பிறந்ததிலிருந்து ஆரம்பித்து மரணம் வரை விடாமல் தொடர்வது- விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - கடவுள். பல பெயர்களில் ஆண், பெண் கடவுளர்கள் பலர் இவ்வுலகில் உண்டு.
குழந்தை பிறந்ததிலிருந்து கடவுள் தொடர ஆரம்பிக்கிறார். இறப்பின் சடங்கு வரையிலும் கடவுள் தொடர்கிறார். சாம்பலான பின்னாலும், புதைத்த பின்னாலும் வாரிசுகள் மூலம் கடவுள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். செத்தாலும் கடவுள் யாரையும் விடுவதில்லை.
இப்படி இருக்க, ஒவ்வொரு நொடியிலும், எங்கு நோக்கினும், ஒவ்வொருவர் வாழ்விலும் கடவுளர்கள் இல்லாமல் இருக்க முடியாது. சாப்பிடும் போதும், தூங்கும் போதும் கூட.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளர்கள் ஒவ்வொரு மானிடரின் துயர, துக்க, துன்ப, இன்ப காலங்களில் கூடவே இருக்கிறார்கள்.
இப்படித்தான் ஒரு பக்தர் அவருக்குப் பிடித்த ஒரு கடவுள் மீது அன்பு கொண்டு - அவரில்லாமல் நானில்லை என்றே வாழ்ந்து வந்தார்.
அவருக்கொரு பிரச்சினை. அவரின் விருப்ப கடவுளரிடம் சென்று பிரார்த்தனை செய்தார். வாரம் தோறும் செல்வார், அவரின் பிரச்சினை தீர கண்களில் கண்ணீர் வழிய வழிய வேண்டுவார். அவரின் விருப்பக் கடவுள் அவரின் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விடுவார் என்று நம்பினார். அந்த நம்பிக்கை அவரின் பிராய காலத்திலிருந்து தொடர்கிறது. ஒவ்வொரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அவர் கடவுளிடம் வேண்டுவார். அந்தச் செயல் செவ்வனே நடக்கும்.
இப்படித்தான் அவர் கடவுளின் மீது அன்பு, பாசம், பக்தி, அதீத பக்தி வைத்திருந்தார். அவருக்கு கடவுளை விட உயர்ந்தவர், நட்பானவர் வேறு எவருமில்லை. அவருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் கடவுளின் புகைப்படத்தின் முன்பு நின்று கொண்டு பேசுவார். அவரின் கடவுள் போட்டோவில் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினார்.
நம்பிக்கைத்தானே வாழ்க்கை.
இப்படித்தானே ஒவ்வொரு மானிடரும் ஒவ்வொருவர் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகள் மீது வைக்கும் நம்பிக்கை என நம்பிக்கைகள் பல வகைப்படும். பல தரத்திலும் நம்பிக்கைகள் உண்டு.
நம்புவதைத் தவிர மானிடருக்கு வேறு வழி இல்லையே. ஆகவே ஒவ்வொரிடமும் நம்பிக்கையானது உள்ளத்துக்குள் மறைந்து கிடக்கும். அவரவர் எண்ணத்துக்கு ஏற்ப அவர்கள் பலரின் மீதும், பல கடவுள்களின் மீது நம்பிக்கை வைப்பர்.
அந்த பக்தரும் விடாமல் கடவுளின் முன்பு நின்று கொண்டு பிரார்த்திக்கிறார், அழுகிறார், புரள்கிறார், கடவுளின் போட்டோவின் முன்பு நின்று பேசுகிறார். பூ வைக்கிறார், ஊதுபத்தி வைக்கிறார், கடவுளைப் புகழ்ந்து பாட்டுப் பாடுகிறார். இப்படி கடவுளுக்கு பிடித்தாற் போல பல வேண்டுதல்களை பல முறைகளில் செய்கிறார். ஆனாலும் வேண்டுதல் நிறைவேறவில்லை.
அவருக்குள் தன் வேண்டுதலில் ஏதோ குறையிருப்பது போலத் தோன்றுகிறது. சரியான முறையில் வேண்டுதல் செய்தால் கடவுள் நிறைவேற்றி விடுவாரே, இதுவரை வேண்டுதல் நிறைவேறவில்லையே? ஏதோ குறை இருக்கிறது. இப்படி எண்ணினார் பக்தர்.
சோதிடக்காரரிடம் செல்லாமே என யோசித்தார். அவருக்கு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. வேத சோதிடம், நாடி சோதிடம், கைரேகை சோதிடம், எண் கணித சோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம், பிரசன்ன சோதிடம் இதில் எது நல்லது எனப் புரியாமல் குழம்பினார்.
முன்னோரிடம் கேட்கலாமே என வீட்டின் அருகில் இருந்த வயதான பெரியவரிடம் இது பற்றி விசாரித்தார். அவர் வேத சோதிடம் தான் உலகில் இருக்கும் சோதிடத்தில் எல்லாம் சிறந்தது என்றார். அவரின் வழிகாட்டுதல் படி ஒரு சோதிடக்காரரைச் சந்தித்தார்.
பக்தரின் சாதகத்தை ஆராய்ந்து சோதிடக்காரர் உங்கள் வழிபாட்டில் குறையுண்டு என்றுச் சொன்னார். பக்தருக்குப் புளகாங்கிதம். தாம் எண்ணியதை சோதிடரும் சரியாகச் சொல்கிறாரே என. முடிவில் சோதிடக்காரர் ஒரு பரிகாரத்தைப் பரிந்துரைத்தார்.
அதன்படி பக்தர் கடவுளுக்கு பரிகாரத்தை நிறைவேற்றி வேண்டுதலைச் செய்தார். ஆனாலும் கடவுள் பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.
பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.
அடுத்த உபாயமாய் திருவாசகத்துக்கு உருகாத தெய்வமும் உண்டோ என படித்தது நினைவிலாட, பாடினார் மாணிக்க வாசகரின் பாடலை இரவல் பெற்று.
வேண்டதக்கது அறியோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்!
யானும் அதுவே வேண்டின் அல்லால்!
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்!
அதுவும் உந்தன் விருப்பன்றே! (திருவாசகம்)
இப்படி ஓசியில் கிடைத்தப் பாடலைக் கண்ணீர் மல்க பல ராகங்களின் கலவையாகப் பாடி கடவுளரிடம் வேண்டினார். துடித்தார், விம்மினார், அயர்ந்தார், அயராது அழுதார், புரண்டார், துவண்டார், துயருற்றார். இருப்பினும் கடவுள் அவரின் நம்பிக்கையை - அவரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.
கடவுள் தன்னைக் கைவிட்டது எனப் புலம்பினார்.
என்ன செய்வது என்றே புரியாமல் அழுதபடியே தூங்கிப் போனார்.
அவர் தூங்கும் வரை கடவுள் அவரின் வேண்டுதலை நிறைவேற்றவில்லை.
ஏன் அவரின் வேண்டுதலை, அவருடைய பிரிய கடவுள் நிறைவேற்றவில்லை?
ஏதாவது காரணம் இருக்குமல்லவா? அது என்ன?
இந்த வரி படிக்கும் வரை யோசித்திருக்கிறீர்களா?
கர்மவினை, முன் ஜென்ம பாவம், கிடைக்கிறது கிடைக்கும் கிடைக்காதது கிடைக்காது, லூசுப்பய கடவுளாவது, இப்படி பல சிந்தனைகள் உங்களுக்குள் வந்திருக்கும். வரணும், வர வேண்டும், வந்திருக்கும். ஆனால் எது சரியான காரணம்? தெரியாமல் குழம்பி இருப்பீர்கள்.
குழம்ப வேண்டாம்.
இனி தான் நாடகம் ஆரம்பம்.
பக்தர் அழுது, புரண்டு, கதறி, துடித்து வேண்டினார் அல்லவா? தொடர்ந்து அயர்ச்சியில் அயர்ந்து உறங்கி விட்டார்.
பக்தரின் அயர்ந்த தூக்கத்தில் - மயக்கும் உணர்வுகளால் உருவான கனவில் உதிக்கும் மாயாலோகத்தில் அவரின் பிரிய கடவுள் பக்தரின் முன்னால் தோன்றினார். பக்தருக்கு கடவுளைப் பார்த்ததும், அதுவும் தனது பிரிய கடவுளைப் பார்த்ததும், பயத்தில் வியர்த்து விறுவிறுத்து விட்டது. கடவுள் முன்பே வந்து சென்றிருந்தால் பயந்திருக்க மாட்டார். திடீரென முன்னால் வந்தால் யாருக்குத்தான் பயமிருக்காது? இருந்தாலும் கடவுளின் மீது கொண்ட அன்பால், கடவுளிடம் பேச முயன்றார். கடவுள் அவரை என்னுடன் வா என சைகை காட்டினார்.
பக்தரும் கடவுளின் பின்னால் சென்றார்.
அது ஒரு கோவில். அந்தக் கோவிலில் பக்தரின் பிரிய கடவுள் சிலையாக நின்று அருள் பாலித்தார். பக்தர்களின் கூட்டம் முண்டியது. அங்கே கடவுள் ஒருவரை காட்டினார்.
பக்தரும் கடவுள் காட்டிய திசையில் நின்றிருந்தவரைப் பார்த்தார்.
அது பக்தர்.
அங்கே பார் என்பது போல சைகை செய்தார். பக்தரும் தன்னையே பார்த்தார்.
பக்தர் கடவுளரின் தரிசனத்துக்காக வரிசையில் நின்றார். வரிசையின் முன்பு ஒரு வயதான பாட்டி ஒருத்தி நின்றிருந்தார். வரிசை மெதுவாகச் சென்றது. பக்தருக்கோ அர்ஜெண்ட் அஜண்டா ஒன்று. ஆகவே விரைவில் செல்ல வேண்டுமென்ற ஆவலில் கண் பார்வை குறைபாடு இருக்கும் பாட்டி என நினைத்து, அவர் அசந்த நேரம் பார்த்து, தெரியவா போகிறது என அவருக்கு முன்பு சென்று வரிசையில் நின்று விட்டார்.
கடவுள் பக்தரிடம் ’வா போகலாம்’ என்றார்.
பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.
“கடவுளே, எனக்கு ஒன்றும் புரியவில்லையே? ஏன் நீங்கள் எனது வேண்டுதலை நிறைவேற்றி வைக்கவில்லை? காரணம் சொல்லுங்க” என வேண்டி நின்றார்.
சிரித்த கடவுள் ’அங்கே பார்!’ என்றார்
அடுத்த காட்சியை பார்த்தார் பக்தர்.
பாட்டிக்கு தூரப்பார்வை தான் பிரச்சினையே தவிர் கிட்டப்பார்வை துல்லியம்.
தன் முன்னால் நின்றவர், தனக்குப் பின்னால் நின்றவர் என பக்தரின் கால் கட்டை விரலைப் பார்த்துக் கண்டுபிடித்து விட்டார்.
பிறந்ததிலிருந்து, வயதான காலம் வரையிலும் விடாது கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் பக்தை அவர் என்பதால் கடவுளுக்கு அந்தப் பாட்டி மீது கொஞ்சூண்டு பிரியம் அதிகம்.
பக்தரும் வரிசையில் நின்று தன் பிரிய கடவுளிடம் தனது வேண்டுதலைச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொல்லி திருநீரு பெற்று நெற்றியில் இட்டுக் கொண்டார்.
பின்னால் வந்த பாட்டி கடவுளின் முன்னால் நின்று வேண்டினார் இப்படி
”எனக்குப் பின்னால் வந்த ஆள், என்னை ஏமாற்றி முன்னால் வந்து வேண்டினானே அந்த வேண்டுதல் நிறைவேறவே கூடாது இறைவா” என வேண்டியது பக்தருக்குச் சத்தமாகக் கேட்டது.
காலில் சில்லென்று ஏதோ பட விழித்தெழுந்த பக்தருக்கு கனவில் ஒன்றுக்குப் போய் விட்டோமே என நினைத்தார்.
பக்தரின் கனவில் வந்த கடவுளின் பிரசன்னத்தை மாயாலோகம் அவரின் நினைவிலிருந்து விலகியது.
நிதர்சன உலக மூத்திரம் நாற்றமடித்தது.
அம்புட்டுத்தான் நாடகமும், வசனமும் முடிவுற்றது.
சென்று வாருங்கள்.
பின்னொரு பதிவில் பார்க்கலாம்.
வளமுடன் வாழ்க....!
குறிப்பு : எனது புறா ஒன்று - அதன் அலகில் ஏற்பட்ட நோயால் அலகு உடைந்து போய், பட்டினியில் இறந்து போய் விட்டது. என்னால் அதைக் கவனிக்க முடியவில்லை. இரண்டொரு நாளாக வேதனையில் இருக்கிறேன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.