நான்கு வருடங்களுக்கு முன்பு வாசியோகப்பயிற்சி செய்ய தீட்சை பெற்ற போது இருந்த அறிவுக்கும் நேற்றைக்கு எனது இரு நண்பர்களுக்கு வாசியோகப் பயிற்சி பெற அழைத்துச் சென்ற கிடைத்த அறிவுக்கும் வித்தியாசமிருந்தது. பக்குவமும் உணர்ந்து கொள்ளும் திறனும் அதிகரித்திருந்ததை உணர்ந்தேன்.
முதல் நாள் வியர்வையோடு அவசரமாக முகத்தை கழுவி விட்டேன். நீர் கோர்த்துக் கொண்டது. கண்கள் இரண்டும் வெடித்து விடுவது போல கனகனவென மூக்கில் நீர் ஒழுக ஆரம்பித்தது. தலை விர்ரென்று கணக்க ஆரம்பித்தது. தலையில் குடைச்சல், உடல் முழுவதும் வலி பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்தது. இந்தப் பிரச்சினையோடு தான் ஆசிரமத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன்.
ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.
வாசி என்றால் சிவா. சிவா என்றால் சிவம். அந்தச் சிவத்தை மனிதர்கள் அனைவரும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை வீணாக்கி விடாமல் சேகரம் செய்து உடலைத் தூய்மையாக்கி மனதை நிச்சலமாக்கி கடவுள் தன்மை அடைய இந்த வாசியோகப் பயிற்சி உதவுகிறது.
இட வல மூச்சை ஒன்றாக்கி அதனை சுழுமுனையில் செலுத்தி சிவமடைதலே வாசியோகம். நம் கோவில்களில் இந்த வாசியோகத்தை தான் சிலைகளாகச் செதுக்கி வைத்துள்ளனர். ஆனால் புரிந்து கொள்வார் யாருமில்லை. புரிந்து கொண்டவர்கள் எவரிடமும் சொல்வதுமில்லை.
வாசியோகத்தின் போது மூச்சை சீராக்க வேண்டும். அதற்கு நாடி சுத்தி செய்தல் வேண்டும், பிறகு கப சுத்தி செய்ய வேண்டும். பின்னர் வாசியோகப்பயிற்சி செய்தல் வேண்டும். பயிற்சி முடிந்ததும் சாந்தி செய்தல் வேண்டும். வாசியோகப் பயிற்சியின் போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அறிதல் வேண்டும். வீட்டில் பயிற்சி செய்யும் போது சரியாகச் செய்கின்றீர்களா என்பதை கண்டுணர்ந்து சரி செய்யும் குரு வேண்டும்.
இந்தப் பயிற்சியை எம் குரு நாதர் கற்றுக் கொடுக்கிறார். அவரின் குருதட்சினை நன்கு பயிற்சி செய்வது மட்டும் தான்.
ஜோதி சுவாமி : 98948 15954
இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி, முள்ளங்காடு, பூண்டி, கோயம்புத்தூர்
அவரிடம் போனில் பேசி, நேரம் முடிவு செய்து செல்லவும். இந்தப் பயிற்சியைப் பற்றி நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வார். நன்கு புரிந்து தெளிந்து கொண்டு பயிற்சியைத் தொடங்குங்கள். சித்தர்கள் நம் வழித்துணையாக நின்று வழி காட்டுவார்கள்.
குடும்பஸ்தர்கள் வாசியோகம் கற்றுக் கொள்ளலாமா? என்று பலருக்கும் உட்கேள்விகள் இருக்கும். ஆன்மீக வழியில் நின்று தன் பாரம்பரியத்தையும், குடும்பத்தையும், நல் வழியில் நடத்தி வர குடும்பஸ்தர்கள் தான் இந்தப் பயிற்சியை செய்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் நேராது.
என் மனைவி வாசியோகத்தில் நல்ல நிலையில் முன்னேறி பயிற்சியை விடாது செய்து வருகிறார். இதனால் எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆகவே எந்த வித சந்தேகமும் இன்றி குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவியரோடு சென்று பயிற்சி செய்ய முயற்சியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது நல்ல ஆரோக்கியமும், அமைதியாக வாழும் முறைகளையும்தான்.
நண்பர்கள் இருவரும் பயிற்சி செய்வது பற்றி தெரிந்து கொண்டார்கள். மதியம் போல வீட்டுக்கு வந்தால் தலை கிர்கிர்ரென்று கனக்க ஆரம்பித்தது. அசதியில் பாய் விரித்துப் படுத்து விட்டேன். ஒரு இளநீர் கொண்டு வந்து கொடுத்தார் மனையாள். அருந்தினேன். சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு சுளைகளைத் தந்தார். இரவில் முருங்கைகீரை சூடான சூப் ஒரு கப் அருந்தினேன். தன் விரலால் வயிற்றில் ஏதோ ஒரு இடத்தில் அழுத்தி விட்டார் மனையாள். இதோ விடிகாலையில் எழுந்து அமர்ந்து கொண்டு இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
கனத்த தலை இப்போது நன்றாக உள்ளது. மூக்கில் இடது பக்கம் மட்டும் அடைத்தது போல இருக்கிறது. உடல் வலி நின்று விட்டது. இன்று இரவு மீண்டும் ஒரு கப் சூடான முருங்கை இலை சூப் மற்றும் ஒரு இள நீர் மேலும் கொஞ்சம் ஆரஞ்சு சுளைகள் சளி என்னை விட்டு விட்டு ஓடி விடும்.
அனைவரும் வாசியோகத்தைக் கற்றுக் கொண்டு நம் சித்தர்கள் வழி நின்று தம் தம் குடும்பங்களை நல் வழிப்படுத்தி ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ பிரார்த்திக்கின்றேன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.