சரசரவென வேலை நடக்கிறது.

பெரிசு ஃபாக்டரி கட்டுவதற்காக வாங்கிய பதினைந்து ஏக்கர் நிலமும் அரசு நிலம் என மாறிப் போனது. விற்பனை நடந்து பத்து வருடம் ஆகி விட்டது. இனி எங்கே பணம் கிடைக்கும்? எல்லா ஆவணங்களையும் எடுத்தால் 1958ல் அந்த பதினைந்து ஏக்கர் நிலத்தின் அப்போதையை உரிமையாளர் யக்ஞத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டது தெரிந்து டென்சனாகி எங்கெங்கோ சென்று முட்டி மோதி ஓடிக் களைத்துப் போய் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் எனது பிளாக்கைப் படித்துப் பார்த்து விட்டு கல் வீசலாம் வந்தால் பழம், போனால் கல்லு என வந்து விட்டார்.

அவரின் அனைத்து ஆவணங்களையும் மேலோட்டமாகப் பார்த்தேன். 15 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பெற்று விட அற்புதமான வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தேன். அவரிடம் சொன்னேன், மீட்டு விடலாம் என.

ஆகவே அன்பு நண்பர்களே ஆன்லைனில் உங்களின் நிலம் உங்களிடம் தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, January 9, 2019

நிலம் (48) - டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாமா?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தினைப் பிறருக்குச் சொல்லும் போதெல்லாம் திருப்பூர் குமரன் மண்டை உடைந்து செத்துப் போன செய்தியும், கோவையில் செக்கிழுந்த வ.உ.சிதம்பரனாரும் நினைவில் வந்து விடுகின்றார்கள். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆங்கில ஆண்டு. அடிமையின் சின்னமாய் இருந்தாலும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாத வகையில் வரலாற்று சின்னமாகிப் போன அவலம் நினைவிலாடும். வரும் கால தலைமுறையினருக்கு இந்த எண்ணங்கள் வரச் சாத்தியங்கள் குறைவு.

ஆட்சிப் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள் வரும் போது, அவரவர் புத்திக்குத் தக்கவாறு வரலாற்றை மாற்றி சிறார்களுக்கு பாடப்புத்தகங்களை உருவாக்கும் அவலத்தை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் ஜாதிக்கு ஒரு வரலாறு எனவும், ஜாதிக்கு ஒரு பள்ளி எனவும் மாறினாலும் மாறலாம். பெண்கள் தனிப்பள்ளி இருப்பது போல இந்த ஜாதிப் பெண்களுக்குத் தனிப்பள்ளி, ஆண்களுக்கு தனிப்பள்ளி என்று கூட வரலாம். குறுகிய மனம் படைத்தோர் பதவிக்கு வரும் போது இத்தகைய அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பூனைக்கு எவரும் மணி கட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் மொழி, தன் இனம், தன் சிந்தனை பற்றிய கவலைகள் தான். 

உடம்பு என்று இருந்தால் நோய் இருக்கும். அதே போல சொத்துக்கள் என்று இருந்தால் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் என்னிடம் கொண்டு வந்த சொத்துப் பிரச்சினை நான் எதிர்பார்க்காத ஒன்று.

கோவையில் சேரன் மாநகர் என்றொரு பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி விளாங்குறிச்சி என்ற ரெவின்யூ கிராமத்தில் அடங்கியது. இந்தப் பகுதியில் தமிழ் நாடு வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்ட நிலங்கள் அதிகம். கிட்டத்தட்ட 1200 ஏக்கருக்கும் மேல் என்று நினைவு. அது பற்றிய விபரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த நிலங்கள் அரசின் வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்டவை. இதில் தகுந்த இடத்தில் தடையின்மைச் சான்று பெற்றால் ஒழிய வீடோ அல்லது விற்பனையோ செய்ய இயலாது. 

என்னிடம் வந்த பிரச்சினை விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள நான்கு டிடிசிபி அப்ரூவ்ட் சைட்கள். அவை டிடிசிபி அப்ரூவல் செய்யப்பட்டு மனை வரைபடம் வழங்கப்பட்டிருக்கின்றன. மனை வரைபடம் வழங்கப்பட்ட ஆண்டு 1992. ஹவுசிங் போர்ட் நிலம் எடுக்க உத்தரவிட்டு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 1983. ஆனால் 1992ம் வருடம் மனை அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மனையை வாங்கியவர் தற்போது விற்க முனையும் போது அது ஹவுசிங் போர்டில் வருகிறது என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தனர் தற்போதைய நில உரிமையாளர்கள்.

இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் நினைக்கலாம். நான் முன்பே சேரன் மாநகர் பகுதியில் பதினைந்து வருடங்களாக பட்டா வாங்க இயலாத வீட்டு மனைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். கிட்டத்தட்ட 70 வீட்டு மனைகள் டிடிசிபியால் அப்ரூவல் செய்யப்பட்டவை. தற்போது வரைக்கும் பட்டா பெற முடியவில்லை. காரணம் அந்த நிலங்கள் நில உச்ச வரம்புச் சட்டத்தில் அரசின் நிலமாக மாற்றப்பட்டவை. அந்த விஷயத்தை மறைத்து மனை அப்ரூவல் பெற்று விற்பனை செய்திருக்கின்றார்கள்.

டிடிசிபி அப்ரூவல் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். சொத்தின் உரிமையில் வில்லங்கம் ஏற்பட்டால் தகுந்த நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என. வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கும் போது இது முழுமையான ஆவணம் அல்ல என்று கொடுத்திருப்பார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

ஆகவே டிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் என்றுச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிட வேண்டாம். தகுந்த ஆட்களைக் கொண்டு அந்தச் சொத்தின் வரலாறு போன்றவற்றை ஆராய்ந்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவஸ்தைப் பட நேரிடலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.