குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, February 21, 2018

அதிகாரம் அழிந்தே போகும்

நீர் நாய்கள் நிறைந்திருக்கும் சற்றே குளிர் பொறுந்திய பொய்கையில் தாமரைகள் மலர்ந்து தழைத்திருக்கின்றன. அந்தத் தாமரைகளின் நிழல் போல இருக்கும் அல்லிப் பூவின் இதழைபோல மாசு மறுவற்ற, மலர்ந்த குற்றமில்லாத உள்ளங்கைகளை உடையவன். சிவந்து கிடக்கும் இளம் பவளத்துண்டுகளை ஒட்டி வைத்தாற் போன்ற இதழ்களை உடையவன். இன்னும் பழகிக் கொள்ளாத நாவினாற் தத்திப் பேசும் கிளியினை ஒத்த, தேனினும் இனிய குரலால் கிள்ளை மொழியினைப் பேசுபவன், அவனைக் காண்பவர் எவரினும் அவன் மீது விருப்பமுற்று அன்பு பொழியும் கவர்ச்சியினை உடையவன், தன் நெஞ்சிலே பொற்கொடியை அணிந்தவன் ஆகிய நம் புதல்வன், சிறுதேர் ஓட்டி தெருவில் விளையாடிக் கொண்டு, தனியனாக நின்றிருந்தான். 

அப்போது அவ்வழியாக வந்த உடலெங்கும் பொன் அணிகளை அணிந்தவளும், கூர்மையான பற்களை உடையவளுமான உமது காதற் பரத்தை நம் மகனைப் பார்த்து, அவன் உம்மைப் போல உருவத்தில் ஒப்புமை கொண்டிருப்பதைக் கண்டு விதிர்த்து, தெருவில் எவரும் காண்பவர் இல்லையாதலால் துணிந்து அவனருகே சென்று,’என் உயிரே! என்னிடம் வருவாயா?” என்று கூறி, செல்லப் பூண்களை அணிந்த அவளின் இளைய மார்புகளிடையே அவனை அணைத்துக் கொண்டாள்.

அதனை நான் கண்டும், காணாதது போல திரும்பவில்லை. விரைந்து போய் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.

”மாசற்ற இளைய மகளே! ஏன் மயங்குகின்றாய்? நீயும் இவனுக்கு ஒரு தாய் தானே?” என்று அவளிடம் கூறினேன். 

தாம் செய்யும் களவினை கண்டுகொண்டவர்கள் முன்பாக களவு செய்தவர்கள் மனம் கலங்கி தலை கவிழ்ந்து நிற்பது போல அவளும் என் முன்பு முகம் கவிழ்ந்து நின்றாள். நிலத்தை தன் கால் பெருவிரலால் கீறி வெட்கியும் நின்றாள்.

வானத்தில் தெய்வமாக விளங்குகின்ற அருந்ததி எனும் கற்புக்கடவுளுக்கு நிகர்த்தவளான அவளும் நம் மகனுக்கு தாயாக இருப்பது சரியானதுதானே. அதைத்தான் நானும் அவளிடம் பகிர்ந்தேன் என்கிறாள் ஒரு தமிழச்சி தன் கணவன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பியதை, அவன் அதை மறுத்த அந்த நிலையில். ( நன்றி சாகலாசனார் - களிற்றினையாணை நிரை)

இந்தப் பாடலுக்கு தெளிவுரை எழுதிய புலியூர் கேசிகன் பரத்தை வீட்டுக்குச் சென்று திரும்பிய தலைவனை இடித்துப் பழிப்பதாக எழுதி இருக்கிறார். இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த மனையாளுக்கு கணவன் பரத்தை வைத்திருப்பது மகிழ்வைத் தரும்? 

பெண் என்பவள் தண்ணீரைப் போன்றவள். ஆண் என்பவன் பாறை போன்றவன். பாறை பார்ப்பதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் தண்ணீருக்கே சக்தி அதிகம். தண்ணீரின் சக்தி பாறையை உடைத்து துகள் துகளாக்கி விடும். 

ஆண் அதிகாரம் மிக்கவன். பெண் சரணாகதி தத்துவம் கொண்டவள். ஆண்டாள் பெருமாளின் மீது கொண்ட சரணாகதி காதலில் அமிழ்ந்தே போனார் பெருமாள். அவள் சூடிக் கொடுத்த மாலையைத்தான் நானும் சூடுவேன் என்று தன் அதிகாரத்தை ஆண்டாளின் காதலில் அழித்துக் கொண்டவர். சரணாகதியில் அதிகாரம் அழிந்தே போகும். ( நன்றி : ஓஷோ )


தன் தலைவனின் பரத்தைக் காதலை தன் மாசு மறுவற்ற அன்பால் அந்தத் தலைவி மீட்க நினைக்கிறாள் அல்லவா? இப்பேர்பட்ட பெண்மைப் பண்புகளை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? எங்கே அந்தத் தலைவி என்று மனது தேட ஆரம்பிக்கிறது அல்லவா? தலைவியின் காதல் ஒரு பக்கம் இருக்கட்டும்.

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள். ஆணொருவன் தன் மனைவியைப் பார்த்து உருகும் அந்தக் காதலைப் பாருங்கள். தன் உள் விழைவை பாடல் வரிகளில் தோய்த்து, குரலில் வழியவிடும் அன்பினை காதாலும் கண்ணாலும் பாருங்கள். உள்ளம் உருகி விடும்.



காதலில் ஜெயித்தவர் யாருமுண்டோ இவ்வுலகில்? எப்போதும் காதலே ஜெயிக்கிறது. காதலில் ஈடுபட்டவர்கள் கரைந்து போகின்றார்கள் காதலுக்குள்ளே.

குறிப்பு : ஏதோ அரசியல் பதிவாக இருக்கப்போகின்றது என்று நினைத்துப் படிக்க வந்தவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். பெண்கள் இல்லாமல் அரசியலே இல்லை. உலக அரசியலை விட இந்தப் பெண்களின் அரசியல் பெரியது. எவராலும் புரிந்து கொள்ளவே முடியாதது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.