குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, January 24, 2009

சபரி மலை ஐயப்பன் கோவில் பயணமும் தரிசனமும்

சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தேன். நண்பர்களுடன் வேனில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேல் மரங்கள்.. குளிர் காற்று. பார்க்கப் பார்க்க பரவசமாய் இருந்தது. வழியில் நிறுத்தி இயற்கைச் சுனையில் குளியல் இட்டோம். அருகில் இருந்த கடையில் கப்பங்கிழங்கு வாங்கி சாப்பிட்டோம். சேச்சி வீட்டில் எங்களுக்கு மதிய சாப்பாடு தயாராகியது. சோறு கொட்டை கொட்டையாக இருந்தது. ஆனால் சாப்பாடு வெகு சுவை. சாப்பிட்டு முடித்து விட்டு தொடர்ந்து பயணித்தோம்.

பேட்டை துள்ளல் என்னால் இயலவில்லை. ஆகையால் நண்பர்கள் மட்டும் துள்ளல் முடிந்து மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தனர். நானும் இன்னும் ஒரு சாமியும் வேனில் பயணித்தோம். தொடர்ந்து என்னுடன் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கும் நண்பரின் அம்பாசிடர் காரும் வந்தது. நிலக்கல்லில் வேன் நிறுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் பம்பை செல்ல வேண்டுமென்பதால் எனது நண்பரின் காரில் பம்பை சென்று சேர்ந்தேன். நண்பர்கள் வரும் வரை ஒரு நாள் முழுதும் காருக்குள் முடங்கினேன். மலைப்பாதையினைக் கடந்து நண்பர்கள் வரும் வரை பம்பையில் காத்து இருக்க வேண்டுமென்ற குருசாமியின் உத்தரவு. மறு நாள் பம்பை ஆற்றில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குளியல் போட்டேன். மலைப்பாதையில் டோலிக்கு ரூபாய் 800 பணம் கட்டிய பிறகு நான்கு பேர் தூக்கிக் கொண்டு பயணித்தார்கள். வழியில் இறக்கி ஐந்து பேரும் கட்டஞ்சாயா குடித்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தார்கள். அவர்கள் படும் சிரமத்தினைக் கண்டு நெஞ்சு வலித்தது. என் இயலாமையினை எண்ணி வருத்தமடைந்தேன். வேறு என்ன செய்ய இயலும் என்னால்.

எனது குழுவில் பதினைந்து பேர் இருந்தோம். மஞ்சள் கலரில் ஆளுக்கொரு கொடி வைத்திருந்தோம். நாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அவ்விடத்திலெல்லாம் கொடியினை ஆட்டியபடி வர வேண்டும் என்பது குரு சாமியின் உத்தரவு. கொடி ஆடுவதை வைத்து குழு நண்பர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். எளிதில் ஒன்று சேர்ந்து விடலாம். நண்பர்கள் நடைபாதை வழியாக இரண்டு கிலோ மீட்டர் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதினெட்டாம் படியருகில் வருவதற்கு விடிகாலை ஆகிவிடும். டோலி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் பதினெட்டாம் படியருகில் சென்றது. எனக்குப் பயமாகி விட்டது. எண்ணிலடங்கா கூட்டம். எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பா ஐயப்பா என்ற ஒலி. மைக்கில் அறிவிப்புகள். எனக்கோ ஒருவரையும் தெரியாது ஐயப்பனைத் தவிர. தலையில் இருமுடி. தவழ்ந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த போது என் குழுவில் இடம்பெற்ற விவரமான ஒரு ஐயப்ப பக்த நண்பர் என்னை கண்டுபிடித்து வந்து சேர்ந்து கொண்டார்.இருவரும் பதினெட்டாம் படியருகில் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்த காவல்காரர்கள் அருகில் வந்து தேங்காய் வைத்து இருக்கின்றீர்களா என்று கேட்க, இருக்கு என்றேன். இருமுடியினை நண்பரிடம் கொடுத்து விட்டு தேங்காயை வேகமாக அடிக்கச் சொல்ல, நானும் அவ்வாறே செய்ய இரு போலீஸ்காரர்களும் தேங்காய் நன்கு உடைந்து விட்டது என்று மகிழ்ச்சியாய் சொல்ல எனக்குள் நெகிழ்ந்தது. படியேற வேண்டும். வலதுபுறம் கீழே இருந்து மேல் படி வரை போலீஸ்காரர்கள் கைகளை வைத்து மறித்து வழியேற்படுத்தினர். ஏறுங்கள் என்றனர். தவழ்ந்து ஏறினேன். கை வழுக்கியது. அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் கை கொடுக்க முயன்றேன். மறுத்து விட்டார். நீங்களே ஏறுங்கள் என்றார். அனைத்து போலீஸ்காரர்களும் ஏற்றிவிடப்பா ஐயப்பா, ஏற்றி விடப்பா ஐயப்பா என்று கோஷமிட்டன்ர். ஒவ்வொரு படியாக ஏறுங்களென்று சொல்லியபடி பின்னால் ஒரு போலீஸ்காரர் வந்தார். பதினெட்டாம் படியினைத் தொட்டேன். அங்கு நின்றிருந்த வேறு இரண்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர். நேரே கோயில் படிகளில் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றனர். நீண்ட வரிசையில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இரு நொடி தரிசனம் தான் கிடைத்தது. இருவரை விலக்கி விட்டு ஐயப்பனை பார்க்க வைக்க முயன்று தோற்றனர்.அங்கு நின்றிருந்த மற்றொரு போலீஸ்காரர் என்னையும் என் நண்பரையும் ஐயப்பன் கோவில் படி அருகில் அழைத்துச் சென்று விட்டார். இங்கிருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு மெதுவாக வாருங்கள் என்று சொல்லி விட்டு பின்னால் நின்று கொண்டார். நீங்கள் நடக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஐயப்பன் அருளுவார் என்று சொன்னார். ஐயப்பன் ஜோதியில் ஜொலித்துக் கொண்டிருந்தார். கையில் கொண்டு சென்றிருந்த காசுகளை உண்டியலில் போடச் சொன்னார். பம்பையில் குளிக்கும் போது ஏதாவது துணியை விட வேண்டுமாம். ஆனால் நான் விடவில்லை. காசு போடும் போது காசோடு துண்டும் சேர்ந்து உண்டியலுக்குள் சென்று விட்டது. போலீஸ்காரர் சிரித்தார். ஐயப்பனுக்கு கொடுக்க வேண்டியதிருந்திருக்கும் போல என்று சொன்னார். கருவறையில் இருந்து பூசாரி ஒருவர் வெளியே வந்து நீண்ட இலைப் பிரசாதமும், ஆரத்தியும் காட்டினார். ஐயப்பன் உயிரோடு உள்ளே உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. பிரசாத்தைப் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம். மஞ்ச மாதா கோவிலின் அருகில் உட்கார்ந்தேன். மற்ற நண்பர்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னுடன் வந்த நண்பர் கிளம்பி விட்டார். மஞ்ச மாதா கோவிலின் அருகில் விடிய விடிய உட்கார்ந்திருந்தேன்.


இதற்கிடையில் பசி வர யாரோ ஒரு ஐயப்ப பக்தர் சாதம் வாங்கி வந்து கொடுத்தார். சாப்பிட்டு விட்டு துண்டை விரித்து படுத்து விட்டேன். அடிக்கடி எழுந்து மஞ்சள் கொடியினை ஆட்டியபடி இருப்பேன். பின்னர் படுத்து விடுவேன்.

விடிகாலையில் குருசாமியும் இன்னொரு சாமியும் என்னைக் கண்டுபிடித்து வந்து விட்டனர். மூவரும் ஐயப்ப சேவா சங்கத்தினர் தந்திருந்த அறைக்குச் சென்று குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அனைத்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மற்ற சாமிகளும் அறைக்கு வந்து விட்டனர். குரு சாமி நெய் தேங்காய்களை உடைத்து சேகரித்தார். குருசாமி என்னை அவர் முதுகில் தூக்கிக் கொள்ள நெய்யினை சுமந்த படி இன்னுமொரு சாமியும் கூடவே வந்தனர். எங்களைப் பார்த்த காவல்கார்ர்கள் எவரும் வழி மறிக்கவே இல்லை. மீண்டும் நேரடியாக ஐயப்பன் கோவில் படி அருகில் கொண்டு போய் நிறுத்தினர்.

ஐயர் நெய்யினை வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்தார். கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தேன். அபிஷேகம் முடித்து மூவருக்கும் இலையில் பிரசாதம், நெய் தீபம் காட்டினார். மூவரும் கிளம்ப எத்தனித்த போது சற்று இருங்கள் என்றுச் சொல்லி உள்ளே சென்று ஐயப்பன் மீது இருந்த நெய்யினை வழித்து எடுத்துக் கொண்டு வந்து என் இரு கால்களிலும் பூசி விட்டு ஐயப்பா இந்தப் பையன் நடக்கணும் என்று வேண்டிக் கொண்டார். போலீஸ்காரர்கள் மீண்டும் எங்களை கோவிலின் வாசல் படி அருகில் இடது புறம் இருக்குமிடத்தில் கொண்டு போய் விட்டு, இவ்விடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றனர். மூவரும் அங்கிருந்த படியே தியானம் செய்து ஐயப்பனைக் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தோம். வரிசையில் ஐயப்ப பக்தர் நெய் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு சந்தனம் பெற வந்தோம். அவ்விடத்தில் அபிஷேகம் முடித்து வந்த ஐயப்ப பக்தர்கள் என்னைப் பார்த்தனர். அனைவரும் வரிசையாக என் மீது அபிஷேக நெய்யினைப் பூசி ஐயப்பா, இந்தப் பையன் நடக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். என் உடல் முழுதும் அபிஷேக நெய்யும் சந்தனமும் வழிந்தது. யார் யாரெல்லாமோ எனக்காக வேண்டிக்கொண்டனர். அந்த அன்புக்கு நான் என்ன செய்ய ? என்னை யார் என்று கூட தெரியாது அவர்களுக்கு. ஆனால் நான் நடக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் அன்பு என்னை நிலை குலைய வைத்தது.

நான் கை கூப்பிய படியே என் மீது அபிஷேக நெய் பூசும் ஐயப்பன்களை கண்ணில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தேன்.


இந்தப் பதிவினை எழுதக் காரணம் என்ன ? என் மீது அன்பு கொண்டு நான் நடகக் வேண்டுமென வேண்டிக்கொண்ட ஐயப்ப பக்தர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்துவது தான்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.