குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, May 30, 2008

கள்ளும் நானும்.....

இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன்.

பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...

போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....

Monday, May 26, 2008

ஹாக்கர்ஸால் தாக்கப்படும் செல்போன்கள்

எஸ் எம் எஸ் மூலம் ஹாக்கர்ஸ் செல்போன் பயன்படுத்துபவர்களின் தகவலை திருடி விடுகிறார்கள். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் என்று வரும் எஸ் எம் எஸ்க்களை உடனே அழித்து விடவும். இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் செல்போனின் தகவல்கள் அனைத்தையும் அந்த மெசேஜ் அனுப்பியவரை சென்று சேரும். இன்கமிங், அவுட்கோயிங் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். இல்லையெனில் ஐடிடெண்டியினை அழித்து விடுவார்கள்.

உங்கள் புருஷனுக்கு ஆக்ஸிடென்ட், இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம். ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் எடுத்துக் கொண்டு இந்த முகவரிக்கு உடனே வரவும் என்ற மெசேஜ் கிடைத்து அரக்க பரக்கச் சென்று அந்தப் பெண்ணை வழிமறித்து பணத்தை சுவாகா செய்த நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது.

ஜாக்கிரதை...

Saturday, May 24, 2008

விமர்சகர்களுக்கு கேள்விகள்

சினிமா விமர்சனம் தமிழ் உலகில் பரபரப்பானது. சினிமாவினைப் பற்றிய விமர்சனம் போதை
தரும் என்பதால் அதை விட்டு விடுகிறேன். இலக்கிய உலகத்துக்கு வந்தால் அப்பப்பா
எத்தனை எழுத்துக்கள். எத்தனை விமர்சனங்கள்.

எண்ணி அறிய இயலா பிளாக்குகள். அத்தனையிலும் விமர்சனம். விமர்சனம். அந்த
எழுத்தாளர் அதில் இப்படி எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்வில் வேறு எப்படியோ இருக்கிறார்.
இன்னொருவரின் கதையினை திருடி விட்டார். இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
என்று இன்னும் வகைப்படுத்த முடியாத அளவுக்கு விமர்சனங்கள்.

அத்தனையும் படிக்க உட்கார்ந்தால் பயித்தியக்காரனும் தெளிந்து விடுவான்.
இங்கு பயித்தியக்காரன் ஒருவன் தான் சுயபுத்தியோடு இருக்கிறான்.

காப்பி அடித்து எழுதுகிறார் என்று விமர்சனம் எழுதுகிறார்கள்.
ஏனய்யா விமர்சனம் எழுதும் வித்தகா நீயே உன் அப்பாவோ இல்லை அம்மாவின் காப்பி தானய்யா ? இந்த லட்சனத்தில் விமர்சனம் எழுதுகிறாய்.

இன்னும் ஒரு அபத்தம் நடக்கிறது பிளாக்குகளில். ஒருவரின் கதை புரியவில்லை என்றால் உடனே அய்யோ அம்மா என்று அலறி புடைத்து சமூக காவலாளி வேஷம் போட்டு எழுத்தா அது புண்ணாக்கு அது இதுவென்று எழுதுவது...

விமர்சகா, உனக்கு விளங்க வில்லை என்றால் மேலேயும் கீழேயும் பொத்திக் கொண்டு போகனும். அதற்கு எழுதியவனை விமர்சிப்பது உன்னுடைய அறியாமையை காட்டும். அதாவது நீ புத்தி இல்லாதவன் என்று நீயே உன்னை விமர்சிப்பது தான் அது.

படி. ரசி... பிடிக்கவில்லை எனில் ஒதுக்கு. அதை விடுத்து விமர்சனம் என்ற பெயரில் அலறுவது குறை சொல்லுவது, கூட்டம் போட்டு திட்டுவது, ஏன் உனக்கு இந்த வேலை ?

மற்றவனை பற்றி விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். பின்னர் எழுத துவங்கு.

Thursday, May 22, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)

ரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.
பிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.
இவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ
அதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.

உனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.

பிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.

நீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.

உனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.

ஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.

ரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.

எங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.

உனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.

கல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.

நாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.

செய்வாயா ரித்தி..


உன் அன்பு அப்பா...

Sunday, May 18, 2008

சினிமா சில கருத்துக்கள்

சினிமா சாக்கடை என்று பொதுவாக சொல்கிறோம். காரணம் கேட்டால் பெண்களைத் தான் கை காட்டுவோம். ஏனெனில் பெண்களை வீட்டுக்குள் வைத்து பொத்தி பொத்தி அவளை சொத்தாக்கி விட்ட சமூகத்தில் வளர்ந்து வந்ததால் அப்படித்தான் சொல்லுவோம்.

பெண்களை வீட்டுக்குள் வைத்து அவளை ஒரு சொத்தாக கருதி, முக்கியத்துவம் கொடுக்கும் நமது சமூகம், அந்தப் பெண் அவுத்துப் போட்டு ஆட வரும் போது ஏற்படும் மன அதிர்ச்சியில் கொழுப்பு பிடித்தவள், விபச்சாரி என்று எளிதாக சொல்கிறது.

விபச்சாரம் ! ஆண் இன்றி விபச்சாரம் இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்று. அதை விட்டு விடலாம். சில பெண்கள் இருக்கலாம். அவர்களை நிம்போமேனியாவாக கருதி விட்டு விடலாம்.

ஆணுக்கு தேவை பெண். கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட ஆணின் அந்தரங்க ஆசையினை நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் அங்கு பெண் தேவைப் படுகிறாள். அதற்கு அங்கு ஒரு பெண் விபச்சாரி ஆக்கப்படுகிறாள்.

சினிமாவில் பெண்கள் அவுத்து போட்டு ஆடுவதால் தான் தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இல்லை எனில் தினமும் கற்பழிப்பு தான் நடக்கும்.

ஆணின் வக்கிரங்களுக்கு வடிகாலாய் பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியுமா ?

சினிமா கதாநாயகிகள் ஆண்களின் காமம் எனும் எரியும் நெருப்பில் எரிக்கப்படும் விறகுகள் ஆவார்கள். அவர்களின் சமூக சேவை எவராலும் செய்ய இயலாத மாபெரும் தியாகம் என்பேன். காரணமும் உண்டு. சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆட்ரி ஹெர்பனைக் காதலித்த ஒருவரின் அனுபவமும் அதனால் அவரின் வாழ்க்கையில் நேர்ந்தவைகளையும் சுவையாக சொல்லி இருந்தார். ஒவ்வொரு மனிதனின் ரகசிய காதலியாக இருப்பவர்கள் நடிகைகள். அவர்கள் திரையில் வந்து சிரிக்கும் போதெல்லாம் அவளைக் காதலிக்கும் ஆணின் மனசுக்குள் ஏற்படும் உணர்வினை எழுத்தால் எழுதிவிட முடியாது. சிலரின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதும் நடிகைகளே.. இப்படி ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருக்கும் நடிகைகளை விபச்சாரி என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எனக்கு புரியவில்லை.

பணம் கிடைக்கிறது. அதனால் தான் நடிக்கின்றார்கள் என்று விவாதம் செய்வது இங்கு பொருத்தமற்றது. ஏன் ஆண்கள் எவரும் விபச்சாரத்தை விட மிக மோசமான ஏமாற்று வித்தை, செப்படி வித்தைகள் ஏதும் செய்து பணம் சம்பாதிக்கவில்லையா ? ஏன் அரசியலை விட கொடுமையான தொழிலையா நடிகைகள் செய்து விட்டார்கள்.

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் புகழ், பெருமை அனைத்தும் பெண்களின் உடம்பின் மீது எழுப்பபடும் கோட்டை. இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா ? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.. தற்போதைய ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு என்று புகழ் பெற்று இருக்கும் நடிகர்கள், நடிகைகள் இன்றி படம் எடுப்பார்களா ? இல்லை அதில் தான் நடிப்பார்களா ? அப்படி எடுத்தால் எவனாவது சினிமாவுக்குத் தான் செல்வானா ?

விபச்சாரிகள் என்று சொல்லி நடிகைகளை அழைப்பதை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கை எண்ணற்ற ஆண்களின் காம வடிகாலுக்காக அழிக்கப்படுகிறது என்ற உண்மையினை ஒரு கணமேனும் எண்ணிப் பார்த்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

Wednesday, May 14, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 3 ( 14.05.2008)

ரித்தி, இன்று உனக்கு சில முக்கியமான விஷயங்களை சொல்ல இருக்கிறேன்.

முதலில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நீ தீங்கேதேனும் செய்தால் அது திரும்பவும் உனக்கு தீங்காய் வந்து முடியும் என்பது.

இதற்கு என்ன ஆதாரம் என்று நீ கேட்பாய் என்பது எனக்கு தெரியும். விஷயத்துக்கு வருகிறேன். திபெத் என்ற நாட்டினை பற்றி உனக்குச் சொல்ல வேண்டும். சீனா திபெத்தை ஆக்ரமித்து திபெத்தியர்களை அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்த போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது சில நாட்களுக்கு முன்பு. கேட்பார் யாரும் இல்லை. கேட்டாலும் சீனா எவரையும் மதிப்பதும் இல்லை.

ஆனால் நடந்தது என்ன இப்போது ? இரு நாட்களுக்கு முன்பு சீனாவில் படு பயங்கரமான நில நடுக்கம் வந்து 10 ஆயிரம் சீனர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். கடவுள் என்பவனின் தண்டனை இருக்கிறதே அது படு பயங்கரமாக இருக்கும். சீனாவினை எப்படி தண்டித்து இருக்கிறார் பார் மகனே.... தர்மம் சூட்சுமமானது என்பார்கள். இறைவனின் தர்மம்
இப்படி இருக்கிறது...

இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சொல்லுவது.

புரிந்து விட்டதா கண்ணே...? ஆதலால் எவர் ஒருவருக்கும் நீ தீங்கு செய்ய நினைக்காதே...


இன்னும் ஒரு விஷயம் கண்ணே .. !

கடந்த ஞாயிறு அன்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் ( இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்)
தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு " IF THE HEALTH MINISTER CAN'T DO THIS, WHO CAN ? " அதன் சாரம்சத்தை தருகிறேன். ஒரு மில்லியன் என்று சொன்னால் பத்து லட்சம் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்று சொன்னால் 100 லட்சம் என்று அர்த்தம்.

ஒரு மில்லியனுக்கும் மேலே புகையிலையினால் இந்தியாவில் மனிதர்கள் சாகின்றார்கள் என்றும், 15% பள்ளிக் குழந்தைகள் புகையிலையினை பயன்படுத்துகிறார்கள் என்று உலக ஆரோக்கிய நிறுவனத்தின் ஆராய்ச்சியில் சொல்லி இருப்பதாக எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆராய்ச்சியில் 52% இளைஞர்கள் சினிமாக்களை பார்த்த பின் தான் புகை பிடிக்க ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புகையிலை தயாரிப்பு கம்பெனிகளால் உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் இறப்பதாகவும் சொல்கிறார்.

தெற்காசிய நாடுகளில் தயாராகும் சாராயத்தில் 65% இந்தியாவில்தான் குடிக்கிறார்களாம். 15 வருடத்திற்கு முன்பு 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சாராயம் இன்று 2.3 பில்லியன் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம். சாரயம் குடிப்பவர்களின் ஆவரேஜ் வயது 28 லிருந்து 19 வயதாக வேறு குறைந்து இருக்கிறதாம். மேலும் இது 19லிருந்து 15 வயதாக இன்னும் 5 அல்லது 7 வருடத்திற்குள் குறைந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்களாம்.

இந்தியாவில் இறக்கும் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் நான்கு வகையான கொலைகாரர்களான சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகள் இவற்றினைப் பயன்படுத்துவதால் கொல்லப்படுவதாகவும் சொல்கிறார். சாரயத்தினால் தனி மனிதன் மட்டும் பாதிக்காமல் அவனது குடும்பமே பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.

உலக் ஆரோக்கிய நிறுவனம் இந்தியா கேன்சர் என்ற புற்று நோய், டயாபடீஸ், கார்டியோ வஸ்குலர் எயில்மெண்ட்ஸ் மற்றும் மெண்டல் டிஸ்ஆர்டர் நோயின் பிடியில் விழ ஆரம்பித்துள்ளதாக முன்பே எச்சரித்து உள்ளதாகவும் சொல்கிறார். மேலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற என்று எழுதியிருக்கின்றார்.

இதெல்லாம் உனக்கு ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நீ எப்படி வருவாயோ எனக்குத் தெரியாது.

உனக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி கிடைத்தால் ( அதற்கு நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் ) உடனடியாக சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் தீமை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூடி விடு,
கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும் இயற்றி விடு. ஏனெனில் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களும் கொலை செய்பவர்களே..

என் அன்பு மகனே... உனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வாய் என நினைக்கிறேன். செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா.....

Monday, May 12, 2008

மகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)

ரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....நேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்
மேலும்
“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.

நல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே ! கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...

உனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா ? நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா ?

உன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா ?

பாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்லோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா ? இப்போதைக்கு இது போதும் மகனே...

Saturday, May 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 1 நாள் 10.5.2008

இன்று காலையில் கராத்தே கிளாசுக்கு அழைத்துச் சென்றேன் அல்லவா ? மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா ? ” என்று கேட்டாய்.

பேக்கரியில் டீ கொடுத்தவர் நீ டீ குடிக்க முயற்சித்து சூட்டால் முகம் சுளிப்பதைக் கண்டு, அருகில் வந்து ” சூடா இருக்கா, ஆற்றி தரவா ” என்று கேட்க நீ சிரிப்புடன் முறுவலித்ததை பார்த்த அவர் அன்புடன் உன் தலையினை கோதி விட்டு ஆற்றி எடுத்து வந்து கொடுத்தார் அல்லவா ? அதைப் போல அனைவரிடமும் அன்பான பார்வையுடன், லேசான புன்னகையுடன் அணுகி வா. அனைவரும் உன்னை நேசிப்பார்கள். மனிதர்கள் அன்புக்கு ஏங்குபவர்க்ள். அனைவரிடம் அன்புடன் பேசு. ஆதரவாக இரு. எல்லோரும் உன்னை விரும்புவார்கள்.

ஏழு மணிக்கு மாஸ்டர் வந்து விட்டார். அவருக்கு நேரம் கிடைக்காது. அவர் லேட்டாக வருவார். அவருக்கு எண்ணற்ற பணிகள். ஆதலால் அவர் நேரத்துக்கு வர இயலாது.

ஆனால் நீ, சரியான நேரத்திற்கு சரியான இடத்துக்கு சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில். நேரத்தை ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் கழிக்க வேண்டும்.

என்ன செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா....

அன்பு மகனுக்கு ஒரு வேண்டுகோள்

மகனே, நீ இந்தப் பதிவுகளைப் என்றாவது ஒரு நாள் படிப்பாய் நம்பிக்கையில் எழுதுகிறேன். உனக்கு யூகேஜி பாடங்கள் படிக்க வேண்டி இருக்கும். நேரமும் இருக்காது. அது மட்டும் இன்றி கார்ட்டூன் சானல் பார்க்கனும், பக்கத்து வீட்டுப் பையன் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கவும் உனக்கு நேரம் பத்தாது. மாலையில் நீ கராத்தே கிளாஸ் போவதால் நேரம் என்பது இருக்காது எனவும் தெரியும். இருந்தாலும் ஒரு நம்பிக்கை.

நான் எப்போதும் இணையதளத்தை வாசித்துமெழுதியும் வருவதை நீ ஆர்வமுடன் அருகில் இருந்து பார்ப்பது எனக்கு தெரியுமென்பதால் அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன். வரும் நாட்களில் உனக்கு கடிதம் எழுதி வைப்பேன். நேரம் இருந்தால் படித்து பார்க்கவும்.

Monday, May 5, 2008

நண்டு மசாலா - நினைவலைகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் ஊருக்குச் சென்று இருந்தேன்.

காரின் ஓட்டுனரும் எனது நண்பர் தான். “ மாப்பிள்ளை மாப்பிள்ளை ” என்று தான் அழைப்பார். தண்ணி போட்டு விட்டால் மாப்பிள்ளை மறைந்து போய் “கவுண்டர் மாப்பிளே “ வந்து விடும். நிற்க...

” மாப்பிள்ளை நண்டு சாப்பிடணும் ஏற்பாடு செய் ” என்று டிரைவர் சொல்ல, சித்தப்பாவிடம் விஷயத்தை சொன்னேன்.

தங்கை, மனைவி மற்றும் அம்மாவின் கைப் பக்குவத்தில் நண்டு வறுவலின் வாசனை தூள் கிளப்பியது.

சித்தப்பாவை வந்து ரகசியமாய் அழைத்துக் கொண்டு சென்றார் டிரைவர். என்ன என்று தங்கையிடம் விசாரிக்க, ஓல்ட் மங்க் பாட்டில் ஒன்று கடையில் இருந்து வந்ததாக அறிய நேர்ந்தது.

காருக்குள் இருந்து ( வெளியே அமர்ந்து குடிக்க முடியாத அளவுக்கு எனது சித்தப்பா ஊரில் கலாச்சார சீர்கேடு இருக்கிறது ????? ) ஒரு வழியாக என் நண்பர், சித்தப்பா மற்றும் டிரைவர் மூவரும் வர, இலையினை போட்டு மூவருக்கும் சாப்பாடு பரிமாறினார் என் தங்கை.

நான் பின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வெளியில் அமர்ந்து இருந்தேன்.

தங்கை வெளியில் வந்து சிரித்து விட்டு உள்ளே சென்றார். இது அடிக்கடி நடந்து கொண்டு இருந்தது.

எனக்கு விஷயம் புரியவில்லை.

” என்னம்மா ? “ என்றேன்
“ அண்ணே, உள்ளே டிரைவரை பாரு “ என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க,

என்னவென்று பார்த்த பின்பு வந்த புன்னகையை மறைக்க முடியவில்லை.

அப்படி என்னதான் உள்ளே நடந்து கொண்டு இருந்தது என்கின்றீர்க்ளா ?

டிரைவர் நண்டினை அதன் ஓட்டுடன் சேர்த்து கட முட வென மென்று முழுங்கி கொண்டு இருந்தார். இலையில் பத்து நண்டுகளுக்கும் மேல் இருந்தது. கால்கள் வேறு இருக்க அனைத்தையும் சுறு சுறுப்பாக கடித்து மென்று முழுங்கியவாறு இருக்க என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


இதன் பலன் மறு நாள் தெரிந்தது. என்னவென்றால் கார் கரூரை நெருங்கி கொண்டிருந்த போது,

” மாப்பிள்ளை, ஒரு நிமிஷம் இரு, மூச்சா போயிட்டு வந்து விடுகிறேன் ”என்று சொல்லிவிட்டு கையில் தண்ணீருடன் செல்ல
மனைவிக்கு புரியவில்லை.

” ஏங்க எதுக்கு தண்ணி ? “ ஓல்ட் மங்கில் தண்ணீர் கலந்து அடிக்கப் போகிறார் என்று எண்ணி பயத்துடன் கேட்க,

விஷயத்தைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள்.