குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 13, 2019

சில பெண்கள் சில மாதிரி

எனது பசங்க படிக்கும் பள்ளியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் டைட் லெக்கிங்க் மற்றும் டைட் டிஷர்ட்டில் பள்ளிக்கு வந்திருக்கிறார். பள்ளியின் செயலாளர் அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். 

பள்ளியில் சுடிதார், துப்பட்டா மற்றும் அனுமதி. அடலசண்ட் வயதில் காதல், கத்தரிக்காய் என்று அரற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், உடையினால் இனக்கவர்ச்சி உண்டாகி விடக்கூடாது என்பதிலும், ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.

அப்பெண் குழந்தையின் அம்மா, செயலாளரைச் சந்தித்து "நான் சம்பாதிக்கிறேன், என் குழந்தை என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போட்டுக்கிட்டு வரும், உங்களுக்கு அதைத் தடுக்க அனுமதி இல்லை" என்றெல்லாம் கத்தி இருக்கிறார். செயலாளர் கூலாக "உங்கள் குழந்தைக்கு டிசி தருகிறேன், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னவுடன் சென்று விட்டார். மறு நாள் டைட் லெக்கிங்க் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறது அப்பெண் குழந்தை. மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அப்பெண் குழந்தையின் தாய் என்ன விதமானவர் என்பதைப் பற்றி எனக்கு மனக்கிலேசம் உண்டானது. தான் வாழாத ஒரு வாழ்க்கையை, தான் போட முடியாத உடையை தன் பெண் குழந்தைக்குப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறாரா? இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா? வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது? இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர்? ஏன் இப்படி மாறிப்போனார்கள்? என யோசித்தால் கண் முன்னே ‘சினிமா’ வந்து நிற்கிறது.

சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் மூன்றுச் சாலை முக்கு இருக்கிறது. காளப்பட்டியிலிருந்து இருந்து வரும் சாலையில் ஓசிடி (OCT) என்று நோட்டீஸ் போர்டு ஒட்டிய காரின் பின்னால் நின்றிருந்த போது சத்தி சாலையில் வேகமாக ஒரு அரசு பயனியர் பேருந்து வந்தது. இடையில் ஒருவர் கிழக்கே இருந்து பைக்கில் சாலையை நொடியில் கடக்க, அதற்குள் ஓசிடி காரினை ஓட்டி வந்த பெண் விருட்டென காரினை நகர்த்த, பேருந்து ஓட்டுனர் பதறிக் கொண்டு பிரேக் போட்டார். நான் போகாமல் நின்றிருந்தேன். ஓட்டுனர் என்னை போகச் சொல்லி, அந்தக் காரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். காருக்குள் பெண் இருந்ததைக் கவனித்தேன். அந்தக் கார் ஓட்டிய பெண், ஏதோ பெரிய சாதனையைச் செய்தது போல சிரித்துக் கொண்டு ஓட்டிச் சென்றது. பெண்கள் என்றால் பொறுமை என்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஹிஸ்டீரியா பிடித்தது போல காரை ஓட்டிச் செல்கிறது. 

பேருந்து வந்த வேகத்திற்கு மோதினால் பல், சில்லு எல்லாம் சிதறி இருக்கும். கார் ஓட்டுகிறேன் பேர்வழி என பல பெண்கள் சாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரி சென்றால் அதனை நேரம், இடம் கணித்து கடப்பது இல்லை. அதன் பின்னாலே ஓட்டிச் செல்வதும், பின்னால் வரும் கார்களுக்கு வழியும் கொடுப்பதும் இல்லை. சாலைகளில் பைக்கில் செல்லும் இளம் பெண்கள், காற்றில் முடி பறக்க விண்ணில் விமானம் ஓட்டுவது போல ஓட்டுகின்றார்கள். பல தடவைகள் சாலைகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு தெரு நாய் போல விழுந்து கிடப்பதை. ஸ்டைல் என்கிற பெயரில் இவர்களின் அழிச்சாட்டியும் கோவையில் எல்லை தாண்டிச் செல்கிறது.

விஜய் டிவியில் நடனம், பாட்டு, நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரியங்கா என்கிற ஒரு பெண் செய்யும் அஷ்டகோணல்கள், அவரின் ஆபாச பேச்சுக்கள் பெண்களின் மீதான பிம்பத்தை உடைக்கின்றது. பிரியங்கா போலவும் திவ்யதர்ஷிணி போல ஒரு பெண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எந்த நல்ல தகப்பனும், தாயும் நினைக்க மாட்டார்கள். முகம் சுழிக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள், சினிமா ஹீரோக்கள் வந்தால் கட்டிப்பிடித்டுஹ் கன்னத்தில் முத்தம் கொடுப்பது என அவர்களின் நடவடிக்கைகள், அவர்களைப் பெற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் மறக்கவில்லை. எல்லாம் சகஜம் என்பது போல மாறிப் போனார்கள். என்னை படுக்க அழைத்தார்கள் என வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ‘மீ டூ’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திவ்யதர்ஷினி ஒரே ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். அடுத்து டைவோர்ஸ். ரஜினியின் இரண்டாவது பெண் தனுஷை இயக்கினார். அடுத்து டைவோர்ஸ். அமலாபால் ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். டைவோர்ஸ்.  ஏன் டைவோர்ஸ் என்று கேட்டால் வேலை முடித்து வீட்டுக்கு வருவதில்லை. பார்ட்டிகளுக்குச் சென்று குடித்து விட்டு, கூத்தடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்ற சில்லரைத்தனமான செயல்களால் இவர்கள் டைவோர்ஸ் பெறுகிறார்கள். இதற்கு காரணமாக சில நடிகர்கள் இருக்கின்றார்கள். புருஷன்களோடு இருந்தால் நினைத்த நேரத்துக்கு அழைக்க முடியாதே? ஆகவே ஏதேதோ சொல்லி, புகழ்ந்து டைவோர்ஸ் பெற வைத்து, பின்னர் ஆடிக் களைத்து விட்டு கழட்டி விட்டு விடுவார்கள். புரியும் போது எல்லாம் முடிந்து போகும். கழண்டு போய், தோல் சுருங்கிப் போனால் சினிமாவில் நாய் கூட சீந்தாது. சினிமா மாய உலகம் இல்லை. அது கிரிமினல்கள் நிறைந்த துரோக உலகம். நாமெல்லாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் புதை குழி. டிவி அதை விட பெரும் மீள முடியாத மரணக்குழி. 

இதையெல்லாம் அறியாத பெண் பிள்ளைகள் சினிமாவில் இன்ஸ்டண்ட் புகழ் பெற நினைக்கின்றார்கள். ஆண்கள் உடனடி ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றார்கள்.

சினிமாவில் தான் ஜாதி மற்றும் அரசியல் அதிகம். கமல்ஹாசன் தன் படங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நடிக்க வைப்பார். அதற்கு கலை எனச் சொல்வார். ஏன் பிறருக்கு அதெல்லாம் இருக்காதா? கமல்ஹாசன் படங்களில் ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, கிரேஸி மோகன் என தன் இனத்தின் ஆட்களுக்குதான் முன்னுரிமை தருவார். இவர்கள் கமலைப் பற்றிப் பேசி, பேட்டி கொடுத்து ஒரு வெற்றுப் பிம்பத்தை உருவாக்குவார்கள். கமலுக்கு பணம் கொடுத்து படம் எடுக்கச் சொல்பவனை தேடினாலும் காட்ட மாட்டார்கள். அடுத்தவன் பணத்தில் அட்ரா சக்கை என தாளம் போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.

சினிமா ஜாதியால் மட்டுமே இயங்குகிறது. மூன்று, நான்கு க்ரூப்கள் இருக்கின்றன. அவர்களை மீறி எவராவது புதியதாக வந்தால் போச்சு. ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக அழித்து விடுவார்கள். அந்தளவுக்குப் புனிதர்கள் நிரம்பியது தமிழ் சினிமா உலகம்.

ரஜினி சிகரெட் புகைப்பது, தீக்குச்சியை பெண்களின் உடையில் உரசி, சிகரெட்டைப் பற்ற வைப்பது போன்ற நடிப்புகள், சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்தது. ஆனால் பாருங்கள். ரஜினி கண்டக்டராக இருக்கும் போது சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டது போலவும், அதைப் பார்த்த பாலச்சந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நடிக்க வைத்தது போலவும் செம பில்டப்பைக் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரஜினி சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்து நடித்தார் என்பது மட்டுமே. இன்றைக்கு என்னால் பல சாட்சியங்களைக் காட்ட முடியும்.

தமிழக இளைஞர்கள் ரஜினி ஸ்டைல் என்றுச் சொல்லி தங்கள் நுரையீரல்களை சிகரெட் புகையினால் நிறைத்தார்கள். ரஜினியை கொண்டாடினார்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் வேறு மாதிரி ஆகி விடும். சினிமாவில் நல்லவர்கள் நிறைய உண்டு. ஆனால் தீயவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதோ நாமெல்லாம் நல்ல நடிகர் என்று நினைத்து ரசிக்கும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி வந்துள்ள செய்தி. படியுங்கள். ரசியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நன்றி சினிக்கூத்து. இது ஒரு சாம்பிள் மட்டுமே. இதைப் போல பல உண்மைகள் உண்டு.






இவரைப் போல நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

நல்ல பெண்களைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தான் நாறித்தான் போவேன் எனும் பெண்களைப் பார்க்கக் கூட அனுமதிக்காதீர்கள். சமூகம் தான் மனிதனுக்கு கேடயம். அது சீரழிந்தால் மனிதனும் அழிவான்.

13/06/2019-2.50PM

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

Thursday, June 6, 2019

காமிக்ஸ் நினைவுகள்

சின்னஞ்சிறு வயதில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு படிப்பென்றால் திகட்டாத அல்வா சாப்பிடுவது போல. பிட்டுப் பேப்பரைக் கூட எடுத்துப் படித்து விடுவேன். நான்காம் வகுப்பு படிக்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது. எனது வகுப்புத் தோழன் நைனா முகம்மது, பேராவூரணி பஸ் ஸ்டாண்டில், அவன் அத்தா வாங்கி வரும் ராணி காமிக்ஸை பள்ளிக்கு கொண்டு வருவான். எல்லோருக்கும் இலவசமாய் படிக்கத்தருவான். ஆனால் எனக்கு மட்டும் 10 பைசா வாங்கிக் கொண்டுதான் படிக்கத் தருவான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்பதை என்னால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எனது மச்சான் பிரான்சிஸ்காசன் (தமிழன்) மற்றும் அவனுடன் ஒரு சிலர் குரூப்பாக இருப்பார்கள். அவனுக்கு நைனா முகமது இலவசமாய் படிக்கக் கொடுப்பான். அணவயல் கணேசன் வாத்தியாருக்குத் தெரிந்தால் முதுகில் பிரம்பால் கோடு போட்டு விடுவார். எந்த வாத்தியாருக்கும் தெரியாமல் புத்தகத்துக்கு இடையில் வைத்துக் கொண்டு அந்த க்ரூப் மட்டும் படிப்பார்கள்.  அதை அவ்வப்போது எனக்கு காட்டி, என்னிடமிருந்து காசைப் பறித்து விடுவார்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்றவர்கள் எனக்கு அப்படித்தான் அறிமுகமானார்கள். 



வீட்டின் முன்னே இருக்கும் சலுவா மாமியின் மகன் முபாரக் எனக்கு நிறைய நாவல்கள், காமிக்ஸ் தருவான். அதற்குப் பதிலாக என்னிடம் ஏதாவது எழுதும் வேலை வாங்கிக் கொள்வான். வீட்டுப்பாடமோ அல்லது ஏதாவது எழுதித் தரச்சொல்லிக் கேட்பான். எழுதிக் கொடுப்பேன். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது வீரப்ப தேவர் மகன் மாரிமுத்து வீட்டுக்கு படிக்கச் செல்வதுண்டு. அங்குதான் மர்ம மனிதனின் மந்திரக்குகை போன்ற திகில் கதைகள் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. மாரிமுத்து என்னை அந்தப் புத்தகங்களைப் படிக்க விடமாட்டான். இரவில் பேய் வரும் என்றுச் சொல்லி பயம் காட்டுவான். மாரிமுத்துவின் அக்காக்கள் பாரதியும், அகிலா ஆகிய இருவரும் படிக்கும் மாலைமதி, ராணிமுத்து போன்ற புத்தகங்கள் கிடைத்தன. மாரிமுத்துவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம். அங்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். மாமாவுக்கு தெரியாமல் தான் படிக்கணும். மாமாவுக்குத் தெரிந்தால் போச்சு.

இதற்கிடையில் ராவுத்தர் கடை கசாலி எனக்கு அறிமுகமானான். அவனிடம் இருந்து அம்புலிமாமா, அலாவுதீனின் அற்புத விளக்கு, 1000 இரவுக்கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பின் போது ஆலம் அறிமுகமானான். அவன் வீட்டில் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன. அவற்றுக்குள் அடுக்கப்பட்ட புத்தகங்கள் பல இருந்தன. உமர் முக்தார் கதை அங்குதான் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உமர் முக்தார் புத்தகத்தைப் படித்தேன். நீண்ட காலங்களுக்குப் பிறகு கடந்த வருடம் அந்தப் புத்தகம் மீண்டும் கண்ணில்பட, வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் இரவு பகல் பாராமல் படித்தேன். மனையாள் அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அன்றைய புரிதலுக்கும் இன்றைய புரிதலுக்கு எத்தனை வித்தியாசங்கள்?

கல்லூரி சென்றேன். ராஜேஷ்குமார், சுபா போன்ற மூன்றாம் தர நாவல் ஆசிரியர்களிடமிருந்து விலகி கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய தரிசனம் கிடைத்தது. பூண்டி புஷ்பம் கல்லூரியின் நூலகம் எனக்கு அற்புத புதையலாக கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் படித்துக் கொண்டே இருப்பேன். அதே சமயம் கணிணி பாட்ப்பிரிவும் படித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நேரம் தவிர பெரும்பான்மை நேரம் புத்தகங்களுடனே செல்லும்.

அதற்கடுத்தாக கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கு கணிணி ஆசிரியராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐந்து வருடங்களாக அனேக புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அங்கு ஆன்மீக தொடர்பான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்குப் புரியவே புரியாது. ஆனாலும் படித்து வைப்பேன். புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டுமெனில் நடக்கிற விஷயமா? அல்லது நானென்ன ஆர்.பி.ராஜநாயஹமா? சாதாரண தங்கவேல். 

எனக்குள் ஒரு நிராசை இருந்து கொண்டே இருந்தது. ராணி காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் அது. சமீபத்தில் 1 முதல் 100 வரையிலான ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஸ்கேன் செய்து இலவசமாய் யாரோ ஒரு புண்ணியவான் நெட்டில் போட்டிருந்தார். அத்தனை வருட ஏக்கம் இப்போது தீர்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு புத்தகங்களைப் படித்து விடுகிறேன். அது மட்டும் இன்றி இன்னும் நிறைய சிறார் புத்தகங்களை அந்தப் புண்ணியவான் ஸ்கேன் செய்து நெட்டில் விட்டிருக்கிறார். ஒன்றையும் விடாமல் இறக்கிப் பதிவு செய்து கொண்டேன். அந்த புண்ணியவானுக்கு நன்றி.

காமிக்ஸ் புத்தகங்கள் டிவி இல்லாத நாட்களில் கண் முன்னே படம் காட்டின. அதனால் உண்டான் ஈர்ப்பு அதன் மீதான பற்றுதலை அதிகமாக்கின. காமிக்ஸ் கதைகள் எல்லாம் வீர சாகசங்கள் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் தான் எனக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்தன என்று இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. காமிக்ஸ் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சூழலிலும், சிக்கலான நேரங்களிலும் தப்பி விடுவார்கள். அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. அடுத்து என்ன என்று அதிரடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஹீரோயிசமானது அதீதமானது. எதார்த்தத்துக்கும் அதற்கும் வெகுதூரம். ஆனால் ஹீரோக்களின் இயல்பு என்பது தொடர் முயற்சி. முடிவில் வெற்றி. அந்த ஹீரோக்களின் இயல்புதன்மை என்னிடம் ஒட்டிக் கொண்டது.

சமூக வாழ்க்கையில் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவும் சுய நலவாதிகளின் சித்து விளையாட்டுக்களில், விபரம் தெரியாமல் சிக்கிக் கொண்டு பொருளையும், நேரத்தையும் இழந்து விடும் போதெல்லாம், மனது வலித்தாலும், சோர்ந்து போகாது. மீண்டும் அடுத்த வேலைக்கு தயார் ஆகி விடும் இயல்பு என்னிடம் இருக்கிறது.

இதுவரையிலும் நான் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் சிறிதுகாலம் பயணிப்பார்கள், காணாமல் போவார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏற்படுவது இல்லை. இங்கு எல்லாமே கொடுத்துப் பெறுவது, அல்லது பெற்றுக் கொண்டு கொடுப்பது மட்டும் தான். மனிதன் சார்பு நிலை கொண்டவன். பெறுவதும்,கொடுப்பதும்தான் வாழ்க்கை. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விளங்கி விடும். இது வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ ஒரு சில குணங்கள் மனிதர்களுக்குத் தேவை. 

அப்படியான மிக முக்கியமான குணங்களில் ஒன்று தோல்வியில் துவளாமை. அதை எனக்கு காமிக்ஸ் ஹீரோக்கள் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கு நான் காமிக்ஸ் நிறைய வாங்கிக் கொடுக்கிறேன். பள்ளிப் பாடங்களுக்கு இடையில் படிக்கின்றார்கள். ஒரு முறை மகள் நிவேதிதா ஒரு பாடத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டாள். அவளை என்னால் எளிதாக சமாதானப் படுத்த முடிந்தது. எளிதில் புரிந்து கொள்கிறாள். ரித்திக்கும் இந்த வயதில் பெரிய மனிதத்தன்மை உடையவனாக இருக்கிறான். 

ஆன்மீக புத்தகங்கள் கோவில்களுக்கும், கோவில்களை ஆளும் ஆட்களுக்கு வருமானத்தை பெற்றுத் தருகின்றன. இழப்பது ஆன்மீகத்தை நம்புகிறவன் மட்டுமே. மனை அமைதி தேடி கோவிலுக்குச் சென்றால் அங்கு நம்மிடமிருப்பவைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதுதான் உண்மை. 

இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகமும் தோல்வியில் துவளாமையைத்தான் சொல்கின்றது. அதற்கு பல்வேறு கதைகளை கடவுள்களின் வடிவில் வைத்திருக்கிறது. அக்கதைகளைப் புரிந்து கொண்டு அதன் வழி நடப்பது என்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நாம் மஹாபாரத தருமரைப் போல வாழவே முடியாது. நகுலனைப் போல இருக்க நினைத்துப் பார்க்கவே முடியாது. அதெல்லாம் சுயசார்பு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. 

இங்கு வல்லவன் மட்டுமே வாழ்வான். அந்த வல்லவன் பிம்பத்தை காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் உருவாக்குகின்றார்கள். அதன் வழி அவர்கள் நடக்கின்றார்கள். அந்த பிம்பங்கள் நமது உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றன.

காமிக்ஸ் என்று எளிதாக கடந்து விடுகிறோம். அந்த காமிக்ஸ் ஹீரோக்களின் தன்மை மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து விட்டால் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம். நீட் தேர்வில் மார்க் வாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களை எல்லாம் பார்க்கையில் அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் வருவதில்லை. அவர்கள் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண சிலந்திக்கு இருக்கும் முயற்சி கூட ஆறறறிவு படைத்தவர்களிடம் இல்லாது போவது சமுதாயத்தின் பார்வையால் உண்டாகும் அனர்த்தம். திருடனைத்தான் திறமைசாலி என்கிறது இந்தச் சமுதாயம். ஏனென்றால் சமுதாயமும் சேர்ந்து திருடுகிறது. திருடனுக்குத்தான் திருடனைப் பிடிக்கும்.

மருத்துவம், அதுவும் அலோபதி மருத்துவம் போன்ற கொலைகார தொழில் இந்த உலகில் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. ராணுவ வீரன் எதிரியை சுட்டுக் கொன்று விடுகிறான். சடுதியில் விடுதலை. இப்போதைய நவீன மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவம் செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதல் என்கிற வைத்திய முறை இருக்கிறதே அதை விட கொடுமையான நரகம் இப்பூவுலகில் வேறு இல்லை. 

நண்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொடுக்க, நல்ல நல்ல காமிக்ஸ் புத்தகங்களைப் பரிசளியுங்கள். டிவி கார்ட்டூன்கள் அறிவை வளர்ப்பதில்லை. புத்தகங்கள் நினைவுகளை உருவாக்கி, உள்ளத்துக்குள் பதிய வைக்கின்றன. 

மீண்டும் சந்திப்போம் விரைவில்.....!

06/06/2019-1.43பி.எம்.