குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 29, 2021

சிதம்பரநாதனின் பொய்யும் புரட்டும் - தினமணிக்கு கண்டனம்

இன்றைய (29.12.2021) தினமணியில் ’ ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆககூடாது’ என்ற தலைப்பில் பெ.சிதம்பரநாதன் என்பவர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தினமணியும் தனது உள் குத்து அரசியல் வேலையை அறமற்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது.

என்ன எழுதி இருக்கிறார் அக்கட்டுரையில் பார்க்கலாம்.

  1. ஆளும் பாஜகாவால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் சுமூகமாக சட்டமாக்கவில்லையாம்.
  2. பிஜேபி கட்சி ஏற்கனவே நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கூட முடியாமல் எதிர்கட்சிகள் பிரச்சினை செய்தததாம்.
  3. பெண்ணின் திருமண வயது 21 என்ற சட்டத்தினை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்.
  4. பிளாஸ்டிக் தடை செய்ய மசோதா கொண்டு வர வேண்டுமாம். அதை எம்.பிக்கள் நிராகரிக்க முடியாதாம்.
  5. தேனியில் அமையவுள்ள நியுட்ரினோ ஆய்வகத்தினை அமைத்திடும் போது மலையைக் குடையும் போது வைகை அணை தகர்ந்து விடும் என்று அரசியல்வாதிகள் பீதியைக் கிளப்பி விட்டார்களாம்.
  6. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது அத்துமீறிய 12 எம்பிக்களை கலந்து கொள்ள விடாமல் வெளியேற்றியது சரிதானாம். அதை பொது மீடியாக்களில் வெளியிட வேண்டுமாம். எதிர்கட்சி என்பதாலேயே எல்லா மசோதாக்களையும் எதிர்த்து எம்.பிக்கள் மகிழ்கின்றார்களாம்.
  7. புதிய கல்விக் கொள்கையில் மூன்று மொழி படிக்கலாமாம். பாலிடெக்னிக் கல்வியை தமிழிலேயே கற்பிக்கலாமாம். எதுவும் பிரச்சினை இல்லையாம். 
  8. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்பே முடிவடைந்து விட்டதால் வெட்கப்பட வேண்டுமாம்.
  9. நாடாளுமன்றம் நடக்க ஒரு மணி நேரத்திற்கு 1.5 கோடி செலவாகிறதாம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என்ன தோன்றுகிறது?

எதிர்கட்சிகளால் தான் பிரச்சினை, அவர்கள் தான் நாட்டை சீரழிக்கின்றார்கள் என்பது போல ஒரு தோற்றத்தினை உருவாக்குகிறது. எதிர்கட்சி எம்.பிக்களை ஒரு எழுத்தாளர் இப்படி நயவஞ்சகமான முறையில் உண்மைக்குப் புறம்பான வகையில் பொய்யையும், புரட்டையும் கூறி அவமானப்படுத்தி இருக்கிறார். 

67 சதவீதம் பிஜேபிக்கு ஓட்டுப் போடாத மக்களின் பிரதிநிதிகளை இவர் சுயநலவாதிகள் என்பது போல எழுதி மக்களையும் கிண்டல் செய்திருக்கிறார். மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார். தினமணியும் ஒத்து ஊதி கட்டுரையினை வெளியிட்டு இருக்கிறது. இதுதான் உள் அரசியல். மக்களை மூளைச்சலவை செய்யும் பொய்களை அவிழ்த்து விடும் அக்கிரமம்.

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் பிஜேபி அரசு உடனுக்குடன் சட்டமியற்றி வருகிறது என்பதை பலரும் பல பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறார்கள். மூன்று விவசாய சட்டங்களை பத்தே நாட்களுக்குள் எந்த வித விவாதமும் இன்றி நிறைவேற்றிய பிஜேபி அரசின் அக்கிரமத்தினால் 700 விவசாயிகள் இறந்தார்கள். 

இந்த வார கல்கியில் ‘ஏனிந்த அவசரம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் கார்டையும் இணைக்க வேண்டிய மசோதா அவசர அவசரமாக குரல் ஓட்டெடுப்பில் சட்டமாக்கி இருக்கிறது பிஜேபி. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இரண்டு அடையாள அட்டையை இணைக்கும் போது பெயர்கள் மேட்சிங்க் ஆகவில்லை என்பதால் 55 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.

வருமான வரி அட்டையில் எனது தகப்பனார் பெயர் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. ஆதாரில் மாணிக்கம் என்று இருக்கிறது. ரேஷன் கார்டில் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஜாதியை பெயருடன் இணைத்துதான் ஆவணங்கள் வழங்கப்பட்டன. எனது தகப்பனார் சொத்துக்களின் ஆவணங்களில் மாணிக்கதேவர் என்றுதான் இருக்கிறது. இப்படியான ஒரு பெயர் குழப்பச் சூழல் இருக்கும் போது இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்கும் இந்த சட்ட மசோதாவை எந்த வித விவாதமும் இன்றி பிஜேபி அரசு சட்டமாக்கி இருக்கிறது அக்கிரமமான செயல் அல்லவா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்பதற்கிணங்க மூன்று விவசாய சட்டங்களை சட்டமாக்கிய நிகழ்வு ஒன்றே போதும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த எழுத்தாளர் பொய்யையும் புரட்டையும் எழுதி விவசாய மக்களை அவமானப்படுத்தி இருப்பதை அறியலாம்.

நாடாளுமன்றத்திற்கும் ஆலயத்துக்கும் வேறுபாடு உண்டு. ஆலயம் என்பது வழிபாடு செய்யும் இடம். நாடாளுமன்றம் வழிபாட்டுக்கு உரியது அல்ல. 110 கோடி பல்வேறு கலச்சார மக்களின் சார்பாக, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாத மன்றம்.  நாட்டை ஆளும் சட்டங்களை உருவாக்கிடும் கோவிலுக்கும் மேலான ஒரு இடம் அது. கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். நாடாளுமன்றம் இந்தியாவின் உயிர். ஆலயத்துக்கும் நாடாளுமன்றத்துக்கு வேறுபாடு தெரியாத அறிவிலியா இந்த ஆசிரியர் என்று தோன்றுகிறது.

நிச்சயம் இவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதுவல்ல அவரின் பிரச்சினை. பொய்யைக் கட்டவிழ்த்து விடுவது. மக்களை நம்வ வைக்க ஆலயத்தினை கூட இழுத்துக் கொள்கிறார் இவர். 33 சதவீதம் ஓட்டுப் பெற்ற பிஜேபிக்கு ஒத்து ஊதுவது மட்டுமே இவரின் எண்ணம்.

தினமணியில் எழுதிய கட்டுரையின் ஆசிரியர் சிதம்பரநாதன்,  ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர். இவருக்கு வேலையே பொய்களையும் புரட்டுகளையும் எழுதி வருவதுதான்.  இவர் வயதுக்கு ஏற்ற நற்சிந்தனை, எது அறம் என்று தெளியும் பக்குவம் வந்திருக்க வேண்டும். ஆனால் இவரின் மனதுக்குள் வன்மம் மட்டுமே இருப்பதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டிருக்கிறது. 

தமிழர்களுக்கு எதிரான, அறத்துக்கு எதிரான இவ்வகை ஆட்கள் அடையாளம் காணப்பட்டு உதாசீனப்படுத்தல் அவசியம் என்பதால் இப்பதிவினை எழுதுகிறேன்.

சிதம்பர நாதனுக்கும், இக்கட்டுரையினை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் தினமணி ஆசிரியர் அறமற்ற செய்திகளை, கட்டுரைகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். கருத்துச் சொல்வது என்பது வேறு பொய்யை எழுதுவது வேறு என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு தினமணி ஆசிரியர் மாறிப்போனாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நன்றி : தினமணி ( கீழே கட்டுரை )


கல்கி தலையங்கத்தில் வெளியானது கீழே. ( நன்றி கல்கி )



Wednesday, December 15, 2021

துரோகத்தின் நிழலில் டி.ஆர் - மாநாடு திரைப்படம் நடந்தது என்ன?

 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

அறத்துப்பாலில் 37வது குறள். திருவள்ளுவப் பெருந்தகையாளர் திருக்குறளில் அறன் வலியுறுத்தல் என்ற தலைப்பில் பத்துக் குறள்கள் எழுதி இருக்கிறார்.  இதன் அர்த்தம் என்னவென்றால் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவர் அற வழி நடப்பவர் என்றும் பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்கள் அறவழி மாறியவர்கள் ஆவர் என்பதாகும்.

எந்த இடர் வறினும் அறவழியாளர்கள் இறைவனால் எப்போதும் கைவிடப்படார். ஆனால் அறமற்றவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும் அப்பாவம் பல்லக்கைப் போல அவர்களால் சுமக்கப்படும்.

சினிமா அறம் சார் தொழில் இல்லை என்றார் என் சினிமா நண்பர் ஒருவர். ஏனென்றால் கருப்பு பணம் புழங்கும் சினிமாவில் வெறும் வெள்ளைச் சீட்டுக்களில் எழுதப்படும் கணக்குகள் தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சாட்சியமாகும்,  இதுதான் சினிமா கணக்கு என்றார். சினிமா இப்படித்தான் இயங்குகிறது என்றார் தொடர்ச்சியாக.

டி.ராஜேந்தர் அவர்கள் தன் திரை உலக வாழ்க்கையை துரோகத்தின் வழியாகத்தான் ஆரம்பித்தார். 1980களில் வெளியான அவரின் படைப்பான ஒரு தலை ராகம் இன்றும் துரோகத்தின் சாட்சியாகத்தான் நிற்கிறது. ஒருவனின் குழந்தைக்கு இன்னொருவனின் இனிஷியல் என்பதன் வலியை ஏற்கனவே அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

கிட்டத்தட்ட 20 படங்கள் இயக்கி நடித்திருக்கும் அஷ்டாவதானி இயக்குனர் அவர். அந்தக் காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் கொடுத்த படங்களை தந்தவர். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் அரசியல் பழகியவர். எம்.எல்.ஏவாக இருந்தவர். சிறுசேமிப்புத்துறை இயக்குனராக இருந்தவர். 

இவை எல்லாவற்றையும் விட பெண்களைத் தொட்டு நடிக்காத ஒரே ஒரு சினிமாக்காரர். எந்த வித கிசு கிசுவிலும் பேசப்படாதவர். 

நல்லவர்களுக்கு உலகம் துரோகத்தினை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அவர் தான் நம்பும் இறைவனிடம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறார்கள். டி.ஆர் நம்புகின்ற இறைவனும், அவர் நம்பும் அறமும் தான் சுமார் 41 வருடங்களாக இன்றைக்கும் அவரை சினிமாவில் வைத்திருக்கிறது. 

மாநாடு திரைப்பட வெளியீட்டின் போது என்ன நடந்தது? 

தகப்பனும் தாயும் அன்றிரவு தூங்கவே இல்லை.

மாநாடு திரைப்படத்தின் நெகட்டிவ் மற்றும் சாட்டிலைட் உரிமையை பிரபல சினிமா ஃபைனான்சியர் உத்தம் சந்த் வைத்திருந்தார்.  

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்திருந்தார். திடீரென்று திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினைத் தள்ளி வைப்பதாக டிவீட்டினார்.

ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அண்ணாத்தே திரைப்படத்தின் போது மாநாடு திரைப்படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது என டி.ஆர் அவர்களும் உஷா அவர்களும் பேட்டி கொடுத்தார்கள்.  

அண்ணாத்தே காரணமாக படத்தின் வெளியீட்டு தள்ளி வைக்கப்பட்டு, மீண்டும் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து தள்ளி வைப்பு அறிவிப்பினை தயாரிப்பாளர் வெளியிட்டுருப்பது கண்டு சிம்பு, டி.ஆர் மற்றும் உஷா அவர்களுக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்கும், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது.

படம் மறு நாள் வெளியிடப்பட வேண்டும். அன்றைக்கு விடிகாலையில் டி.ஆர் அவர்களும், உஷா அவர்களும் ஃபைனான்சியர் உத்தம் சந்த் வீட்டில் அமர்ந்திருக்கின்றனர்.

திரு.உத்தம் சந்த் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஐந்து கோடி ரூபாய் தொகை இன்னும் செட்டில் ஆகவில்லை. ஆகவே உத்தம் சந்த் கியூப் நிறுவனத்திற்கு தடையின்மைச் சான்று அளிக்கவில்லை.

சாட்டிலைட் விற்பனை தொகையாக ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி இருந்திருக்கிறார்கள். 

ஓடிடி வெளியீடு வேறு, சாட்டிலைட் உரிமை வேறு என்பதால் இரண்டுக்கும் வெளியீட்டு தேதியில் பிரச்சினை வந்து விட்டது. படம் வெளியிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு படத்தை டிவியில் வெளியிடுவதாக இருந்தால் தான் விலைக்கு வாங்குவேன் என்கிறார்கள் சாட்டிலைட்கார்கள். ஆனால் ஓடிடி விற்பனையின் போது 100 நாட்களுக்கு பிறகே தான் சாட்டிலைட்டில் படம் வெளியிடப்படல் வேண்டுமென்ற ஒப்பந்தமிட்டிருக்கிறார்கள். ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் விடிகாலையில் தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருக்கிறது.

வினியோகஸ்தர்கள் படம் வெளியானால் தான் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுப்பார்கள்.

இப்படியான ஒரு இக்கட்டான சூழல். ஃபைனான்சியர் வீட்டில் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.

படம் வெளியாகவில்லை என்றவுடன் தியேட்டர்களில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். 

பைனான்சியருக்கு ஐந்து கோடி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான் படம் தியேட்டரில் வெளியாகும். படம் வெற்றி அடையவில்லை என்றால் உங்களால் எனக்கு எவ்வாறு பணம் தர முடியும் என்று கேட்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியிடம் பதில் இல்லை. 

ஐந்து கோடிக்கு கியாரண்டி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் படத்திற்கான என்.ஓ.சி தருகிறேன் என்று உத்தம் சந்த் அவர்கள் சொல்ல, அந்த இக்கட்டான சூழலில் டி.ஆர் ஐந்து கோடி ரூபாய்க்குப் பொறுப்பேற்று கையெழுத்துப் போட்டு கொடுத்த பின்னால் தான் எட்டு மணி காட்சி வெளியாகி இருக்கிறது. 

அந்த ஒப்பந்தத்தில் நாங்கள் சேட்டிலைட் உரிமையை விற்ற பின்பு கிடைக்கும் தொகை குறைவாக இருப்பின் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு அந்தக் குறைவுத் தொகையை தந்து விடுவதாக டி.ஆர். ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்குச் சாட்சியாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியும், திரு.சவுந்திரபாண்டியன் (தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்) கையொப்பம் செய்திருக்கின்றனர்.

ஆக சாட்டிலைட் உரிமை விற்பனை டி.ஆர் அவர்களின் அனுமதியின் பேரில் நடந்திருக்க வேண்டும். ஏனென்றால் சாட்டிலைட் விற்பனை தொகை எவ்வளவு என தெரிந்து கொள்ளும் உரிமை அவருக்கு அந்த அக்ரிமெண்டின் படி வந்து விட்டது.  

டி.ஆர் அவர்கள் கேரண்டி கையெழுத்துப் போட்ட உடன் தான் படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாக காரணம் டி.ஆர் என்பது உண்மை. 

படம் வெளியானது. தாறுமாறு ஹிட்.

இதற்கிடையில் மாநாடு தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. தெலுங்கு சினிமா டப்பிங் ரைட்ஸ் விலை பேசப்பட்டு அதை வாங்கிய தயாரிப்பு நிறுவனமும், சிம்புவும் இணைந்து படத்தின் புரமோஷனுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயைச் செலவழிக்கின்றனர்.

திடீரென்று சுரேஷ்காமாட்சி அவர்கள் தெலுங்கு டப்பிங் உரிமையை ரத்துச் செய்து விட்டு, ரீமேக் ரைட்ஸ்க்கு விலை பேச ஆரம்பிக்கிறார்.

அதற்குள் படம் ஹிட் ஆனவுடன் ஒரு பிரபல சாட்டிலைட் சுமார் அதிக விலைக்கு டிவி உரிமையை விலை பேசுகிறது.

டி.ஆர் தனக்குத் தெரியாமலே நடந்த துரோகத்தினை ஏற்றுக் கொள்ள இயலாமல் வழக்குத் தொடுக்கிறார்.

அவர் வழக்குத் தொடுத்தது சரியா? இல்லையா? என்பதுதான் கேள்வி. 

ஐந்து கோடி பணத்திற்கான உறுதி கிடைத்தவுடன் தான் படம் வெளியானது. ஹிட்டானது. ஆக படம் வெளியாக டி.ஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஐந்து கோடி மட்டுமே காரணம் என்பது தெளிவு.

படம் ஹிட் ஆனதால் சாட்டிலைட் அதிக விலைக்கு விற்பனை ஆனது. ஒரு வேளை ஹிட் ஆகவில்லை என்றால் ஐந்து கோடியை டி.ஆர். கொடுக்க வேண்டும். 

பட வெளியீட்டுக்கு பொறுப்பேற்றவரான டி.ஆரிடம் எதுவும் சொல்லாமல் தன்னிச்சையாக சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விட்டு அது என் உரிமை என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

நஷ்டம் வந்தால் அது உமக்கு, லாபம் வந்தால் அது எனக்கு என்கிறார் சுரேஷ்காமாட்சி. 

இதுதான் சினிமா கணக்காம்.

தெலுங்கு டப்பிங் படம் வெளியாகி விட்டால் சிம்புவுக்கு மார்க்கெட் உச்சமாகி விடும் என்பதால், டப்பிங்க் உரிமையைக் கொடுத்து விட்டு, புரமோஷன் செலவு செய்த பின்னாலே எதன் காரணமாகவோ அதைக் கேன்ஷல் செய்து விட்டு, ரீமேக் அதாவது இதே கதையை வேறு ஹீரோவை வைத்து ரீமேக் ஷூட் செய்ய விலை பேசுகிறார் சுரேஷ்காமாட்சி.

பட வெளியீட்டுக்குப் பொறுப்பேற்றவருக்குத் தெரியாமலே சேட்டிலைட் விற்பனை செய்து விட்டு, தெலுங்கு டப்பிங்க் பட வெளியீட்டினையும் ரத்துச் செய்து விட்டு அறம் பேசுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அவர்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் வழக்கம் போல வெள்ளுடை மனதோடு அவர் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ்காமாட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். அன்றைக்கு இப்போது அறிக்கை விடும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கேரண்டிக் கையொப்பம் போட்டுக் கொடுக்கவில்லை. 

தயாரிப்பாளர் லாபம் அடைய வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் டி.ஆரின் கியாரண்டியைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்று விட்டு, அது என் பிசினஸ் என்றும், அதற்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்றும் பேசுவது எங்கணம் அறமாகும்? 

வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் கடன் செலுத்தப்படவில்லை எனில் அவர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல கேரண்டி கையொப்பம் போட்டவர்களின் சொத்தும் சேர்ந்து ஏலத்துக்கு வரும்.

லாபம் வந்தால் அது என்னோடு, நஷ்டம் வந்தால் அதில் உனக்கும் பங்குண்டு என்பது தர்மமா? அறமா? 

குறைந்தபட்சம் ஏதாவது ஒரு நன்மையை தயாரிப்பாளர் செய்திருத்தல் அவசியமல்லவா? ஆனால் அவர் செய்யவில்லை.

டி.ஆர் இப்படியான தொடர் துரோகங்களால் துவண்டு விடப்போவதில்லை.  

டி.ஆர் அவர்கள் போட்ட வழக்கு வெற்றி அடையுமா? அடையாதா? என்ற கேள்விக்கு இங்கு பதில் தேடவில்லை. நியாயம் எதுவோ தர்மம் எதுவோ அதை இங்கு எழுதி இருக்கிறேன்.

அறமற்ற செயல்களைச் செய்பவர்களும், துணை போகும் நபர்களும் தான் அதர்மத்தை பல்லக்கு தூக்குபவன் போல சுமக்க வேண்டும்.

Monday, December 13, 2021

டிரஸ்ட் கம்பெனி பணப்பரிமாற்றம் மோசடிகள் - விரிவான விளக்கம்

இராணுவத் தளபதி விவின் ராபத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது ஊட்டியில் ஒரு நிலத்தில் நில அளவைக்கான சர்வே செய்து கொண்டிருந்தேன். ஆட்கள் சர்வேக்கான விபரங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, பாப் அப் செய்தி கிடைத்தது. 

எத்தனை கடுமையான உழைப்பினை அவர் நாட்டுக்காகச் செய்திருப்பார்? முதன் முதலாக இந்திய வரலாற்றில் முப்படைக்குமான ஒரே தளபதியாக பாரதப் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பெருமைக்குடையவர் ஒரு சாதாரண விபத்தில் மரணமடைந்திருக்கிறார் என்கிற போது விதி மீது நம்பிக்கை கூடத்தான் செய்தது. 

அவர் எவ்வளவு அதிகாரமிக்கவர் என்ற போதிலும் இயற்கைக்கு முன்னால் எல்லாம் சாதாரணமாக போய் விடுகிறதே என்ற ஆற்றாமை எழுந்தது. 

மரணத்தின் தேதியினை யார் அறிவர்? 

அப்படி தன் முடிவினை அறிந்து விட்டால் என்னென்ன அக்கிரமங்களை மனிதன் செய்வான் என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. சாதாரணன் இறுதிக்கு தயாராவான். அதே ஒரு ரவுடியாக ஒரு அரசியல்வியாதியாக இருந்து விட்டான் என்றால் அவன் என்ன செய்வான் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு செயல்களைச் செய்து விடுவான் அல்லவா?

ஆகவே தான் இயற்கை ஒவ்வொரு உயிரின் இறுதிக் காலத்தின் முடிவினை மறைவாக வைத்திருக்கிறது.

ஆஸ்சிடெண்ட் என்றால் அது ஆக்ஸிடெண்ட் தான். காரில் ஒரு முறை சந்துக்குள் சென்ற போது கார் தன் இயக்கத்தையே நிறுத்தி விட்டது. அதன் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டிருக்கிறது. ஏர் பேக் மட்டும் வெளி வரவில்லை. இயந்திரம் எப்போது என்ன செய்யும் என்று எவருக்கும் புரியாது. 

நேற்று கீழே உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அப்டேட்டினேன். உடனடியாக இந்தப் போஸ்ட் நியூட்டிட்டி கேட்டகரியில் வருகிறது என்று பப்ளிஷ் ஆகவில்லை. நியூடிட்டி படமாம். 

சிறுவனின் நிர்வாணம் நியூட்டிட்டியிலா வருகிறது? அதுவும் குஞ்சு தானே என்று நினைக்கலாம். கீழே இருக்கும் இன்னொரு குஞ்சுப் பறவையின் பசி தான் எனக்குத் தெரிந்தது. பின்னர் தான் புரிந்து கொண்டேன் மேலே இருக்கும் அதுவை.


நடிகை இலியானாவின் இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் இருக்கும் படம் கீழே. மேலே இருக்கும் படத்துக்கும் கீழே இருக்கும் படத்துக்குமான நியூடிட்டி கேட்டகரியை ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எப்படி வகை பிரித்திருக்கிறது என்று பாருங்கள். அது தவறல்ல. அதற்கு கொடுக்கப்பட்ட ஆணையை அது செயல்படுத்துகிறது. 
ஊட்டிக்குக் காலையில் செல்லும் போது காட்டேரி பகுதி மட்டுமல்ல அன்றைக்கு மேகமூட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டேன். ஊட்டியின் கிளைமேட் அப்படித்தான். ஊட்டி - பெண் மனது போல. படக் படக்கென்று மாறிக் கொள்ளும். கண்களைக் கட்டி விடும். இயற்கையும் பெண்களும் எப்போதுமே ஆபத்தானவர்கள் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் துடைத்து எரிந்து விடுங்கள். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சிக்கிக் கொள்வோம். 

விபத்து நடந்த செய்தி கேட்டவுடனே பிஜேபி -ஆர் எஸ் எஸ் வகையறாக்கள் என்னெவெல்லாம் சோஷியல் மீடியாக்களில் எழுதப் போகின்றார்கள் என்ற சிந்தனை வந்தது. அதுவே நடந்தது. நடந்து கொண்டு வருகிறது.

பிஜேபி - அதிமுக மக்கள் பிரச்சினையைப் பற்றி கொஞ்சம் கூட பேசியதே இல்லை. இனி பேசப்போவதும் இல்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் மதம் - ஊழல் மட்டுமே. 

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது. அவர்களிடம் மக்களுக்கு கிடைத்திடா வசதிகள் பற்றி பேசலாம். அதைப் பெற்றுக் கொடுக்கலாம். ஒரு சினிமா அதைச் செய்திருக்கிறது.

ஆனால் பாருங்கள். இங்கே என்ன நடக்கிறது என்று? ஆட்சிக்கு எதிராக வன்முறையை எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். சமூகத்தில் ஒரு விதமான வெறுப்பு வன்முறையை விதைக்கின்றார்கள். இவர்கள் வெகு வெகு ஆபத்தானவர்கள் என்பதில் எனக்கு மட்டுமல்ல எவருக்கும் சந்தேகமே வேண்டியதில்லை. தன்னைப் போன்ற ஒரு கூட்டத்தினை உருவாக்கி நாட்டுக்கே தீமை செய்வார்கள். ஆயுதம் வைத்திருப்பவர்களை விட இவர்கள் வெகு கேடானவர்கள்.  தன் சுய நலத்தின் காரணமாக என்ன வேண்டுமானாலும் செய்யும் பயங்கரமானவர்கள். அவர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படல் அவசியம். 

அவர்களின் வெகு துல்லியமான இந்த விதமான உள் குத்துகள் பெரும்பாலான பொது மக்களுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளும் பக்குவமும் அனுபவமும் கிடையாது.

அரசியல் என்பது மக்கள் நன்மை தொடர்பானது. அதை எந்தக் கட்சி புரிந்து கொள்கிறதோ அக்கட்சி மக்கள் ஆட்சியை நடத்தும். 

புரிந்து கொள்ளாதவர்கள் 13 பேரைத் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லச் சொல்வார்கள். அதுமட்டுமின்றி 700 பேர் செத்துப் போக காரணமாய் இருப்பார்கள். அவர்கள் அப்படியானவர்கள் தான். அதுதான் நிதர்சனம் கூட. 

நாங்கள் உங்களுக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று பொய் உரைப்பார்கள். உள்ளே நன்மை என்று எதுவுமே இல்லை. 

இருப்பதாக பாவனி மன்னிக்கவும் பாவனை காட்டுவார்கள். காட்டிக் காட்டியே வெளியே வராமல் தப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் மக்களின் மனதை பாவனை எனும் லூப்புக்குள் தள்ளி விடுவார்கள். மக்கள் தெளிவாகும்  முன்பே, அவர்கள் நினைத்ததை அடைந்து விடுவார்கள். அவர்களை நம்புவது நம் பிரச்சினை மட்டுமே. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அது அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. ஏனென்றால் ஏமாற்றிப் பிழைப்பதே அவர்களின் டிசைன். ஒரு நரி எப்போதும் யானை ஆகிட முடியாது.

ஆக்சிடெண்டுகளுக்கு வரைமுறை தெளிவுரை எல்லாம் எழுத முடியாது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தின் சேர்மனின் மகன் ஒரு சாதாரண கார் விபத்தில் செத்தார். கோடிக்கணக்கான மதிப்புள்ள கார்தான் அது. அந்தக் கார் அவரைக் காப்பாற்றவில்லை. எவ்வளவு பாதுகாப்பானது அந்தக் கார்? எப்படி அவர் இறந்தார் என்று கேள்வி கேட்பது சரிதான் என்றாலும் அதன் உண்மைத் தன்மை வேறு விதமானது அல்லவா? அது தெரியாத நிலையில் ஆக்சிடெண்டுகளுக்குப் பொழிப்புரை எழுதுவதற்கும் சதி என்று சொல்வதற்கும், ஒரு பகுதியில் தீவிரவாதம் பெருகி வருகிறது என்று பொய் உரைப்பதற்கும் ஒரு அதீத தடித்தனம் வேண்டும். 

அதை அவர்கள் எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள். அது சரி செய்யப்படல் அவசியம்.

முப்படைத்தளபதியின் இந்த இழப்பு இந்தியாவிற்கு மட்டுமல்ல நமக்கும் பேரிழப்பு. அவர் நம்மை உண்மையில் பாதுகாத்து வரும் இராணுவத்தின் தளபதி. அவருக்கு எனது வீர வணக்கம்.

இடையில் ஒரு சிறிய விஷயம். நாம் செய்தி தாள்களில் படிக்கும் செய்திகள் உண்மையானதுதானா என்ற ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின்னர் நம்புங்கள். ஏனென்றால் கடந்த 09.12.2021ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் நடத்திய ஒரு கூட்டம் பத்திரிக்கையாளர்கள் மீதான அவ நம்பிக்கையை அதிகரித்து விட்டிருக்கிறது. இதோ அந்தச் செய்தி. (நன்றி தி ஹிந்து பத்திரிக்கை)

The danger to journalism is not that journalists meet political actors; it is that they don’t meet them enough

A recent meeting of Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat with a select group of journalists in Delhi raised a few eyebrows. What should be the desirable terms of engagement between journalists and their interlocutors is a rather complicated question. The fall of journalistic standards is a reality of our times, and too much proximity between journalists and the people they write on — politicians, businessmen, bureaucrats, etc. — is one reason for this. But the increasing tendency to look for sinister conspiracies in such meetings is silly. It is like looking for a scam in every government decision. True, if the invitees at a select briefing are vetted based on their willingness to be pliable in the past, then the meeting is no longer a credible exercise. That said, my complaint about Mr. Bhagwat’s meeting with journalists is not that some people participated in it, but that I was not invited! Let me explain.

இணைப்பு :  Not a compromising position - The Hindu

மீண்டும் குஜராத் வளர்ச்சி கதை போல பல கதைகள் வரக்கூடும். வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். 

ஜாதீயக்கட்டுக்குள் இருக்கும் பத்திரிக்கைகளை மக்கள் தான் நிராகரிக்க வேண்டும். இல்லையெனில் மாயா உலகிற்குள் அதாவது டைம் லூப்புக்குள் சிக்கிக் கொள்வோம். 

ஹீரோ எவரோ அவரே தனக்கேற்றவாறு நம்மை மாற்றுவார். இதனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பினால் தமிழ் வெர்சன் - இன்செப்சன் படம் அமேசான் பிரைமில் கிடைக்கிறது. அவசியம் பாருங்கள். நாமெல்லாம் எப்படியான ஒரு லூப்புக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரியும்.

காலம் அவ்வப்போது மக்களுக்கு சில சமிக்கைகளைக் கொடுக்கும். நாம் தான் புரிந்து கொள்ளல் வேண்டும். 

சரி இனி கதைக்கு வருவோம்.

அடியேன் லீகல் அட்வைசிங்க் வேலை செய்வதால் என்னிடம் ஆலோசனைக்கு வந்த பல பேர்களின் மூலம் கிடைத்த அனுபவத்தைத்தான் இங்கு பதிவு செய்கிறேன்.

கதைக்குப் போகும் முன்பாக ஒரு சாட்சியத்தைப் படித்து விடுங்கள். ஏனென்றால் சாட்சிகள் இன்றி எழுதுவதால் பயனில்லை.


மேலே இருக்கும் செய்தியைப் படித்து விட்டீர்களா? உடனே ஆஹா பிஜேபி அரசு மிகச் சரியாகத்தான் வேலை செய்கிறது என்று ஒப்பீட்டுக்கு கிளம்பி விடாதீர்கள். அந்தக் கச்சேரியை எழுத ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் திகிலில் ஆழ்வீர்கள். 

அது வேற கதை. அதென்னது என்கிறீர்களா?

மதமாற்றத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பு உண்டா இல்லையா? மதமாற்றத்துக்கும் கீழ் சாதி மேல் சாதிக்கும் தொடர்பு உண்டா இல்லையா? என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அது வேற கதை என்றேன் அல்லவா அந்தக் கதை இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன். பின்னொரு நாளில் அதை விரிவாக பார்க்கலாம்.

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.

கோவை டி.பி சாலையில் இருக்கும் ஒரு வெகு முக்கியமான பிரபலமான ஹோட்டலில் தங்கி இருப்பவர்களைப் பார்க்க வருபவர்கள் ஏழைகளாக இருப்பர். அவர்கள் முகங்களைப் பார்க்கும் போது கனவுகளில் மிதக்கும் கண்களுடன் பரபரப்பாய் தெரிவார்கள்.  அவர்களெல்லாம் யார்? அங்கே என்ன வேலை என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? 

இனி அதுதான் வருகிறது. 

ஒரு சம்பவத்தினை விவரிக்கிறேன். 

திருப்பூர் அதிபரிடமிருந்து அவசியமான தட்ட முடியா ஆலோசனை வேண்டி, அழைப்பு வர சென்றிருந்தேன். ஒரு மணி நேரம் அதிபரின் வரப்போகும் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். 

வந்தது கோடிக்கணக்கான மதிப்புள்ள கார். அக்காருக்கும் முன்பே நான்கைந்து கார்கள். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து பேர் வந்தனர்.

மீட்டிங்க் ஆரம்பித்தது. 

அதிபர் என்னருகில் அமர்ந்திருந்தார். காஃபி முடிந்தது. வந்தவர் தன்னை ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்றுச் சொன்னார். 18000 கோடி ரூபாய் சி.எஸ்.ஆர் ஃபண்ட் இருப்பதாகவும், அதனை டிரஸ்ட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவ்வாறு அனுப்பினால் டொனேசன் பெரும் டிரஸ்ட்டுகள் தனக்கு 40 சதவீதம் பங்கினை தான் சொல்லும் அக்கவுண்டுகளுக்கு மாற்றி விட வேண்டுமென்றும், அவ்வாறு டொனேசன் பெறக்கூடிய டிரஸ்ட்டுகள் வைத்திருக்க வேண்டிய அனுமதிகள் இன்னென்னெ என்றும் பட்டியலிட்டார். அதிபர் அவர் கோரிய ஆவணங்களைக் கொடுத்தால் 1000 கோடி ரூபாய் டொனேசன் தருவதாகச் சொன்னார். அதில் 40 சதவீதம்  அதாவது 400 கோடி ரூபாயை அவர் சொல்லக்கூடிய அக்கவுண்டுகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் செய்து விட வேண்டுமென்றும், இது அத்தனையும் லீகலாகச் செய்யும் வேலை என்றும் விவரித்தார்.

சி.எஸ்.ஆர் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவும் அதன் பரிமாற்றங்கள் பற்றிய இந்திய அரசின் விதிகள் பற்றியும், டிரஸ்ட்டுகள் அதன் டோனேஷன்கள் பற்றிய அனுபவ அறிவும் உண்டென்பதால் தெளிவாகப் புரிந்து விட்டது அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று.

ஆனால் அதிபதியோ அவரை நம்பினார். நம்பிக்கெடுவது ஒன்றும் புதிதில்லையே நமக்கு. அது அவரவர் பிரச்சினை.

எங்கு தங்கி இருக்கிறார் எனவும், எந்த ஊர் எனவும் விசாரித்தால், கோவையின் பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் அவருக்கான பிளைட் டிக்கெட்ஸ், கோவை லீ மெரிடியனில் சூட் ரூம் செலவு செய்து, அவரை அதிபதியிடம் அழைத்து வந்திருக்கிறார்.

அந்த நாற்பது பர்செண்டேஜ்ஜில் இவருக்கு 10 சதவீதம் தருவதாக பிரதிநிதி வாக்கு கொடுத்திருக்கிறார். 1000 கோடியில் 10 சதவீதம் எவ்வளவு? 100 கோடி அல்லவா? ஒரே வேலை - ஒரு டிரஸ்ட்டை கொடுத்து விட்டால் போதும். எளிதில் 100 கோடி கிடைத்து விடும். 

எவ்வளவு எளிதான திட்டமிடல்? 

கொஞ்சமே கொஞ்சம் செலவு செய்தால் போதும் 100 கோடி லாபம் வந்து விடும். பிளைட் டிக்கெட், ஹோட்டல் செலவுக்கு ஒரு லட்சம் ஆகும். பரவாயில்லை 100 கோடி வேண்டுமென்றால் ஒரு லட்சம் செலவு செய்வதைப் பற்றி யோசிக்கலாமா என்றெல்லாம் சிந்தித்து தெளிவாகத்தான் முடிவெடுத்திருக்கிறார் அந்தப் பையன்.

அதிபதியின் காதுக்குள் சொன்னேன், இவன் ஒரு டுபாக்கூர் என்று. அவரின் முகம் மாறி விட்டது. 

எதிரில் உட்கார்ந்திருந்தவரிடம் எந்தக் கம்பெனி என்றுச் சொல்லுங்கள் என்றேன். அதைச் சொல்ல முடியாது என்றார். நீங்கள் அந்தக் கம்பெனியின் பிரதிநிதி என்றீர்களே பின் ஏன் சொல்ல மாட்டேன் என்கின்றீர்கள் என்ற கேள்வியைக் கேட்ட நொடியில் ஆத்திரம் தாளவில்லை அவருக்கு.

நான் போட்டிருக்கும் டிரஸ்ஸின் மதிப்பு தெரியுமா? நான் தங்கி இருக்கும் ஹோட்டலின் வாடகை என்ன தெரியுமா? என்று பிக்பாஸில் பிரியங்கா பிறரிடம் பேச வந்ததை வேறு எங்கே கொண்டு செல்ல பொங்குவது போல என்னிடம் பொங்க ஆரம்பித்தார். (பிரியங்கா ஏன் விஜய் டிவியில் டிடி, ரம்யா, பாவனா ஆகியோரை வளர விடாமல் செய்தார் என்று இப்போதுதான் புரிகிறது) 

அவரின் கோபம் கண்டு, எங்கே 1000 கோடி கிடைக்காமல் போய் விடப்போகிறதே இந்த ஆளால் என்று பதைபதைத்து, அதிபதி அவரை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு சென்று விட்டார். 

அதிபதிக்கு பாடம் எடுக்க என்னால் முடியாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் மேதாவித்தனத்துடனே இருப்பர். ஆகவே அவரிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். கொஞ்சம் வருத்தமே என்னிடம் அவருக்கு. 

கிளம்பும் போது அதிபதியிடம் அவர் தரபோகும் 1000 கோடியில் எனக்கு இன்றைக்கு வந்து போன செலவுக்காக 10000 மட்டும் கொடுத்து விடுங்கள் ஏனென்றால் 1000 கோடியை அவர் தரப்போகிறார் அல்லவா? அவர் தந்ததும் எனக்குக் கொடுத்தால் போதும் என்றுச் சொல்லி விட்டு வந்து விட்டேன். இது நடந்து ஆறு வருடங்கள் ஆயிற்று. இன்னும் எனக்கு அதிபதி கட்டணத்தை தரவில்லை.

இப்போது நீங்கள் மேலே இருக்கும் படத்தில் படித்து உள்ளதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

சி.எஸ்.ஆர் ஃபண்ட் என்பது சமூகக் செயற்பாட்டுக்காக ஒரு நிறுவனத்தின் லாபத்தில் இரண்டு சதவீதம் ஆகும். இதை அந்த நிறுவனம் அரசுக்கோ அல்லது அரசு தொடர்பான மக்கள் சேவை செய்யும் நிறுவனங்களுக்கோ அல்லது மக்கள் சேவையில் உண்மையில் பங்கெடுத்திருக்கும் தனியார் சேவை நிறுவனங்களுக்கோ கொடுக்க வேண்டும். சமீபத்தில் தான் இந்த தொகையினை இரண்டு மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்தது. 

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 922 கோடி ரூபாயை அரசுக்கு சி.எஸ்.ஆர். பங்களிப்பாக கொடுத்தது. இதில் ரிலையன்ஸ் ஃபவுண்டேசனுக்கும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனமே அதன் என்.ஜி.ஓவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. 

அதுமட்டுமல்ல இந்த சி.எஸ்.ஆர் ஃபண்டுகள் அரசு நிறுவனங்களிலும் உண்டு. அரசு சி.எஸ்.ஆர். ஃபண்டுகள் முறைகேடாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று செய்திகள் வந்தன.

இவ்வாறான நிலையில் ஒரு நிறுவனம் 18000 கோடி சி.எஸ்.ஆர் ஃபண்ட் வைத்திருப்பதாகச் சொன்னால் அதன் மொத்த லாபம் என்னவென்று யோசித்துப் பாருங்கள். அப்படியான நிகர லாபம் உள்ள கம்பெனி இங்கே எங்கே உள்ளது?

அந்த ஆசாமி சொன்னது முற்றிலும் பொய் என்று எளிதில் உங்களுக்கு புரிந்திருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனி என்.ஜி.ஓக்களை வைத்திருக்கிறது. மைக்ரோசாஃப்டின் மெலிசா பவுண்டேஷனும் அதே வகைதான்.

இப்படி இருக்கும் சூழலில் ஒரு நிறுவனம் சி.எஸ்.ஆர் ஃபண்டுக்கு ஒரு பிரதிநிதியை வேலைக்கு வைப்பார்களா? அவர்கள் ஏன் என்.ஜி.ஓக்களைத் தேட வேண்டும். இருந்த இடத்தில் இருந்தே சரியான என்.ஜி.ஓக்களை எளிதில் கண்டு கொண்டு டொனேசன் அனுப்பலாம் அல்லவா?

அது மட்டுமல்ல 1000 கோடி ரூபாய ஒரு டிரஸ்ட் டொனேசன் என்று நிலையில் பெற்றுக் கொண்டால் அதற்கான செலவு கணக்கினை துல்லியமாக கொடுத்திட வேண்டும். வேறு அக்கவுண்டுகளுக்கு பணமெல்லாம் அனுப்ப முடியாது? அவ்வாறு அனுப்பினால் எது எதற்காக அனுப்பப்பட்டது என்று கேள்வி எழும் போது என்ன ஆவணங்களைச் சாட்சியப்படுத்த முடியும்? இன்ன காரியத்துக்காக டொனேசன் பெறப்பட்டது என்றால் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றால் அது முறைகேடு என்று அரசு கணக்கிடும்.

இப்போது புதிதாக ஷேர் டிரேட் ஃபண்ட் என ஆரம்பித்திருக்கிறார்கள். ஷேர் டிரேட் ஃபண்ட் என்றால் டிரஸ்ட்டுக்கு அனுப்பி விடலாம் என்று நினைக்கின்றார்கள். அப்படியெல்லாம் முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வரைமுறைகள் வேறு வேறு என்பது எவருக்கும் தெரியாது. ஏனென்றால் ஈசி மணிக்காக ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னும் விரிவாக எழுத இருக்கிறது. எல்லாவற்றையும் எழுதி விடவும் முடியாது. இப்பதிவே நீளமாகி விட்டது.  ஆகவே டிரஸ்ட்டுக்கு ஃபண்ட், டிரேட் பிராபிட் ஃப்ண்ட். சி.எஸ்.ஆர் ஃபண்ட் என்று எவராவது நம்பினால் அது நேர விரயம் மட்டுமல்ல முடிவில் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் வசதியைப் பார்த்தால் பொறாமைப்படும் காலத்தில் இருந்து கொண்டு எவனோ ஒருவன் 100 கோடி தருவான் என்று நீங்கள் நம்புவது உங்களின் மனப்பிறழ்வு நோய் என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்....!

அக்னிராமா என்ற பெயரில் முகவரி இல்லாத ஒருவர் கமெண்ட் போட்டிருந்திருந்தார். எனது ”பொய் பிரச்சாரம் தமிழர்கள் ஜாக்கிரதை” என்ற பதிவிற்காக தமிழ்நாடு எது முதலில் என்றுச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.  அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதி என்று அடையாளம் காட்டுகிறது. அக்னி ராமா தன்னை ஒரு சங்கி திராவிட விமர்சகர் என்று அடையாளப்படுத்தி இருந்தார்.  

தமிழ்நாடு எது முதலில் என்று அவருக்குச் சொல்வதானால் கருத்துரிமையைச் சொல்லலாம். கோர்ட்டை மயிர் என்றுச் சொல்லிய ஒருவர் இன்னும் வெளியில் இருக்கிறார். 

அமெரிக்க அக்னி ராமா - அமெரிக்கர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. எங்கே போனாலும் கடைசியில் இந்தியா தான் உமக்கு. 

Tuesday, December 7, 2021

பொய் பிரச்சாரம் தமிழர்கள் ஜாக்கிரதை

துரோகிகள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் கோட்சேக்களாக நம்முடன் பயணிப்பவர்கள். கோட்சேக்கள் போல அவர்கள் நல் மனிதர்களைக் கொல்வார்கள். கூடவே இருந்து கொண்டு கொலையும் செய்யும் படுபாதகர்கள். 

கொடுமையிலும் கொடுமையான ஒரு செயல் துரோகம். துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உங்களில் பல பேருக்கு துரோக அனுபவம் நிச்சயம் இருக்கும். அரசாங்கங்களும், பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியங்களும் துரோகிகளால் தான் அழிக்கப்பட்டன. வரலாறு சொல்கிறது. 

முதலில் எனது பிளாக்கை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது என்னவென்றால், தத்துவ ஞானி லாவோ ட்சு ( LAO TZU ) சொன்னதைத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 

அவர் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆடு, மாடுகள் போலத்தான் உங்கள் வாழ்க்கையும் என்பதை அறிந்து கொள்க.

இதோ லாவோ சொன்னது படமாக.


ஆம், சோஷியல் மீடியாக்கள் மூலம் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம். நாம் நம்மை அறியாமலே பிறரின் எண்ணங்களுக்குள் கட்டுப்பட்டு விடுகிறோம். உண்மை எது? பொய் எது என்று அறியமுடியாமல் ஒரு வித கட்டுப்பாட்டு உணர்ச்சிக்குள் மூழ்கி விடுகிறோம்.

நயவஞ்சகத்தின் மொத்த உருவமான நரிகள் நம்மை அவர்களின் பொருளாதார உயர்வுக்கும், பதவி மோகத்துக்கும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் பிறரின் அடிமையா இல்லையா என்பதை நாம் தான், நமக்குள்ளே அறிந்து தெளிதல் அவசியம். 

இல்லையெனில் இலக்கிய உலகில் பிறரை ஏமாற்றி உழைப்பை உறிஞ்சும் கேடுகெட்ட ஒரு ஈனனிடம் ஒரு சிறு கூட்டம் அடிமைப்பட்டு அடிமைகளாக கிடப்பது போல கிடக்க நேரிடும். 

தி.ஜ இவர்களைப் போன்ற வாசகர் வட்டங்களை உருவாக்கவில்லை. அவரின் படைப்பு மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. பசப்புகளையும், பாலியல் எழுத்துக்களயும் எழுதும் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தின் கேடு. நான் யாரைச் சுட்டிக்காட்டுகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.

பல சினிமா ஹீரோக்கள் தங்கள் படங்களை வெற்றி பெற வைக்க ஒரு சில ஆட்களை வைத்து புரோமோக்களை செயற்கையாக உருவாக்கி பலனடைவார்கள். தனக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாகவும், அப்படி ரசிகராக இருந்தால் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும் என்பது போல, பொய் தோற்றத்தினை உருவாக்கி தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

இது போன்ற மாயா வித்தைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை காலத்தின் போக்கில் ஒவ்வொருவருக்கும் வந்து விடும். 

அப்போது நாம் நம் நேரத்தையும், பொருளையும் இழந்திருப்போம். எல்லாம் நம் கையை விட்டுப் போயிருக்கும்.

இப்பதிவில் இது போன்ற ஆட்களின் நயவஞ்சகத்தினை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நான் எழுதி இருப்பது உண்மைதானா என ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். நீங்கள் பிறரின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டீர்கள் என்றால் நீங்கள் அவர்களின் சிறைவாசிகள் ஆவீர்கள். 

உடனே குடும்பம், நண்பர்கள், கடமை என்று நினைக்காதீர்கள். அது வாழ்வியல் கடமை. அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் ஆகியோருக்காக வாழ்வது என்பதுதான் வாழ்வியல் அறம். அது வேறு, இங்கு நான் எழுதி இருப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

மாமனார் ஒரு யுடியூப் வீடியோவை அனுப்பி வைத்தார். லோட்டஸ் சானலில் ஒருவர் திமுக கோவையில் 3200 ஏக்கரை விவசாயிகளிடமிருந்து பறிப்பதாகவும், விவசாயிகளை திமுக அழிப்பதாக கதறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு அம்பி என்பது தான் விசேடம். 

ஏன் அலறிப் புலம்பி பொய்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம்.

அடியேன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன் 20 வருடமாக. லீகல் அட்வசைராக பல பெரும் நிறுவனங்களுக்கு பணியும் செய்து வருகிறேன். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நிறுவனம் கோவையில் சினிமா ஸ்டூடியோ அமைக்க இடம் வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள்.

அப்போது அன்னூர் தாலுக்காவில் உள்ள பொகலூர், அக்கரை செங்கம்பள்ளி,  குப்பனூர், ஓதிமலை, வடக்கலூர் கிராமங்களிலும், மேட்டுப்பாளையம் தாலுக்காவில் இலுப்ப நத்தம், பெள்ளபாளையம் கிராமங்களிலும் இடம் தேடினேன். சுமார் 150 ஏக்கருக்கும் மேல் அந்தப் பகுதில் இண்டஸ்டரியல் நோக்கத்துக்காக அடிசனல் இண்டஸ்டரியல் பார்க் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் நிலம் இருக்கிறது. 

சுமார் 2000 ஏக்கருக்கும் மேல் ஒரு சில தனியார்கள் நிலங்களை வாங்கி வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து விபரங்களைப் பெற்று விலை பேசி தொடர்புடைய நிறுவனத்திற்கு அளித்திருந்தேன். அவர்கள் நேரடியாக அப்போதைய அரசிடம் திரைப்பட நகருக்கு அனுமதி கேட்க, அரசு மறுத்து விட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் அந்த திட்டத்தினைக் கைவிட்டது. 

தற்போது அரசு அறிவித்த இந்த திட்டம் உள்ள இடம் இப்போதும் தனியார் வசம் உள்ளது. அந்த இடத்தில் தான் தமிழக அரசு இண்டஸ்ட்ரியல் பார்க்கை கொண்டு வர அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கும் இருக்கும் இடம் அது. விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தினை கிரையம் பெற்று வைத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தான் அரசு நிலத்தினை கிரையம் பெற்று இந்த திட்டத்தினைக் கொண்டு வர உள்ளார்கள். அவ்வாறு வந்தால் கோவை பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டால் என்ன ஆகும்? மக்கள் நலன் அடைவார்கள். 

இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு நன்மை கிடைத்து விட்டால் பிஜேபிக்கு பிடிக்குமா? பிடிக்காது அல்லவா? டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

District administration to acquire 3,800 acres for industrial park | Coimbatore News - Times of India (indiatimes.com)

அம்பியும் ஆடு புகழ் அண்ணாமலையும் ஏதோ தமிழக அரசு இப்போதுதான் நிலத்தினை கையகப்படுத்த இருப்பதாக பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கொடிசியா கோவில்பாளையம் பகுதியில் டிபன்ஸ் காரிடாருக்காக இண்டஸ்ட்ரியல் நிலம் வாங்கி, அனுமதி பெற்ற போது அந்த இடம் கொடுத்தவர்கள் விவசாயிகள் இல்லையா? நிதியமைச்சர் வந்து ஓப்பன் செய்து வைத்தாரே அப்போது இந்த அம்பி எங்கே போனார்? இப்போது கதறுகின்றார், நடிக்கின்றார், ஊளையிடுகின்றார். 

இண்டஸ்ட்ரியல் பார்க்கினால் பல கோடி வருமானமும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று பெருமை பேசிய போது, அந்தப் பகுதிக்கு நிலம் கொடுத்தவர்கள் விவசாயிகள் என்பது மறந்து போனதா இவர்களுக்கு? 

இவர்கள் செய்தால் அது நல்லது, அதுவே இன்னொரு கட்சிக்காரர் செய்தால் அது விரோதம், குற்றம் என்பார்கள். இவர்கள் தான் மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றார்களாம். 

இதுவரை செய்தது என்ன என பார்த்தால் ஆட்சிக்கு வந்து இது நாள் வரை கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்தது மட்டும் அல்ல லட்சக் கணக்கான நிறுவனங்கள் அழிந்தும் போயின.

ஒட்டு மொத்தம் இந்தியாவில் 9 சதவீதம் வேலை இழப்பு என்று பத்திரிக்கைச் செய்திகள் புள்ளி விபரங்களை அடுக்குகின்றன. 

அதாவது பரவாயில்லை. மீத்தேன் வாயு கிணறுகளுக்கு நெடுவாசலில் என் நிலத்தையும் ஆட்டய போடப்பார்த்ததே பிஜேபி அரசு அப்போது அவர்களுக்குத் தெரியாதா எங்கள் பகுதி நிலமெல்லாம் விவசாயம் நடக்கிறது என?

சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்தார்களே அப்போது தெரியாதா அது விவசாய நிலம் என்று.

அணைப்பாதுகாப்பு சட்டம் 2021 நிறைவேற்றி இருக்கிறதே பிஜேபி. எந்த ஒரு கட்சியின் கோரிக்கையை கூட ஏற்காமல் அச்செயலைச் செய்து உள்ளதே. அச்சட்டத்தின் காரணமாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளை ஒன்றிய அரசு கைப்பற்றி மேலாண்மை செய்யவிருக்கிறதே அது எவ்வளவு பெரிய அக்கிரமம்? 

கல்வியை மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து நீக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வருடம் தோறும் 20 மாணவர்களை கொலை செய்து வருகிறதே ஒன்றிய அரசு அது எவருக்கும் தெரியவில்லையா?

48,000 கோடி ரூபாயை வரி செலுத்துவர்கள் தண்டமாக கட்ட வேண்டும். ஏன் தெரியுமா? இந்தியன் ஏர்லைன்ஸ் கடன் அது? டாட்டாவுக்கு 18,000 கோடிக்கு அதை விற்று விட்டார்கள். ஆனால் கடன் தொகையினை நாம் கட்ட வேண்டும். 

மிஸ்டர் பிரதமர் மோடியா சம்பாதித்து 48,000 கோடி கடனைக் கட்டப்போகிறார்? 48,000 கோடி நஷ்டக் கணக்கு நம் தலையில். அதையும் நாம் தான் அழுது தொலைக்கனும்.

இப்போது அணைப்பாதுகாப்புச் சட்டம் 2021 மூலம் தமிழகத்தை சுடுகாடாக்கி இன்னொரு பீகார், உத்திரப்பிரதேசம் போல மாற்றணும் என்ற நோக்கில் ஒரு அம்பிக்கூட்டமும் அவர்களின் அல்லக்கைகள் முழு மூச்சாக வேலை செய்து வருகின்றார்கள். 

இதோ இன்றைய தினமணியில் வெளியான ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள். எப்படியெல்லாம் சுற்றிச் சுற்றி தமிழ் நாட்டினைக் குறி வைத்து அழிக்க முயல்கிறார்கள் இவர்கள் என்று.

இவர்கள் எல்லோரும் எப்படியானவர்கள் என்றால் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட போது, பிரிட்டானிய அரசிடம் வேலை செய்து தன் சொந்த உறவினர்களைக் காட்டிக் கொடுத்த அக்கிரமக்காரர்கள் போன்றவர்கள். இவர்கள் தான் சமூகத்தின் கேடு. ஆனால் இவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் பயிர்களுக்குள் இருக்கும் களைகள் போல.

இந்தியா டுடே திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் இந்தியாவில் நம்பர் 1 தமிழகம் என செய்தி வெளியிடுகிறது. அம்பிகளும், அல்லைக்கைகளும் தூங்காமல் அலறிப் புலம்புகின்றனர்.

ஆடு புகழ் அண்ணாமலை பொய்யாகப் பேசித் திரிகின்றார். மக்களுக்கு நன்மை செய்யும் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசுகிறாரா என்றால் இதுவரை இல்லை.

பிஜேபி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறார்கள். அவர்களே விலை உயர்வுக்குப் போராட்டமும் நடத்துகிறார்கள். துக்ளக் ஆட்சியில் இவர்கள் நடத்தும் நயவஞ்சக நாடகங்களை அறிந்து மக்கள் தெளிவு பெறுதல் வேண்டும்.

கோவில்களை நாம் எப்போது தமிழர்கள் கைக்கு மீட்கின்றோமோ அன்றிலிருந்து தமிழ் நாட்டுக்கு அமோக வளர்ச்சி உண்டாகும் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள். பணம் கொட்டும் ஹோட்டல்களை தமிழர்கள் நடத்துகின்றார்கள். கோவில்களும் நம் கட்டுக்குள் நாமே நேரடியாக அர்ச்சனை செய்யும் நாட்கள் வரத்தான் போகின்றது. அதற்காகத்தான் அலறுகின்றார்கள். 

எவரினை மன்னித்தாலும் இந்த அல்லக்கைகளையும், துரோகிகளையும் எப்போதும் மன்னித்து விடவே கூடாது. ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியே இல்லாதவர்கள். இவர்களை மறக்கவும் கூடாது.

இனி இந்தியா டுடே செய்தி :  Thanks to India Today Magazine.


தமிழர்கள் தமிழ் நாட்டினை நம் சந்ததியினருக்கு வளமுடம் கொடுத்துச் செல்ல வேண்டும். எப்படி யூதர்கள் ஹிட்லர் அவர்களை அழித்த போதும், தம் கலாச்சாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வழி செய்து இப்போது தங்களுக்கு என ஒரு தனிநாட்டினை உருவாக்கி ஆண்டு வருகிறார்களோ அவர்களைப் போல தமிழர்களும் ஜாதி இன வேறுபாடுகளை மறந்து ஒன்று படல் அவசியம். 

நாம் மட்டும் வளராமல் இந்தியாவை தமிழர்கள் ஆள வேண்டும். மீண்டும் ஒரு காமராஜர் வர வேண்டுமென்பதை நினைவில் கொள்க. 

தர்மம், அறம் பற்றி பாடம் எடுத்தவர்கள் நாம் என்பது மறந்து விடல் ஆகாது. தமிழ் தான் நம் மதம். தமிழ் தான் நம் ஜாதி. 

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்.

* * *