குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, May 22, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)

ரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.
பிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.
இவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ
அதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.

உனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.

பிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.

நீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.

உனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.

ஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.

ரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.

எங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.

உனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.

கல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.

நாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.

செய்வாயா ரித்தி..


உன் அன்பு அப்பா...