குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, October 30, 2016

சன் டிவியின் தமிழ்மாலை

வீட்டில் வீடியோகான் பிளாக் அன்ட் வொயிட் டிவி இருந்தது. வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள், குழந்தைகள், நண்பர்கள் என்று வீட்டில் ஒளியும் ஒலியும் பார்க்க வருவார்கள். தூர்தர்சனில் நள்ளிரவில் தமிழ் படம் போடுவார்கள். கிட்டத்தட்ட 20 பேராவது வருவார்கள். இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் சன் டிவி தன் முதல் டிஜிட்டல் பயணத்தைத் துவக்கியது. ஊரில் பெரிய கொடை வைத்து கேபிள் டிவி கனெக்‌ஷன் கொடுத்தார்கள். மாமாவை நச்சரித்து கேபிள் வீட்டுக்கு வந்து விட்டது. 

பனிரெண்டு மணி வாக்கில் தான் சன் டிவி ஆரம்பிக்கும். அதுவரை திரையில் சினிமா பாடல்கள் மட்டும் தான் ஒலிக்கும். அந்த மணியிலிருந்து இரவு வரை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைவதே இல்லை. சாப்பாடு தூக்கம் எல்லாம் டிவியின் முன்னால் தான். காணாததைக் கண்டால் விட முடியுமா? ஒரே அதிசயம் தான். துல்லியமான படம். தூர்தர்சனின் ஈக்கள் மொய்க்கும் ஒளிபரப்பினைப் பார்த்துச் சலித்துப் போன மனதுக்கு இந்தத் துல்லியம் மாபெரும் மகிழ்ச்சியைத் தந்தது. 

அனுபவ் பிளாண்டேஷன்ஸ் விளம்பரங்கள் தூள் பரக்கும். ரமேஷ் கார்ஸ் விளம்பரம் கிளப்பும். என்னிடம் வாங்க என்ற அழைப்பு அப்போது பிரபலம். தீபாவளி நாட்களில் சன் டிவி போட்டிகள் நடத்தி பரிசுகளை ஒவ்வொரு பிரபலமான ஊர்களின் கடைகளில் பெற்றுக் கொள்ளச் சொன்னது. ஊரெங்கும் சன் டிவி. சன் டிவியின் பிரபலமான வர்ணனையாளர் ரபி பெர்னாட் அப்போது பிரபலம். பெப்சி உங்கள் ஜாய்ஸ் உமா, பல நிகழ்ச்சிகளைத் தொகுந்து வழங்கும் உமா பத்மநாபன் பெண்களிடையே பிரபலம். சிலோனின் அப்துல் ஹமீது நடத்திய குடும்ப நிகழ்ச்சி என கிளப்பியது சன் டிவி.

அடுத்து அடுத்து பல சேட்டிலைட் சேனல்கள் வந்தாலும் சன் டிவியின் ரீச்சை அவர்களால் தடுக்க முடியவில்லை. சித்தி சீரியல் தமிழ் மக்களின் ரசனையைப் புரட்டிப் போட்டது. சினிமாக்கொட்டகைகள் காற்று வாங்கின. பத்திரிக்கைகள் படிப்பதும், உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவதும், அக்கம் பக்கத்து வீடுகளில் உறவாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போக ஆரம்பித்தது.

டிஜிட்டல் வழி தகவல் சாதனம் - பேஜர்

1997 களில் என்று நினைவு. முதன் முதலாக பேஜர் வந்தது. இடுப்பு பெல்டில் பெட்டி போல வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அதன் பிறகு தமிழில் பேஜர் வந்தது. பின்னர் மொபைல் போன் வந்தது. பிபிஎல் என்று நினைக்கிறேன். பனிரெண்டு ரூபாய் அவுட்கோயிங்க் கால் என நினைக்கிறேன். பல் வேறு கம்பெனிகள் கட்டணத்தைக் குறைத்துக் கொண்டே வந்ததால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்தன. அது  ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது. தரை வழி போன்கள் மதிப்பிழந்தன. அருகில் அமர்ந்திருக்கும் சகோதரனிடம் கூட பேசவிடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டது மொபைல் போன்கள்.


(தினம்தோறும் புதுப்புது வடிவங்கள் எடுத்து மக்களின் பாக்கெட்டில் பெரும் ஓட்டைகளைப் போட்டுக் கொண்டிருக்கும் நவ நாகரீக கொள்ளையர்களாக மாறிப்போன மொபைல் போன்களின் ஆரம்ப வடிவம் )

இன்றைக்கு சாட்டிலைட் டிவிக்களின் ஆதிக்கமும், மொபைல் போனின் ஆதிக்கமும் உலகை துவம்சம் செய்து வருகின்றன. சக மனிதர்களிடையே இருந்த நேசத்தைக் குறைத்து விட்டன. ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாக மாறி வாழ ஆரம்பித்து விட்டான்.

சன் டிவி தன் அதி வீச்சால் ஒரு முறை ஆட்சியையே மாற்றியது.பின்னர் அமைச்சரை உருவாக்கியது. இன்றைக்கும் கோடிகளில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவையே ஊழல் பிரச்சினையில் ஆட வைத்தது. சன் டிவியின் பிரபலமாகி ஆட்சி மாற்றத்திற்குக் காரணமான ரபி பெர்னாட் இப்போது ஜெயா டிவியில் இருக்கிறார். அனுபவ் பிளாண்டேசன், ரமேஷ் கார்ஸ் மோசடிகள் நடந்தன. பல மக்கள் பாடுபட்ட சேர்த்த பணத்தை இழந்தனர். இப்படி ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மொபைல் போன் சந்தையோ உலகையே அசைக்கின்றன. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தை தேர்ந்தெடுக்க கூடிய வல்லமைக்கு இன்றைய மொபைல் உலகம் மாறி விட்டது. 

பத்திரிக்கைகள் தங்கள் முகத்தை மாற்றிக் கொண்டன. காலத்துக்கு ஏற்ப மாறினால் தான் தொழில் செய்ய முடியும். அச்சுப்பத்திரிக்கைகள் இன்றைக்கு சாட்டிலைட் சேனல்களாக மாறி விட்டன. மொபைல் ஆப்களில் செய்திகள் வெளியிடுகின்றன. எல்லாம் மாறி விட்டன.

ஆனால் இத்தனை நன்மைகள் நடந்தாலும் மக்களின் வாழ்க்கை தனிமைப்படுத்தியதாக இந்த இரண்டும் மாற்றி விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் டிவியின் முன்பு முடங்கிக் கிடக்கின்றார்கள். சிறார்கள் கார்ட்டூன் சேனல்களில் முடங்கி விட்டனர். படிப்பது குறைந்து விட்டது. மூளைகள் சேட்டிலைட் சேனல்களில் அடகு வைக்கப்பட்டு விட்டன. படிப்பாளிகள் கூகிளில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்தல் ஆரம்பித்து கொலை வரைக்கும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது. ஆனால் மனிதன் அழிய ஆரம்பித்திருக்கின்றான். மேலும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல விரும்பவில்லை. புரிந்து கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு நாளும் மொபைல் போனில் பேசுவது எவ்வளவு நேரம்? டிவி பார்ப்பது எவ்வளவு நேரம்? என்று கணக்கெடுத்துப் பாருங்கள். அதிர்ந்து போய் விடுவீர்கள். நாம் பேசுவது ஒவ்வொன்றும் முக்கியமானவையா? அவசியம் கருதி தான் பேசுகின்றோமா? என்று யோசியுங்கள்? ஆச்சரியப்படுவீர்கள். 

ஆகவே டிவி பார்ப்பதையும், மொபைலில் பேசுவதையும், வாட்சப்பில் மெஜேஜ் பார்ப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டால் உங்களுக்குள் நிகழும் அற்புதங்களை நிச்சயமாக உணர்வீர்கள். தேவையென்றால் பயன்படுத்தலாம் தப்பில்லை. அதையே அதிகமாகப் பயன்படுத்துவது என்பது தேவையற்றது அல்லவா?

என் பள்ளிப்பருவ தோழனின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன். சுவையான சமையல் உண்டு நண்பனின் குடும்பத்தோடு அளாவளாவி மகிழ்வோடு  வீடு வந்து சேர்ந்தோம். விடிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு பிள்ளைகளுக்கு இனிப்புகளைக் கொடுத்து விட்டு கோவிலுக்குச் சென்று வந்தேன். பின்னர் அக்கம்பக்கத்து வேற்று மத வீடுகளுக்கு இனிப்பும் பலகாரங்களைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தார் மனைவி. பிள்ளைகள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலையில் கொஞ்சம் பட்டாசுகளை வெடித்து விட்டு சிற்றுண்டி உண்டு விட்டு தீபாவளி நாளை கொண்டாடினோம். இதற்கு முக்கியமாக நான் செய்தது தீபாவளி அன்று டிவியை முற்றிலுமாக அனைத்து விட்டேன். மொபைல் போனையும் தான். 

ஆகவே நண்பர்களே, டிவியையும், மொபைல் போனையும் அவசியம் தேவையென்றால் உபயோகியுங்கள். இல்லையென்றால் தூர வைத்து விடுங்கள். அவை உங்களின் நேரத்தையும் மகிழ்ச்சியையும் கொன்று கொண்டிருக்கின்றன.

Friday, October 28, 2016

ஒரு பதிவு ஒரு பயணம்

நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை தினமலர் தீபாவளி மலரில் பல பெரிய மனிதர்கள் எழுதி தள்ளி இருக்கின்றார்கள். நம்ம ராசி அப்படி போலும். பிளாக்கில் இரண்டொரு கடிதப் பதிவுகளைக் கூடப் பார்த்தேன். இருக்கட்டும் ஒவ்வொருவருக்கும் யாரோ ஒரு நண்பர் இருப்பார் அல்லவா? எனது அந்தப் பதிவைப் படித்து விட்டு சில நண்பர்கள் போனில் அழைத்து அழ வைக்கின்றீர்களே என்று புலம்பினர். அப்படியெல்லாமா நாம் எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் நண்பர் “ஃபெதர் டச் தருகிறது உங்களின் எழுத்து” என்கிறார். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. அவரவர் பார்வையில் எனது பதிவுகள் பல்வேறு தோற்றங்களைப் பதிவு செய்கிறது போலும். ஒரு சினிமா இயக்குனர் பாடல் எழுதுகின்றீரா என்று கேட்டார். மற்றொரு நண்பர் நல்ல கதையொன்று எழுதித் தாருங்களேன் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறொரு நண்பர் பதிவுகளில் கோர்வையான பதிவுகளை எடுத்து வா.மணிகண்டன் போல புத்தகமாக்கி வெளியிடுங்கள் என்கிறார். பார்க்கலாம் அதற்கென காலம் நேரம் வர வேண்டுமல்லவா? இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

இன்றைக்கு அடியேன் எழுதிய பழைய எழுதிய பதிவுகளைப் படித்துப் பார்த்து வருகையில் சரவணனின் பதிவு ஒன்று கிடைத்தது. அதில் கடைசி வரியைப் படிக்கையில் எனக்குள் பயமே ஏற்பட்டு விட்டது. ”அவர் பொருட்டு எல்லோருக்கும்” என்று எழுதி வைத்து விட்டார். கோவையில் போன வருடம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இந்த வருடம் வருவேனா மாட்டானா என்று பயமுறுத்தும் வேலை பார்க்கிறது மழை. 

இதோ கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் விசயம் விளங்கும்.


2008ல் சரவணனுடன் உரையாடிய போது அவருக்குள் நிகழ்ந்த நெகிழ்ச்சியை வார்த்தையாகப் பதிவு செய்து விட்டார். அவரின் பெருந்தன்மை அது.அவர் இப்போது கிட்டத்தட்ட ஒன்பது புத்தகங்களின் ஆசிரியர். மிக நல்ல எழுத்தாளர். எந்த கோடுகளும் இன்றி சகிப்புத்தன்மையும் இன்றி எழுதுபவர். இதுவரை அவரின் ஒரு புத்தகங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை. அவரை நேரில் சந்திக்கும் போது ஓசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அரசே இலவசங்களைக் கொடுக்கிறது சரவணன் கொடுக்கமாட்டாரா?

மழை வேண்டி ஒரு சிறு பயணம் செய்யவிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேண்டி இறைவனிடம் முறையிட நானும் மனையாளும் செல்லவிருக்கிறோம். இதெல்லாம் ரொம்பவும் ஓவரா இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருந்தாலும் ஒரு நப்பாசை எனக்குள் இருக்கிறது. ஆகவே எனது பயணம் இனிதே தொடங்கவிருக்கிறது.

”மழையே விடாது பெய்து உலகைச்  சுபிட்சமாக்குக” என வேண்டிக் கொள்கிறேன்.

சரவண கார்த்திகேயன் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இனிய நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனது சகோதரர் சிவாவிற்கு அன்பு வாழ்த்துக்கள்.

எனது மூத்த சகோதரர் காமராஜ் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜெயமோகனின் அறச்சீற்றம்

கடந்த வாரம் என்று நினைக்கிறேன். வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் ஒரு பையனை இரண்டொருவர் சேர்ந்து அடித்து துவைத்தனர். பார்த்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டு எனது நண்பர்களை அழைத்து என்ன செய்யலாம் என்றுக் கேட்டேன். பல இடங்களில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கென முஸ்தீபுகளைச் செய்த போது அது முடிந்து போன சமாச்சாரம் என்ற தகவல் கிடைத்தது. ஆசிரியர்கள் பணி மாறுதலும் அந்த பசங்களுக்கு டிசியும் கொடுக்கப்பட்டதாகவும், அடி வாங்கிய பையன் விரும்பினால் இருவரின் மீது வழக்குப் பதியலாம் என்ற செய்தி கிடைத்ததும் தான் மனசு சற்று ஆசுவாசப்பட்டது. இது ஒவ்வொரு மனிதனுக்குள் உண்டாகும் அறச்சீற்ற உணர்வு. எனக்கு ஏற்பட்டது அந்த அடி கொடுத்த பையனின் மீதான கோபம் இல்லை. அங்கு தர்மம் மீறப்படுகிறது. அதனால் சீற்றம் உண்டாகிறது. அவ்வளவுதான் விஷயம். நீ யார் கோபப்பட? உனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் இருக்கிறது என்னிடம்.

சாலையில் அடிபட்டுக் கிடப்போரைக் கண்டு கொள்ளாமல் சென்றால் மனிதனா நீ என்றெல்லாம் பேசுகின்றோமே அது என்ன விதத்தில் சரி? சிலர் ஓடோடி உதவி செய்கிறார்களே அதைப் போலத்தான் கடும் கொடும் செயல் நடக்கும் போது மனிதர்களுக்குள் உண்டாகும் கோபம். அதே போலத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற வீடியோக்களைப் பார்த்ததும் படபடப்பும் நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஹீரோயிசமும் வெளி வந்து விடும். 

இதே போலத்தான் ஜெயமோகனும் செய்திருக்கிறார். அவருக்கு தன் கோபமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, எழுதி விடத்தான் செய்வார். அவரின் அந்தக் கோபம் அந்தப் பெண்மணி மீது உண்டானது என்று முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளால் நாட்டுக்கு எவ்வளவு இழப்புகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. நேற்று கூட சுப்ரீம் கோர்ட்டில் 85,000 கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இதுவரை கடன் கட்டாமல் தவிர்த்து வரும் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறது நம் மத்திய அரசு. வங்கிப் பணம் மக்களுடைய பணம் அல்லவா? வங்கிகள் திவாலானால் மனிதன் வங்கி மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை கூட சிதறுமானால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஹர்சத் மேத்தா என்ன செய்தார்? ஏதாவது நடந்ததா? பெரும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் வங்கி மேலாளர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றனவே அதையெல்லாம் யாரால் என்ன செய்து விட முடியும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

வங்கிகள் சாதரண மனிதனின் நம்பிக்கை. பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட காசைக் கொடுத்து வைத்துப் பின்னர் திரும்ப வாங்க முடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வங்கிக்கு நம்பிச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கைக் குலையும் படி நடந்து கொள்வது சரி என்கின்றார்களா? 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோரால் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல், மக்கள் மீது அலட்சியம். அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒன்றையே வேலையாக வைத்துள்ளார்கள். 

ஜெயமோகன் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் வேகத்தினைப் பார்த்துதான் கோபத்தில் எழுதி இருப்பார். இன்னுமா நாம் ஏமாற வேண்டும்? இப்படியுமா ஒரு அரசு அலுவலர் வேலை செய்வார்? என்ற உடனடிக் கோபம் தான் அது. அதற்காக அவரை இரண்டு நாட்களாக வறுத்து எடுப்பது சரியல்ல. கடந்து செல்ல வேண்டிய விஷயம் இது. ஜெயமோகனுக்கு உண்டானது அறச்சீற்றம். அது அழுக்கு அல்ல.

சிவா தன் பிளாக்கில் எழுதி இருந்ததை இங்கு மீள் பதிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் உண்மை. 

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 

ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.

நன்றி :  நிகழ்காலத்தில் சிவசுப்ரமணியன்

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Saturday, October 22, 2016

நண்பனுக்கோர் கடிதம் - மங்கை நீ மாங்கனி

பட்டுக்கோட்டைக்கும் புதுக்கோட்டைக்கும் செல்லும் பேருந்துகள் ஆவணம் வழியாகத்தான் செல்லும். தஞ்சாவூர் பெரிய கோவிலின் வழியாக வரும் காவிரி ஆற்றின் கிளை நதி ஊரின் கிழக்கே செல்லும். கடைமடைப் பகுதியாதலால் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது. நதி தாண்டியதும் வயல்கள் பரவிக்கிடக்கும். கிளை நதியிலிருந்து பிரியும் சிறிய ஆற்று வாய்க்காலும் கடல் நோக்கிச் செல்லும். இந்தக் கிளை நதியின் மேல்புறமாகத்தான் அடியேன் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி இருக்கிறது.  


(எனது அலுவலகத்தில் 1997ம் வருடத்தின் புகைப்படம்)(மறைந்த எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம்)

ஒன்பதாம் வகுப்பில் தான் எனது பள்ளித்தோழன் ஆலத்தைச் சந்தித்தேன். ஊரில் ஆலத்தின் அப்பாவும் எனது தாத்தாவும் நண்பர்கள். தாத்தா மாணிக்கதேவர் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் வீரராக இருந்தவர். அப்போது அவர் மலேசியாவில் இருந்தாராம். மலேசியாவில் பெரிய கடை வைத்து நடத்திவர் தான் ஆலத்தின் அப்பா இஸ்மாயில் ராவுத்தர். பெரிய மட்டப்பாறை வீட்டில் தான் வசித்து வந்தார். 

ஆலத்திற்கு மூன்று சகோதரர்கள். அக்பர், ஒளரங்கசீப், பகதூர்ஜா  பின்னர் ஜகாங்கீர் ஆலம் என இவன். மன்னர்களின் பெயர்கள் அல்லவா? அதற்கேற்ப ஆலம் இளவரசன் போலத்தான் வாழ்ந்தான். பள்ளியில் அவனுக்கு என்று தனி நட்பு வட்டமே உண்டு. வித விதமான உடைகள், உணவுகள் என அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருந்தது.

ஆலம் ஏன் என்னிடம் நட்பு கொண்டான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனது பெயருக்கு அடுத்த பெயர் அவனது. பரிட்சையில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தான். எனது நட்பு அவனுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் என்னிடம் நெருங்கிப் பழகினான். எனக்கு அவன் போட்டியில்லை என்பதால் நான் அவனைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. தேர்வில் எனது பேப்பரை பெற்று அப்படியே காப்பி அடித்து வைப்பான். பாஸ் செய்வதற்கு மட்டும் தான் எழுதுவான். அதிக மதிப்பெண் பெறுவது அவன் நோக்கமல்ல. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டான். உபயம் அடியேன்.

ஜோசப் வாத்தியாரிடம் டியூசன் படிக்கச் சென்ற போது முதன் முதலாக  ஆலத்தின் வீட்டுக்குச் சென்றேன். கத்தரிப்பூ கலரில் அழகான டப்பாவில் இனிப்புகள் இருந்தன. எடுத்து என்னிடம் கொடுத்து அனைத்தையும் சாப்பிடு என்றான், ஓவல் காப்பி கொடுத்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தன. ஓவல் டின் காப்பி எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. 

பத்தாம் வகுப்பு வந்த பிறகு வாரம் தோறும் அவனது வீட்டுக்குச் சென்று இருவரும் சேர்ந்து படிப்பதுண்டு. எனது சில நண்பர்களும் என்னுடன் வருவார்கள். ஆலத்தின் அப்பாவுக்கு அவன் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற அடங்காத ஆசை. ஆனால் ஆலமோ படிப்பது என்றால் எட்டிக்காயாக நினைப்பான். அப்பாவின் ஆசைக்காக படிப்பான். அவனது எழுத்து கோர்வையாக இருக்கும். இதுவரையிலும் அவனைப்போல எழுதுபவரை நான் பார்த்ததே இல்லை. கோடு போட்டது போல வெகு அழகான கையெழுத்து. 

சிறிய வயதில் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதது காலத்திற்கேற்ப கிடைக்க வேண்டும். எல்லாமும் கிடைத்து விட்டால் போகும் வழி மாறி விடும். பத்தாம் வகுப்பிலேயே சிகரெட், தண்ணீர், சீட்டு என்று பழகிக் கொண்டான். வேறு என்ன பழக்கங்கள் இருக்கின்றனவோ அத்தனை பழக்கங்களும் அவனிடம் தொற்றிக் கொண்டன. அவனிடமிருந்து நான் தருவித்துக் கொண்டது சிகரெட். பாரின் சிகரெட் பண்டில் பண்டிலாக குடிப்பான். அடிக்கொரு தடவை டீ அருந்துவான். அப்பா மலேஷியா சென்று விட்டால் குஷியாகி விடுவான். கேட்க கேட்கக் பணம் கொடுத்து செல்லமாக வளர்த்தார் அவனின் அம்மா. அவன் முகம் சுண்டி விட்டால் அந்தம்மாவுக்குத் தாங்காது.

அடிக்கடி எனது வீட்டுக்கு வருவான். இருவரும் பத்தாயப்பெட்டிக் கொட்டைகையிலும், மாமரத்தின் அடியிலும் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்போம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அவனுக்கும் எனக்குமான நட்பு அவ்வப்போது பார்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு எப்போதாவது வீட்டுக்கு வருவான். நானும் சென்று வருவேன். அதன் பிறகு முற்றிலுமாக நின்று விட்டது. கரூருக்கு வந்த பிறகு அவன் ஆவணம் கைகாட்டியில் இருக்கும் வியெஸ்ஸெம் மகளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் இரண்டு குழந்தைகள் என்றும் கேள்விப்பட்டேன். ஒரே ஒரு முறை போனில் பேசினேன்.

எனக்குத் திருமணமான பிறகு ஒரு முறை அவன் வீட்டுக்குச் சென்றேன். காரின் ஓட்டுனர் வீடு பூட்டிக் கிடக்கிறது என்றார். திரும்பி விட்டேன். அவன் இறந்து விட்டான் என்றுச் சொன்னார்கள்.

நானும் அவனும் பழகிய அந்த இரண்டு வருடங்கள் வெகு இன்பமானவை. அர்த்தமுள்ளவை. வாழ்வின் அத்தனை சுகங்களையும் அவன் அந்த வயதில் அனுபவித்தான். நான் அவனோடு சாட்சியாக மட்டுமே இருந்தேன். பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சிகரெட் புகைப்பான். சன்னலைத் திறந்து வைத்து விடுவான். நான் பசித்திருப்பதை அவனால் சகிக்கவே முடியாது. வாய்க்குள் மலரும் அருமையான புன்னகை கொண்டவன். கண்கள் மட்டுமே சிரிக்கும். அவனின் புன்னகை மோகனப் புன்னகை. அவன் அப்பாவுக்கு மட்டுமே பயப்படுவான். அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

ஆவணம் கைகாட்டி ஸ்டார் தியேட்டரில் நானும் அவனும் ஒரு இரவில் இரண்டாவது ஆட்டத்தில் விஜயகாந்ந் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருக்கிறோம். என்னை தன் பைக்கில் அமர்த்தி வைத்துக் கொண்டு படு வேகமாகச் செல்வான். 

கிராமப்புறங்களில் இருக்கும் ஊனமுற்றவர்களின் பாடு என்னவென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனதுக்குள் புழுங்கிப் புழுங்கி ஏதோ ஒரு பெட்டிக்கடையோ அல்லது ஏதோ ஒரு கடையிலோ தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். என்னுடன் நெருங்கிப் பழகவே அசூசையைப்படுபவர்கள் இருந்த காலத்தில் என் மீது என்ன காரணத்தினாலோ பிரியமாக இருந்தான். அவன் தேவை முடிந்த பிறகும் அவனின் நட்பு என்னுடன் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனின் நல்லது கெட்டது அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும். 

அவனுக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவள் யாரென்று கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. அவன் மிகச் சிறந்த காதலன். என்னுடனான நட்பில் அவன் மறைத்த ஒரு விஷயம் இதுதான். ஒரு ஊனமுற்றவனை நேசிக்கவே நல்ல மனது வேண்டும். அவன் என்னுடன் நட்புக் கொண்டான். நாங்கள் இருவரும் இந்தப் பாடலை ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவை கேட்போம். என்னடா இந்தப்பாடலில் இருக்கிறது? என்று கேட்பேன். சிகரெட்டைப் பற்ற வைத்து  மெல்லிதாக ஊதிக் கொண்டே புன்னகைப்பான். நான் அவனுடன் இருந்தால் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியில் புகையை ஊதிக் கொண்டே இந்தப்பாடலை கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடன் நானும்.

இதோ அந்தப் பாடல்....
அவனுக்கு ஒரு கடிதத்தை எழுத ஆசைப்படுகிறேன். அவன் மனிதனாகப் பிறந்திருந்தாலோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் இந்தக் கடிதம் அவனிடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

அன்பு நண்பா ஆலம்,

என்ன காரணத்தினாலோ நீ என்னை உன் பிரிய நண்பனாக்கி என்னுடன் பழகினாய். அடிக்கடி உன் முகமும், உன் புன்னகையும், நீ எனக்கு உணவு பரிமாறும் நினைவுகளும் வந்தென்னை பீடித்து உன் நினைவுகளில் அமிழ்த்தி விடுகிறது நண்பா. நீ இந்த உலகை விட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மறைந்து போனாய். 

எனக்கு ஆன்மீகத்திலும் எனது குரு நாதரின் மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டு நண்பா. எனது காலம் எதுவரை என்று எனக்குத் தெரியாது. ஆன்மீகம் மனிதர்களுக்கு புல்லாகி பூடாகி என்ற வாழ்க்கைப் பிறப்புகளை வரிசைப்படுத்துகிறது நண்பா. வேறு எதுவாகவும் பிறக்க நான் விரும்பவில்லை நண்பா.

எனக்கு என் உடல் மீதும் இந்த உலக வாழ்க்கை மீதும் உள்ள பற்று என்றைக்கோ நீங்கி விட்டது நண்பா. ஒன்றுமே இல்லாத இந்த வாழ்க்கையில் நான் பெற்ற கடன்களை தீர்த்து விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உள்ளது. இனி எந்தப் பிறப்புமே பிறக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். 

ஆனாலும் நண்பா உன்னை நான் சந்திக்க விரும்புகிறேன். இப்போது உன்னால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் பழக்கம் போய் விட்டது. உன்னுடன் ஒரே ஒரு சிகரெட்டை நெருப்புப் பஞ்சில் பற்றும் வரும் வரை புகைக்க வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. 

நீ வேறு எந்தப் பிறப்பாகவும் பிறக்கவில்லை என்றால் மேல் உலகத்தில் இருப்பாயானால் நான் அங்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன். எனக்கும் உனக்குமாக இரண்டு சிகரெட்டுக்களை கையோடு வைத்துக் கொள். இல்லையென்றால் நான் உனக்கும் எனக்குமாக இரண்டு சிகரெட்டுகளைக் கொண்டு வருகிறேன். இருவரும் ஆனந்தமாக புகைக்கலாம்.

இப்படிக்கு
உன் நண்பன் தங்கம்

Friday, October 21, 2016

குடும்பத்தில் இருப்போர் வாசியோகம் கற்கலாமா?

நான்கு வருடங்களுக்கு முன்பு வாசியோகப்பயிற்சி செய்ய தீட்சை பெற்ற போது இருந்த அறிவுக்கும் நேற்றைக்கு எனது இரு நண்பர்களுக்கு வாசியோகப் பயிற்சி பெற அழைத்துச் சென்ற கிடைத்த அறிவுக்கும் வித்தியாசமிருந்தது. பக்குவமும் உணர்ந்து கொள்ளும் திறனும் அதிகரித்திருந்ததை உணர்ந்தேன்.

முதல் நாள் வியர்வையோடு அவசரமாக முகத்தை கழுவி விட்டேன். நீர் கோர்த்துக் கொண்டது. கண்கள் இரண்டும் வெடித்து விடுவது போல கனகனவென மூக்கில் நீர் ஒழுக ஆரம்பித்தது. தலை விர்ரென்று கணக்க ஆரம்பித்தது. தலையில் குடைச்சல், உடல் முழுவதும் வலி பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்தது. இந்தப் பிரச்சினையோடு தான் ஆசிரமத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன். 

ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.

வாசி என்றால் சிவா. சிவா என்றால் சிவம். அந்தச் சிவத்தை மனிதர்கள் அனைவரும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை வீணாக்கி விடாமல் சேகரம் செய்து உடலைத் தூய்மையாக்கி மனதை நிச்சலமாக்கி கடவுள் தன்மை அடைய இந்த வாசியோகப் பயிற்சி உதவுகிறது.

இட வல மூச்சை ஒன்றாக்கி அதனை சுழுமுனையில் செலுத்தி சிவமடைதலே வாசியோகம். நம் கோவில்களில் இந்த வாசியோகத்தை தான் சிலைகளாகச் செதுக்கி வைத்துள்ளனர். ஆனால் புரிந்து கொள்வார் யாருமில்லை. புரிந்து கொண்டவர்கள் எவரிடமும் சொல்வதுமில்லை.

வாசியோகத்தின் போது மூச்சை சீராக்க வேண்டும். அதற்கு நாடி சுத்தி செய்தல் வேண்டும், பிறகு கப சுத்தி செய்ய வேண்டும். பின்னர் வாசியோகப்பயிற்சி செய்தல் வேண்டும். பயிற்சி முடிந்ததும் சாந்தி செய்தல் வேண்டும். வாசியோகப் பயிற்சியின் போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அறிதல் வேண்டும். வீட்டில் பயிற்சி செய்யும் போது சரியாகச் செய்கின்றீர்களா என்பதை கண்டுணர்ந்து சரி செய்யும் குரு வேண்டும்.

இந்தப் பயிற்சியை எம் குரு நாதர் கற்றுக் கொடுக்கிறார். அவரின் குருதட்சினை நன்கு பயிற்சி செய்வது மட்டும் தான். 

ஜோதி சுவாமி : 98948 15954
இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி, முள்ளங்காடு, பூண்டி, கோயம்புத்தூர்

அவரிடம் போனில் பேசி, நேரம் முடிவு செய்து செல்லவும். இந்தப் பயிற்சியைப் பற்றி நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வார். நன்கு புரிந்து தெளிந்து கொண்டு பயிற்சியைத் தொடங்குங்கள். சித்தர்கள் நம் வழித்துணையாக நின்று வழி காட்டுவார்கள்.

குடும்பஸ்தர்கள் வாசியோகம் கற்றுக் கொள்ளலாமா? என்று பலருக்கும் உட்கேள்விகள் இருக்கும். ஆன்மீக வழியில் நின்று தன் பாரம்பரியத்தையும், குடும்பத்தையும், நல் வழியில் நடத்தி வர குடும்பஸ்தர்கள் தான் இந்தப் பயிற்சியை செய்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் நேராது. 

என் மனைவி வாசியோகத்தில் நல்ல நிலையில் முன்னேறி பயிற்சியை விடாது செய்து வருகிறார். இதனால் எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆகவே எந்த வித சந்தேகமும் இன்றி குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவியரோடு சென்று பயிற்சி செய்ய முயற்சியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது நல்ல ஆரோக்கியமும், அமைதியாக வாழும் முறைகளையும்தான்.

நண்பர்கள் இருவரும் பயிற்சி செய்வது பற்றி தெரிந்து கொண்டார்கள். மதியம் போல வீட்டுக்கு வந்தால் தலை கிர்கிர்ரென்று கனக்க ஆரம்பித்தது. அசதியில் பாய் விரித்துப் படுத்து விட்டேன். ஒரு இளநீர் கொண்டு வந்து கொடுத்தார் மனையாள். அருந்தினேன். சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு சுளைகளைத் தந்தார். இரவில் முருங்கைகீரை சூடான சூப் ஒரு கப் அருந்தினேன். தன் விரலால் வயிற்றில் ஏதோ ஒரு இடத்தில் அழுத்தி விட்டார் மனையாள்.  இதோ விடிகாலையில் எழுந்து அமர்ந்து கொண்டு இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

கனத்த தலை இப்போது நன்றாக உள்ளது. மூக்கில் இடது பக்கம் மட்டும் அடைத்தது போல இருக்கிறது. உடல் வலி நின்று விட்டது. இன்று இரவு மீண்டும் ஒரு கப் சூடான முருங்கை இலை சூப் மற்றும் ஒரு இள நீர் மேலும் கொஞ்சம் ஆரஞ்சு சுளைகள் சளி என்னை விட்டு விட்டு ஓடி விடும்.

அனைவரும் வாசியோகத்தைக் கற்றுக் கொண்டு நம் சித்தர்கள் வழி நின்று தம் தம் குடும்பங்களை நல் வழிப்படுத்தி ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ பிரார்த்திக்கின்றேன்.

Friday, October 14, 2016

நிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது

1900 ஆண்டுகளுக்கு முன்னாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நிலச் சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு யாரோ ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தார். பிறர் எல்லாம் விவசாயக்கூலிகளாக மட்டுமே இருக்க முடிந்தது. 

நிலச்சுவான்தாரர்கள் வைத்ததே சட்டம். ஊரே அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தது. அவர்களை எதிர்த்தவர்கள் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இது பற்றிய பல்வேறு புனைவுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். காந்தியின் சீடராக இருந்தவர் ஆச்சாரியார் வினோபா பாவே. அவர்கள் காந்தீயமார்க்கத்தை முன்னிறுத்தி சமுதாயத்தில் நிலவும் ஏழை பணக்கார தாழ்வுகளை சரி செய்திட தன் இயல்புகொண்ட காந்திய இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு பூமி தான யக்ஞ இயக்கத்தை துவங்கினார்.

பெரிய நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை நன்கொடையாகப் பெற்று ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமென்ற நோக்கில் பூமி தான இயக்கத்தை ஆச்சாரியார் வினோபா பாவே அவர் 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் பல ஏக்கர் நிலங்களை பூமி தான இயக்கத்துக்கு நன்கொடையாக கொடுத்தனர். 

அவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அளந்து அறுதியிடப்பட்டு தாசில்தாரால் பூமி தான இயக்கத்தின் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக நன்கொடையாகப் பெறப்பட்டவை சுமார் 28126 ஏக்கர். தானம் கொடுக்கப்பட்டவை சுமார் 20,290 ஏக்கர். மீதமுள்ளவை சுமார் 7800 ஏக்கர் நிலங்கள் (ஆதாரம் அரசாணை எண்.144/2016). மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் பொசிசன் எடுக்க இயலாமல் இருக்கின்றன. 

இந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. பூமி தான இயக்கம் பெயரில் பட்டா வழங்கப்பட்ட பூமிகளை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது. தொடர்ந்து வாரிசுகள் மட்டுமே அனுபவித்து வரலாம். இந்த வகை நிலங்களை வேறு எவரும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக மெங்கும் பூமி தான இயக்க பூமிகள் இருக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களினால் நில வருவாய் துறையினரால் சரி வர பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பூமிகளின் நிலங்களின் விவரங்களை கையாள முடியவில்லை என்பதால் இன்றைக்கு அரசு தனியாக கமிஷனரேட் லேண்ட் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பூமிதான இயக்க பூமியினைப் பராமரித்து வருகின்றது. ஆகவே பூமிகள் வாங்குவோர் பழைய ஆவணங்களை பெற்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மேலதிக விபரம் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்.
Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Wednesday, October 12, 2016

நீலகண்டன்

கோடை லீவு விட்டு விட்டார்கள். கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் அடியேன் கணிணி ஆசிரியராக பணி புரிந்து வந்தேன். ஆத்மானந்தா சாமியுடன் பேசிக் கொண்டிருந்த போது ”லீவில் ஏதாவது படிக்கின்றாயாப்பா?” என்று கேட்டார்.

எனக்கு விசுவல் சி++ மீது ஆர்வம் இருந்தது. கரூரில் படிக்க விருப்பமில்லை. அந்த நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் அப்போதுதான் புதிதாக கட்டி இருந்தார்கள். அதன் அருகில் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்திற்கு யாரோ ஒருவர் நன்கொடையாக நிலம் கொடுத்திருந்தார். அங்கு ஒரு பள்ளியும், ஆசிரமும் கட்டி விட சுவாமி ஆத்மானந்தா அவர்கள் ஏற்பாடுகள் செய்து வந்தார். சென்னையில் அந்த இடத்தில் தங்கி இருக்கவும், பள்ளி கட்டவும் ஒரு பிரதரை நியமித்திருந்தார்கள். இங்கு கரூர் ஆசிரமத்தில் உள்ளுரை சன்னியாசிகள் தங்களுக்குள் பயங்கர அரசியல் செய்வார்கள். ஒவ்வொரு சாமியும் செய்யும் அரசியல் இருக்கிறதே அய்யோ அய்யோ ரகம் தான். 

நான் ஆத்மானந்தா சுவாமியிடம் இவர்களின் அரசியல் பற்றிப் பேசுவேன். அதற்கு அவர்,”இவர்களை சமூகத்தில் உலவ விட்டால் என்னென்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாரப்பா, ஆசிரமத்தில் இருந்துகொண்டு இங்குள்ளவர்களுடன் தானே அரசியல் செய்கின்றார்கள் என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்” என்பார். உண்மைதான். இவர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தால் அப்பெண் படும் துயரம் கொஞ்சமாக இருக்காது. ஏதோ ஒரு வகையில் இந்த வகைச் சாமியார்களால் பல பெண்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு புதிதாக கரூர் ஆசிரமத்திற்கு வந்த சாமியார் நாராயணனந்தாவை சென்னைக்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தார் ஆத்மானந்தா. அவருடன் நானும் செல்வதாக ஏற்பாடு. சென்னையில் SSIயில் விசுவல் சி++ படிக்கவும் ஏற்பாடு செய்தேன். எனக்கு உதவி செய்ய கரூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பல அனாதைச் சிறுவர்களில் பத்துப் பேரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாளில் பத்து அனாதைச் சிறுவர்களுடனும், நானும் எங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடனும், பண்டம் பாத்திரங்களுடனும் சென்னையை நோக்கிப் பயணித்தோம். சிறுவர்கள் லாரியின் பின்புறமுள்ள பகுதியில் மூடப்பட்ட படுதாவுக்குள் இருந்தனர். நான் லாரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு ஆசிரமம் சென்று சேர்ந்தோம்.

20க்கு 60 அடியில் இரண்டு ஓலை வேய்ந்த கொட்டகைகள். தியான அறை, உணவறை, மாணவர்கள் தங்கி இருக்க படுக்கை அறை, சாமிக்கு ஒரு அறை, அலுவலக அறை என தடுக்கப்பட்டு வேலிக்கருவை மண்டிக் கிடந்த இடத்துக்குள் அந்த ஆஸ்ரமம் அமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற அன்றைக்குதான் போர் போட்டிருந்தார்கள். மின் மோட்டார் இன்னும் இணைக்கப்படவில்லை. ஆசிரமத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது. அதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்ரமத்தின் மற்றொரு இடத்தில் பள்ளி கட்டுவதற்காக அடித்தளம் போடப்பட்ட போது ஏதோ பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவ்விடத்தில் போர் போடப்பட்டிருந்தது. அந்த தண்ணீர் உப்புத்தன்மை அதிகம் கொண்டது. 

சைக்கிளில் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். பாத்திரங்கள் கழுவ, குளிக்க, பாத்ரூம் இவைகளுக்கு அந்த தண்ணீரைப் பயன்படுத்தினோம். பின்னர் கொஞ்ச நாளில் புதிதாகப் போட்டிருந்த போரில் அடிபம்பு ஒன்றினை மாட்டினார்கள். கரேர் என்று தான் தண்ணீர் வரும். படுபயங்கர நாற்றம் வேறு. நாராயணந்தா அந்த தண்ணீரில் தான் குளிப்பார். ஆனால் எனக்கு சிறுவர்கள் அருகிலிருந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள். 

அந்த அனாதைச் சிறுவர்களில் லோக நாதன் மற்றும் நீலகண்டன் என்ற இரு மாணவர்கள் இருந்தனர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் அனைவரும் என்னுடனே சுற்றிக் கொண்டிருப்பர். அவ்வப்போது எனக்கு திண்பண்டங்கள் கொடுப்பார்கள். நான் அதிகம் விரும்பமாட்டேன். எல்லாவற்றையும் அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவேன். வெளியில் சென்று வந்தால் பஜ்ஜிகள் வாங்கி வந்து கொடுப்பேன். கம்யூட்டர் சார் என்றுதான் அழைப்பார்கள். கொசுக்கடி தான் அதிகம். அனைவருக்கும் கொசு வலை இருந்தது. நான் கட்டிலில் படுத்திருப்பேன். என்னைச் சுற்றிலும் சிறுவர்களில் தரையில் பாய் விரித்து கொசுவலைக்குள் படுத்திருப்பர்.

தினமும் வடபழனியில் இருக்கும் SSIஇல் விசுவல் சி++ படிக்க காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை நான்கு மணிக்குத் திரும்புவேன். நாராயணந்தாதான் என்னைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவார். மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு மீண்டும் மாலையில் என்னை அழைக்க வருவார். அந்த பிரதருக்கும் நாராயணந்தாவுக்கும் சண்டை உச்சகட்டத்தில் இருக்கும். நான் தான் தீர்த்து வைப்பேன். ஒரு வழியாக அந்த பிரதரை கரூருக்கு திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஆசிரமம் நாராயணந்தாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இதற்கிடையில் சாரதா நிகேதன் கல்லூரிக்கும், அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா கல்லூரிக்கும் கணிணிகள், பிரிண்டர்கள் வாங்க அவ்வப்போது ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு பள்ளி ஆசிரியப்பணியோடு இந்த இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கணிணிகளை உருவாக்குவது, சர்வீஸ் போன்ற வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கிடையில் நான் ஆத்மானந்தா சுவாமியிடம் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். என்னை நான் விரும்பும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று விட்டு வாருங்கள் என்று நாராயணந்தாவிடம் சொன்னார். நான் என்னுடன் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு ரோகினி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்.

ஒரு மாதம் படிப்பு முடிந்தது. அன்று இரவு நான் கரூர் திரும்ப வேண்டும். என்னுடன் வந்த மாணவர்களில் இரண்டு பேர் மட்டும் என்னுடன் கரூர் ஆசிரமத்திற்கு திரும்பினர். மற்றவர்கள் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து ஆசிரமத்திலேயே தங்கி விட முடிவு செய்தனர். 

என் துணிகளைத் துவைத்து போட்டு காய வைத்து அயர்ன் செய்து தருவார்கள். எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். மாலையில் தியான அறைக்குள் பஜனை செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து பாட்டுப்பாடி மகிழ்வது என இருந்து விட்டு பிரிவது என்பது தீரா வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

அங்கிருந்த மணலில் நான் அமர்ந்திருந்தேன். அருகில் சிறுவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். நீலகண்டன் எனக்கு தான் கற்றுக் கொண்ட ஒரு பொறியலைச் செய்து தரட்டுமா? சாப்பிடுகின்றீர்களா சார்? என்று கேட்டான். சிரித்தபடி தலையசைத்தேன். 

நீலகண்டன் நீள கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி அதனை சட்டியில் இட்டு எண்ணெய் சேர்த்து உப்புச் சேர்த்து வேக வைத்து அதனுடன் மிளகாய் பொடி தூவி கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் மைசூர் ரசமும், சூடான சாதமும் தந்தான். மண் திட்டில் அமர்ந்து கொண்டே சாப்பிட்டேன். எனக்குள் எதுவோ உடைவது போல இருந்தது. மனதின் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல அழுந்தியது. ஒரு சக உயிர் கொள்ளும் அன்பின் வெளிப்பாடு நிகழ்த்தும் மாயாஜால வேதனையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

”லேட்டாயிடுச்சு சார், போலாமா?” என்றார் நாராயணந்தா.

“எங்களையெல்லாம் மறந்திடாதீங்க சார்” என்றார்கள் சிறுவர்கள்.

கரூர் வந்து சேர்ந்து விட்டேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே வந்த பிறகு ஏதோ ஒரு நாளில் சென்னை ஆசிரமத்திற்கு போன் செய்த போது நாராயணனந்தா ”நீலகண்டன் பாம்பு கடித்துச் செத்துப் போய்விட்டான்” என்று சொன்னார். 

மனைவி சமைத்து தரும் கத்தரிக்காய் வதக்கலை வாயில் எடுத்து வைக்கும் போதெல்லாம் அவனின் நினைவு வந்து விடும். 

”ஏங்க? என்னாச்சு?” என்று பதறிப்போய் கேட்பதும் அதற்கு நான் சிரித்து மழுப்புவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நீலகண்டன் மறைந்து விட்டான். அவன் எப்போதும் எனக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். இனி உங்களுக்குள்ளும் வாழ்வான்.

இந்த எழுத்துக்கள் இருக்கும் வரை அவனுக்கு மறைவேது?

Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Saturday, October 8, 2016

ஒரு மட மாது

’பட்டால்தான் புத்தி வரும்’ பழமொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருந்து கொண்டே இருக்கிறது. அனுபவம் சொல்லித் தந்த பாடத்தை அன்றைக்கே பலரும் சொல்லி வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ’யார் கேட்பது?’. அனைத்துச் சுகங்களையும் அள்ளிப் பருகிய கண்ணதாசனே முடிவில் கண்ணனைத் தஞ்சமடைந்தார். வேறு வழி? ஆடிய ஆட்டம் அப்படி? 

நண்பரின் மனைவியுடன் மதுரை சென்று வந்த மனைவி வரும் போதே டெங்குவைக் கூட அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கணபதி சாலையில் இருக்கும் சிவா மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தோம். நான்கு நாட்களாக வாந்தி, காய்ச்சல் குறையவே இல்லை. பாரசெட்டமல் மருந்தினை மட்டுமே கொடுத்துக் கொண்டு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் தாமதித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது. மனைவி ரொம்பவும் மெலிந்து விட்டார். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பிளேட்லெஸ் 80,000 ஆயிரம் வரை குறைந்து விட்டது.

உடனடியாக கே.எம்.சி.எச் அழைத்துச் சென்று ஐ.சி.யூவில் அட்மிட் செய்தேன். வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த போது கண்களில் இருந்து தானாகவே தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் ஜீவன் சந்திரா அவர்கள் மனைவியைப் பரிசோதித்து விட்டு என்னிடம் சொன்னார், “டோண்ட் வொரி மேன், ஐ வில் கிவ் யூ ஹெர் வித் வெரி சேஃப். நந்திங்க் டு வொரி மேன்” என்றுச் சொல்லி ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மனைவியின் வாந்தி நின்று விட்டது. சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

குளுக்கோசுடன் பாரசெட்டமல் மருந்து மற்றும் தண்ணீர் உணவு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தார்கள். பிளேட்லெஸ் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக டெங்குப் பாதிப்பில் இருந்து வெளி வந்தார். 

பணம் இருந்து என்ன பயன்? வேறு என்ன இருந்தும் என்ன பிரயோஜனம்? எதுவும் கை கொடுக்காது. உடலெல்லாம் ஊசி குத்திக் குத்தி புண்ணாகும். மருந்தின் வீரியத்தில் உடல் படாத அவஸ்தைப் படுத்தும். சாப்பிட முடியாது. தூங்க முடியாது. வேதனை, வேதனை, வேதனை இதைத்தவிர வேறெதையும் அனுபவிக்க முடியாது.

இதையெல்லாம் பார்த்து பார்த்து உடம்பின் மீதான பற்றே எனக்குப் போய் விட்டது. தலைக்கு ஷாம்பூ, வாசனை எண்ணெய், டை, முகத்துக்கு க்ரீம், ஷேவ் லோசன், ஷேவிங் மெசின், ஃபோம், செண்ட், சோப், டியோடரண்ட், விலை உயர்ந்த ஆடைகள், கார்கள், சொகுசாக அமர ஷோபாக்கள், ஏசி என்று உடம்புக்குத் தேவையான அத்தனையும் செய்தும் உடல் நோயால் பீடித்து விடுகிறது. ஒரு நாள் உடலைக் கழுவ வில்லை என்றால் நாற்றமடித்து விடும். மனைவி கூட அருகில் வரமாட்டாள். பெற்ற பிள்ளை தூரப்போய் விடுவர். இத்தனையும் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்கின்றார்கள்? 

சமீபத்தில் என் நண்பர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோ வெகு அருமையாக இருந்தது. யூடியூப்பில் ஏற்றி இதோ உங்களுக்காக. பொறுமையாக பாருங்கள். தானாகவே சகமனிதனின் மீது பற்று ஏற்பட்டு விடும். வீடியோவைப் பாருங்கள். தொடர்ந்து கீழே இருக்கும் பாடலையும் படித்து விடுங்கள். சும்மா கிர்ருன்னு இருக்கும்.


 நன்றி : படவிளக்கம் உருவாக்கிய ஜெ.பிரதீபன்

இனி பாடல் வரிகள்

ஒரு மடமாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர்வு கலங்க வொழுகிய விந்து
வூறுசுரோணித மீதுகலந்து

பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற

உருவமுமாகி யுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை
மண்படவுந்தியு தைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகிவளர்ந்து

 ஒளிநகையூற லிதழ்மடவாரு
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடி யிலிருந்து மழலை பொழிந்து
வாவிருபோவென நாமம் விளம்ப

உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப

வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி மறுபதநீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகளணிந்து

மாகதர் போகதர் கூடிவணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து

மாமயில் போலவர் போவதுகண்டு
மனது பொறாம லவர்பிறகோடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு

தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்த தனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த வித்னமிதென்று

வாலிப கோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து

 வாதவிரோத குரோதமடைந்து
செங்கை யினிலோர் தடியுமாகியே
வருவதுபோவ தொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து

மதியுமிழந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையு நெஞ்சமு முலர்ந்து வறண்டு

துகிலுமிழந்து சுணையுமிழந்து
தோகையர் பாலர்கள் கோரணிகண்டு
கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச

கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தயு நெஞ்சமு முலைந்துமருண்டு
  
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதென நொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்று தெளிந்து

இனியெனக் கண்ட மினியெதொந்த
மேதினவாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரை நாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி யொழுகிடவந்து
பூதமு நாலுசு வாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே
வளர்பிறைபோல வெயிறுமுரோம

முஞ்சடையுஞ் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர் கொடுபோக
  
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் காலமறிந்து
பழையவர் காணு மெனுமயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர்பந்த
ரிடுமெனவந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர் தாமி

ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறுமுடம்பை
வரிசை கெடாம லெடுமெனவோடி

வந்திள் மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி யழல்கொடு போட

 வெந்து விழுந்துமு றிந்து நிணங்க
ளுருகி யெலும்பு கருகி யடங்கி
யோர்பிடி நீறுமிலாத வுடம்பை

நம்புமடி யேனை யினியாளுமே
- பட்டினத்தார் 

Thursday, October 6, 2016

கற்பு ஒழுக்க விழுமியங்களின் முகமூடி

ராகுல் சாங்கிருத்தியாயனின் ’வோல்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படித்த போது மனித சமூகத்தின் வரலாற்றினை முன்னெடுத்துச் செல்ல காரணியாக இருந்தவர்கள் பெண்கள் என்ற விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வரலாற்று புதினமாக எழுதி இருந்தாலும் அதனுடைய விஷயங்களை மறுத்து விட நம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் அதாவது கிமு ஆறாயிரம் ஆண்டுகளில் பெண் தான் குடும்பத்தின் தலைவியாக இருந்து வந்திருக்கிறார். அப்பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் அது ஒழுக்க விதியாக இருந்தது.

இப்போதும் இமயமலைகளில் வாழும் ஒரு சில சமூகங்களில் ஒரே பெண்ணுக்குப் பல கணவர்கள் இருக்கின்றார்கள் என்று பல்வேறு ஆவணப்படங்கள் விவரிக்கின்றன.

காலங்கள் மாற மாற மனித சமூகம் மேம்பாடடைய பல்வேறு ஒழுக்க நியதிகள் வரையறை செய்யப்பட்டு சுய கட்டுப்பாடாகவே செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற விஷயம் கற்பு எனச் சொல்லப்படுகிறது. ஆணொருவன் பெண்ணொருத்தியுடன் திருமண பந்தத்தில் இணையும் போது அவனுடைய சொத்தாகப் பெண் ஆக்கப்படுகிறாள். அதன் காரணமாக பாலியல் விஷயங்களையும் அவன் அவளிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேறு பெண்களை மனதால் கூட நினைத்துப் பார்க்க கூடாது அப்படி நினைத்தாலே கற்பு நெறி கெட்டு விட்டது என்பதும் நடைமுறை வாழ்வியல் நெறிகள். இளங்கோவின் சிலப்பதிகாரம் அதற்கொரு சான்று என தமிழ் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறது. பிறன்மனை நோக்காது பற்றி திருவள்ளுவர் பாட்டெல்லாம் பாடி வைத்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கற்பு ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். அது ஒரு வித சுய ஒழுங்கினையும், நேர்மைத்தன்மையையும், மனதுக்குள் நான் நேர்மையானவன் என்ற கர்வத்தையும் தருகிறது. 

சமீப காலமாக தொழில் நிமித்தமாக பல்வேறு நபர்களைச் சந்திக்கும் போது நான் அவர்கள் வாயிலாக அறிய நேரிடும் விஷயங்கள் எதுவும் கற்பு விழுமியங்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. எனக்கு ஆச்சரியமும் மனிதனின் மீதான அவ நம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

மேட்டுக்குடித்தனக்காரர்களுக்கு டைவோர்ஸ் மீண்டும் மறுமணம் என்பது வெகு சாதாரணம். பொருளாதார வசதி கொண்ட சினிமாக்காரர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணமாக இருக்கிறது. அதே போல வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போரின் வாழ்க்கையிலும் அறுத்துக்கட்டுவது என்பது வெகு சாதாரணமாக மாறிப்போய் உள்ளது. ஆதாரம் ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். 

இந்த மிடில் கிளாஸ் வகுப்பினைச் சேர்ந்த மக்களிடையே மட்டும் இந்த வகையான ஒழுக்கங்கள் பேணி வரப்படுகின்றன என்ற மாயை சூழல், தேவை, அவசியம், தர்மம், வாழ்க்கை, சுகம் இவற்றை முன் வைத்து ஒழுக்க விழுமியங்களின் எல்லைகள் வெகு எளிதாக தாண்டப்படுகின்றன. சமீபகாலங்களில் இந்தப் போக்கினை மிடில் கிளாஸ் வகுப்பு மக்கள் வெகு எளிதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.

அவரவர் தேவைக்கு ஏற்ப கற்பு ஒழுக்கங்கள் மாற்றப்படுகின்றன. அதன் உப விளைவாக பல்வேறு மனச் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். உறவுகளுக்கிடையில் நம்பிக்கை சிதைந்து போகின்றது. 

சிதைந்த நம்பிக்கை வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. அதன் காரணமாக சமூகத்தில் பெரும் துயரங்கள் மேகம் போல கவிழ்ந்து வருகின்றது.

சாலை விதிகளை சரியாக கையாண்டு ஒருவன் சாலையில் பயணித்தாலும் எதிரில் வருபவன் சரியாக கையாளவில்லை எனில் விபத்து ஏற்படுகிறது. ஒருவன் தவறு செய்தாலும் அது அடுத்தவனுக்குப் பிரச்சினையாகி விடுகிறது. விதிகளைச் சரியாகக் கடைபிடித்தாலும் பாதிக்கப்படுகின்றேன் ஆகையால் நானும் விதிகளைக் கடைபிடிக்கப்போவதில்லை என்ற சூழலுக்கு அவன் தள்ளப்படுகின்றான். 

இந்த நிகழ்வுதான் தற்போது சமூகத்தில் மெள்ளென ஆரம்பித்து முழு வீச்சில் பாய ஆரம்பித்திருக்கிறது. விளைவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

மனித வாழ்க்கையின் ஆதார சுருதி பாதிக்கையில் சுருதி பேதம் ஏற்பட்டு அதன் காரணமாக தாளகதியும் அபஸ்வரங்களும் மாறிப்போய் கர்ண கடூரமான சங்கீதம் வெளிப்படுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு விட்டது. காலம் தான் இதற்கொரு நல்ல பதிலை தர வேண்டும்.