குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, August 24, 2019

நிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது

”டாக்குமெண்ட்  தவறு என்றால்  சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள். 

“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை,  வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன். 

”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.

அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.

கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005  உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர்  மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள்.  தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது. 

இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள். 

வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல்,  பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.

பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை. 

சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.

டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.

கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார். 

கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்....!

நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி


Wednesday, August 21, 2019

நிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்

மனிதன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காலம் எல்லாம் போயே போய் விட்டது. வார்த்தை சொல்லி விட்டேன் - ஆண்மைத் தனம் இப்போது எங்கும் காணப்படுவதில்லை.

ஆறு மணி நேரம் வரிசையில் நின்று, அத்திவரதரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் முன்பு வீட்டுக்குள் பணம் வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஆலந்துறைப் பக்கம் பாட்டி ஒருத்தி இட்லி விற்கிறார். கூட்டம் இன்றும் குறையவில்லை. ஒரு பக்கம் இரண்டு இட்லிக்கு 250 ரூபாய் கொடுத்து சாப்பிடும் கூட்டம். பாதி விள்ளலில் எழுந்து நாசூக்காய் கை துடைத்துக் கொள்ளும் அக்கிரமக்காரர்கள் அலட்டலாய் திரிகின்றார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் என்னைச் சந்தித்தார். ’எனக்கொரு பிரச்சினை, சரி செய்து தர இயலுமா?’ என்று கேட்டார். 

”பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள், இயலுமா? எனச் சொல்கிறேன்”

நண்பர்களே, கவனக்குறைவு என்று சொல்ல மாட்டேன். ஏமாற்ற வேண்டும் என நினைத்து விட்டால் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் சரி, சட்டக்காவலர்களும் சரி எவருக்கும் கொஞ்சம் கூட மனச்சாட்சி என்பதே கிடையாது. எவன் செத்தால் எனக்கென்ன, என் வீட்டு உலை கொதிக்கிறதா? என நினைக்கிறார்கள். அப்படி ஒரு அழிச்சாட்டியத்தைச் செய்திருக்கிறார் அந்த புரமோட்டர் ஒரு சில அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்து. ரத்தம் கொதிக்கிறது நினைத்து நினைத்து.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் சைட் விற்பனை ஆனது பல வருடங்களுக்கு முன்பு. பல அரசுத் தொடர்புடையவர்களுக்கு பல கட்ட அனுமதிகள் பெற்று அந்த வீட்டு மனையினை, மாதத்தவணை முறையில் வாங்கி இருக்கின்றார்கள். வீடும் கட்டி விட்டார்கள்.

டிடிசிபி அனுமதியை சென்னையில் பெற்று இருக்கிறார் அந்த புரமோட்டர். அந்த அனுமதியை பஞ்சாயத்தில் அப்ரூவ்ட் பெறும் போது மனை வரைபடத்தை மாற்றி அனுமதி பெற்று, வீட்டு மனைகளின் எண்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கிறார். பொது இடத்திற்கு என ஒதுக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தையும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து விட்டார். எந்தப் பத்திரத்திலும் மனையின் அளவீடுகள் குறிப்பிடவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  இந்த இடத்தில் மனை வாங்கியவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள், பெரிய மனிதர்கள். இனி என்ன, எவராவது கோர்ட்டுக்குச் சென்றால் மனை அனுமதி ரத்தாகிப் போகும். சரி செய்ய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால், எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர்  அந்த இடத்தில் மனை வாங்க இருப்பதாகத் தெரிவித்து, பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 32 வகையான ஆவணங்கள் தேவையென லிஸ்ட் போட்டுக் கொடுத்தேன். ஆள் அவ்வளவுதான். கிரையம் பெற்று விட்டார். அவ்வளவு அவசரம் அவருக்கு. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வீடோ அல்லது மனையோ பிடித்து விட்டால், அவர்களே தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வார்கள். எல்லோரும் வாங்கி இருக்கின்றார்கள், நாமும் வாங்கி விடலாம் என்று சமாதானமாகி விடுகின்றார்கள். பின்னர் அலையோ அலையென அலைந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மனை அப்ரூவல் ரத்தாகுமா? இல்லையா? எனத் தெரியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு மனை வாங்கியவர்களில் சிலர். புரமோட்டர் என்ன ஆனாரோ தெரியவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் யானை ராஜேந்திரன் அவர்களின் வழக்கின் மீது என்ஃபோர்ஜ்மெண்ட் தீர்ப்பு ஒன்றினை ஹைகோர்ட் வழங்கியது. முறைப்படி அனுமதி பெற்று கட்டப்படாத கட்டிடங்களை எவரின் அனுமதியும் இன்றி இடித்து தள்ளுங்கள் என்கிறது கோர்ட். மனைப்பிரிவும் அப்படி ஆனால் என்ன ஆகும்? 

அந்த புரமோட்டரின் ஆசையால், அக்கிரமத்தால் அந்த வீட்டு மனைகள் போலியாக பிளான் தயாரிக்கப்பட்டு, ஏமாளிகளுக்கு விற்று விட்டார். பாவம் அவர்கள் அலைகின்றார்கள். இன்னும் பட்டா வாங்க முடியவில்லை. மனைப்பிரிவினை ஒழுங்குப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் பலப்பல இருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டுமெனச் சொல்லி அப்பெரியவரை அனுப்பி வைத்தேன்.

ஆகையால் நண்பர்களே, டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை வாங்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஆலோசகர்களிடம் தகுந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்துக் கிரையம் பெறுங்கள்.

அப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் போனில் அழைத்தார்.

“தம்பி, ஒரு அபார்ட்மெண்ட் கிரையம் செய்ய வேண்டும், என்ன சார்ஜ் செய்கிறீர்கள்” என்றார்.

“முதலில், அபார்ட்மெண்ட் அனுமதி சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து விட்டுத்தான், பத்திரம் பதிவு செய்வேன், ஆகவே அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்” என்றேன்.

அவர் டென்சாகி விட்டார். ”பத்திரம் மட்டும் போட்டுத்தாங்க” என்றார்.

“முடியாது” என மறுத்து விட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், போனில், ”தம்பி, நீங்க பெரிய ஆளா வருவீங்க, வாழ்த்துகிறேன்” என்றார்.
* * *

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *

Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019