குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 28, 2018

ஒரு ஆண் பதினாறு பெண்கள்

”ஏண்டி, நீ மட்டும் அவனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லி, அதுவும் உங்கப்பனும், ஆத்தாளும் உன்னைக் கூட்டி விட்டு, டிவியில போய் அவனுக்கிட்டே வழிஞ்சியே அதைப் பத்தியெல்லாம் நான் கேட்டேனா? பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா? நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே!”

இப்படி ஒரு பேச்சினை வரும் காலத்தில் ஆர்யாவிடம் ஈசிக் கொண்டும், இழைந்து கொண்டும், காமம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பதினாறு பெண்களில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ அவர்களது எதிர்காலக் கணவர்களிடமிருந்து கேட்க நேரிடலாம்.

அதுமட்டுமல்ல, ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைத்தவிர மீதமுள்ள பெண்கள் வேறு யாரோ ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கிற போது, அவர்களுக்குப் பிறக்கக் கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு தெரிந்திருக்காதா? இது எவ்வளவு பெரிய அவமானத்தையும், அனர்த்தங்களையும் உருவாக்கும்?

அந்தப் பதினாறு பெண்களும் இளம் பருவத்தில் இருக்கின்றார்கள். சொல்லிக் கேட்க கூடிய நிலையில் அவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகள் இருப்பார்களே அவர்களாவது சொல்லிப் புரிய வைத்திருக்கக் கூடாதா? 

இந்த நிகழ்ச்சிக்கு காம்பியர் செய்யும் சங்கீதா, தன் மகளை இப்படி அனுப்பி வைப்பாரா? இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா? என்று அவர்கள் தான் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்.

இருமணம் இணையும் நிகழ்ச்சி திருமணம். தாரம் என்பவள் தாய்க்கு நிகரனாவள். அவள் ஆலமரம். அவள் அச்சாணி. அவளின்றி உலகம் இயங்காது. அப்பேர்ப்பட்ட பெண்ணை ஆர்யா அவமானப்படுத்துகிறார். பெண்களைக் கேவலப்படுத்துகிறார். ஏழாயிரம் பேரில் பதினாறு பெண்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். என்ன ஒரு அவமானமான நிகழ்ச்சி இது.  பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களிடம் பேசிப்பழகி அதன் பிறகு அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாராம் ஆர்யா. இதே போல யாரோ ஒரு பெண் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா இந்தச் சமூகம்?

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ் இது கலாச்சார மீறலான நிகழ்ச்சி இல்லை என விகடனில் பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரகாஷ் தன்னை வளர்த்த சமூகத்திற்கு, தன் கலாச்சாரத்திற்கு செய்யும் நன்றிக்கடனா இது? காலம் மாற மாற கலாச்சாரமும் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை தான். ஆனால் சமூகத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவைகள் மீது பிரகாஷ் மாதிரியானவர்கள் கலை என்கிற பெயரில், நிகழ்ச்சி என்கிற பெயரில் செய்யும் தாக்குதல்கள் எதிர்கால சந்ததியினருக்கு, அவர்களின் மனதுக்குள் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி அழிவுக்கு தள்ளி விடுமே அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா?

ஆர்யா தனக்குப் பிடிக்காத பெண்களை எலிமினேட் செய்வார் அல்லவா? சினிமாக்காரனுக்கே உன்னைப் பிடிக்கலைன்னா வேறு எவண்டி ஒன்னைக் கட்டிக்குவான்னு சமூகத்தில் பேசுவார்களே அப்போது என்ன செய்யப்போகின்றார்கள் இவர்கள்?

தன் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் சமூகத்திற்கு ஆர்யா செய்யும் நன்றிக்கடன் இதுதானா? செய் நன்றி மறந்து தன் சுகமே பெரிது, தன் நலத்திற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து ஒழிப்பேன் என்று வாழும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இருந்திடாது. ஆர்யா பெண்களின் மீது நடத்தும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நான்காவது பாகத்தில் ஒவ்வொரு பெண்களும் ஆட்டம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் இது. எந்த ஒரு ஆண்மகனும் செய்யக்கூடாத அடாத செயலைச் செய்யும் ஆர்யாவுக்கு நல்ல மனது ஒன்று இருக்கிறதா என்று புரியவில்லை. கொஞ்சம் கூட சங்கடமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் அமர்ந்து கொண்டு பேசுகிறார். கட்டிப் பிடிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். இது அக்மார்க் பாலியல் அத்துமீறலே. சட்டப்படி நடக்கக் கூடிய பாலியல் அத்துமீறல் இது. ஏனென்றால் அந்தப் பெண்கள் 18 வயதைத் தாண்டி இருப்பார்கள்.

இந்த உலகம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. பெண்களின் விஷயத்தில் எவனொருவன் ஆட்டம் போடுகின்றானோ அவன் நிம்மதியாக வாழ்ந்து செத்த வரலாறு இல்லவே இல்லை. தேடினாலும் கிடைக்காது. 

அந்தப் பதினைந்து பெண்களின் மனது படும்பாடு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூகத்தின் எதிர்காலம் இவைகளைக் கருத்தில் கொண்டு ஆர்யா இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். தன் ஒருவனின் நலனுக்காக சமூகத்தின் கலாச்சாரத்தின் மீது ஆர்யா நடத்தும் தாக்குதல் அவருக்கு நல்ல விளைவுகளைத் தந்து விடாது. 

இந்தியாவின் சமூகக்கோட்பாடுகளின் மீதும், கலாச்சாரத்திலும் தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியை எந்தக் கட்சியும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஆபாசம் தெறிக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யபடல் அவசியம். தொடர்ந்து ஒளிபரப்புவது பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும். சமூகச் சிந்தனையாளர்கள், கலாச்சாரகாவலர்கள் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.

உண்மையில் தன் பெண் குழந்தையின் மீது அதீதப்பாசம் உள்ள எந்த ஒரு பெற்றோரும் செய்யவே கூடாத செயல் தான் இது.

யாரும் இங்கே தனித்தனியாக வாழ முடியாது. சமூகத்தின் இடையே தான் வாழ வேண்டும்.

ஏற்கனவே ஐபிஎஃப்பில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு பதிலும் இல்லை. 

நானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஆர்யா இந்த நிகழ்ச்சியை நிறுத்தவில்லை எனில் காலம் அதற்கான விளைவை அவருக்கு அளிக்கும். 

Wednesday, February 21, 2018

அதிகாரம் அழிந்தே போகும்

நீர் நாய்கள் நிறைந்திருக்கும் சற்றே குளிர் பொறுந்திய பொய்கையில் தாமரைகள் மலர்ந்து தழைத்திருக்கின்றன. அந்தத் தாமரைகளின் நிழல் போல இருக்கும் அல்லிப் பூவின் இதழைபோல மாசு மறுவற்ற, மலர்ந்த குற்றமில்லாத உள்ளங்கைகளை உடையவன். சிவந்து கிடக்கும் இளம் பவளத்துண்டுகளை ஒட்டி வைத்தாற் போன்ற இதழ்களை உடையவன். இன்னும் பழகிக் கொள்ளாத நாவினாற் தத்திப் பேசும் கிளியினை ஒத்த, தேனினும் இனிய குரலால் கிள்ளை மொழியினைப் பேசுபவன், அவனைக் காண்பவர் எவரினும் அவன் மீது விருப்பமுற்று அன்பு பொழியும் கவர்ச்சியினை உடையவன், தன் நெஞ்சிலே பொற்கொடியை அணிந்தவன் ஆகிய நம் புதல்வன், சிறுதேர் ஓட்டி தெருவில் விளையாடிக் கொண்டு, தனியனாக நின்றிருந்தான். 

அப்போது அவ்வழியாக வந்த உடலெங்கும் பொன் அணிகளை அணிந்தவளும், கூர்மையான பற்களை உடையவளுமான உமது காதற் பரத்தை நம் மகனைப் பார்த்து, அவன் உம்மைப் போல உருவத்தில் ஒப்புமை கொண்டிருப்பதைக் கண்டு விதிர்த்து, தெருவில் எவரும் காண்பவர் இல்லையாதலால் துணிந்து அவனருகே சென்று,’என் உயிரே! என்னிடம் வருவாயா?” என்று கூறி, செல்லப் பூண்களை அணிந்த அவளின் இளைய மார்புகளிடையே அவனை அணைத்துக் கொண்டாள்.

அதனை நான் கண்டும், காணாதது போல திரும்பவில்லை. விரைந்து போய் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.

”மாசற்ற இளைய மகளே! ஏன் மயங்குகின்றாய்? நீயும் இவனுக்கு ஒரு தாய் தானே?” என்று அவளிடம் கூறினேன். 

தாம் செய்யும் களவினை கண்டுகொண்டவர்கள் முன்பாக களவு செய்தவர்கள் மனம் கலங்கி தலை கவிழ்ந்து நிற்பது போல அவளும் என் முன்பு முகம் கவிழ்ந்து நின்றாள். நிலத்தை தன் கால் பெருவிரலால் கீறி வெட்கியும் நின்றாள்.

வானத்தில் தெய்வமாக விளங்குகின்ற அருந்ததி எனும் கற்புக்கடவுளுக்கு நிகர்த்தவளான அவளும் நம் மகனுக்கு தாயாக இருப்பது சரியானதுதானே. அதைத்தான் நானும் அவளிடம் பகிர்ந்தேன் என்கிறாள் ஒரு தமிழச்சி தன் கணவன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பியதை, அவன் அதை மறுத்த அந்த நிலையில். ( நன்றி சாகலாசனார் - களிற்றினையாணை நிரை)

இந்தப் பாடலுக்கு தெளிவுரை எழுதிய புலியூர் கேசிகன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவனை இடித்துப் பழிப்பதாக எழுதி இருக்கிறார். இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த மனையாளுக்கு கணவன் பரத்தை வைத்திருப்பது மகிழ்வைத் தரும்? 

பெண் என்பவள் தண்ணீரைப் போன்றவள். ஆண் என்பவன் பாறை போன்றவன். பாறை பார்ப்பதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் தண்ணீருக்கே சக்தி அதிகம். தண்ணீரின் சக்தி பாறையை உடைத்து துகள் துகளாக்கி விடும். 

ஆண் அதிகாரம் மிக்கவன். பெண் சரணாகதி தத்துவம் கொண்டவள். ஆண்டாள் பெருமாளின் மீது கொண்ட சரணாகதி காதலில் அமிழ்ந்தே போனார் பெருமாள். அவள் சூடிக் கொடுத்த மாலையைத்தான் நானும் சூடுவேன் என்று தன் அதிகாரத்தை ஆண்டாளின் காதலில் அழித்துக் கொண்டவர். சரணாகதியில் அதிகாரம் அழிந்தே போகும். ( நன்றி : ஓஷோ )


தன் தலைவனின் பரத்தைக் காதலை தன் மாசு மறுவற்ற அன்பால் அந்தத் தலைவி மீட்க நினைக்கிறாள் அல்லவா? இப்பேர்பட்ட பெண்மைப் பண்புகளை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? எங்கே அந்தத் தலைவி என்று மனது தேட ஆரம்பிக்கிறது அல்லவா? தலைவியின் காதல் ஒரு பக்கம் இருக்கட்டும்.

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். ஆணொருவன் தன் மனைவியைப் பார்த்து உருகும் அந்தக் காதலைப் பாருங்கள். தன் உள் விழைவை பாடல் வரிகளில் தோய்த்து, குரலில் வழியவிடும் அன்பினை காதாலும் கண்ணாலும் பாருங்கள். உள்ளம் உருகி விடும்.



காதலில் ஜெயித்தவர் யாருமுண்டோ இவ்வுலகில்? எப்போதும் காதலே ஜெயிக்கிறது. காதலில் ஈடுபட்டவர்கள் கரைந்து போகின்றார்கள் காதலுக்குள்ளே.

குறிப்பு : ஏதோ அரசியல் பதிவாக இருக்கப்போகின்றது என்று நினைத்துப் படிக்க வந்தவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். பெண்கள் இல்லாமல் அரசியலே இல்லை. உலக அரசியலை விட இந்தப் பெண்களின் அரசியல் பெரியது. எவராலும் புரிந்து கொள்ளவே முடியாதது.

Wednesday, February 14, 2018

மஹாசிவராத்திரியும் கடவுளும்

கடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.

இணைப்பினைப் படித்துப் பாருங்கள்.


இந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து வரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர். 

நமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம்.  பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி? எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும். 

முட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான்.  எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன். 


(முத்துவாளியம்மனும், நாகேஸ்வரரும்)

செம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை.  அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி?” என்று விசாரித்தேன்.

”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.

ஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம்.  பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது. 

கொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.

“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.

”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.

”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.

என் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு?????

இரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்....??? என்னத்தைச் சொல்ல....! நல்லா இருக்கட்டும் எல்லோரும்.....!

குறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.

Friday, February 9, 2018

33ம் வருட குருபூஜை அழைப்பு

ஒன்றரை வருட காலம் முட்டம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று சென்று விடுவேன். காலை எட்டரை மணிக்கு கிளம்பினால் பத்தரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் சென்று சேர்ந்து விடுவேன். இடையில் பூளுவபட்டி தாண்டி வரக்கூடிய பாலத்தின் மீது அமர்ந்து பனி மூட்டம் தழுவி நிற்கும் வெள்ளிங்கிரி ஆண்டவன் வசிக்கும் மலையழகை ரசிப்பதுண்டு. பாலத்தின் கீழே பாதம் நனையும்படி தண்ணீர் செல்லும். 

பூளுவப்பட்டியில் ஒரு ஹோட்டலில் வாங்கிய மூன்று சூடான இட்லிகளையும், வாழை இலையின் ஊடே கட்டிய கெட்டிச் சட்னியையும் அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து விள்ளல் விள்ளலாக சுவைத்து அருந்துவேன். கத்தரி, வெண்டை, மஞ்சள் பயிரிட்டு இருப்பார்கள். அந்தப் பயிர்களின் வாசம் உடல் தழுவிச் செல்லும். இதமான காலை வெயில் உரைக்கவே உரைக்காது. அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருப்பேன். பின்னர் கோவிலுக்குச் செல்வேன். 12 மணி வாக்கில் அர்ச்சகர் பூஜை முடித்து விட, அங்கிருக்கும் பிள்ளையார் கோவிலில் உடல் அசதி தீர உருண்டு விட்டு எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் சுமார் இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்வேன்.

இது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்த நேரத்தில் ஒரு நாள், ‘உன் குரு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிறார், முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்’ என்றுச் சொன்னார் நண்பர். 

ஒரு மதிய நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தேன். அமைதி தழுவும் இடம். பறவைகளின் ஒலியும், காற்றசைத்தலால் உண்டாகும் மரக்கிளைகளின் சத்தமும் எழும்பின. அமைதி தழுவும் அற்புதமான இடத்தில் ஜீவசமாதியில் நிஷ்டையில் இருக்கும் குருவினைத் தரிசித்து, என் குருவினையும் தரிசித்து, அன்னம் புசித்து அவரிடமிருந்து விடை பெற்றேன். 

காலம் செல்லச் செல்ல எதிர்கால வாழ்க்கைப் பாதையின் அடைபட்டிருந்த வழிகள் ஒவ்வொன்றும் திறக்க ஆரம்பித்தன. ஆன்மீகம் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து வரும் அனேக ஆன்மீகப்போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உண்மை சொரூபங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்றும், உள்ளொளி அது இதுவென்றும் பிதற்றும் பித்தர்களின் மனப்போக்கினை புரிந்து கொள்ள முடிந்தது. யார் எதற்கு எப்படி ஏன் என்றெல்லாம் நானே புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைத்தது. குழம்பிய ஆற்று நீர் போன்ற மனது தெள்ளத்தெளிவான ஊற்றோடை போல ஆனது. இருப்பினும் பாசம் என்ற மாயவலைக்குள் இருந்து இன்றும் என்னால் விடுபட முடியவில்லை. ’அதுதான் உங்கள் கடமை’ என்று குரு சொன்னதால் அதற்குள்ளேயே இருக்கிறேன். மனைவி,பிள்ளைகள் அருகில் இருந்தால் தான் மனது ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறது. ’சன்னியாச வாழ்க்கையை விட சம்சார வாழ்க்கையே சிறந்தது’ என்பார் குரு. 

இப்படியான வாழ்க்கையில் வருடம் தோறும் குருவிற்காக ஆசிரமம் வரும் அன்பர்களால் நடத்தப்படும் குருபூஜை அன்று மலர்களால் அலங்கரித்து, குருவின் பீடம் ஒளிரும் அந்த நாள், மனதுக்கு ஆன்ம அமைதியை அள்ளித் தரும். 

கட்டுப்பாடுகள் இல்லை, கணக்குகள் இல்லை, வரவு செலவுகள் இல்லை. ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே அங்குண்டு. “அமைதி”. அமைதி காக்க வேண்டுமென்ற அன்புக் கட்டுப்பாடு மட்டுமே உண்டு. அப்படிச் செல், இப்படிச் செல், பேசாதே, இவ்வளவு கட்டு, இதற்கு இவ்வளவு என்றெல்லாம் விதிகளும் இல்லை. விற்பனையும் இல்லை.

வாழ்வியல் சிக்கல்களில் சிக்கும் மனதுக்கு அமைதி கிடைக்கிறதா? அதுதான் வேண்டும் நமக்கெல்லாம். ஆர்ப்பரித்து, அழுது, புரண்டு கதறும் மனது தெளிவாக அமைதியுறுவதே உண்மையான ஆன்மீகம். அது இங்கு கிடைக்கிறதா என்று அறிவதே ஆன்மீகப் பயிற்சி.

எங்கிருந்தோவெல்லாம் வரும் அன்பர்கள் தங்களின் குருவின் பூஜையன்று, ஒன்று கூடி உணவு சமைத்து தங்கள் குருநாதரைத் தரிசிக்க வருபவர்களின் பசி போக்கிடும் அந்த அற்புதமான ஒன்று கூடல் நிகழ இருக்கிறது. 

வாருங்கள் என் குரு நாதரின் இல்லம் நோக்கி. ஆன்ம அமைதி பெற்று மகிழ அன்புடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இடம் : முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஜீவசமாதி
நாள் : 26.02.2018 - திங்கள் கிழமை

மேலதிக விபரம் தெரிந்து கொள்ள எனது குருவின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஜோதி ஸ்வாமி, 9894815954

முள்ளங்காட்டில் இறங்கி, தென்புறம் செல்லும் தார்ச்சாலையில் 200 மீட்டர் தூரம் நடந்தால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பினால் குருவின் ஜீவசமாதி இருக்கும் இடம் கண்களில் துலங்கும்.

காலை, மதியமும் தீராத நோயான வயிற்றுப் பசி தீர அன்னம் அளிப்பார் குரு. 





Sunday, February 4, 2018

நன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா?

பிளாக்கினைப் படிக்கும் பெண்களிடம் நான் முதலில் சரணடைந்து விடுகிறேன். பெண்களை பூமித்தாய் என்கிறோம் நாங்கள். எத்தனையோ மனிதர்கள் பூமியினை எத்தனையோ அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாலும் அவர்களை வாழ அனுமதித்திருப்பது போல என்னையும். புரியவில்லை என்றால் மணல் மாஃபியா, மலை மாஃபியா, கடற்கரை மாஃபியாக்களை எல்லாம் வெகு சொகுசாக வாழ வைத்திருக்கும் பூமியைப் போல என்னையும் கொஞ்சம் மன்னித்து அருளி வாழ வாழ்த்தி விடுங்கள்.

இந்தியாவைப் பொறுத்து குடும்பத்தின் தலைவியிலிருந்து தேசம் வரை எல்லாமிடமும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கும் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. 

கண்ணை மூடி இந்த உலகத்தின் இயக்கத்தையும், உலகில் மனிதப் பயன்பாடுகளுக்கு இருக்கும் பொருட்களையும் நினைத்துப் பாருங்கள். உலகில் இருக்கும் கண்ணாடிகள் எல்லாம் யாருக்காத் தயாரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமா?

பாரதி முதல் இன்றைய கால கவிஞனிலிருந்து, எழுத்தாளர்கள் வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது எல்லாம் யாரை? தியாகராஜபாகவதர் காலத்திலிருந்து திரை இசையில் யாரைப் பற்றி பாடல்களை எழுதி இசையமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

உலகத்தில் காணும் பொருளை எல்லாம் பெண்ணோடு தொடர்பு படுத்தி பேசுவதும், பாடுவதும், பாடிப்பாடியே செத்துப் போவதும் யார்?

கல்லறையிலும் கூட காதலிக்காகத் காத்துக் கொண்டிருக்கிறேன், என் விழிகளை மூடி புதைத்து விடாதீர்கள் என்று கவிஞன் ஒருவன் கண்ணீர் உகுத்தானே யாருக்காக?

இதோ கீழே இருக்கும் பாடலைப் படியுங்கள். எனக்குப் பெயர் தெரியாத கவிஞன் ஒருவனின் வரிகள் இவை.

நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
பாடலைப் படித்து விட்டீர்கள் தானே? இதற்கும் மேலே வேறு என்ன எழுத வேண்டும்? உங்களைப் பற்றி எழுத என்ன இருக்கிறது இனிமேல்?

ஆனால் எந்தப் பெண்ணாவது ஆண்களைப் பற்றி இப்படி எழுதி இருக்கின்றீர்களா? பாடி இருக்கின்றீர்களா? ஆண்களுக்கா ஒரு இலக்கியமாவது படைத்திருக்கின்றீர்களா?

இறைவனின் உடம்பில் கூட பாதியைப் பெற்றுக் கொண்டீர்கள். போதாது என்று நெஞ்சுக்குள்ளும் உட்கார்ந்து கொண்டீர்கள். இவ்வளவு செய்தும் ஆண்களைப் பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.

ஏன் ஆண்களின் மீது இப்படி கோபம் கொண்டிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை மனைவியை விட்டுப் பிரிந்த புத்தர் நினைவுக்கு வந்திருப்பாரோ? அந்த பட்டினத்தாரின் பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அவர்கள் எல்லாம் கோடானுகோடியில் புள்ளி சதவீதம் கூட இல்லை. சித்தர்கள் பாடிய பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் காட்டுக்குச் சென்றதால் ஏதோ சப்பக்கட்டு கட்டுவதற்காக பெண்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இதையெல்லாம் காரணம் வைத்துக் கொண்டு ஆண்களைப் புறக்கணித்து விடாதீர்கள். பிறந்ததிலிருந்து அம்மாவுக்காக வாழ்கிறான், பின்னர் மனைவிக்காக வாழ்கிறான். பின்னர் மகளுக்காக வாழ்கிறான். பிள்ளைகள் வளர்ந்து எங்கோ சென்று விடுகின்றார்கள். அவன் இறப்பதற்காக காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கு என்று அவன் வாழ்ந்ததே இல்லை. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் பெண்களே.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.

தினை தெரியும் அல்லவா? அத்தனை சிறிய உதவியைச் செய்தாலும் அதை பனைமரத்தளவு உயர்ந்த உதவியாக கருத வேண்டும் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார்.  தினை அளவு கூட வேண்டாம். புல்லின் நுனி அளவாவது ஆண்களைப் பற்றி கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி லட்சோப லட்ச கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்களே ஆண்கள் அவர்களுக்காவது ஒரே ஒரு கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா?

இந்தப் பதிவும் வருங்கால உலகம் உங்களைப் பற்றி ஏதும் பேசி விடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன். ஆகவே பெண்கள் உலகமே உங்களுக்காகவே வாழ்ந்து மறையும் ஆண்களைப் பற்றி இரண்டு வரிகளாவது எழுதி வையுங்கள். வைப்பீர்களா?

Friday, February 2, 2018

கலவரப்படுத்திய கடிதமும் பதிலும்

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மெயில் வந்திருந்தது. கவனிக்க ஒரு மெயில் என்று தான் எழுதி இருக்கிறேன். பிறரைப் போல தினம் தோறும் லட்சக்கணக்கான மெயில் என்று எழுதவில்லை. முற்றிலும் ஆங்கிலம். எனக்கோ மெட்ராஸ்காரர்கள் தமிழ் பேசுவது போல ஆங்கிலத்தில் உரையாடுவேன். எழுதுவேன். அரை மணி நேரம் ஆனது. பலமுறை படித்து பார்த்து, மொழியாக்கம் செய்து ஒரு வழியாகப் புரிந்து கொண்டு பதில் எழுதினேன்.

அந்தக் கடிதத்தையும்,எனது பதிலையும் கீழே படியுங்கள். இதுவாவது பரவாயில்லை ஒருவர்  லட்ச ரூபாய் தருகிறேன், வசிய மருந்து தாருங்கள் என்று முகவரி ஏதும் இல்லாமல் மெயில் அனுப்பி இருந்தார். கருப்பு மை டப்பா ஒன்றினை அனுப்பி வைத்து லட்ச ரூபாய் வாங்கி விடு என்றது எனக்குள் இருக்கும் இன்னொரு ஆள். இதையெல்லாமா வெளியில் சொல்லப்போகின்றார்கள் என்று சப்பைக்கட்டு வேறு செய்தது. ஓங்கி ஒரே போடு. அடக்கி விட்டேன். அடங்கிப் போனான் அந்த இன்னொரு மனமயக்கிப் பயல். இதுவே வேற ஆளாக இருந்தால் ராகுல் ப்ரீத்தையே மடக்கி விடலாம், அமலாபால் கல்கண்டு பாலைக் கொண்டு வந்துதருவார் என்றெல்லாம் மெயில் அனுப்பி கறந்து விடுவார்கள். நமக்கு கறப்பதில் அனுபவமுமில்லை. அவசியமுமில்லை.

உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஒரு விஷயத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் அவர் எந்த அழகியானாலும் சரி, ஐஸ்வரியாக இருந்தாலும் சரி, எளிதில் தள்ளிக் கொண்டு வந்து விடலாம். அந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரிடம் சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவே... ! அது வேண்டாம்.

எனக்கு வந்த கடிதம் கீழே
========================

Hi,
I came across an item in your blog (Dec 18, 2017 dated entry) that intrigued me. I came across your blog randomly as I clicked on (Next blog) in blogger. You were describing about meeting a couple and about the wife who had not slept for the last 10 years. I just wanted to ask you, if I may, a number of questions that arose in my mind as I was reading: 
  1. Did this (not sleeping) happen all of a sudden from a young age, or did it happen, developing over a period of time? 
  2. Did it happen after she got married? 
  3. Is it continuous for 10 years or is it the total time of 10 years, perhaps accumulated over a period of over 15 or 20 years? 
  4. Was it intentional on the part of the individual or did it just happen that way unintentionally, without consciously willing it? 
  5. Is the individual aware of this phenomenon, or just happened to be noticed by the husband? 
  6. Is the individual in question lying down in bed fully awake unable to sleep, or was she engaged in some activities, rather than ‘not just lying down’? 
  7. Was there a change in the intake of food since this behaviour of ‘not sleeping’?

As you say, there are many things that we are not aware of and there is no point in trying to prove or disprove any particular point of view. Although I have not had a personal experience of meeting anyone who has intrigued me, this has blown me away and that is why I am asking you these questions. I do remember buying the book, “Autobiography of a Yogi” some 40 years back but never even bothered reading it and probably threw it away. 

Finally, I am writing this in English as I find it convenient and faster to write in English. Tamil is my mother tongue and I can speak, read (obviously) and write in Tamil but only with pen and paper. If you have time I would like to hear from you and your experiences with your guru.

- XXXXX

எனது பதில் கீழே
===================

வணக்கம்.

உங்களின் கடிதம் படித்தேன். உங்கள் கேள்விகள் அனைத்தையும் படித்தேன்.பதில் எழுத எனக்கும் ஆவல் தான்.ஆனால் உங்களைப் போல கேள்விகளை அவர்களிடம் கேட்டேன் என்றால் என் நிலைமை என்ன ஆகும் என்று நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில் தான்.

அந்தப் பெண்மணி வெகு ஆரோக்கியமாக, நல்ல திடகாத்திரத்துடன், தெளிவான முகத்துடன் இருக்கின்றார்கள். 

இந்தப் பதில்களால் நீங்கள் என்ன பலனடையப்போகின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. வரிசை கேள்விகள் என்னை கொஞ்சம் கலவரப் படுத்தி விட்டன. 

ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தைப் படிக்கவில்லை, வீசி விட்டேன் என்கிறீர்கள். பின்னர் எனது குருவைப் பற்றி கேட்கின்றீர்கள். எனக்கும் குருவிற்குமான உறவு என்பது வேறு வகையானது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அறிவுக்கு ஏற்ப அவர் உரையாடுவதும் ஆலோசனைகள் சொல்வதும், வழி காட்டுவதும் இருக்கும். ஆகவே என் அனுபவங்கள் எந்த வகையிலும் உங்களுக்குப் பயன் தராது. நான் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை உள்ளவன். என் சிந்தனைகள் வேறு வகையானவை. இந்த நொடியில் வாழ் என்பது எனது வாழ்க்கை. நாளையைப் பற்றிய சிந்தனைகள் என்னிடம் இருப்பதில்லை. ஆனால் செய்யும் தொழிலானாலும் சரி, எந்த வேலையானாலும் சரி - எது சரியோ அதைச் செய்வேன். அதிலும் பிறருக்குப் பங்கம் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமான ஒன்று.

இயற்கை தனக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு மர்மத்தையும் அறிந்து கொள்ள மனிதனால் முடியாது என்பது எனது நம்பிக்கை.

உங்களது படிப்பறிவு, பட்டறிவுக்கு புலனாகாத விஷயங்களை கேள்வி கேட்பது என்பது சரிதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளும்  திறமை கேள்வி கேட்பவர்களிடம் இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் விஷயங்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ளும் பக்குவத்தில் தன்னை தயார் படுத்தி இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். கேள்விக்கான பதிலைப் புரிந்து கொள்ள இயலாமலிருந்தால் அதனால் பலனில்லை அல்லவா?

ஆகவே எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொள்ளுங்கள். உடனடி முடிவுக்கு வராதீர்கள். உங்கள் சூழலுக்கு ஏற்ப எது சரி எது தவறு என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாழ்க்கை சுவாரசியமானது. அன்பு ஒன்றே நிரந்தரமானது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அள்ளிக் கொடுங்கள்.

காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இல்லாத புகழா? பதவியா? இப்போதைய அவரின் நிலைமை ? ஆகவே காசு, பணம்,பொருள்,பதவி, புகழ் எதுவும் உண்மையில்லை. இது தான் மாயை.


அவரின் இன்னொரு பதில் கடிதம் கீழே
====================================

HI,

Thank you for such a quick response to my mail. I took more than a month, almost 5-6 weeks to compose and was debating all the time about writing to you.

I am personally very satisfied and have no immediate worries or concerns of any kind, except perhaps for one. I have had a very nagging question for several years now, and that is: why are we even born? All of us are born, live a few years and die. But the question I have is, why bother to be born, what greater purpose is being served by being born. I have no satisfactory answer that makes any sense. Perpetuating the race is not the answer, as many individuals, either by choice or design, do not produce any progeny. To provide some kind of a service to humanity is a circuitous response: A born to scratch B’s back, B to C’s back and C to A’s back and so on.

As I read your blog entry, I thought perhaps it would give me some kind of a lead to explore and that was the main reason to write to you in the first place. As you rightly say each individual has different and varying requirements and what suits one may not be of any use to the other. Well, any way, thank you for your quick reply and I wish you all the best in your endeavours. 

- XXXX


இந்தக் கடிதத்தை இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.