சமீபத்தில் ஒரு நீதிபதி பேசுகையில், "இந்தியாவில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அர்த்தசாஸ்திரம், மனுஸ்மிருதி உள்ளிட்ட வேதங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட கூற்றாக இருந்தாலும், பல்வேறு நாளிதழ்களில் இது தலைப்புச் செய்தியாக வெளியானபோது சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தியா இதுநாள் வரை ஒரு சமூக, சமதர்ம, மதச்சார்பற்ற நாடு என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வானளாவிய அதிகாரம், கேள்வி கேட்க அவ்வளவு எளிதில் முடியாத அதிகாரத்தின் பின்னால் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என வரலாறு சொல்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள 'மதச்சார்பற்ற அரசு' என்ற கொள்கையே இங்கு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கிறது.
"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற சமதர்ம நோக்கோடு இந்தியாவை உருவாக்குவதற்காக, நம் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின் பெரும்பாடுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இன்னல்களையும் துயரங்களையும் கடந்து உருவாக்கிய ஜனநாயக நாட்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், தற்போதைய சூழலில் நாட்டை மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போக்கு நிலவுகிறது. ஆளும் அரசின் கீழ் நிர்வாகத்தில் இருக்கும் சில அமைப்புகளும், குறிப்பிட்ட மதம் மற்றும் மொழிப் பற்றுடைய அதிகாரிகளும் இணைந்து இத்தகைய கருத்துருவாக்கங்களை உருவாக்கி வருகின்றனர்.
இது இந்தியாவை ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கித் தள்ளும் என்பதே உண்மை. இன்னும் கல்வி முழுமையாக கிடைத்திடாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பாமரர்களுக்கு - இது என்னவென்றே புரியாது. கல்வி கற்றவர்களுக்கே புரியாத பல உண்டு.
படித்தவர்கள் மத்தியில் இது குறித்த தெளிவும் விழிப்புணர்வும் மிக அவசியம். மதமும், மொழியும், இனமும் நம்மை நல்வழிப்படுத்தவே இருக்கின்றனவே தவிர, வன்முறைப் பாதைக்கோ அல்லது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கோ அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய கருத்துகளைப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், இந்தியாவைப் பழைய சாதியக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு சென்று, மீண்டும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் கீழ் தள்ளுவதே இவர்களின் மறைமுக நோக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கிறோம் என நீதி தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணி நீக்கப்பட்டது. பார்வையில் ஏழை, பணக்காரன், சாதி, மதம் தெரியும் என்பதால் நீதிக்கு காதுகள் மட்டுமே என சிம்பாலிக்காக இருந்தது இப்போது பார்வையும் உண்டு என மாற்றப்பட்டது. கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி செய்தியைப் படித்துக் கொள்ளவும்.
சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது அரசியல்வாதிகளைப் போல அப்சர்வேஷன்கள் என்ற நிலையில் பல கருத்துக்களை நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அக்கருத்துக்கள் வழக்காகி மீண்டும் தடையாணைகள் பெறப்படுகின்றன.
இந்த யதார்த்தத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.