குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 4, 2026

பாஜக அரசின் கொடுமைகள்

2026 பிப்ரவரி மாத காலச்சுவடு மாத இதழில் ஆசிரியரின் தலையங்கத்தின் ஒரு சில பகுதிகளைப் படியுங்கள். இது நான் எழுதவில்லை. இலக்கிய உலகில் தனக்கென தனிப்பாதை அமைத்து நடந்து வரும் காலச்சுவட்டில் வெளியானது. 

மோடி அரசின் ஒவ்வொரு நிகழ்வையும் இக்கட்டுரை கேள்வி கேட்கிறது. சாகித்ய அகடெமியின் விருதுகள் ஏன் நிறுத்தப்பட்டன, இதன் பின்னால் நடக்கும் மொழி, இனவழிப்பு நடிவடிக்கைகள் பற்றிய விளக்கத்தை இந்தத் தலையங்கம் எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாஜக அரசு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைப் பண்பாட்டை சீரழித்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இனி அந்தத் தலையங்கத்தில் ஒரு சில பகுதிகளைப் படியுங்கள்.

பாஜக அரசு அதிகாரமேற்ற நாள்முதலாகவே கடைப்பிடித்து வரும் கலாச்சார ஒடுக்குமுறையின் அப்பட்டமான உதாரணம் இது. வரலாற்றைத் திரிப்பது, பண்பாட்டு விழுமியங்களைச் சிதைப்பது, வரலாற்றுச் சின்னங்களையும் ஆளுமைகளையும் தனக்கு உவப்பான வகையில் முன்னிருத்துவது, ஒருமைப்பாட்டைக் குலைப்பது, ஜனநாயக மரபுகளை மறுப்பது முதலான ‘பாசிஸ’ நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே அரசு என்ற பொய்க் கனவைப் படிப்படியாகவும் அதிரடியாகவும் திணித்துவருகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய அரசமைப்பின் உயிர் நாடியான கொள்கைக்கு விடப்பட்ட அறைகூவல். இது ஓர் அறிவார்ந்த சமூகம் உருவாகும் சூழலை அழிக்கிறது. இந்த ஆபத்தின் எளிய சான்றுதான் சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பில் நிகழ்ந்தேறியிருக்கிறது.  

இதுமட்டுமலல், கல்வியில் தனி அதிகாரத்தை செலுத்தி கல்வியை அழிக்கிறது என்கிறது தலையங்கம். 

அரசியல் அதிகாரத்தை மட்டுமன்றி கலாச்சார அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் இன்றைய அரசு முனைந்து செயல்பட்டுவருவது வெளிப்படை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை ஏற்கெனவே கபளீகரம் செய்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நுழைத்திருக்கிறது. தன்னாட்சி நிறுவனமான திரைப்படக் கல்லூரியை முடமாக்கியதும் திரைப்பட விழாக்களைத் தனக்குத் தோதானதாக மாற்றியதும் திரைப்பட விருதுகளில் பக்கச் சார்பை ஏற்படுத்தியதும் எடுத்துக் காட்டுகள். இந்த அத்துமீறலின் இன்னொரு பக்கமே சாகித்திய அகாதெமி விவகாரம். 

ஒரு மொழியை நீக்குவது என்பது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம்?  பாஜக அரசு என்ன செய்கிறது என்பதை படியுங்கள். 

2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் எல்லா மொழிகளிலும் நிறுத்தப்பட்டன. ஒரு படைப்புக்கு அல்லது படைப்பாளிக்குத் தேசிய அளவிலான கௌரவம் அறிவிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படாமல் போவது அந்தப் படைப்புக்கோ படைப்பாளிக்கோ இழைக்கப்படும் அவமதிப்பு மட்டுமல்ல. அந்த மொழிக்கே இழைக்கப்படும் அவமதிப்பு. எல்லா மொழிகளுக்கும் இணையான தகுதியுண்டு என்று அரசியலமைப்பு வரையறுத்திருக்கும் நன்னோக்கத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு. முன்னர் 2024ஆம் ஆண்டு விருதுக்கான பரிசீலனையிலிருந்து வங்காள மொழி விலக்கப்பட்டது. அந்த மொழியில் அந்த ஆண்டு சிறப்பான ஒரு படைப்புக் கூடவா உருவாகாமலிருந்திருக்கும்? அந்த மொழி தேர்விலிருந்து புறக்கணிக்கப்பட்டது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வெளிச்சம்.

பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கிறது என்கிறது இந்தத் தலையங்கம்.

இந்தியா ஆன்மீக பூமி. அறம் செழித்திருக்கும் பூமி. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பூமி. இங்கு அயோக்கியர்களும், அயோக்கியதனங்களும் அடியோடு அழிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. 

இந்தப் பதிவினைப் படித்த போது வேதனைதான் உருவானது. நாம் கடவுள் மீதும், இயற்கையின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறொன்றினையும் செய்ய முடியாதவாது இந்தியா மாற்றப்பட்டிருக்கிறது என்பது கொடுமை. 

நன்றி : காலச்சுவடு மாத இதழ்

உண்மைகளை உரக்கச் சொல்லும் தலையங்கத்தின் இன்னொரு பகுதியை நான் குறிப்பிடவில்லை. காரணம் அது படைப்பாளிகளின் அரசியல். அது இங்கே தேவையில்லை என்பது எனது கருத்து.



0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.