குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, March 31, 2018

ராமசாமி அய்யா - ஒண்டிப்புதூர்

ஒண்டிப்புதூரில் வசித்து வந்த போது விடிகாலையில் குளித்து விட்டு வாசலில் அமர்ந்திருப்பேன். நெடு நெடுவென உயரம். வலது தோளில் வெண்மையான துண்டு, வேஷ்டி அணிந்து, இடது கையில் ஒரு தூக்கு வாளியுடன் வெண் தாடியுடன் ஒருவர் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக நடந்து செல்வார்.  தினமும் பார்ப்பதுண்டு. ஒரு சில நாட்களில் வண்டியில் வரும் போது எதிரில் வருவார். யாரோ ஓய்வு பெற்ற வாத்தியார் போல என நினைத்துக் கொள்வேன். 
(குஸ்தி வாத்தியார் தண்டபாணி மற்றும் ராமசாமி அய்யா)

நான்கு வருடங்களுக்கு முன்பு ஜோதி ஸ்வாமி ’குருநாதரின் நினைவு தினம் ஒண்டிப்புதூரில் நடக்கிறது’ எனச் சொன்னார். நான் மட்டும் விசாரித்துக் கொண்டு சென்றால் அங்கே வெண்தாடிப் பெரியவரின் புகைப்படம் இருந்தது. சாமியிடம் கேட்டால் ”அவர் தான் எனக்கு பயிற்சி அருளிய குருநாதர்” என்றார். எனக்குள் பச்சாதாபம் மண்டிக்கொண்டது. கண் எதிரில் நடமாடியவருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற ஏக்கமும் எனக்குள் நிறைந்தது. வருடம் தோறும் குருபூஜை நடக்கும், நானும் செல்வதுண்டு. அங்கு பலரும் வருவார்கள். அது பற்றி நான் ஏதும் விசாரித்துக் கொள்வதில்லை. நான் எதற்குச் சென்றோனோ அந்தக் காரியத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுவேன்.

இந்த வருடம் வெள்ளிங்கிரி சுவாமியின் ஜீவசமாதியில் ராமசாமி அய்யாவின் குருபூஜை நடந்தேறியது. நானும் மனையாளும் காலையில் ஆறு மணிக்கே கிளம்பி விட்டோம். கூட்டு தியானம் முடிந்து, அன்னதானம் நடந்து. உணவு அருந்திய பிறகு அங்கு வந்த அன்பர்களுக்கு ஒருவர் தன் பிள்ளையுடன் ஓடியாடி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். 

வீட்டுக்குத் திரும்பினேன். அந்த உணவு பரிமாறியவர் பற்றியும் ராமசாமி அய்யா பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து ஜோதி சுவாமிக்கு அழைத்தேன்.

முதலில் உணவு பரிமாறியவர் பற்றிச் சொல்லி விடுகிறேன். அவரின் பெயர் மூர்த்தி, ஒண்டிப்புதூரில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வெள்ளியன்றும் கடையை மூடி விடுவாராம். கோவையில் இருக்கும் ஒவ்வொரு அனாதை ஆசிரமத்திற்கும் சென்று இலவசமாக அங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு முடி திருத்தி விடுவாராம். திருவண்ணாமலை வரைக்கும் அன்னதானம், உப்பு, உணவு பொருட்கள் என கொண்டு போய் கொடுத்து வருவாராம். ராமசாமி அய்யாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். ஒவ்வொரு குருபூஜை அன்றும் அவரை நான் சந்திப்பேன். வணக்கம் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். ஆர்ப்பாட்டமில்லாத மனசு. நானெல்லாம் அவரின் முன்னே தூசுக்கும் சமமானவன் இல்லை. 

இனி ராமசாமி அய்யாவின் வாழ்க்கையைப் பற்றிச் சுருங்கப் பார்க்கலாம். ராமசாமி அய்யாவின் தந்தையாருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவியின் மூத்த குமாரன் ராமசாமி அய்யா. இவருடன் சேர்ந்து மொத்தம் 16 பேர் வாரிசுகள். பதினைந்து பேருக்கும் உணவிட்டு, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்த பிறகு பார்த்தால் உலகில் இருக்கும் நோயெல்லாம் இவரிடம் வந்து விட்டது. மருத்துவர்கள் இன்னும் ஒரு மாதமே உன் ஆயுள் என்றுச் சொல்லி விட, சொத்து பத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு திருச்சி பக்கம் சென்று விட்டார். அங்கு யாரோ ஒரு பெரியவர் இவருக்கு வாசியோகப்பயிற்சியை பயிற்றுவித்து தொடர்ந்து பயிற்சியைச் செய்து வரும்படி சொல்லி இருக்கிறார்.

ராமசாமி அய்யாவும் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வர நோயின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. விடாமல் பயிற்சியினைத் தொடர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடம்பிலிருந்த நோய்கள் விடுபடத்தொடங்கின. பயிற்சியின் போது அவருக்குள் பல்வேறு விடயங்கள் தெளிவாகத் தொடங்கின. அதுவரையில் பல இடங்களுக்குச் சென்று வருவதும், தியானம் மேற்கொள்வதுமாக இருந்தவர், மறைபொருள் மூடியிருந்த திரை விலக விலக தன்னை ஒண்டிப்புதூரில் ஒரே இடத்தில் இருத்திக் கொண்டார்.

தன்னைத் தேடி வருபவருக்குப் பயிற்சியினைக் கொடுத்து வழி நடத்தி வந்திருக்கிறார். காலையில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அருகில் சென்று பசும்பால் வாங்கிக் கொண்டு வருவாராம். உடைத்த கோதுமை ரவையை வேக வைத்து, அதனுடன் பாலைச் சேர்த்து கொதிக்க வைத்து கஞ்சியாக்கி, உப்பின்றி, இனிப்பின்றி உணவு எடுத்துக் கொள்வாராம். அவரிடம் வரும் சீடர்களுக்கும் இதே உணவுதான். விரும்பினால் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளச் சொல்வாராம்.

பதினாறு பேரில் முதல்வராகப் பிறந்து குடும்பப்பாரத்தைச் சுமந்த அனுபவத்தால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருக்கு என இருந்த ஒரே ஒரு சொத்தையும் அவர் ஜீவனை உடம்பிலிருந்து உகுத்த அன்றே விலை பேசி விற்று விட்டார்களாம் அவரின் உறவினர்கள்.

29.03.2018ம் தேதியன்று நடந்த குருபூஜை அன்று அவரின் உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் தான் உறவினர்கள்.

எனக்குத் தெரிந்த வகையில் உறவுகள் கொண்டாட்டத்திற்கும், கடைசிக் காலத்தில் வந்து செல்லவும் மட்டுமே பயன்படுவார்கள். இடையில் வரும் நண்பர்களில் நல்ல நண்பர்கள் வேண்டுமெனில் அவர்கள் காலம் முடியும் வரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

வாழ்க்கையே ஒரு மாயை என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். பதினைந்து குடும்பங்களை உருவாக்கியவரின் நினைவு நாள் அன்று கூட, அவரால் வாழ்க்கை பெற்றவர்களால், அவரை நினைத்துப் பார்க்காத தன்மை விந்தையானது இல்லை.  அவ்வாறு நடந்திருந்தால் அது மெச்சத்தக்க வேண்டிய நிகழ்வாகி விடும். மனிதர்கள் என்றுமே மனிதர்கள் தான். எப்போதும் அவர்கள் மாறப்போவதும் இல்லை, துன்பங்களில் இருந்து விடுபடப்போவதும் இல்லை.



Thursday, March 22, 2018

புண்ணியம் நல்லதா? கெட்டதா?

அடியேன் ஓஷோவைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. இங்கிருப்பதை அவர் மொழியில் சொல்லி இருக்கிறார். அதையே அப்படியே தன்மை மாறாமல் வெள்ளிங்கிரி மலையைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஒருவரும் தன் பிளாக்கில் எழுதி வைத்திருக்கிறார் இப்படி.

பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்? 

அவரின் பதில்: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.

யார் அந்த மற்றவர்கள் என்று விளக்கம் கொடுக்கவில்லை இவர். என்னுடன் மஹாசிவராத்திரி அன்று அமர்ந்திருந்தால் ஈஷனையே அடையலாம் என்றுச் சொன்னவர் அதற்கான சாட்சியைக் காட்டி இருக்க வேண்டும். 

சிவராத்திரி அன்று தான் என்னை அடையலாம் என்று என்றைக்கு ஈஷன் வந்து யாரிடம் சொன்னான் என்று எனக்குக் கொஞ்சம் சாட்சியாய் காட்டுங்களேன் என்று கேட்டால் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எவரிடத்திலும் பதில் இருக்காது. அந்தப் பாடலில் சொல்லி இருக்கிறது, இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, வேத(னை)த்தில் சொல்லி இருக்கிறது என்றெல்லாம் குப்பைகளை அவிழ்த்து விடுவார்கள்.

பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை என்றால் உலகம் ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவர் சொல்வாரா? 

விருப்பத்துடனே உறவு வைத்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்கிறார் ஒரு சாமியார். நான் பிரமச்சாரி என்று அடிக்கொரு தடவை முழங்கிக் கொண்டிருந்தவர் இப்போது உறவு கொள்கிறேன் என்கிறார். இவர்கள் தான் ஆன்மீகத்தை வளர்க்கின்றார்கள். இவர்களைப் பின்பற்றிச் செல்லும் உபதேசம் பெறுபவர்களின் புத்தி என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால் அவர்களின் முட்டாள் தனம் தான் வெளிப்படுகிறது.

எது சரியான வழி என்று கண்டுபிடிப்பதற்குள் மனிதனுக்கு ஆயுள் முடிந்து விடுகிறது. கடைசிக் காலத்தில் கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது. காடு வா, வா என்று அழைத்துக் கொண்டிருக்கும். 

இந்த அக்கப்போரெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

புண்ணியம் சேர்த்து வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தர்மம் செய்தால் புண்ணியம் சேரும் என்பார்கள். தெருவுக்குத் தெரு, கோவிலுக்குக் கோவில் அன்னதானம், உதவி என்றெல்லாம் மக்கள் தர்மம் செய்து, அவரவர் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் திருப்பதி வெங்கடாஜலபதி, பழனி முருகன் ஆகியோர்களுக்கு உண்டியல் போட்டு புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து (ஒரு நாள் விரதம்) ஐயப்பனை தினமும் நெய்யில் குளிக்க வைத்து அவரின் கொலெஸ்ட்ரால் லெவலை அதிகமாக்கி, தங்கள் புண்ணியக்கணக்கில் வரவுகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார் வகையறாக்களுக்கு மாதம் தோறும் பணம் செலுத்தி பாவங்களைக் கரைத்து புண்ணியாத் மாக்களாகி வருகின்றார்கள்.

ஒரு சிலர் பிறரிடம் டொனேஷன் வாங்கி பிறரைப் படிக்க வைத்து தங்கள் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் சாமியார்களாகி பல சிஷ்யைகளுடன் உறவு கொண்டு, சிஷ்யைகளின் புண்ணியக்கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்து சிஷ்யைகளுக்கு உதவுகின்றார்கள். 

ஒரு சிலர், ஒரு சிலருடன் கூட அமர்ந்து கொள்ள பணம் கொடுத்து அந்த கடவுளையே தரிசித்து பெரும் புண்ணியங்களைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி மதம், இனம், மொழி வேறுபாடில்லாமல் பணத்தின் மூலமாக பலரும், தங்கள் புண்ணியக்கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆன்மீகம் புண்ணியம் செய்ய வேண்டுமென்றுதான் சொல்லிக் கொடுக்கிறது. புண்ணியம் சேர்க்க பொருள் கொடுக்கச் சொல்கிறது. அல்லது உழைப்பைக் கொடுக்கச் சொல்கிறது. எல்லாமும் கொடுத்தும், இருப்பதையும் கொடுத்தும், போதாமல் ஒரு சிலர் தன் பொண்டாட்டி மற்றும் மகள், மகன்களையும் கொடுத்தும் புண்ணியங்களை தங்கள் வரவில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகமே தங்களின் புண்ணியக்கணக்கின் வரவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

நிற்க....!

நேற்று காலையில் நானும் என் குருவும் பேசிக் கொண்டிருந்தோம். ”பலனை எதிர்பார்த்துச் செய்யும் தர்மம் புண்ணியங்களைத் தராது” ஆண்டவனே என்றார்.

”சாமி கம்பரின் மகாபாரதத்தில் வருகின்றானே ஒருவன்” 

இடைமறித்து, “ஆண்டவனே கம்பனின் மகாபாரதமா? “ என்றார்.

ஒரு நிமிடம் திடுக்கிட்டு

“சாமி, சேக்கிழார் தோஷம் என்னையும் பிடித்துக் கொண்டது போல, தலை எப்படியோ அதுபோலத்தானே?”

“ஓ.... “ என்றார்.

”மகாபாரதத்தில் கர்ணனிடம் தர்மம் கேட்டு ஒருவர் வரும் போது, அவன் குளிப்பதற்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருப்பான், தர்மம் கேட்ட அடுத்த நொடியில் இடது கை அருகில் இருந்த தங்கக் கிண்ணத்தைத் தூக்கிக் கொடுத்தான் என்பார்கள். அதன் அர்த்தம் இப்போது புரிகிறது சாமி” என்றேன்.

உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் அது உங்களின் பாடு.


அடுத்து புண்ணியத்துக்கு வருவோமா?

கர்ணன் திரைப்படத்தினைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கர்ணன் அர்ஜூனன் விட்ட அம்புகள் நெஞ்சில் ஊடுருவி இதயத்தைத் துளைக்க , குருதி கொப்பளித்து வழிந்தோட, உயிரை விட்டு விட இயலாமல் துன்புற்றுக் கொண்டிருப்பான். அப்போது நம்ம கிருஷ்ணர் வயதானவர் வேடம் போட்டு கர்ணனிடம் தானம் கேட்டு வருவார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில் அவனிடம் தர்மம் செய்ய ஒன்றுமே இருக்காது. ஆகவே கண்ணன் கர்ணனிடம் அவன் இதுவரை செய்த தான தர்மங்களின் புண்ணியங்களை (பலனை) தமக்குத் தானம் செய்து தரும்படி கேட்பார். அவனும் நெஞ்சில் பதிந்து கிடக்கும் ஒரு அம்பை உருவி, வழிந்தோடும் குருதியினை கையில் பிடித்து கண்ணனுக்கு தானம் செய்வான். தானம் பெற்ற கண்ணன், அர்ஜுனனிடம் செல்வான். வந்த வேலை முடிந்து விட்டது அல்லவா?

அர்ஜுனனைப் பார்த்து ”செத்த பாம்பு கர்ணன், விடு அம்பை, முடி அவன் கணக்கை” என்பார் கண்ணன்.

அர்ஜுனனும் விடுவான் அம்பை. கண்ணனும் விடுவான் உயிரை. 

இது படத்தில் வரும் வசனமும் காட்சியும்.

இனி என்ன எழுதப் போகிறேன் என்று புரியாதவர்கள் கீழே தொடருங்கள்...!

கர்ணனின் தர்மம் அவன் தலைகாத்து அவன் சாவின் பிடியில் கிடக்கும் போதும் உயிரை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அவனை வேதனைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அல்லவா? புண்ணியம் நல்ல சாவை அல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் அவனைச் சாக விடாமல் நோகடித்துக் கொண்டிருந்தது?

ஆகவே புண்ணியங்கள் நல்லதா? கெட்டதா? என நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்...

Monday, March 19, 2018

பெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்

இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த ஒருவர் பிரபலமான ஒரு பள்ளியில் தன் பையனைச் சேர்த்தார். பையன் இரண்டாவது மாதமே ஊருக்கு ஓடி வந்து விட்டான். டெபாசிட் பணம் மற்றும் இதர கட்டணங்கள் எதையும் அந்தப் பள்ளி திரும்பத் தரவே இல்லை. மறுத்து விட்டார்கள். நண்பருக்கு லட்சங்கள் இழப்பானது. நண்பரும் அதை அத்துடன் விட்டு விட்டார். பள்ளிக்கு பல லட்சங்கள் லாபம். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

சமீபத்தில் எனக்கு நெருக்கமான நண்பரின் பையனுக்கு, நானே முயற்சித்து, அதற்கு பெரிய ஆட்களின் இலவச சிபாரிசுகளைப் பிடித்து தமிழகத்தின் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் பெற்றேன். பையன் படு ஷார்ப். இதுவரை அவன் படித்த பள்ளியில், வகுப்பில் எப்போதும் முதல் மாணவன். அட்வான்ஸ் படிப்பு. ஐஐடியில் படிக்க வேண்டுமென்று அவனது விருப்பம். அந்தப் பள்ளியில் படித்தால் அவனது நோக்கத்துக்கு அது உதவும் என்ற நண்பரின் விருப்பமும், எனது விருப்பமும் இருந்தது.

அட்மிஷன் பெற்ற அன்று வெறும் வெள்ளைத்தாளில் பள்ளியின் சீல் வைத்து கையெழுத்து இட்டு, பணம் பெற்றுக் கொண்டதற்காக ஒரு ஒப்புகை சீட்டும், நன்கொடை என ஒரு டிரஸ்டின் ரசீதும் கொடுத்தார்கள். அடியேன் எனது வாகனத்தில் அமர்ந்து அம்மணிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மனையாள் பணத்தைக் கட்டி விட்டு, ரசீதுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டினார். சிரித்து வைத்தேன். ”ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேள்வி கேட்க, ஒன்றும் சொல்லவில்லை. சில விஷயங்களை சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது.”உங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எதற்குச் சிரிக்கின்றீர்கள்? எனப் புரியவேயில்லை” என்றார்.

பையன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் பள்ளியின் ஆசிரியர்களின் தரமும், பாடம் எடுக்கும் விதமும் அவனுக்குப் புரிந்து போனது. இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகி விடும் என நினைத்து பள்ளிக்குச் செல்ல முடியாது எனவும், அதற்கான காரணங்களையும் சொன்னான். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் பள்ளியில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்று தெரிந்ததினால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

பள்ளியில் இருந்து நின்று விட்டான். முன்பு படித்த பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். இனி நாம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமே என நினைத்து நானும் மனையாளும் பள்ளிக்குச் சென்றோம். மனையாள் பேசிப்பார்த்தார். வெளியில் வந்து உதட்டைப் பிதுக்கினார். 

அட்மினை (நினைவுக்கு வருகிறதா?) ”என்னவர் முடியாதவர், சற்று வெளியில் வந்து சந்திக்க முடியுமா? என்று கேட்டு வெளியில் வரச்சொல்லும்படி செய்யும்படி” மனையாளைக் கேட்டுக் கொண்டேன். 

ஒரு நக்கல் சிரிப்புடன் சென்று வரும்போது யாரோ ஒரு செம கிக்காக உடை உடுத்திய பெண்ணுடன் வந்தார். மனையாளின் கண்கள் என் கண்களையே உற்று நோக்கியபடி இருந்ததைக் கவனித்தேன். அது விதி. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எவ்வளவு உத்தமனாக இருந்தாலும், எதிர்பாலின இயல்பு மறைந்து போகாது.

உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். பாம்பின் இயல்பு கொத்துவது, பாலை ஊற்றி வளர்த்தாலும் அதற்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டால் ஒரே போடு, பரலோகம்தான் கதியாகும். புரிந்து விட்டதா?

இப்படித்தான் மச்சினிச்சிகள் வாழ்க என்ற பதிவு எழுத, அதை தினமலர்காரன் தன் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச குஷிக்கும் குழியினைப் பறித்தார்கள்.

அதுதான் அட்மினென்று தெரிந்தாலும், அருகில் வந்தவுடன், “கோதை, அட்மின் என்றுச் சொன்னாயே அவங்க எங்கே? யாரோ ஸ்கூல் பெண்ணுடன் வருகின்றாயே?” என்றேன். மனையாளுக்கு கடுகு உள்ளுக்குள் பொரிய ஆரம்பித்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். போட்ட பிட் வேலை செய்து அட்மின், “சார், நான் தான் அட்மின்” என்று கூவியது. கவனிக்க(!!!) சுத்தம் செய்த பற்கள் பளீரிட ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். பாடலாசிரியர்கள் இதைத்தான் மின்னல் என்றார்களோ???? தெரியவில்லை.

”மேடம், பையன் ஒரு மாதம் கூட படிக்கவில்லையே, அந்த டொனேஷன் பணத்தையாவது திரும்பித் தர முடியாதா?” என்று கேட்டேன்.

“எங்கள் பள்ளியில் அது வழக்கம் அல்ல, கொடுக்கவும் முடியாது” என்றது அது.

“நீங்கள் பணம் தரவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார் பையனின் அப்பா, கோர்ட் வழக்கு என்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும், சமாதானமாகப் போகலாமே? நீங்கள் உங்கள் சேர்மனிடம் பேசக்கூடாதா?” என்றேன்.

“சார், நீங்கள் எந்த கோர்ட்டுக்கும் போனாலும் பிரச்சினையில்லை, ஜட்சுகளின் பையன்களே எங்களது பள்ளியில் தான் படிக்கின்றார்கள், முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது அட்மின்.

அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஒரு இகழ்ச்சியான பார்வையோடு என்னை அட்மின் அகங்காரமாக கடந்து சென்றது. கன்னியரின் கடைக்கண் பார்வை பதிந்து விட்டால் மாமலையும் மடுகாகும் என்றார்கள் முன்னோர்கள். 

அடியேனால் அதை மட்டும் மறக்க முடியவில்லை. 

மனையாள் ”பெரிய இடம், மோத இயலாது, உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள், எதுக்கு வம்பு?” என்றார்.

நானென்ன ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா? டைரக்டருகளை வைத்து வசனமெழுதி வெற்றிடத்தைப் பார்த்து வீர வசனம் பேசி, காற்றில் கையை வீசி மிரட்டுவதற்கு. இது எதார்த்தம். ஒரு அட்மின் குயில் என்னை என் வீட்டுக்கார அம்மணியின் முன்னால் இளக்காரமாகப் பார்த்த அவமதிப்பு என்னைக் குடைந்து கொண்டிருந்தது. 

அட்மின் குயிலுக்கு ”யார்ரா இவன்? எழுந்து ஓடக்கூட முடியாது, இவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா?” என நினைத்திருப்பார் போல.

சி.பி.எஸ்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி அது. அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சில ஆவணங்களை இணையத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முழு நாட்கள் ஆகின. எனக்குத் தேவையான ஆவணங்களும், சாட்சிகளும் கிடைத்தன. எனது வக்கீல் நண்பரிடம் சென்று ஆவணங்களைக் காட்டி, நோட்டீஸ் அனுப்பச் செய்தேன்.

வக்கீல் நண்பர் நோட்டீஸ் தயாரித்து எனுக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டொரு மாறுதல்களைச் செய்து அனுப்பி வைத்தோம். பள்ளியில் இருந்து பதில் வராது என்று நினைத்தேன். அதன்படியே பதிலில்லை. அடுத்ததாக வழக்குப் பதியச் சொன்னேன். கோர்ட்டில் வழக்குப் பதிய ஆவணங்களைத் தயார் செய்து தாக்கல் செய்தோம்.

அடுத்த பதினைந்தாவது நாள் கையெழுத்து சரியில்லை என்றுச் சொல்லி வழக்காவணங்கள் திரும்பின. அத்துடன் பள்ளியில் இருந்து ஒரு டிடியும் வந்தது. இந்த ஆவணம் திரும்புதலில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நான் கேட்டது நன்கொடை மட்டுமே. ஆனால் பள்ளி கட்டிய பணம் அனைத்தையும் செலவு போக திருப்பித் தந்தது. டிடியை வாங்கிப் பார்த்தேன். மீண்டும் சிரிப்பு வந்தது.

“நீங்க எதுக்குத்தான் இப்படி லூசுத்தனமாகச் சிரிக்கின்றீர்களோ தெரியவில்லை” என்று மனையாள் அலுத்துக் கொண்டார்.

நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி, பணத்தை அவரின் அக்கவுண்டில் வரவு வைத்தேன். 

பணம் அக்கவுண்டில் வந்த பிறகு நண்பரை அழைத்தேன்.

”இந்த டிடியை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு வழக்குப் போடலாம். ஒரு கோடி வாங்கட்டுமா? இல்லை பத்துக் கோடி வாங்கட்டுமா?” என்று கேட்டேன்.

அதிர்ந்தார் நண்பர்.

விபரத்தைச் சொன்னேன். நண்பர் நல்லவர். ”நான் செலவு செய்த தொகை வந்து விட்டது. ஆகவே இதை இத்துடன் விட்டு விடுங்கள்” என்றார். அவர் அதை மட்டும் சொல்லாமலிருந்தால் இந்தப் பதிவு எழுதி இருக்க மாட்டேன்.

”பள்ளிக்குச் சென்று இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விபரமாகச் சொல்லி விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார்.

நேரமிருக்கும் போது அட்மின் குயிலைப் பார்த்து கொஞ்சம் பேசி விட்டு வர வேண்டும். அழகான அந்த முகம் அஷ்டகோணலாக மாறுவதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆகவே இன்னும் செல்லவில்லை. 

மனையாள், ”உங்களுக்கு கடவுள் மண்டை முழுவதும் மூளையாக வைத்து விட்டார் போல” என்று பாராட்டினார். மண்டை முழுவதும் மூளை இருந்தால் அது வேற ஆள் மாதிரி. 

பாராட்டினாங்கன்னு மகிழ்ந்து போக நானென்ன ரஜினியா? இல்லை கமலா?

ஆள் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தை கையாளத் தெரிந்து கொண்டால் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடலாம். தேவை கொஞ்சம் நிதானமும், கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும்.