குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 16, 2022

ஜோதி சுவாமிகளின் வார்த்தைகளால் மாற்றமடைந்த பக்தர்

நானும் எனது முன்னாள் நண்பருமான தனபால் அவர்களும் வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு ஒரு மாலை நேரம் வந்தோம். அன்றைய மாலை நேரம், சுவாமியின் ஜீவசமாதியில் ஜோதி சுவாமிகள் வழிபடும் அம்பாளுக்கு  அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் ஆரம்பமானது. இருவரின் கையிலும் மலர்களைக் கொடுத்து, ஒவ்வொரு மந்திரம் ஓதும் போதும் அம்பாளின் பாதங்களில் மலரை அர்ப்பணிக்க கோரினார் ஜோதி சுவாமி.

சுவாமி மந்திரம் ஜெபிக்க, அந்த மாலை நேர அமைதியில் அம்பாள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்க, மனமொன்றிய நிலையில் இருவரும் அம்பாளின் பாத கமலங்களில் மலர்களைத் தூவினோம்.

அன்றிலிருந்து இன்று வரை ஜோதி சுவாமிகளைக் கவனித்து வருகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இவரைப் பொறுத்தவரை இந்தக் கருத்து வெற்றி பெறாது.

சிறுவயதிலிருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு, குரு நாதரின் அழைப்பால் ஜீவசமாதியை நிர்வகித்து வருகிறார். 

எத்தனை பிரச்சினைகள்? எவ்வளவு அக்கப்போர்கள்? அத்தனையையும்  ஒரே ஆளாக நின்று சமாளித்து, நம் குருநாதரின் ஆசியோடு, வரக்கூடிய பக்தர்களைக் கவனிப்பதில் ஆகட்டும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாகட்டும் என அவரைப் போல இன்னொருவர் இருக்கிறாரா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை.

பிரதிபலன் எதிர்பார்க்கின்றாரா என்றால் இல்லை. ஏதாவது கட்டணம் வாங்குகின்றாரா? அதுவும் இல்லை. இடுப்பில் ஒரு காவி வேஷ்டி. அதுவும் அழுக்குடன் இருக்கும். 

காலையில் எழுந்து சமைப்பதில் ஆரம்பித்து மாலை ஜீவசமாதியை கதவை மூடும் வரைக்கும் ஓடிக் கொண்டே இருப்பார். அத்தனை சுறுசுறுப்பு.

குருநாதரும் இவரும் வேறு வேறு என்று என்றைக்கும் வித்தியாசம் தோன்றியதே இல்லை. ஒரு சில சமயங்களில் குருநாதரைப் போலவே பேசுவார். அந்த நேரங்களில் எனக்குள் படபடப்பு எழுந்து விடும். சத்தம் காட்டாமல் அமைதியாகி விடுவேன். இதைப் போன்ற பல தருணங்களில் அவரைக் கண்டிருக்கிறேன்.

என் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ரூடோஸ் என்று பெயர் சொன்னார். இதென்ன? இப்படி ஒரு பெயரைச் சொல்கிறாரே? என்று யோசித்தாலும் அதே பெயர் தான். சரியான மூர்க்கம் அவளுக்கு.

ஒரு தடவை ஊருக்குச் சென்ற போது ஜீவசமாதியில் ரூடோஸைக் கொண்டு வந்து விட்டுச் சென்றேன். ஜோதி சுவாமிகள் தான் ரூடோஸைக் கவனித்துக் கொள்வார்.

தினமும் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அழைத்து வருவாராம். அன்றைய நாளில் குருநாதரைத் தரிசிக்க வந்த ஒரு பக்தர் சுவாமியுடன் ஆற்றுக்கு வந்திருக்கிறார். ரூடோஸைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள் சொன்னாராம் ஜோதி சுவாமி.

அந்த பக்தர் தன் மனைவி மக்களைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டவர், மனைவி மகளை அழைத்து வந்து வாழ ஆரம்பித்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது.

அவர் என்னை ஆசிரமத்தில் ஒரு முறை நேரில் பார்த்த போது, “ரூடோஸ் எப்படி இருக்கு?” என்றார்.

ரூடோஸா, அவளுக்கும் இவருக்குமென்ன தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, “நல்லா இருக்கிறாள், உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?” எனக் கேட்டேன்.

”அவளால் தான் இன்றைக்கு நான் குடும்பத்தோடு வாழ்கிறேன்” என்றார்.

“ஙே” என விழித்தேன்.

“அவளை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்ற போது, நானும் சுவாமியும் தான் அவளைக் குளிப்பாட்டினோம். அன்றைக்குத் தான் எனக்குள் மாற்றம் நடந்தது. இன்றைய எனது சந்தோஷத்துக்குக் காரணம் அவள்தான்” என்றார்.

இப்படித்தான் ஜோதி சுவாமிகள் திடீரென்று சொல்லும் வார்த்தைகள் பலவும் எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கி இருக்கின்றன.

காதற்ற ஊசி, ஒரு மரண ஊர்வலம், இரயிலிருந்து தள்ளி விடப்பட்ட காந்தி ஆகியவற்றால் பட்டினத்தாரும், புத்தரும், மஹாத்மாவாக மாறினர்.

வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 

குருநாதரைத் தரிசிக்க ஆயிரக் கணக்கானவர்கள் வருவதுண்டு. அவர்களுக்கு இது தாய்வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பார் ஜோதி சுவாமிகள். 

ஆமாம் குருநாதரின் ஜீவசமாதி உலக மக்கள் எல்லோருக்கும் தாய் வீடு. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அவரின் முன்பு உட்கார்ந்தால் ஒடுங்கும் மனத்தோடு வைக்கும் எல்லா பிரார்த்தினைகளும் நிறைவேறுகின்றன என அங்கு வரும் பக்தர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 வாழ்க வளமுடன்...! 

Sunday, August 14, 2022

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக மாறாத ஒன்று

இந்தியா 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தென்னாஃப்ரிக்கா, பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாணத்தினால் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்பட்டது. 

ஒரு சில சிறு சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையே மாற்றும். 

அதே போல 2021ம் ஆண்டில் ஒரு கிருமி உலகை முடக்கிப் போட்டது. கிருமியின் முன்னால் கடவுள்கள், ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள், அரசியல் ராஜதந்திரிகள் எல்லாம் தோற்றோடினர். கடவுள்களுக்கு பூஜை இல்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசியல் ராஜதந்திரிகள் முடங்கினர். 

இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்யாகிரகம் நடத்தி, ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்திய, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர்களை தேசபக்தர் என்று கொண்டாடும் மாயை வினோதங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

மருது சகோதர்களும், பூலித்தேவனும், திருப்பூர் குமரனும் செத்துப் போனார்கள். வ.உ.சிதம்பரனார்,  சிவா சிறையில் கிடந்தனர். இந்தியாவின் சிற்பி நேரு ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் கிடந்தார். இன்னும் லட்சோப லட்ச மக்கள் தங்கள் உயிரை இழந்து பெற்றது இந்த சுதந்திரம்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கும் கூட சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றைக்கும் இந்தியர்கள் பசியாலும், பட்டினியாலும், வீடின்றியும் இருக்கின்றார்கள். எத்தனையோ ஆட்சிகள் நடந்து முடிந்து விட்டன. இன்னும் எதுவும் மாறவில்லை.

140 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளார்கள். சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டார்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, காயும் வயிறுகள், பட்டினியில் மக்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

இருக்க வீடில்லை, வீடெங்கும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென்கிறது அரசு.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


* * *


சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று தமிழர் பிரதமராவது.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது 

இந்தியாவில் மாறாத ஒன்று இந்திய ஆட்சி மொழிப் பிரச்சினை. 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. வீடெங்கும் தேசியக் கொடி ஏற்றி மகிழ வேண்டும் வயிற்றில் பசி இருப்பினும்.

இதோ ஒரு சாட்சி- இந்தியாவில் 75 ஆண்டுகாலமாக மாறாத ஒன்றின் சாட்சி.



நன்றி : காஞ்சி இதழ், தினமணி

Saturday, August 13, 2022

கொஞ்ச நேரம் பேசலாமா? - எனது முதல் புத்தகம் அமேசான் கிண்டிலில்

அன்பு நண்பர்களே, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். முதன் முதலாக அமேசான் கிண்டிலில் ‘கொஞ்ச நேரம் பேசலாமா?” என்ற எனது புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
கிண்டில் ஆப்பில் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

புத்தகத்தைப் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தினை கிண்டிலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

#கொஞ்ச_நேரம்_பேசலாமா?
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_புத்தகம்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_கிண்டில்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_அமேசான்