குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 13, 2009

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

சுண்ணாம்புக் கார கிழவி வந்துட்டாளான்னு பாருடா தங்கம் என்பார்கள் அம்மா. தலை நரைத்த கிழவி ஓலைப் பெட்டியில் கொண்டுவரும் சுண்ணாம்புச் சிப்பிகளை மூன்று மரக்கால் நெல் அளந்து போட்டு விட்டு ஒரு மரக்கால் சுண்ணாம்பு சிப்பிகளை வாங்கி வைப்பார். வெந்நீர் வைத்து அதில் சிப்பிகளைச் சேர்த்து பனைமரத்து மட்டையால் கிளறி விட சிப்பிகள் நீரில் வெந்து கொழ கொழப்பாய் வரும். அதை மண் சட்டியில் வைத்து மேலே தண்ணீர் சேர்த்து, சாக்கைப் போட்டு கட்டி வைத்து விடுவார்கள். போகி அன்று காலையில் நீலம் வாங்கி வந்து சுண்ணாம்புச் குழம்பினை கொஞ்சம் எடுத்துப் போட்டு கலந்து வீட்டின் சுவருக்கெல்லாம் வெள்ளை அடிப்பார்கள். காவிக்கட்டியினை உடைத்து அதில் தண்ணீர் விட்டு கலந்து கொண்டு வெள்ளையும், சிவப்பும் கலந்த வரி வரியான பட்டையினை வீட்டினைச் சுற்றி அழகாய் அடித்து வைப்பார் அம்மா. வீடே களை கட்டிவிடும். அக்காவும், தோழிகளும் பொங்கலன்று என்ன கோலம் போடலாம் என்ற டிஸ்கசனில் இருப்பார்கள். கலர்ப்பொடி வாங்கி வைப்பார்கள். வீட்டைச் சுற்றிலும் மண் தரைகள் சாணி மெழுகி வழுவழுவென்று பச்சையாய் மிளிரும்.

ஆசாரி தேங்காய் கொட்டாச்சியில் செய்த அகப்பையைக் கொண்டு வந்து தந்து விட்டுச் செல்வார். தாதர் மார்கழி மாதம் முழுதும் விடிகாலையில் வீட்டுக்கு வீடு செகண்டி அடித்து வந்ததன் கூலியை நெல்லாக வாங்கிச் செல்வார். வண்ணான் வருடம் முழுவதும் துணி துவைத்ததற்கான கூலியினை நெல்லாக வாங்கிக் கொண்டு செல்வார். மாட்டுப் பொங்கலுக்கு படையல் போட தும்பைப் போல வெளுத்த வேட்டி ஒன்றினை தந்து விட்டு செல்வார். வேலையாட்கள் வந்து நெல்லும், காசும் வாங்கிச் செல்வார்கள். வேலையாட்களுக்கு வேட்டியும், சட்டையும், துண்டும் தருவார் மாமா. குயவர் வந்து பொங்கல் வைக்க அடுப்பு, பானைகளையும், குழம்பு வைக்க சாம்பார் சட்டி, பொறியல் செய்ய சிறிய சட்டிகளையும் கொடுத்து நெல் வாங்கிச் செல்வார். அம்மா மறக்காமல் மீன் குழம்பு சட்டிகளையும் வாங்கி வீட்டின் புழக்கடைப் பக்கம் கவுத்து வைப்பார்.

பொங்கலன்று விடிகாலையில் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு கிட்டத்தட்ட பதினாறு காய் கறிகள் மற்றும் மணக்க மணக்கச் சாம்பாரும் தயார் செய்யப்பட்டு இருக்கும். மாமா காலண்டரை வைத்துக் கொண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்த்தபடி இருப்பார். வாசலில் மெழுகி அழகான கோலமிட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து தலையில் அருகம்புல் சொருகி திரு நீறு பூசி, குங்குமம் வைத்து ஜம்மென்று அமர்ந்திருப்பார் பிள்ளையார் சுவாமி. கரும்பு கட்டுகளும், தோட்டத்திலிருந்து வாழைக்குலைகளும் வீடெல்லாம் நிறைந்திருக்கும். மாட்டுப் பொங்கலுக்கு மாலை கட்ட ஆவாரம்பூவும், கூலப்பூவும், இண்டங்காயும், பெரண்டையும், வேப்பிலையையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருப்பார்கள் வேலைக்காரர்கள். ஈஞ்சி என்று சொல்லக்கூடிய மிளாறைக் கொண்டு வந்து இரண்டு கம்புகளுக்கிடையே கொடுத்து நாறாக்கியபடி இருப்பார் தாத்தா. மாடுகளுக்கு கொம்பு சீவி பளபளவென மின்னும். மாட்டு வண்டிக்கு பெயிண்ட் அடித்துப் புதுப் பெண் போல மினுமினுக்கும்.

பொங்கலன்று, காலையில் தேங்காய் உடைத்து சாம்பிராணி காட்டி பொங்கல் பானை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு எரிப்பார்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் அரிசி போட்டு பொங்கி வர பொங்கலோ பொங்கல் என்று குலவை இடுவார்கள். சங்கு ஊதுவார்கள் மாமா. சர்க்கரைப் பொங்கலுக்கு என்று தனிப் பொருட்களை எல்லாம் கொட்டி நன்றாக வேக வைத்து இறக்கி வைப்பார்கள். இலையினைப் போட்டு காய்கறிகள், பழங்கள் எல்லாம் வைத்து பொங்கலை வைத்து பல்லயம் போடுவார்கள். பாலும் தயிரும் ஊற்றி மேலே சர்க்கரை தூவி தேங்காய் பூ தூவி வாழைப்பழங்களையும் வைத்து சுற்றிலும் கறி வகைகளை வைத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமெடுத்து பிள்ளையாருக்குச் சோறு ஊட்டி, அடுப்புக்குச் சோறு ஊட்டி, பானைக்கும் சோறு ஊட்டி சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தூப தீபங்காட்டி விட்டு பல்லயத்திலிருந்து பொங்கல் எடுத்து அனைவருக்கும் தருவார்கள். உட்கார்ந்து வயிறு புடைக்கச் சாப்பிடுவோம். திருமணமான தங்கை, அக்காள் வீடுகளுக்கு பொங்கல் சீர் கொண்டு செல்லப்படும்.

பக்கத்து வீடுகளுக்கெல்லாம் பொங்கலும், கறி வகைகளும் செல்லும். கரும்பு சாப்பிட்ட படி புதுச் சட்டை அணிந்து நண்பர்களோடு விளையாட ஆரம்பித்து விடுவோம்.

மறு நாள் மாடுகள் எல்லாம் குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ண வண்ணக் கயிறுகள் கட்டி வைக்கோல் போரில் கட்டப்பட்டு இருக்கும். மாலை நேரத்தில் போன வருடம் வெட்டிய இடத்திலேயே அடுப்பு வெட்டி மண் எடுத்து பக்குவமாய் பிசைந்து பிள்ளையார் பிடித்து தலையில் ஆவாரம்பூ, கூலப்பூ, இண்டங்காய், வேப்பிலை சொருகி மேடை போட்டு விபூதி, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கப்படுவார். வண்ணான் கொடுத்த வேட்டியினை விரித்து தாம்பூலத்தட்டில் பழ வகைகளோடு அருமையாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார் பிள்ளையார். வெண் பொங்கல் வைத்து பழங்கள், தேன், சர்க்கரை, தயிர், பால் சேர்த்து பிசைந்த சாதத்தை மாடுகளுக்கு ஊட்டி மாலையிட்டு, குங்குமம், மஞ்சள் வைத்து கும்பிட்டு வருவோம். படையலைப் பிரித்து பாதி அளவுக்கு பொங்கலை எடுத்துக் கொண்டு மீதியை வேஷ்டியில் கட்டி வைத்து விடுவார் மாமா. அது நாளை வரும் வண்ணான் எடுத்துச் செல்ல.

அதற்கும் மறு நாள், ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் எல்லாம் பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு வருவார்கள். நான்காம் நாள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். கலந்து கொள்ளும் எல்லோருக்கும் பரிசுகள் நிச்சயம். அன்றிரவு கரகாட்டம் பட்டையைக் கிளப்பும்.

நான்கு நாட்களும் ஊரார் அனைவரும் கூடி மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழும் பொங்கலை நினைத்தால் மனதில் சோகமே உருவெடுக்கிறது தற்போது.

ஏங்க, நாளைக்கு காலையில் சர்க்கரைப் பொங்கல் மட்டும் வைத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்ற மனைவியைப் பார்த்தேன். நகரக் கலாச்சாரத்தில் வாழ்ந்த மனைவிக்கு கிராமத்துக் கலாச்சார கொண்டாட்டங்கள் பற்றி தெரியாது என்ற வருத்தம் என்னைப் பீடித்தது. கிராமத்துக் கலாச்சாரத்தில் வளர்ந்த எனக்கு அந்த நாட்கள் திரும்பவும் கிடைக்காத வருத்தம் ஏற்பட்டு வாழ்க்கையின் மீதான எரிச்சல் ஏற்பட்டது.

பிள்ளைகளுக்கு கரும்பு கூட கொடுக்க விடாமல் சளி பிடிக்கும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் வரலாம் என்று தடுத்து விட்டாள். பிள்ளைகளை எதிர்காலத்தில் வேலை பார்க்கும் இயந்திரமாய் வாழ வளர்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள். மனிதனின் கொண்டாட்டங்கள் இன்று பணத்தின் மீது குவிந்து விட்டதால் மனிதன் மறைந்து கொண்டிருக்கிறான். இயந்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

2 comments:

Anonymous said...

wish you happy pongal..
Elango

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொங்கல் வாழ்த்துக்கள். :)

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.