குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ராணி காமிக்ஸ். Show all posts
Showing posts with label ராணி காமிக்ஸ். Show all posts

Thursday, June 6, 2019

காமிக்ஸ் நினைவுகள்

சின்னஞ்சிறு வயதில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு படிப்பென்றால் திகட்டாத அல்வா சாப்பிடுவது போல. பிட்டுப் பேப்பரைக் கூட எடுத்துப் படித்து விடுவேன். நான்காம் வகுப்பு படிக்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது. எனது வகுப்புத் தோழன் நைனா முகம்மது, பேராவூரணி பஸ் ஸ்டாண்டில், அவன் அத்தா வாங்கி வரும் ராணி காமிக்ஸை பள்ளிக்கு கொண்டு வருவான். எல்லோருக்கும் இலவசமாய் படிக்கத்தருவான். ஆனால் எனக்கு மட்டும் 10 பைசா வாங்கிக் கொண்டுதான் படிக்கத் தருவான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்பதை என்னால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எனது மச்சான் பிரான்சிஸ்காசன் (தமிழன்) மற்றும் அவனுடன் ஒரு சிலர் குரூப்பாக இருப்பார்கள். அவனுக்கு நைனா முகமது இலவசமாய் படிக்கக் கொடுப்பான். அணவயல் கணேசன் வாத்தியாருக்குத் தெரிந்தால் முதுகில் பிரம்பால் கோடு போட்டு விடுவார். எந்த வாத்தியாருக்கும் தெரியாமல் புத்தகத்துக்கு இடையில் வைத்துக் கொண்டு அந்த க்ரூப் மட்டும் படிப்பார்கள்.  அதை அவ்வப்போது எனக்கு காட்டி, என்னிடமிருந்து காசைப் பறித்து விடுவார்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்றவர்கள் எனக்கு அப்படித்தான் அறிமுகமானார்கள். 



வீட்டின் முன்னே இருக்கும் சலுவா மாமியின் மகன் முபாரக் எனக்கு நிறைய நாவல்கள், காமிக்ஸ் தருவான். அதற்குப் பதிலாக என்னிடம் ஏதாவது எழுதும் வேலை வாங்கிக் கொள்வான். வீட்டுப்பாடமோ அல்லது ஏதாவது எழுதித் தரச்சொல்லிக் கேட்பான். எழுதிக் கொடுப்பேன். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது வீரப்ப தேவர் மகன் மாரிமுத்து வீட்டுக்கு படிக்கச் செல்வதுண்டு. அங்குதான் மர்ம மனிதனின் மந்திரக்குகை போன்ற திகில் கதைகள் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. மாரிமுத்து என்னை அந்தப் புத்தகங்களைப் படிக்க விடமாட்டான். இரவில் பேய் வரும் என்றுச் சொல்லி பயம் காட்டுவான். மாரிமுத்துவின் அக்காக்கள் பாரதியும், அகிலா ஆகிய இருவரும் படிக்கும் மாலைமதி, ராணிமுத்து போன்ற புத்தகங்கள் கிடைத்தன. மாரிமுத்துவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம். அங்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். மாமாவுக்கு தெரியாமல் தான் படிக்கணும். மாமாவுக்குத் தெரிந்தால் போச்சு.

இதற்கிடையில் ராவுத்தர் கடை கசாலி எனக்கு அறிமுகமானான். அவனிடம் இருந்து அம்புலிமாமா, அலாவுதீனின் அற்புத விளக்கு, 1000 இரவுக்கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பின் போது ஆலம் அறிமுகமானான். அவன் வீட்டில் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன. அவற்றுக்குள் அடுக்கப்பட்ட புத்தகங்கள் பல இருந்தன. உமர் முக்தார் கதை அங்குதான் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உமர் முக்தார் புத்தகத்தைப் படித்தேன். நீண்ட காலங்களுக்குப் பிறகு கடந்த வருடம் அந்தப் புத்தகம் மீண்டும் கண்ணில்பட, வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் இரவு பகல் பாராமல் படித்தேன். மனையாள் அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அன்றைய புரிதலுக்கும் இன்றைய புரிதலுக்கு எத்தனை வித்தியாசங்கள்?

கல்லூரி சென்றேன். ராஜேஷ்குமார், சுபா போன்ற மூன்றாம் தர நாவல் ஆசிரியர்களிடமிருந்து விலகி கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய தரிசனம் கிடைத்தது. பூண்டி புஷ்பம் கல்லூரியின் நூலகம் எனக்கு அற்புத புதையலாக கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் படித்துக் கொண்டே இருப்பேன். அதே சமயம் கணிணி பாட்ப்பிரிவும் படித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நேரம் தவிர பெரும்பான்மை நேரம் புத்தகங்களுடனே செல்லும்.

அதற்கடுத்தாக கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கு கணிணி ஆசிரியராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐந்து வருடங்களாக அனேக புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அங்கு ஆன்மீக தொடர்பான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்குப் புரியவே புரியாது. ஆனாலும் படித்து வைப்பேன். புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டுமெனில் நடக்கிற விஷயமா? அல்லது நானென்ன ஆர்.பி.ராஜநாயஹமா? சாதாரண தங்கவேல். 

எனக்குள் ஒரு நிராசை இருந்து கொண்டே இருந்தது. ராணி காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் அது. சமீபத்தில் 1 முதல் 100 வரையிலான ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஸ்கேன் செய்து இலவசமாய் யாரோ ஒரு புண்ணியவான் நெட்டில் போட்டிருந்தார். அத்தனை வருட ஏக்கம் இப்போது தீர்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு புத்தகங்களைப் படித்து விடுகிறேன். அது மட்டும் இன்றி இன்னும் நிறைய சிறார் புத்தகங்களை அந்தப் புண்ணியவான் ஸ்கேன் செய்து நெட்டில் விட்டிருக்கிறார். ஒன்றையும் விடாமல் இறக்கிப் பதிவு செய்து கொண்டேன். அந்த புண்ணியவானுக்கு நன்றி.

காமிக்ஸ் புத்தகங்கள் டிவி இல்லாத நாட்களில் கண் முன்னே படம் காட்டின. அதனால் உண்டான் ஈர்ப்பு அதன் மீதான பற்றுதலை அதிகமாக்கின. காமிக்ஸ் கதைகள் எல்லாம் வீர சாகசங்கள் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் தான் எனக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்தன என்று இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. காமிக்ஸ் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சூழலிலும், சிக்கலான நேரங்களிலும் தப்பி விடுவார்கள். அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. அடுத்து என்ன என்று அதிரடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஹீரோயிசமானது அதீதமானது. எதார்த்தத்துக்கும் அதற்கும் வெகுதூரம். ஆனால் ஹீரோக்களின் இயல்பு என்பது தொடர் முயற்சி. முடிவில் வெற்றி. அந்த ஹீரோக்களின் இயல்புதன்மை என்னிடம் ஒட்டிக் கொண்டது.

சமூக வாழ்க்கையில் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவும் சுய நலவாதிகளின் சித்து விளையாட்டுக்களில், விபரம் தெரியாமல் சிக்கிக் கொண்டு பொருளையும், நேரத்தையும் இழந்து விடும் போதெல்லாம், மனது வலித்தாலும், சோர்ந்து போகாது. மீண்டும் அடுத்த வேலைக்கு தயார் ஆகி விடும் இயல்பு என்னிடம் இருக்கிறது.

இதுவரையிலும் நான் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் சிறிதுகாலம் பயணிப்பார்கள், காணாமல் போவார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏற்படுவது இல்லை. இங்கு எல்லாமே கொடுத்துப் பெறுவது, அல்லது பெற்றுக் கொண்டு கொடுப்பது மட்டும் தான். மனிதன் சார்பு நிலை கொண்டவன். பெறுவதும்,கொடுப்பதும்தான் வாழ்க்கை. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விளங்கி விடும். இது வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ ஒரு சில குணங்கள் மனிதர்களுக்குத் தேவை. 

அப்படியான மிக முக்கியமான குணங்களில் ஒன்று தோல்வியில் துவளாமை. அதை எனக்கு காமிக்ஸ் ஹீரோக்கள் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கு நான் காமிக்ஸ் நிறைய வாங்கிக் கொடுக்கிறேன். பள்ளிப் பாடங்களுக்கு இடையில் படிக்கின்றார்கள். ஒரு முறை மகள் நிவேதிதா ஒரு பாடத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டாள். அவளை என்னால் எளிதாக சமாதானப் படுத்த முடிந்தது. எளிதில் புரிந்து கொள்கிறாள். ரித்திக்கும் இந்த வயதில் பெரிய மனிதத்தன்மை உடையவனாக இருக்கிறான். 

ஆன்மீக புத்தகங்கள் கோவில்களுக்கும், கோவில்களை ஆளும் ஆட்களுக்கு வருமானத்தை பெற்றுத் தருகின்றன. இழப்பது ஆன்மீகத்தை நம்புகிறவன் மட்டுமே. மனை அமைதி தேடி கோவிலுக்குச் சென்றால் அங்கு நம்மிடமிருப்பவைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதுதான் உண்மை. 

இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகமும் தோல்வியில் துவளாமையைத்தான் சொல்கின்றது. அதற்கு பல்வேறு கதைகளை கடவுள்களின் வடிவில் வைத்திருக்கிறது. அக்கதைகளைப் புரிந்து கொண்டு அதன் வழி நடப்பது என்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நாம் மஹாபாரத தருமரைப் போல வாழவே முடியாது. நகுலனைப் போல இருக்க நினைத்துப் பார்க்கவே முடியாது. அதெல்லாம் சுயசார்பு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. 

இங்கு வல்லவன் மட்டுமே வாழ்வான். அந்த வல்லவன் பிம்பத்தை காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் உருவாக்குகின்றார்கள். அதன் வழி அவர்கள் நடக்கின்றார்கள். அந்த பிம்பங்கள் நமது உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றன.

காமிக்ஸ் என்று எளிதாக கடந்து விடுகிறோம். அந்த காமிக்ஸ் ஹீரோக்களின் தன்மை மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து விட்டால் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம். நீட் தேர்வில் மார்க் வாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களை எல்லாம் பார்க்கையில் அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் வருவதில்லை. அவர்கள் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண சிலந்திக்கு இருக்கும் முயற்சி கூட ஆறறறிவு படைத்தவர்களிடம் இல்லாது போவது சமுதாயத்தின் பார்வையால் உண்டாகும் அனர்த்தம். திருடனைத்தான் திறமைசாலி என்கிறது இந்தச் சமுதாயம். ஏனென்றால் சமுதாயமும் சேர்ந்து திருடுகிறது. திருடனுக்குத்தான் திருடனைப் பிடிக்கும்.

மருத்துவம், அதுவும் அலோபதி மருத்துவம் போன்ற கொலைகார தொழில் இந்த உலகில் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. ராணுவ வீரன் எதிரியை சுட்டுக் கொன்று விடுகிறான். சடுதியில் விடுதலை. இப்போதைய நவீன மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவம் செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதல் என்கிற வைத்திய முறை இருக்கிறதே அதை விட கொடுமையான நரகம் இப்பூவுலகில் வேறு இல்லை. 

நண்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொடுக்க, நல்ல நல்ல காமிக்ஸ் புத்தகங்களைப் பரிசளியுங்கள். டிவி கார்ட்டூன்கள் அறிவை வளர்ப்பதில்லை. புத்தகங்கள் நினைவுகளை உருவாக்கி, உள்ளத்துக்குள் பதிய வைக்கின்றன. 

மீண்டும் சந்திப்போம் விரைவில்.....!

06/06/2019-1.43பி.எம்.