மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பிரச்சினையே அவர்களின் மனசு தான். அரை நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? அப்படியே அரை மணி நேரம் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இன்றி இருந்தால்....
தூக்கத்தில் தான் மனசு சிந்தனையற்று இருக்கும். அதுகூட சில சமயங்களில் கனவாய் வந்து மிரட்டும்.
வேறு வழி இன்றி தன்னிலை மறக்க தமிழக அரசின் மரணக்கடைக்குச் செல்ல வேண்டியதுதான். வித விதமான மருந்துகளை வாங்கிக் குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைத்தால் தான் மனதைப் பிடித்து அழுத்திக் கொண்டு படாதபாடு படுத்தும் அந்தப் பிரச்சினை தீரும்.
காதலி கோவித்துக் கொண்டு ஊடலாகி விட்டாள். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து. மனைவி கோவித்துக் கொண்டு போய் விட்டார். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து என்று எதற்கெடுத்தாலும் மருந்தாய்க் குடித்துக் குடித்து மரணத்துக்கு வரவேற்பு வைக்கின்றார்கள்.
சரி என்னதான் வழி என்கின்றீர்களா?
ஒரு பிரச்சினை வந்து விட்டது. பிரச்சினை ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவோம் அல்லவா? அதற்குள் ஏன் மனதைப் போட்டு குழப்பி, குழம்பி அய்யோ அம்மா என்று அரற்ற வேண்டும்?
ஆகவே என்ன பிரச்சினை வந்தாலும் சரி, உடனே அட... என்று உதறித் தள்ளி விடுங்கள். மனசு இலேசாகி விடும். ஒரு நாள் அதை மறந்து விடுங்கள். பின்னர் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவு உங்களுக்கே தெரியும். மேட்டர் ஓவர்.
ஏதாவது ஒரு அரசியல்கட்சித் தலைவரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஒரே ஒரு தொழில், ஒரே ஒரு மனைவி, ஒன்றிரண்டு பிள்ளைகள் வைத்திருக்கும் நம்மை விட எத்தனைப் பிரச்சினைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திப்பார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் கவலைப்பட்டு உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்தால் அவர் ஹாஸ்பிட்டலில் ஹோமாவில் படுத்திருக்க வேண்டும். என்ன செய்கிறார்? சிந்தியுங்கள்.
ஆகவே ... இனி என்ன பிரச்சினை வந்தாலும் தூக்கித் தூர கடாசி விட்டு, அடுத்த வேலையில் மூழ்குங்கள். பிரச்சினை வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.
ஓகே !
”ஏங்க... ஏங்க....”
-இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் ஏங்கனுமோ தெரியலை!-(மனசுக்குள் நான்)
”என்ன கோதை?”
“லேட்டாயிடுச்சு... வந்து காய்கறி நறுக்கிக் கொடுங்க...” என்றாள்.
”என்ன கோதை காலையிலேயே ஆரம்பிச்சுட்டே, பேப்பர் படிக்க விட மாட்டியா?, தொந்தரவு செய்கிறாயே?” என்றேன்.
“அதுக்கு நீங்க சாமியாரா இருக்கணும். யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்றார்.
வேறு வழி !!!
இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீரவே தீராது.