குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 11, 2018

உலகக் கவி தனுஷ்

பாரதியாரின் பிறந்த நாளான இன்று உலகத் தமிழ் மக்களுக்கு, எதிர்கால தமிழகத்தின் சுப்பர் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டாரும், வரும் காலத்தின் தமிழக முதலமைச்சருமான எனது அன்பு நடிகர் மாண்புமிகு ஸ்ரீலஜி மகாத்மா உயர்திரு தனுஷ் அவர்களின் பாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலே எனக்கும் பெரும் மகிழ்ச்சி. பாரதியாரின் பிறந்த நாளான இன்று தமிழகக் கவியான எம்மான் தனுஷ் அவர்களின் பாடலை நினைவூட்டுவதில் பெரும் மகிழ்வெய்தி உள்ளம் பூரித்து ப்..ஊ..ளகாங்கிதம் மன்னிக்கவும் புளகாங்கிதமடைகிறேன்.

இந்தப் பாடலைப் பாடியவர் அடியேனின் உள்ளம் கவர் கள்வனான மகா நடிகரும், உலகிற்கே ஒப்பாருமிப்பாரும் இல்லா ஒரே மனிதருமான தனுஷ் அவர்கள் என்பதை தமிழ் உலகிற்குச் சொல்வதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

இன்றைய நாள், அந்தக் காலத்தில் ஒரே வரியை ஓராயிரம் தடவை கீரல் விழுந்த ரெக்கார்டு போலப் பாடிப் பாடி புகழடைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவு நாளும் கூட.

எம் மனம் கவர் உலகப் புகழ் பாடகர் தனுஷின் குரலுக்கு முன்னே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் காலணா பெறாது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியதில்லை. மலை எங்கே மடு எங்கே????

சிட்னியில் பிறந்து சட்னியாக வந்த மன்னிக்கவும் பாடகியாக வந்த தீ எனும் அய்யர் ஆத்து மாமியின் பெண் பிள்ளையான பாடகியின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடலைக் கேட்டதும் எனக்குள் தியானம் ஒன்று கூடி உள்ளம் மறந்து உலகை மறந்து வெட்டவெளிக்குச் சென்று விட்டேன். பாடகியின் ’ஒரசிக்கலாம்’ என்ற குரலைக் கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டு தியான நிலை ஒன்று கூடி அந்தப் பரப்பிரம்மனையே பார்த்து விட்டேன் என்றால் பாடகியின் திறமைக்கு அளவேது? 

ஒரே ஒரு பாடலில் சாதாரண மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதமான திறமையை எண்ணி எண்ணி வியக்கிறேன். அதை உங்களுக்கும் சொல்லி மகிழ்கிறேன். இதை விஜய் டிவி ஜட்ஜூகள் சித்ரா, பாரத கலா ரசிகமணி அவார்டு பெற்ற சரண் மற்றும் தெருப்பாடகர் சங்கர் மகாதேவன் வகையறாக்கள் கவனிக்கவும். இப்பாடகியை அழைத்து வந்து விஜய் டிவி கவுரவப்படுத்தி ‘ஒரசிக்கலாம்’ அவார்டு கொடுக்க வேண்டுமென்ற் இந்த நேரத்தில் நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, தமிழக அரசாங்கம் எமது தங்கத் தலைவனின் பாடலைப் பள்ளிகள் தோறும் இறை வணக்கத்திற்கு முன்பாக பாட ஒரு அரசாணையை வெளியிட்டு ஒன்றுக்கும் ஆகாத பாரதியாரை உலகக் கவி என்று சொல்லுவதை விட்டு விட்டு, எம் தலைவர் தனுஷை தமிழகக் கவியாக அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டுமென்று வேண்டு கோள் விடுக்கிறேன். தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கு இந்தக் கவியைக் கொண்டு சென்று, மத்திய அரசாங்கத்திடம் படுத்துப் பேசி மன்னிக்கவும் பணிந்து பேசி முடிந்தால் யோகா வகுப்பின் போது இப்பாடலினைப் பாடியபடி யோகா செய்ய ஆவண செய்தல் வேண்டுமாய் உத்தரவிடும் படிக் கேட்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

(பாடகி தீ - சிட்னி அய்யாரத்து மாமி பின்னு)

இதோ தமிழகக் கவிஞரும், கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே ஒரு எழுத்தாளருமான எம்மான் தனுஷ் அவர்களின் பாடல் கீழே.


பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

பெண் : உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஆண் : ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

பெண் : ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா
ஆண் : வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ

பெண் : என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி

பெண் : ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி ரவுடி

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

ஆண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

பெண் : ஹே என் சிலுக்கு சட்ட நீ
வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : மை டியர் மச்சான்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நீ மனசு வெச்சா

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நம்ம ஒரசிக்கலாம்

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : ஹே  ஹே  ஹே

ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி……

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : ரவுடி பேபி

============================


பாடலைக் கேட்டு ரசிக்க !

இலக்கிய உலக அன்பர்களே, உலக தமிழக டிவிப் பெருமக்களே, மேலே கண்ட பாடலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் உள்ளம் உற்சாகத்தால் துள்ளும். பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் அர்த்தங்களை விவரிக்க வார்த்தைகள் போதாது. அது மட்டுமின்றி பாடல்களில் தொக்கி நிற்கும் முடிச்சுகளின் மர்மங்களை எம்மான் தனுஷால் மட்டுமே அவிழ்க்க முடியும். அந்தளவுக்கு கருத்துப் பொதிகள் பொதிந்து மறைந்து கிடக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று !

யூ ப்ளஸ் மீ திரீ மாமா - என்ன ஒரு கருத்து? இந்த நான்கு வார்த்தைகளில் கொட்டிக் கிடக்கும் மர்மங்கள் தான் எத்தனை எத்தனை? பிளஸ் என்பது சேர்வதைக் குறிக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் தான் அது. மாமா என்பது அன்பினை மட்டும் குறிப்பது அல்ல? உறவைக் குறிப்பது. குறி என்றவுடன் சிறு மதியாளர்களுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றிடும். நான் சொல்வது சுட்டுவது என்ற அர்த்தத்தில். ஒன்னும் ஒன்னும் இரண்டு ஆனால் யூவும் மீயும் சேர்ந்தால் மூன்று என்ற அர்த்தம் சொல்லும் அற்புத தத்துவம்தான் மனித வாழ்க்கையின் உயர் தத்துவம். ஒரே ஒரு வரியில் மட்டும் இத்தனை அர்த்தங்களைப் பொதித்து எவராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்து கொள்ள இயலாத கவியை மன்னிக்கவும் கவிதையை எழுதிய எம்மான் தனுஷ் அவர்களை இலக்கிய உலகம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமா? இல்லை தகுமானு கேட்கிறேன்?

நீங்கள் எல்லோரும் மூச்சடைத்துப் போய், விழித்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. தனுஷ் அவர்களின் பாடலின் அர்த்தங்களும், அதன் ராகங்களும் சாதாரண இலக்கியவியாதிகளான உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியாதது அல்ல. இருப்பினும் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களைப் போன்ற அரைகுறை கவி ஞானம் உள்ளவர்களால் பரிந்துரைத்தால் தான் சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என சொல்லிக் கொள்கின்றார்கள்.

ஆகவே வரும் வரும் எம்மான் தனுஷ் அவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருதுக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைத்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறேன்.

உலகே மெச்சும் அற்புதக் கவியும், பாடகரும், நடிகருமான தனுஷ் அவர்களுக்கும், இசைகலெக்‌ஷனின் ஒரே வாரிசுப் புதல்வனான யுவன் செங்கர் ராஜாவுக்கும் பாரத தேசம் உயரிய விருது கொடுத்து கவுரவிக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வாழ்க உகலக் கவி தனுஷ் ! 

Monday, December 10, 2018

இந்தியா பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கிறதா?

சுப்ரமணியம் சாமியின் ஒவ்வொரு ட்வீட்டுகளையும் உன்னிப்பாக கவனிப்பேன். அவரின் ட்வீட்கள் யாருக்கோ செய்தியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கும். அந்த செய்தியின் தாக்கம் இரண்டொரு நாளில் வேறு எங்காவது வெளிவரும். அந்த முறையில் தமிழ் ஹிந்து திசையில் வெளிவந்த ஒரு கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது. அந்தக் கட்டுரை பலராலும் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் கூட பகிரப்படவில்லை என நினைக்கிறேன். ஆகவே அந்தக் கட்டுரை கீழே!


பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளும், டிவிகளில் வரும் விவாதங்களும் மக்களை திசை திருப்பவும், உண்மையை எவரும் உணர்ந்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான் வெளியிடப்படுகின்றன. இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் என எதிர் துருவ பத்திரிக்கைகள் இருந்தாலும் ஐந்து, பத்துக்காசு ஊழல்களைப் பற்றித்தான் அப்பத்திரிக்கைகள் எழுதும். டிவிக்களில் சமீபத்தில் தந்தி டிவியும், நியூஸ் செவன் டிவியும் ஆளும்கட்சியிடம் அடிபணிந்த விஷயம் நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. ஆகவே டிவி, செய்தி தாள்களின் செய்திகளின் உண்மைத் தன்மை 100 சதவீதம் நம்பிக்கையானதல்ல. அவசர செய்திகள், ஆலோசனைகள், அறிவுப்பகளை மட்டுமே நம்புங்கள். பிற அரசியல், பொருளாதார செய்திகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைகள்.

இனி அந்தக் கட்டுரை:


இந்தியப் பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கிப்போவது உண்மைதானா? ஆமாம். அதே சமயம், நொறுங்கிப்போகும் அளவுக்கு இல்லை, மீட்கும் நிலையில்தான் பொருளாதாரம் இருக்கிறது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைச் சில உண்மைகளிலிருந்து அறிவோம்.

1. இரு நிதியாண்டுகளாக, அட்டவணைக் குறியீட்டெண்ணுடனான ஜிடிபி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துவருகிறது.

2. இந்தியாவின் தேசிய முதலீட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் குடும்ப சேமிப்பு 34% என்பதிலிருந்து 2017-ல் 24% ஆகச் சரிந்துவிட்டது. குடும்பங்கள் அல்லாத நிறுவனங்களின் சேமிப்பு ஜிடிபியில் 5% மட்டுமே. அரசின் தேவையில்லாத குறுக்கீடுகளாலும் வரிவிதிப்பு நடவடிக்கையாலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ‘பொதுச் சரக்கு சேவை வரி’ (ஜிஎஸ்டி) நடைமுறை என்பது பெரும் தோல்வி. நான் எவ்வளவோ தடுத்தும்கூட நாடாளுமன்றத்தில் பெரிய விழா நடத்தி இதை அமல்படுத்தினார்கள்.

3. அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவு விரைவாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டது. வங்கிகள் புதிதாகக் கொடுக்கும் கடன் அளவைவிட வாராக்கடன் வளர்ச்சி வீதம் அதிகரித்தது. அரசுத் துறை வங்கிகள் நிதி வழங்கலை மேற்கொள்ள முடியாமல் நொறுங்கக்கூடிய அளவுக்கு வாராக்கடன் சுமை இருக்கிறது. இது 2019-ல் எல்லாத் துறைகளிலும் பிரதிபலிக்கும்.

4. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி அதிகம் தேவைப்பட்ட நேரத்தில் மிக முரட்டுத்தனமாக நிதி ஒதுக்கலை நிதியமைச்சகம் வெட்டிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ கொள்கை வெற்றிபெற அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு மட்டும் சுமார் ரூ. 72 லட்சம் கோடி தேவை. ஆனால், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் ‘உண்மை மதிப்பு’ 2014-க்கு முன்பு இருந்ததைவிடக் குறைவு.

5. உற்பத்தித் துறையில் அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் வளர்ச்சி 2% முதல் 5% அளவுக்கே இருக்கிறது. இத்துறைதான் தொழில் பயிற்சியே இல்லாத அல்லது ஓரளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

6. இந்திய வேளாண் விளைபொருட்கள்தான் உலகிலேயே மிகவும் மலிவு. உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலும் விளைச்சலை அதிகபட்சத்துக்கு உயர்த்த முடியவில்லை. வேளாண் விளைச்சலை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதியையும் அதே சமயத்தில் அதிகப்படுத்துவது அவசியம். அதிக பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேளாண் துறை தனது ஆற்றலுக்கும் குறைவாகவே உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டையும் அளிக்கிறது.

7. 2014 முதல் தொடர்ந்து நான்கு ஆண்டு களுக்குக் கச்சா பெட்ரோலியத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வெகுவாகக் குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 2018 நடுப்பகுதி வரை நிலையாகவே, ஒரு டாலருக்கு ரூ.65 என்று இருந்தது. இவ்வளவு சாதகமான நிலைமை இருந்தும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே 2014-17 காலத்தில் குறைந்தது.

எவையெல்லாம் அச்சுறுத்தல்

2018-ல் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ஆக இருக்கிறது. கச்சா பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 60 டாலர்களாக உள்ளது. இது நம்முடைய அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அச்சுறுத்தலாகியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடிய இந்தத் தருணத்தில் நேர்மையாக நாம் நமது பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கொள்கைகளை மாற்றிக்கொண்டு உச்சம் தொட வேண்டும். கட்டமைப்புகளில் மாற்றம் செய்து ஆண்டுக்கு 10% வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும்.

அதற்கு முதலாவதாக, காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சித்தாந்தரீதியாக மாற்று திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர்களுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஊக்குவிப்பு தர வேண்டும். வருமான வரியை முழுதாக ரத்துசெய்வதன் மூலம் ஊக்குவிக்கலாம். கடுமையான வரிகள், தீர்வைகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.

உலக அளவில் போட்டியிடக்கூடியதாக நம்முடைய பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் நாம் கையாள வேண்டும். அதற்கு அரசியல்ரீதியாகவும் நாம் காய்களை நகர்த்த வேண்டும்.

தனிநபர்களும் குடும்பங்களும் தங்களுடைய வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. பழையபடி உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். அரசின் முன்னுரிமையாக இருக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கப் புதிதாகச் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உடனடி அவசிய நடவடிக்கைகள்

1. சேமிப்புக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அளவுக்கு வட்டி வீதம் உயர்த்தப்பட வேண்டும், சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தக் கூடாது, சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

2. வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி 9% ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

3. 2019 நிதியாண்டு முழுக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 தான் என்று அரசே நிர்ணயிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் தேவைக்கேற்ப மாறுதல்களைச் செய்துகொள்ளலாம்.

1965-ல் கடுமையான உணவுதானிய பற்றாக் குறையிலிருந்து ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மாறியிருக்கிறோம். 1990-91-ல் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு ‘உயர்வேகப் பொருளாதார நாடாக’ மாறியிருக்கிறோம். நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாற்றை வினய் சீதாபதி எழுதியிருக்கிறார். ‘சோவியத் சோஷலிச பாணி ஜிடிபியாக (1950-1990) ஆண்டுக்கு 3.5% ஆக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, என்னுடைய பொருளாதார திட்டங்களைப் பயன்படுத்தி 8.5% அளவுக்கு உயர்த்தியுள்ளார் ராவ்’ என்று அதில் எழுதியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 71 ஆண்டுகளில் மிக நெருக்கடியான பொருளாதார நிலையிலிருந்து எளிதாக மீண்டுவந்திருக்கிறது. அந்தப் பழைய வரலாறே நமக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

- சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர், பொருளியல் பேராசிரியர், மத்திய வர்த்தகத் துறை முன்னாள் அமைச்சர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

 நன்றி : தமிழ் இந்து திசை

https://tamil.thehindu.com/opinion/columns/article25603583.ece