குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, January 31, 2009

நாகேஷ் - காமெடி

மக்களின் மனதில் என்றும் மறையாத நடிப்புக் கொண்டவர் நாகேஷ். விருதுகளுக்கும் அப்பாற்பட்ட நடிகரின் மரணம் சற்று வேதனையாக இருந்தாலும் சினிமா உலகில் என்றும் மறையாத புகழுடையவர். நடிப்பின் மூலம் மற்றவரை சிரிக்க வைத்தவர் அவர். அழுவது அவருக்குப் பிடிக்காது என்பதால் தான் இந்த கிளிப்பினை இணைக்கிறேன்.

Monday, January 26, 2009

சங்கு வண்டி

காமராஜர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரின் முன்பாக போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலி எழுப்பிய படி சென்று கொண்டிருக்கும். அது என்ன சத்தம் என்று உதவியாளரிடம் கேட்பார். சைரன் சத்தமென்று சொல்ல காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கி நானென்ன செத்தா போய்விட்டேன். காருக்கு முன்னாடி சங்கு ஊதிகிட்டு போறீங்க என்று சொல்லி வீணா செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற படியே காரில் ஏறிச் செல்வார். இந்தக் காட்சி காமராஜர் படத்தில் வருகிறது.

இன்றைய அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும், அரசு அலுவலர்களும் செத்த பொணம் வருது செத்த பொணம் வருது விலகுங்க என்று சொல்லும்படியாக சைரன் வைத்த காரில் பயணம் செய்வது இவர்களுக்கு மனசாட்சி செத்துப் போய் வெறும் மனிதப் பிம்பங்களாய் உலா வருவதைக் காட்டுவது போல இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி இங்கு விமரிசிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரமுகரின் கட்டி முடிக்கப்படாத தியேட்டருக்கு லைசென்ஸ் வழங்க மறுக்கும் கலெக்டரிடம் சட்டப்படி தான் நடக்கணும். அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடாது என்றும் சொல்வார். ஆனால் இன்று நடப்பதென்ன ?

சாதாரண தொண்டனாக இருக்கும் கறை வேட்டிக்காரரின் அலட்டலும் மிரட்டலையும் வார்த்தைகளில் சொல்ல இயலுமா ? காவல்துறை அலுவலங்களில் பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் சேட்டைகளை.

ரத்தமும் துரோகமும் நிரம்பி வழியும் வரலாற்றுப் பக்கங்களில் காமராஜரைப் போன்றோரின் பக்கங்கள் பாலைவனத்துச் சோலைகளாய் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

Saturday, January 24, 2009

சபரி மலை ஐயப்பன் கோவில் பயணமும் தரிசனமும்

சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தேன். நண்பர்களுடன் வேனில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேல் மரங்கள்.. குளிர் காற்று. பார்க்கப் பார்க்க பரவசமாய் இருந்தது. வழியில் நிறுத்தி இயற்கைச் சுனையில் குளியல் இட்டோம். அருகில் இருந்த கடையில் கப்பங்கிழங்கு வாங்கி சாப்பிட்டோம். சேச்சி வீட்டில் எங்களுக்கு மதிய சாப்பாடு தயாராகியது. சோறு கொட்டை கொட்டையாக இருந்தது. ஆனால் சாப்பாடு வெகு சுவை. சாப்பிட்டு முடித்து விட்டு தொடர்ந்து பயணித்தோம்.

பேட்டை துள்ளல் என்னால் இயலவில்லை. ஆகையால் நண்பர்கள் மட்டும் துள்ளல் முடிந்து மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தனர். நானும் இன்னும் ஒரு சாமியும் வேனில் பயணித்தோம். தொடர்ந்து என்னுடன் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கும் நண்பரின் அம்பாசிடர் காரும் வந்தது. நிலக்கல்லில் வேன் நிறுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் பம்பை செல்ல வேண்டுமென்பதால் எனது நண்பரின் காரில் பம்பை சென்று சேர்ந்தேன். நண்பர்கள் வரும் வரை ஒரு நாள் முழுதும் காருக்குள் முடங்கினேன். மலைப்பாதையினைக் கடந்து நண்பர்கள் வரும் வரை பம்பையில் காத்து இருக்க வேண்டுமென்ற குருசாமியின் உத்தரவு. மறு நாள் பம்பை ஆற்றில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குளியல் போட்டேன். மலைப்பாதையில் டோலிக்கு ரூபாய் 800 பணம் கட்டிய பிறகு நான்கு பேர் தூக்கிக் கொண்டு பயணித்தார்கள். வழியில் இறக்கி ஐந்து பேரும் கட்டஞ்சாயா குடித்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தார்கள். அவர்கள் படும் சிரமத்தினைக் கண்டு நெஞ்சு வலித்தது. என் இயலாமையினை எண்ணி வருத்தமடைந்தேன். வேறு என்ன செய்ய இயலும் என்னால்.

எனது குழுவில் பதினைந்து பேர் இருந்தோம். மஞ்சள் கலரில் ஆளுக்கொரு கொடி வைத்திருந்தோம். நாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அவ்விடத்திலெல்லாம் கொடியினை ஆட்டியபடி வர வேண்டும் என்பது குரு சாமியின் உத்தரவு. கொடி ஆடுவதை வைத்து குழு நண்பர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். எளிதில் ஒன்று சேர்ந்து விடலாம். நண்பர்கள் நடைபாதை வழியாக இரண்டு கிலோ மீட்டர் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதினெட்டாம் படியருகில் வருவதற்கு விடிகாலை ஆகிவிடும். டோலி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் பதினெட்டாம் படியருகில் சென்றது. எனக்குப் பயமாகி விட்டது. எண்ணிலடங்கா கூட்டம். எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பா ஐயப்பா என்ற ஒலி. மைக்கில் அறிவிப்புகள். எனக்கோ ஒருவரையும் தெரியாது ஐயப்பனைத் தவிர. தலையில் இருமுடி. தவழ்ந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த போது என் குழுவில் இடம்பெற்ற விவரமான ஒரு ஐயப்ப பக்த நண்பர் என்னை கண்டுபிடித்து வந்து சேர்ந்து கொண்டார்.இருவரும் பதினெட்டாம் படியருகில் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்த காவல்காரர்கள் அருகில் வந்து தேங்காய் வைத்து இருக்கின்றீர்களா என்று கேட்க, இருக்கு என்றேன். இருமுடியினை நண்பரிடம் கொடுத்து விட்டு தேங்காயை வேகமாக அடிக்கச் சொல்ல, நானும் அவ்வாறே செய்ய இரு போலீஸ்காரர்களும் தேங்காய் நன்கு உடைந்து விட்டது என்று மகிழ்ச்சியாய் சொல்ல எனக்குள் நெகிழ்ந்தது. படியேற வேண்டும். வலதுபுறம் கீழே இருந்து மேல் படி வரை போலீஸ்காரர்கள் கைகளை வைத்து மறித்து வழியேற்படுத்தினர். ஏறுங்கள் என்றனர். தவழ்ந்து ஏறினேன். கை வழுக்கியது. அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் கை கொடுக்க முயன்றேன். மறுத்து விட்டார். நீங்களே ஏறுங்கள் என்றார். அனைத்து போலீஸ்காரர்களும் ஏற்றிவிடப்பா ஐயப்பா, ஏற்றி விடப்பா ஐயப்பா என்று கோஷமிட்டன்ர். ஒவ்வொரு படியாக ஏறுங்களென்று சொல்லியபடி பின்னால் ஒரு போலீஸ்காரர் வந்தார். பதினெட்டாம் படியினைத் தொட்டேன். அங்கு நின்றிருந்த வேறு இரண்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர். நேரே கோயில் படிகளில் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றனர். நீண்ட வரிசையில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இரு நொடி தரிசனம் தான் கிடைத்தது. இருவரை விலக்கி விட்டு ஐயப்பனை பார்க்க வைக்க முயன்று தோற்றனர்.அங்கு நின்றிருந்த மற்றொரு போலீஸ்காரர் என்னையும் என் நண்பரையும் ஐயப்பன் கோவில் படி அருகில் அழைத்துச் சென்று விட்டார். இங்கிருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு மெதுவாக வாருங்கள் என்று சொல்லி விட்டு பின்னால் நின்று கொண்டார். நீங்கள் நடக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஐயப்பன் அருளுவார் என்று சொன்னார். ஐயப்பன் ஜோதியில் ஜொலித்துக் கொண்டிருந்தார். கையில் கொண்டு சென்றிருந்த காசுகளை உண்டியலில் போடச் சொன்னார். பம்பையில் குளிக்கும் போது ஏதாவது துணியை விட வேண்டுமாம். ஆனால் நான் விடவில்லை. காசு போடும் போது காசோடு துண்டும் சேர்ந்து உண்டியலுக்குள் சென்று விட்டது. போலீஸ்காரர் சிரித்தார். ஐயப்பனுக்கு கொடுக்க வேண்டியதிருந்திருக்கும் போல என்று சொன்னார். கருவறையில் இருந்து பூசாரி ஒருவர் வெளியே வந்து நீண்ட இலைப் பிரசாதமும், ஆரத்தியும் காட்டினார். ஐயப்பன் உயிரோடு உள்ளே உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. பிரசாத்தைப் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம். மஞ்ச மாதா கோவிலின் அருகில் உட்கார்ந்தேன். மற்ற நண்பர்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னுடன் வந்த நண்பர் கிளம்பி விட்டார். மஞ்ச மாதா கோவிலின் அருகில் விடிய விடிய உட்கார்ந்திருந்தேன்.


இதற்கிடையில் பசி வர யாரோ ஒரு ஐயப்ப பக்தர் சாதம் வாங்கி வந்து கொடுத்தார். சாப்பிட்டு விட்டு துண்டை விரித்து படுத்து விட்டேன். அடிக்கடி எழுந்து மஞ்சள் கொடியினை ஆட்டியபடி இருப்பேன். பின்னர் படுத்து விடுவேன்.

விடிகாலையில் குருசாமியும் இன்னொரு சாமியும் என்னைக் கண்டுபிடித்து வந்து விட்டனர். மூவரும் ஐயப்ப சேவா சங்கத்தினர் தந்திருந்த அறைக்குச் சென்று குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அனைத்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மற்ற சாமிகளும் அறைக்கு வந்து விட்டனர். குரு சாமி நெய் தேங்காய்களை உடைத்து சேகரித்தார். குருசாமி என்னை அவர் முதுகில் தூக்கிக் கொள்ள நெய்யினை சுமந்த படி இன்னுமொரு சாமியும் கூடவே வந்தனர். எங்களைப் பார்த்த காவல்கார்ர்கள் எவரும் வழி மறிக்கவே இல்லை. மீண்டும் நேரடியாக ஐயப்பன் கோவில் படி அருகில் கொண்டு போய் நிறுத்தினர்.

ஐயர் நெய்யினை வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்தார். கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தேன். அபிஷேகம் முடித்து மூவருக்கும் இலையில் பிரசாதம், நெய் தீபம் காட்டினார். மூவரும் கிளம்ப எத்தனித்த போது சற்று இருங்கள் என்றுச் சொல்லி உள்ளே சென்று ஐயப்பன் மீது இருந்த நெய்யினை வழித்து எடுத்துக் கொண்டு வந்து என் இரு கால்களிலும் பூசி விட்டு ஐயப்பா இந்தப் பையன் நடக்கணும் என்று வேண்டிக் கொண்டார். போலீஸ்காரர்கள் மீண்டும் எங்களை கோவிலின் வாசல் படி அருகில் இடது புறம் இருக்குமிடத்தில் கொண்டு போய் விட்டு, இவ்விடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றனர். மூவரும் அங்கிருந்த படியே தியானம் செய்து ஐயப்பனைக் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தோம். வரிசையில் ஐயப்ப பக்தர் நெய் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு சந்தனம் பெற வந்தோம். அவ்விடத்தில் அபிஷேகம் முடித்து வந்த ஐயப்ப பக்தர்கள் என்னைப் பார்த்தனர். அனைவரும் வரிசையாக என் மீது அபிஷேக நெய்யினைப் பூசி ஐயப்பா, இந்தப் பையன் நடக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். என் உடல் முழுதும் அபிஷேக நெய்யும் சந்தனமும் வழிந்தது. யார் யாரெல்லாமோ எனக்காக வேண்டிக்கொண்டனர். அந்த அன்புக்கு நான் என்ன செய்ய ? என்னை யார் என்று கூட தெரியாது அவர்களுக்கு. ஆனால் நான் நடக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் அன்பு என்னை நிலை குலைய வைத்தது.

நான் கை கூப்பிய படியே என் மீது அபிஷேக நெய் பூசும் ஐயப்பன்களை கண்ணில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தேன்.


இந்தப் பதிவினை எழுதக் காரணம் என்ன ? என் மீது அன்பு கொண்டு நான் நடகக் வேண்டுமென வேண்டிக்கொண்ட ஐயப்ப பக்தர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்துவது தான்.

Tuesday, January 20, 2009

ஹோட்டல் முதலாளியாக இலவச உதவி

அடிக்கடி வெளியூர் செல்லும் வழக்கமாக இருந்த காலத்தில் எனக்கு சாலையோர உணவகங்களில் சாப்பிட பிடிக்கும். டிரைவரிடம் விசாரித்து வைத்துக் கொண்டு முறை வைத்து ஒவ்வொரு ஹோட்டலாக சாப்பிடும் வழக்கமும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த உணவு பரோட்டா, தோசை. ஹோட்டலில் நுழைந்தவுடன் மற்ற இலைகளில் பரிமாறப்பட்டிருக்கும் சாம்பார் கலர், குருமா கலரை வைத்தே அந்த உணவு சுவையாக இருக்குமா இருக்காதா என்று கண்டு பிடித்து விடுவேன்.

பணமிருக்கும் மனிதருக்கு கொடுக்கும் மனமிருக்காது. மனமிருக்கும் மனிதருக்கு கொடுக்க பணமிருக்காது என்பது சாம்பார், குருமாவுக்கும் பொருந்தும்.மணமிருக்கும் சாம்பாரில் சுவை இருக்காது. சுவை இருக்கும் சாம்பாரில் மணமிருக்காது.

இரவு வேளையில் பச்சைக் கலர் ட்யூப் லைட் வெளிச்சத்தில் மாஸ்டர் சூடாக வார்த்து தரும் தோசையின் மீது சாம்பார் விட்டு சாப்பிடும் அனுபவம் இருக்கிறதே அதையெல்லாம் வார்த்தைகளில் விளக்க இயலாது. மொறு மொறுவென்ற பரோட்டா மீது குருமா விட்டு, சூடாக சாப்பிட சாப்பிட அட அட... என்ன சுவை.. என்ன சுவை..

இரவு நேரங்களில் சில தாபாக்கள் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். லாரிகளும், கார்களும் வந்து கொண்டே இருக்கும். அவற்றைப் பார்க்கும் போது நாமும் அதுபோல தாபா வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் எழும். அத்துடன் சூடாக சுவையாக தோசை வார்த்து தரும் மாஸ்டரைப் போல நாமும் செய்து பார்க்க எண்ணமும் வரும். அதை நிறைவேற்றத்தான் இந்தப் பதிவு.

யார் யாருக்கெல்லாம் தாபா முதலாளி ஆகவேண்டுமென்ற ஆசை இருந்து நிறைவேறாமல் இருக்கிறதோ அவர்களுக்கும் தானும் ஒரு நாள் சமையல் மாஸ்டராக வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களுக்கெல்லாம் என்னாலான ஒரு சிறு உதவி. இந்தத் தாபாவில் தமிழ், இந்தி சினிமா பாடல்களுடன் வெகு சூடான தோசை பரிமாற இயலும். நீங்களே மாஸ்டர், நீங்களே சர்வர், நீங்களே முதலாளி. அனுபவித்துப் பாருங்கள்....

Madrasi Dhaba

Click here to play this game

Tuesday, January 13, 2009

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

சுண்ணாம்புக் கார கிழவி வந்துட்டாளான்னு பாருடா தங்கம் என்பார்கள் அம்மா. தலை நரைத்த கிழவி ஓலைப் பெட்டியில் கொண்டுவரும் சுண்ணாம்புச் சிப்பிகளை மூன்று மரக்கால் நெல் அளந்து போட்டு விட்டு ஒரு மரக்கால் சுண்ணாம்பு சிப்பிகளை வாங்கி வைப்பார். வெந்நீர் வைத்து அதில் சிப்பிகளைச் சேர்த்து பனைமரத்து மட்டையால் கிளறி விட சிப்பிகள் நீரில் வெந்து கொழ கொழப்பாய் வரும். அதை மண் சட்டியில் வைத்து மேலே தண்ணீர் சேர்த்து, சாக்கைப் போட்டு கட்டி வைத்து விடுவார்கள். போகி அன்று காலையில் நீலம் வாங்கி வந்து சுண்ணாம்புச் குழம்பினை கொஞ்சம் எடுத்துப் போட்டு கலந்து வீட்டின் சுவருக்கெல்லாம் வெள்ளை அடிப்பார்கள். காவிக்கட்டியினை உடைத்து அதில் தண்ணீர் விட்டு கலந்து கொண்டு வெள்ளையும், சிவப்பும் கலந்த வரி வரியான பட்டையினை வீட்டினைச் சுற்றி அழகாய் அடித்து வைப்பார் அம்மா. வீடே களை கட்டிவிடும். அக்காவும், தோழிகளும் பொங்கலன்று என்ன கோலம் போடலாம் என்ற டிஸ்கசனில் இருப்பார்கள். கலர்ப்பொடி வாங்கி வைப்பார்கள். வீட்டைச் சுற்றிலும் மண் தரைகள் சாணி மெழுகி வழுவழுவென்று பச்சையாய் மிளிரும்.

ஆசாரி தேங்காய் கொட்டாச்சியில் செய்த அகப்பையைக் கொண்டு வந்து தந்து விட்டுச் செல்வார். தாதர் மார்கழி மாதம் முழுதும் விடிகாலையில் வீட்டுக்கு வீடு செகண்டி அடித்து வந்ததன் கூலியை நெல்லாக வாங்கிச் செல்வார். வண்ணான் வருடம் முழுவதும் துணி துவைத்ததற்கான கூலியினை நெல்லாக வாங்கிக் கொண்டு செல்வார். மாட்டுப் பொங்கலுக்கு படையல் போட தும்பைப் போல வெளுத்த வேட்டி ஒன்றினை தந்து விட்டு செல்வார். வேலையாட்கள் வந்து நெல்லும், காசும் வாங்கிச் செல்வார்கள். வேலையாட்களுக்கு வேட்டியும், சட்டையும், துண்டும் தருவார் மாமா. குயவர் வந்து பொங்கல் வைக்க அடுப்பு, பானைகளையும், குழம்பு வைக்க சாம்பார் சட்டி, பொறியல் செய்ய சிறிய சட்டிகளையும் கொடுத்து நெல் வாங்கிச் செல்வார். அம்மா மறக்காமல் மீன் குழம்பு சட்டிகளையும் வாங்கி வீட்டின் புழக்கடைப் பக்கம் கவுத்து வைப்பார்.

பொங்கலன்று விடிகாலையில் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு கிட்டத்தட்ட பதினாறு காய் கறிகள் மற்றும் மணக்க மணக்கச் சாம்பாரும் தயார் செய்யப்பட்டு இருக்கும். மாமா காலண்டரை வைத்துக் கொண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்த்தபடி இருப்பார். வாசலில் மெழுகி அழகான கோலமிட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து தலையில் அருகம்புல் சொருகி திரு நீறு பூசி, குங்குமம் வைத்து ஜம்மென்று அமர்ந்திருப்பார் பிள்ளையார் சுவாமி. கரும்பு கட்டுகளும், தோட்டத்திலிருந்து வாழைக்குலைகளும் வீடெல்லாம் நிறைந்திருக்கும். மாட்டுப் பொங்கலுக்கு மாலை கட்ட ஆவாரம்பூவும், கூலப்பூவும், இண்டங்காயும், பெரண்டையும், வேப்பிலையையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருப்பார்கள் வேலைக்காரர்கள். ஈஞ்சி என்று சொல்லக்கூடிய மிளாறைக் கொண்டு வந்து இரண்டு கம்புகளுக்கிடையே கொடுத்து நாறாக்கியபடி இருப்பார் தாத்தா. மாடுகளுக்கு கொம்பு சீவி பளபளவென மின்னும். மாட்டு வண்டிக்கு பெயிண்ட் அடித்துப் புதுப் பெண் போல மினுமினுக்கும்.

பொங்கலன்று, காலையில் தேங்காய் உடைத்து சாம்பிராணி காட்டி பொங்கல் பானை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு எரிப்பார்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் அரிசி போட்டு பொங்கி வர பொங்கலோ பொங்கல் என்று குலவை இடுவார்கள். சங்கு ஊதுவார்கள் மாமா. சர்க்கரைப் பொங்கலுக்கு என்று தனிப் பொருட்களை எல்லாம் கொட்டி நன்றாக வேக வைத்து இறக்கி வைப்பார்கள். இலையினைப் போட்டு காய்கறிகள், பழங்கள் எல்லாம் வைத்து பொங்கலை வைத்து பல்லயம் போடுவார்கள். பாலும் தயிரும் ஊற்றி மேலே சர்க்கரை தூவி தேங்காய் பூ தூவி வாழைப்பழங்களையும் வைத்து சுற்றிலும் கறி வகைகளை வைத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமெடுத்து பிள்ளையாருக்குச் சோறு ஊட்டி, அடுப்புக்குச் சோறு ஊட்டி, பானைக்கும் சோறு ஊட்டி சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தூப தீபங்காட்டி விட்டு பல்லயத்திலிருந்து பொங்கல் எடுத்து அனைவருக்கும் தருவார்கள். உட்கார்ந்து வயிறு புடைக்கச் சாப்பிடுவோம். திருமணமான தங்கை, அக்காள் வீடுகளுக்கு பொங்கல் சீர் கொண்டு செல்லப்படும்.

பக்கத்து வீடுகளுக்கெல்லாம் பொங்கலும், கறி வகைகளும் செல்லும். கரும்பு சாப்பிட்ட படி புதுச் சட்டை அணிந்து நண்பர்களோடு விளையாட ஆரம்பித்து விடுவோம்.

மறு நாள் மாடுகள் எல்லாம் குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ண வண்ணக் கயிறுகள் கட்டி வைக்கோல் போரில் கட்டப்பட்டு இருக்கும். மாலை நேரத்தில் போன வருடம் வெட்டிய இடத்திலேயே அடுப்பு வெட்டி மண் எடுத்து பக்குவமாய் பிசைந்து பிள்ளையார் பிடித்து தலையில் ஆவாரம்பூ, கூலப்பூ, இண்டங்காய், வேப்பிலை சொருகி மேடை போட்டு விபூதி, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கப்படுவார். வண்ணான் கொடுத்த வேட்டியினை விரித்து தாம்பூலத்தட்டில் பழ வகைகளோடு அருமையாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார் பிள்ளையார். வெண் பொங்கல் வைத்து பழங்கள், தேன், சர்க்கரை, தயிர், பால் சேர்த்து பிசைந்த சாதத்தை மாடுகளுக்கு ஊட்டி மாலையிட்டு, குங்குமம், மஞ்சள் வைத்து கும்பிட்டு வருவோம். படையலைப் பிரித்து பாதி அளவுக்கு பொங்கலை எடுத்துக் கொண்டு மீதியை வேஷ்டியில் கட்டி வைத்து விடுவார் மாமா. அது நாளை வரும் வண்ணான் எடுத்துச் செல்ல.

அதற்கும் மறு நாள், ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் எல்லாம் பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு வருவார்கள். நான்காம் நாள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். கலந்து கொள்ளும் எல்லோருக்கும் பரிசுகள் நிச்சயம். அன்றிரவு கரகாட்டம் பட்டையைக் கிளப்பும்.

நான்கு நாட்களும் ஊரார் அனைவரும் கூடி மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழும் பொங்கலை நினைத்தால் மனதில் சோகமே உருவெடுக்கிறது தற்போது.

ஏங்க, நாளைக்கு காலையில் சர்க்கரைப் பொங்கல் மட்டும் வைத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்ற மனைவியைப் பார்த்தேன். நகரக் கலாச்சாரத்தில் வாழ்ந்த மனைவிக்கு கிராமத்துக் கலாச்சார கொண்டாட்டங்கள் பற்றி தெரியாது என்ற வருத்தம் என்னைப் பீடித்தது. கிராமத்துக் கலாச்சாரத்தில் வளர்ந்த எனக்கு அந்த நாட்கள் திரும்பவும் கிடைக்காத வருத்தம் ஏற்பட்டு வாழ்க்கையின் மீதான எரிச்சல் ஏற்பட்டது.

பிள்ளைகளுக்கு கரும்பு கூட கொடுக்க விடாமல் சளி பிடிக்கும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் வரலாம் என்று தடுத்து விட்டாள். பிள்ளைகளை எதிர்காலத்தில் வேலை பார்க்கும் இயந்திரமாய் வாழ வளர்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள். மனிதனின் கொண்டாட்டங்கள் இன்று பணத்தின் மீது குவிந்து விட்டதால் மனிதன் மறைந்து கொண்டிருக்கிறான். இயந்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Tuesday, January 6, 2009

வாழ்க்கை என்னும் விளையாட்டு

மனித மனத்தில் சரியான எண்ணங்களை புகுத்தினால்தான் அதை தேவையான முறையில் நாம் இயக்க முடியும். இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்கள் பற்றியே திரும்பத் திரும்பப் பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட என்னென்ன வேண்டுமென்ற எண்ணங்களைப் புகுத்துவது தான் சரியான அணுகுமுறை.

அப்படிச் செய்தாலே, தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும்.
நம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போல, தேவைப்பட்டால் இயக்குவதும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்துக்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.

கனவு காணுவது நல்லது. அது உங்களுக்கு ஊக்கம் தருவது. ஆனால் நிறைய பேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்கப் பயப்படுகிறார்கள். உங்களை கனவு நிலையிலேயே வைத்திருக்க கூடியவற்றில் ஒன்று ஜோதிடம். ஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்ப்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை நீங்களே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு கிரகங்கள் அதிலே என்ன போடப் போகின்றன என்று பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உங்கள் தகுதியை, ஆற்றலை அறிந்து கொள்ளாத போது தான் அதிர்ஷ்டங்களை நம்பத் தொடங்குகிறீர்கள். வேகமாக ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். பதட்டப்படுகிறீர்கள். இந்தப் பதட்டத்தின் காரணமாகத்தான் ஜாதகத்தை நம்பிப் போகிறீர்கள். தன்னை அறிந்து கொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அதை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கி விடுவீர்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணிதத்தையோ பார்த்துக் கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.

தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால் தான் சில அற்புதங்கள் எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். இவையெல்லாம் பதட்டத்தின், அச்சத்தின் வெளிப்பாடு தான். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையை விளையாட்டாய் நடத்திச் செல்வது. இது ஒவ்வொருவருக்கும் சாத்தியமே.

நன்றி : காட்டுப்பூ மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ்.


காட்டுப்பூவை கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். கெட்டி அட்டையில் கடைசி பக்கங்களில் வரும் ஜென் கதைகள் எனக்குப் பிடித்தவை. தற்போது வரும் காட்டுப்பூ இதழில் மேற்கண்ட கட்டுரையினைப் போன்று எண்ணற்ற விஷயங்கள் வருகின்றன.

ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க திகட்டாத சுவை தருகிறது. சில கட்டுரைகள் வாழ்வியல் வினோதங்களை சுட்டுகின்றன. சில கட்டுரைகள் வாழ்க்கையின் முரண்பாடுகளில் மனித வாழ்க்கை சிக்கி சீரழிவதை காட்டுகின்றன. இதுபோன்ற வித விதமான கட்டுரைகள் வருகின்றன காட்டுப்பூவில். அனைவரும் படிக்க ஏதுவான ஒன்றாய் திகழ்கிறது. மதங்கள் இவ்விடத்தில் மறைந்து போகிறது. தனி மனித தன்மை மட்டும் தான் மனிதனை மாற்ற இயலும் என்று சொல்கிறது காட்டுப்பூ.

ஆகவே நண்பர்களே நான் படித்தக் காட்டுப்பூவில் இருந்து அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் ஒரு கட்டுரையினை மட்டும் மேலே பதிவிட்டு இருக்கிறேன்.


இப்புத்தகத்தை ஒரு வருடம் தபாலில் பெற ரூபாய் 180ம், இரண்டு வருடங்கள் பெற ரூபாய் 350ம், மூன்று வருடங்களுக்கு ரூபாய் 500ம் ஆகும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பெற இங்கு கிளிக்கிடவும். காட்டுப்பூ

தேசபக்தி முற்றிலும் மாறுபட்ட பார்வை

சமீபத்தில் குமுதம் தீரா நதி இதழில் திரு அ. மார்க்ஸ் அவர்கள் எழுதிய மானுடத்தை நேசிப்பவர்கள் ஏன் தேசபக்தியை வெறுத்தார்கள் என்ற தொடரினைப் படிக்க நேர்ந்தது. தேச பக்தியினைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையினை அவர் முன்னிருத்திருகிறார்.

அவரின் கட்டுரையில் சில பகுதிகள் இவ்விடத்தில் தருகிறேன். முழுமையும் படிக்க குமுதத்தில் நுழைக. இலவசம் தான். நன்றி குமுதம், நன்றி : அ.மார்க்ஸ்.
குமுதத்தில் நுழைய இவ்விடத்தில் கிளிக் செய்யவும்

டால்ஸ்டாயின் கூற்றாக விரியும் அவரது கட்டுரை தேச பக்தியின் இன்னொரு முகத்தினை காட்டுவதாக இருக்கிறது.

எந்த அரசாங்கமும் அதன் மக்களை அமைதியில் வாழவிடாது. ஏனெனில் அதன் இருப்பின் நியாயப்பாட்டிற்கான தலையாய காரணமாக விளங்குவது தேசங்களிடையே சமாதானத்தை நிலைநாட்டுகிற பணியை அது செய்கிறது என்கிற ஒரு பிம்பத்தை அது கட்டமைத்து வைத்திருப்பதால்தான். தேசபக்தியைத் தூண்டிவிடுவதன் மூலம் இந்தப் பகை உணர்வைக் கட்டமைப்பதே இந்த அரசாங்கங்கள்தான். மக்களைப் பாதுகாக்கும் தம் திறனை வெளிப்படுத்திக் கொள்வதற்கு தேசங்களிடையே பகை அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்தப் பகையை உருவாக்க தேசபக்தியின் துணையும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. வித்தை காட்டும் ஒரு நாடோடி, குதிரையின் வாலுக்கடியில் கொஞ்சம் மிளகாய்ப் பொடியை வைத்து அதைச் சீண்டிப் பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப் போராடிதான் கட்டுப்படுத்திவிட்டதாகக் காட்டுகிறானல்லவா அப்படித்தான் இதுவும்...அடுத்த நாடு உங்களை ஆக்ரமிக்கக் காத்திருக்கிறது. நீங்கள் ஆபத்திலிருக்கிறீர்கள் என அரசு மக்களை நம்ப வைக்கிறது. அல்லது உள்நாட்டிலுள்ள சில துரோகிகளினால் இந்த ஆபத்து உங்களுக்கு இருக்கிறது என அது சொல்லுகிறது. எனவே இந்த ஆபத்துக்களிலிருந்து நீங்கள் தப்பவேண்டுமானால் அரசுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமென, அது மக்களை நம்ப வைக்கிறது. மக்களின் எதிர்ப்புகளின்போதும், (கொடும்) சர்வாதிகாரத்தை அது நிலைநாட்டுகிறபோதும் இவ்வாறு அது தேசபக்தியை அதிகம் வற்புறுத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அரசதிகாரம் செயல்படுகிற எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு அரசும் அதன் இருப்பை விளக்கியாக வேண்டும். வன்முறையை நியாயப்படுத்தியாகவேண்டும். தான் இப்படி இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகவிருக்கும் என்பதே அதன் தர்க்கம். மக்களுக்கு இந்த `ஆபத்து' குறித்து அது எச்சரித்தபின், அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீதான கட்டுப்பாட்டை அது நிலைநிறுத்துகிறது. இந்நிலையில், அது இன்னொரு நாட்டைத் தாக்குகிற கட்டாயத்திற்குள்ளாகிறது. இவ்வாறு மற்ற நாட்டின் தாக்குதல் குறித்த அதன் எச்சரிக்கை எத்தனை `உண்மையானது' என்பது கண்முன் நிறுத்தப்பட்டு விடுகிறது...
ஆட்சியாளர்கள் தங்களின் பேராசைகளையும், பெருந் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், ஆளப்படுபவர்கள் தமது மனித கண்ணியம், பகுத்தறிவு, மனச்சாட்சி எல்லாவற்றையும் இழந்து அதிகாரத்திற்கு அடிமையாவதற்கும் இன்னொரு எளிய, தெளிவான, குழப்பமற்ற பெயர்தான் தேசபக்தி...தேசபக்தி என்பது அடிமைத்தனம்...


தேசபக்தியைப் `பழங்குடித் தேசியவாதம்' (Tribal Nationalism)) எனக் கூறும் ஹன்னா ஆரன்ட்: ``இது (தேசபக்தி) தனது மக்களனைவரும் `எதிரிகளின் உலகம்' ஒன்றால் சூழப்பட்டுள்ளதாகச் சொல்கிறது. `எல்லோருக்கும் எதிராக ஒருவர்' - நம் மக்களுக்கும் பிற எல்லோருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது என அது வற்புறுத்திச் சொல்கிறது. நாம் என்பது தனித்துவமானது, ஒப்புவமையில்லாதது, மற்ற எல்லோரிடமும் எந்த வகையிலும் இணைய முடியாதது எனக் கூறும் அது பொது மனிதம் சாத்தியமே இல்லை எனக் கோட்பாட்டு ரீதியாக மறுக்கிறது.

''மார்க் ட்வெய்ன்: ``ஒரு தேசபக்தன் தனது சொந்த நாட்டில், சொந்தக் கொடியின் கீழ் `செட்டில்' ஆகிறான். மற்ற தேசங்களை அவன் இழிவு செய்கிறான். சீருடை அணிந்த கொலைகாரர்களை (படைகள் / பயங்கரவாதிகள்) அமைத்துக்கொள்கிறான். அடுத்த நாட்டின் துண்டு துக்கானிகளைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கும் ஏராளமாகச் செலவிடுகிறான். இடைப்பட்ட காலங்களில் தன் கைகளில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவிக்கொண்டே `உலகளாவிய மனித சகோதரத்துவத்தை' வாயால் செயல்படுத்துகிறான்.

''அல்டாஸ் ஹக்ஸ்லி: ``தேசபக்தியின் பெரிய ஈர்ப்பு என்னவெனில், அது நமது மோசமான ஆசைகளைத் திருப்தி செய்கிறது. நாம் ரொம்பவும் மேன்மையானவர்கள் என்ற எண்ணத்தினூடாக (மற்றவர்களை) ஏமாற்றவும் அவர்களுக்கு ஊறு செய்யவும் விழைகிறான்.

''பெர்னாட் ஷா: அற்ப காரணங்களுக்காகக் கொல்லவும், கொல்லப்படவும் துணிவதே தேசபக்தி.

''ஆங்கார் வைல்ட்: ``தேசபக்தி - கயவர்களின் உயர் பண்பு.

''ஆல்பர்ட் ஈன்ஸ்டின்: ``தேசியம் - ஒரு இளம்பிள்ளைவாதம்.

கோல்ட்மான்: ``தேசபக்தி - சுதந்திரத்தின் கேடு.

''எர்னட்ஸ் பி பாக்ஸ்: ``தேசபக்தன் என்கிற சொல்லை ஒரு அவமானமாகக் கருதும் காலம் ஒன்று வரும்.

''சாமுவேல் ஜான்சன்: ``தேசபக்தி - அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.

'' (பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் இந்த மேற்கோளைப் பல இடங்களில் பயன்படுத்தி உள்ளதைக் காண்க).

ஆம்புரோஸ் பியர்ஸ்: ``மன்னிக்கவும். தேசபக்தி அயோக்கியர்களின் முதல் புகலிடம்.

எச்.எல். மென்கென்: ``இல்லை அது இன்னும் மோசமானது. அது முதல், இடை மற்றும் இறுதி எல்லா நிலைகளிலும் முட்டாள்தனமானது.''

Friday, January 2, 2009

யாரது யாரது ????

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. எனக்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

வாழ்க்கை அதன் பாதையினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கும்போது கொண்டாட்டங்களில் மனது செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

எங்குபார்த்தாலும் தர்மம் கொல்லப்படுகிறது. பூமி முழுதும் அதர்மம் தலை தூக்கி மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உடம்பினை அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை சுலபமாக இல்லாமல் கடும் இருள் சூழ்ந்த பாலைவனமாக மாறி வருகிறது. எங்கு செல்வது யார் மீது நம்பிக்கை கொள்வது என்று அறியாமல் மனிதர்கள் மனம் பிறழ்ந்து என்னென்னவோ செய்கிறார்கள்.

இருப்பினும் மனசினை சற்று ஆற்றுமைப் படுத்திக் கொள்ள சில பாடல்களை அவ்வப்போது கேட்பேன். எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெகு அழகான பாடல் வரிகள். நல்ல இசை... கேட்க கேட்க மனசு சற்று ஆறுதல் படுகிறது. இயற்கையினை விட எவரும் அழகில்லை இந்தப் பெண் உட்பட. ஆனால் இந்தப் பெண் அழகாக இருக்கிறார். இவரின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.