குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பியர் கிரில். Show all posts
Showing posts with label பியர் கிரில். Show all posts

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *