குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 3, 2026

திருப்பதி லட்டு - தடை போடும் திருப்பதி தேவஸ்தானம்

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியிட்ட மாலை முரசு பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில், திருப்பதி தேவஸ்தானம் ஒரு நபர் மீது விசாரணை செய்ய உத்தரவிட்ட செய்தியைப் படித்தேன். 

நன்றி மாலை முரசு நாளிதழ் - 02.09.2026

என்னவென்றால், திருப்பதி செல்லும் பக்தர் ஒருவர், திருப்பதி லட்டு பிரசாதத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "இந்தப் பதிவைப் பலருக்கும் பகிர்ந்தால், பகிர்ந்த நபர்களுக்குத் திருப்பதி லட்டு பிரசாதம் தரப்படும்" என்று அறிவித்திருப்பதைைப் பார்த்த, திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவு இட்டிருக்கிறதாம்.

சேவல் சண்டைகளை நடத்த தடை விதித்து நோட்டீஸ் அனுப்பிய டிஜிபிக்கு - யார் இத்தகைய நோட்டீஸ் அனுப்ப டிஜிபிக்கு அதிகாரமளித்தது என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய செய்தியைப் படித்தேன். கீழே இருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks

திருப்பதி தேவஸ்தானத்திடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான். "திருப்பதி பெருமாளின் புகைப்படத்தைப் பலருக்கும் பகிர்ந்தால் திருப்பதி பெருமாளின் ஆசி கிடைக்கும்" என்று பல காணொளிகள் (வீடியோக்கள்), குறுங்காணொளிகள் (ஷார்ட்ஸ்கள்), ரீல்ஸ்கள் எல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. அதை ஏற்றுக்கொள்ளும் திருப்பதி தேவஸ்தானம் இதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானத்தைப் பெருக்கும் வழியில், ஒரு பக்தர் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பெறப்படும் லட்டு வீடியோவப் பலருக்கும் பகிர்ந்தால், பகிர்பவர்களுக்கு லட்டு வாங்கித் தருவதாகத்தானே சொன்னார்? 

இதற்கு ஏன் திருப்பதி தேவஸ்தானம் கவலைப்பட வேண்டும்?

திருப்பதி பெருமாளின் புகைப்படத்தை பகிரக்கூடிய நபர்களுக்கு நன்மை கிடைக்கும் என்கிறபோது, பகவான் பெருமாளின் பிரசாதத்தைப் பலருக்கும் பகிர்ந்தால் லட்டு கிடைப்பது உடனடி பலன்தானே? இதற்குத் திருப்பதி தேவஸ்தானம் மகிழத்தானே வேண்டும்? ஏன் வருத்தப்படுகிறது என்பது புரியவில்லை.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் அல்லது தமிழ் வேதம் என்று வைணவம் போற்றுகிறது. 

சமஸ்கிருத வேதம் ஓத குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரிமை இருந்த காலத்தில், திவ்ய பிரபந்தத்தை சாதி வேறுபாடின்றி அனைவரும் ஓதலாம் என்று இராமானுஜர் வழிவகை செய்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களை திருக்குலத்தார் என்று கூறி, அவர்களுக்குக் கோயிலுக்குள் நுழையும் உரிமையையும், வைணவ முத்திரையையும் அளித்தார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் எழுந்தளியிருக்கும் இராமானுஜர் பகவான் பெருமாளின் பெரும் பக்தரல்லவா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூல் பகவான் பெருமாள் குறித்து, பனிரெண்டு ஆழ்வார்களால்

1.பொய்கையாழ்வார், 2.பூதத்தாழ்வார், 3.பேயாழ்வார்,  4.திருமழிசையாழ்வார், 5.நம்மாழ்வார், 6.மதுரகவியாழ்வார், 7. குலசேகராழ்வார் (குலசேகரப் பெருமாள்), 8.பெரியாழ்வார் (விட்டுணுசித்தர்),  9.ஆண்டாள், 10.தொண்டரடிப்பொடியாழ்வார், 11.திருப்பாணாழ்வார், 12.திருமங்கையாழ்வார் 

பாடப்பட்ட நான்காயிரம் தமிழ் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும். 

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் என்கிற தொண்டரடிப் பொடியாழ்வார் அடியாரின் 3195 வரி இப்படி துவங்குகிறது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும்

கீழ்இழிந்து எத்தனை

நலந்தான் இலாதசண் டாளசண்

டாளர்கள் ஆகிலும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்

மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்

கலந்தார் அடியார் தம்மடி

யார்எம் அடிகளே. ( திருவாய்மொழி 3:7:9)

இதன் பொருள் என்னவென்றால், 

குலங்களை வரித்திருக்கின்ற நான்கு சாதிகளில் பிறந்தவர்களில், மிகவும் கீழான நிலைக்கு சென்று, சிறு நன்மையும் செய்யாத சண்டாளர்களாக இருந்தாலும், தனது வலது கையில் சக்கரத்தை வைத்திருக்கும் பெருமை மிக்க, நீலமணி வண்ண பெருமாளின் அடிமை நான் என சொல்லக்கூடிய அடியார் கூட எனக்கு கடவுள் போன்றவர் என்பது.

பெருமாளின் தொண்டர் லட்டு பிரசாதத்தை வைத்து தனக்கு வருமானம் வர வைத்தால் என்ன ஆகி விடப்போகிறது? கோடிக்கணக்கில் நஷ்டமாகி விடுமா பகவான் பெருமாளுக்கு?  திருப்பதி தேவஸ்தானம் அந்தப் பக்தருக்கு லட்டுவை அல்லவா கொடுத்து விட வேண்டும்? 

திருப்பதி தேவஸ்தானம் சாதி பார்க்காமல் அனைவரையும் அர்ச்சராக்குமா? அதை ஏன் இது வரை நிகழ்த்தவில்லை. நாலாயிர பாசுரங்கள் அனைத்தும் பொய்யா?

பெருமாளை வணங்கிப் பாடிய ஆழ்வார்களின் பாடல்களைக் கூட தங்களால் நிறைவேற்றிட முடியாதா?

பகவான் பெருமாளுக்கு இதை எனது வேண்டுகோளாக எழுதுகிறேன்.

”பகவான் பெருமானே, அனைத்து சாதியினரையும் தங்களுக்கு பணி செய்ய அர்ச்சகராக்குக...!”

எனக்கும் ஆசையுண்டு பெருமாளே, உமக்கு நானே பூக்களை என் கைகளால் அர்சித்து, வணங்க வேண்டுமென.

குறிப்பு : திருமலை இணையதளத்தில் ஆழ்வார் பாசுரங்கள் ஆன்லைனில் பாடலாக இருக்கிறது. இதில் திருவோய்மொழி மூன்று பத்தியில் ஏழாவது பாடலாக ஒலிக்கும் பாடலில் 7.34 நிமிடத்தில் மேலே கண்ட பாடல் பாடப்படுகிறது.

https://www.tirumala.org/AlwarPasurams.aspx

திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர்களும், உறுப்பினர்களும் இப்பாடலைக் கேட்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.


₹3,000க்காக ஓடிய தாய் - மகளின் கல்விக் கனவை காப்பாற்ற!

இந்தியப் பிரஜையாக இருக்கும் உண்மையான பெற்றோர்களின் கனவே தன் குழந்தைகளை என்ன விலை கொடுத்தாவது படிக்க வைத்து விட வேண்டுமென்பது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி சாதி போலத் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியா சுதந்திர நாடாகி 75 ஆண்டுகளாகி விட்டன இது வரை இந்தியாவில் இறைவனைப் பூஜிக்க அனைத்து சாதியினருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.  கோட்டுக்கு வெளியே நிற்கும் அவலம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? 

இதற்கு முழுக்காரணமும் 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வரும் அரசுகள் மட்டுமே. இதைப் பற்றி யாருமே கேள்வி கேட்பதுமில்லை. 

பணம் இருப்பவருக்கு மிக உயர்வான கல்வியையும், எல்லா தேர்வுகளிலும் எளிதில் வெற்றி அடையும் வாய்ப்புகளையும் தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன. 

இந்தியாவின் ஏழைக் குடிமகன் தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துப் பொருள் வாங்கும்போது, அதன் மூலமாக வரிகளைப் பெறும் அரசாங்கம், அந்த கடைசி ஏழைக் குடிமகனின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்கான எந்த சாத்தியத்தையும் உருவாக்குவதே இல்லை.

நகரங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தையும், கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்திலும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசு இந்த மாணவர்களுக்கு ஒரே விதமான போட்டித் தேர்வை வைத்து அவர்களின் கனவுகளை அழிப்பதே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழைகளுக்கு கல்வி கற்று விடக்கூடாது என்பதில் அத்தனை சாத்தியங்களையும் ஒன்றிய அரசு நடை முறைப்படுத்தி வருகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் திரு.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் வந்த பிறகு, உயர் கல்வி படிக்கும் ஏழை மாணவனுக்கும் மாதம் 1000 ரூபாய் தொகையும், அந்த மாணவனின் தாய்க்கு மாதம் 1000 ரூபாய் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இதற்குப் பெயர் உதவித்தொகை இல்லை, அது அரசின் கடமை. 

அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு இளம் மாணவர்கள் காலையில் பசியுடன் வரக்கூடாது என்பதற்காகக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். உலகத்திலேயே முதன்முதலாக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான். 

இதோ, என்டிடிவியில் ஒரு காணொளி வந்து கொண்டிருக்கிறது, இதைப் பாருங்கள். 


https://youtu.be/CrEmEqY3R4c?si=c5nfSxjdOtHnMaDx

ஒரு தாய் தன் மகளின் கல்விக்காக, அதாவது வெறும் 3000 ரூபாய்க்காக மராத்தானில் ஓடி ஜெயித்தாராம். இதைப் பார்க்கும்போது மனமெல்லாம் வலிக்கிறது. 

நம்மைச் சுற்றி இருக்கும் இந்த உலகம் என்ன மாதிரியானது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே முடியவில்லை. ஆட்சி செய்பவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள் என்றே தெரியவில்லை. 

அரசாங்கத்தை நிர்வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், தங்களது குடிமக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதற்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் விதிகளையும் ஏற்படுத்தி மாணவர்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. 

இது இனிமேலும் தொடர்ந்து கொண்டே இருக்குமா? 

இதற்குத்தான் யார் முடிவு கட்டுவது?

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளைச் சிதைப்பதாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தலைவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் மாணாக்கர்களுக்கு உண்டு. 

ஆனால், சமீபகாலமாக அரசியலில் இளம் சிறார்களால் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் மாணாக்கர்களின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைத்து விட்டிருக்கின்றன. மாணக்கர்கள் படிப்பறிவின்றி இருந்தால் தான் தனிப்பட்ட ஒவ்வொரு நரிகளும் தங்கள் நய வஞ்சகத்தால் இன்பத்தை நுகரலாம் என சதி செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள்.

இந்தியாவில் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை முறை மிக மிகக் கொடுமையாக, மிக மிக ஆபத்தான பாதையில் சமூக வலைதளங்களால் (சோசியல் மீடியா) கொண்டு செல்லப்படுகிறது. யாருக்கும் எவரைப் பற்றியும் கவலை இல்லை.

Thursday, August 27, 2026

இறைவன் சிரிக்கும் நேரம்


நான் யார் என்று அறிதலே ஆன்மீகம் என்பார்கள். பல சுவாமிஜிக்கள் அதைத்தான் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருப்பார்கள். பக்தர்களும் புளகாங்கிதம் அடைந்து, தீவிரமாக நான் யார் என்று அறிவதிலே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். 

பக்தர்கள் பல வழிகளில் முயற்சிகள் செய்து நான் யார் என்று தெரிந்துகொள்ள முயல்வார்கள். அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால் அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் கண்டவர் விண்டிலர். 

வேதங்களிலும் உபநிடதங்களிலும் "நான் யார்?" என்ற கேள்விக்கு, நாம் வெளிப்புறமாக நம்மைப் பார்த்துக்கொள்ளும் உடல், மனம் அல்லது பெயர் ஆகியவை "நான்" அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் 'ஆத்மா' தான் உண்மையான "நான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

உபநிடதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் என்ன சொல்கிறது என்றால், அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) அதாவது, பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் பேரறிவு அல்லது இறைத்தன்மையின் ஒரு பகுதியே நீ என்றும்,

தத் வம் அஸி (அதுவாக நீ இருக்கிறாய்) நீ தேடிக்கொண்டிருக்கும் பரம்பொருள் வேறு எங்கோ இல்லை, அது நீயேதான் என்றும்,

அயம் ஆத்மா பிரம்மா (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்றும்,

பிரஞ்ஞானம் பிரம்மா (தூய அறிவே பிரம்மம்) என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

வேதங்களின்படி "நான்" என்பது அழிவில்லாதது என்றும், உடல் பிறக்கும், வளரும், அழியும். ஆனால் "நான்" எனப்படும் ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

சச்சிதானந்தம் என்றால் உண்மையான "நான்" என்பது சத் (நிலையான உண்மை), சித் (தூய அறிவு), ஆனந்தம் (எல்லையற்ற பேரின்பம்) வடிவமானது என்கிறது.

வேதங்களின்படி நீங்கள் வெறும் ரத்தமும் சதையுமாலான உடலோ அல்லது எண்ணங்களின் தொகுப்பான மனதோ அல்ல; நீங்கள் எல்லையற்ற, அழிவில்லாத, பேரறிவு மயமான பிரம்மம் அதாவது ஆத்மா ஆவீர்கள்.

படித்து விட்டீர்களா? பின்னே ஏன் இன்னொரு பிரம்மத்திடம் சென்று சரணடைகின்றீர்கள்? என்று உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதிக்கு சென்றிருந்த போது, ஜீவசமாதிக்கு வெளியில் அழுகிய தோல் உடைய ஒரு நாய்க்கு வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். சரியான நாற்றம். குமட்டிக் கொண்டு வந்தது.

கைகழுவி விட்டு என்னிடம் வந்தார். தொற்று நோய் உண்டாகி விடும் சுவாமி என்றேன்.

என்னைப் பார்த்து சிரித்து விட்டு, அங்கிருப்பதுதானே இங்கேயும் இருக்கிறது எனச் சொன்னார்.

அதாவது அதுவும் ஒரு உயிர், நீங்களும் ஒரு உயிர் என்றார். 

அதாவது நீயே நான், நானே நீ.

அஹம் பிரம்மாஸ்மி !

இந்தச் சம்பவம் சொல்லும் கருத்து புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்தேன். 

நகரமெல்லாம் காங்க்ரீட் மரங்கள் முளைத்திருந்தன. பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தேன். வானுயர்ந்த கட்டிடங்கள் அழகாய் வாமன கடவுள் உயர்ந்தது போல உயரமாய் நின்று கொண்டிருந்தன.

வாமன கடவுள் - கேராளா மாவலி ஓணம் பண்டிகை உண்மை கதை உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாது என்றால் கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.


நன்றி விடுதலை பத்திரிக்கை.

மக்கள் பரபரப்பாய் இருந்தார்கள். 

ஐடிசி ஹோட்டலில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். 

ஹைதராபத்தின் பாரம்பரிய வட்டவடிவ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அருகில் இருந்த ஒரு நடைபாதை சிக்னலில் கார் நின்றது.

இடது புறம் பார்த்த போது அந்த நடைபாதையில் ஆண் ஒருவர், அவரின் மனைவியுடன் ஒரு குழந்தையும் சேர்ந்து ரோஜாக்களை ஒரு வண்ண காகிதத்தில் மலர்ச் செண்டு போல கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் குழந்தையின் உடை கிழிந்து இருந்தது. தலைமுடிகள் எண்ணை இல்லாமல் வறண்டு கிடந்தன. அவளின் முகம் அழுக்கடைந்து இருந்தது. அவளின் பெற்றோர்களின் உடைகள் துவைக்கப்படவில்லை. அவர்களின் தோற்றமே அழுக்கடைந்து இருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்களின் புகையில் பொலிவிழந்து கிடந்தார்கள். அவர்களின் நுரையீரல்களின் நிலை?

அந்த மலர்ச் செண்டை - சிக்னலில் காத்திருக்கும் கார்களில் செல்வோரிடம் விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் அவர்கள் உணவு உண்டு பிழைத்திருக்க வேண்டும். அந்த மலர்ச் செண்டில் கட்டப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பருக்கு ஜி.எஸ்.டி வரி கொடுத்துதான் வாங்கி இருப்பார்கள். அந்த வரி இந்திய ஒன்றிய அரசுக்குச் சென்றிருக்கும்.

அந்த வரியில் தான் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், ஜனாதிபதியும் ஊதியம் பெறுவார்கள்.

ஒன்றிய அரசுக்கு இந்தக் குடும்பத்தின் வாயிலாக வரி கிடைத்திருக்கும். ஆனால் அரசுக்கு இவர்கள் யாரோ? 

இந்தியனாகப் பிறந்தால் அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும். வரி கட்டாமல் பிச்சைக்காரன் கூட இங்கு வாழ முடியாது. அந்தளவுக்கு மக்களிடம் வரி வாங்கும் வலைப்பின்னலை இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.

வரி கொடுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு என்ன செய்கிறது? யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒன்பதாயிரம் கோடிக்கு வரிப்பணத்தில் விமானமும், இருநூறு கோடிக்கு ஒருவர் வசிக்கும் வீட்டையும் கட்டும் ஒன்றிய அரசு - வரி கொடுக்கும் மக்களுக்கும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என யோசித்துப் பாருங்கள். 

இந்த ஏழைக்குடும்பத்துக்கு தெரியுமா வாக்குரிமை பதிவு பற்றி?

இந்த ஏழைகளுக்குத் தெரியுமா மக்கள் தொகை பதிவு பற்றி?

அன்றாடப் பசி தீர்க்கப்போராடும் இந்தக் குடும்பத்திற்கு, இதெல்லாம் என்னவென்று தெரியுமா?

அவர்களைப் பார்த்த போது, எனக்குள் உண்டாகிய கேள்விகள் இவையெல்லாம்.

அந்தச் சிறுமியை அழைத்தேன். சிரித்துக் கொண்டே ஓடி வந்தது. அவளிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன். அவள் வாங்கவில்லை.

திரும்பி அவளின் பெற்றோர்களிடம் ஓடினாள். ஒருவேளை அனுமதி கேட்பாளோ என்று நினைத்தேன்.

ஒரு அழுக்குத் துணிக்குள் இருந்த, உடலில் உடையில்லாத ஒரு சிறு பெண் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு ஓடி வந்தாள் என்னிடம்.

ஒரு நிமிடம் நெஞ்சு பதைபதைத்தது. 

அந்தப் பெண் குழந்தை இடது கையை நீட்டி பணத்தை வாங்கியது. நடைபாதையில் ஏறினார்கள் இருவரும்.

இருவரும் திரும்பி நின்றார்கள். அந்தச் சிறுமியின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தது. சிரித்துக் கொண்டே கையாட்டிக் கொன்டே இருந்தார்கள் இருவரும்.

அருகில் இருந்த நண்பர் என்ன சார் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று கேட்டார்.

அந்த இரு குழந்தைகளின் முகம் மட்டும் சிரிக்கவில்லை. கண்கள் ஒளி வீசி சிரித்தன.

அந்தக் கண்களின் ஒளியில் இறைவனைக் கண்டேன்.

கிரீன் சிக்னல் விழுந்தது. கார் நகர்ந்தது. அவர்கள் காரை நோக்கிச் சிரித்துகொண்டே இருந்தார்கள்.

வளமுடன் வாழ்க.

குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படத்தின் ஒரிஜினல் என்னிடம் இருக்கிறது. அதை இங்குப் பதிவிடவில்லை. ஏ.ஐ புகைப்படத்தைப் பதிவேற்றி இருக்கிறேன்.

* * * 

இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார், நான் யார் என்று உங்களுக்குப் புரிந்து விட்டதா?

அவர் யார்? இவர் யார்? அது யார்? இது யார்? இப்படியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 

உங்கள் அறிவு உங்களுக்கு காட்டுவது எதுவோ அதுவே நான் யார்?




சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ரகசியம்


வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்திய சந்தையில், வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் முதலீடு செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் எப்போதும் முதன்மைச் செய்தியாகவும், பொருளாதார வெற்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. 

ஆனால், இந்த பிரம்மாண்ட முதலீடுகளுக்குப் பின்னால், உள்ளூர் பொருளாதாரத்தில் அவை உருவாக்கும் கண்ணுக்குத் தெரியாத 'பொருளாதார வலைப்பின்னல்' (Economic Network) மற்றும் அதன் உண்மையான தாக்கம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் தொடர் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

அரசாங்கங்கள் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, 'சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்' (SEZs) மூலம் பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன. 

மானிய விலையில் மின்சாரம், பரந்த நிலப்பரப்பு, வரி விலக்குகள், தளர்த்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மற்றும் நேரடி நிதிச் சலுகைகள் என சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. 

வணிக ரீதியாகப் பார்த்தால், பெருநிறுவனங்கள் முதலீட்டின் மீதான வருவாயை (ROI) நோக்கியே செயல்படுகின்றன. இந்த அரசுச் சலுகைகள் அவர்களின் லாப இலக்கை மிக எளிதாக எட்ட உதவுகின்றன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, அவை உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்காத சலுகைகள், இவர்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகின்றன. இந்தியர்களின் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிறுவனங்களுடன் போட்டியிட இயலாது.

ஏனென்றால், அரசின் சலுகைகளால் குறைந்த வரிகள், சலுகைகள் ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் லாபம் ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்படுகிறது.

SEZ அமைந்திருக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் நில உரிமையாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்கிறது.

உள்ளூர் சப்ளையர்கள், உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் வர்த்தகம் கணிசமான வளர்ச்சியை எட்டுகிறது.

அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடப்பதால் வங்கி மற்றும் நிதித்துறை பலமடைகிறது.

நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கிறது.

நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்திற்கு நிலையான வரி வருவாய் கிடைப்பதற்கான கட்டமைப்பு உருவாகிறது.

காகித அளவில் பார்க்கும்போது, இது பிராந்திய பொருளாதாரச் சுழற்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த 'வின்-வின்' (Win-Win) மாதிரியாகத் திகழ்கிறது.

இருப்பினும், இத்தகைய கட்டமைக்கப்பட்ட பொருளாதார அமைப்புகளில் சில சிக்கலான முரண்பாடுகளும் ஒளிந்திருப்பதாக சமூக ஆர்வலர்களும் பொருளாதார ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சலில் நாம் உற்று நோக்க வேண்டிய முக்கியமானவைகளைப் பார்க்கலாம்.

இந்த ஒட்டுமொத்தப் முதலீட்டு நிறுவனங்கள் அடையும் லாபத்தில், பெரும் பகுதி லாபத்தை அள்ளிக்கொண்டு போவது யார்?

இந்த உழைப்புச் சங்கிலியின் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பங்கு எவ்வளவு?

நில இழப்பு, இயற்கை வளச் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற மறைமுகமான விலையைக் கொடுப்பது யார்?

இதற்கான பதிலைக் கண்டறிந்தால், உண்மை சுடும்.

என்ன ஒன்று - அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒவ்வொரு நாட்டினையும் போரில் வென்று, அந்த நாட்டில் இருக்கும் பொருளாதார வளங்களை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. ஆனால் இந்த நவீன கால, உலகப் பொருளாதாரத்தில், வலிமையான நாடுகள் முதலீடுகள் என்கிற போர்வையில் மறைமுகமாக ஒவ்வொரு நாட்டின் வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது லாபம் பெறத்தானே? இல்லையென்று மறுக்க முடியுமா?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) என்பது அனைத்துத் தரப்பினருக்குமான கூட்டு வெற்றியைத் தரும் ஒரு திட்டமா, அல்லது ஒரு சிலரின் லாப வேட்டைக்காகப் பின்னப்பட்ட சாதுரியமான பொருளாதார வலையா என்ற கேள்வி இன்னும் விடைபெறாமலேயே தொடர்கிறது. 

சமநிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறேன்.

வளமுடன் வாழ்க.



Friday, June 19, 2026

இயக்குனர் பாரதிராஜா: இமயம் தொட்ட புகழும், வாழ்வின் நிழல் பக்கங்களும்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குப் பின், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் திரைத்துறையினரின் கருத்துக்களைக் காணும்போது, உலகமே கொண்டாடிய ஒரு மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. 

அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், "எல்லாரும் இவரைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே!" என்று ஆதங்கப்பட்ட வார்த்தைகள், பாரதிராஜாவின் இறுதிக்காலத் தனிமையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முகம் தெரியாத புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு உண்டு. ஆனால், அத்தகைய சாதனையாளரால் தன் சொந்த மகனை வைத்து மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு வெற்றிகரமான திரைப்படத்தைக் கொடுக்க முடியாமல் போனது ஒரு பெரும் அவலமே.

தன் மகனைத் திரைத்துறையில் வெற்றி பெற வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்திருக்கலாம். 'இயக்குனர் இமயம்' என்ற உயரிய பட்டம் இருந்தும், தன் சொந்த மகனின் திரைவாழ்வை அவரால் செப்பனிட முடியவில்லை என்றால், அந்தப் பட்டத்தால் அவர் பெற்ற பலன் என்ன என்ற கேள்வி எழுகிறது. 

மகனின் மறைவுக்குப் பிறகு, அத்துயரத்தின் காரணமாகவே அவர் திரைப்படப் பணிகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார். இறுதிநாட்களில் உடல்நலனுக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் முறையாக உட்கொள்ளவில்லை என்று கூறப்படுவது, அவர் அடைந்த மனவேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

வாழ்வின் கணக்குகளும், காரண காரியங்களும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

அவருக்கு ஏன் இந்த நிலை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அவர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. 

ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டது போல, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் பெயர்களை மாற்றும் வழக்கம் அவரிடம் இருந்தது. "பெயரை மாற்றுவதற்கு எனக்கு உரிமை கொடுத்தது  யார் என்ற எண்ணம் எனக்குள் ஒருமுறை தோன்றியது, அதன் பிறகே அதை நிறுத்தினேன்" என்று அவரே ஒப்புக்கொண்டார்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல அவருடைய திரைப்பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். உலகில் எந்தவொரு செயலும் காரண காரியமின்றி நடப்பதில்லை. 

அந்த வகையில், தன் வாழ்நாளில் யாரோ ஒருவருக்குச் செய்த செயலால் அல்லது யாரோ ஒருவரின் மனவருத்தத்தால் ஏற்பட்ட சாபமே, அவருடைய இறுதிக்காலத் துயரத்திற்குக் காரணம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால்: "யார் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒரு தொழிலையோ, செயலையோ நாம் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அதற்கான பலனை நாம் இந்த வாழ்விலேயே அனுபவித்தே தீர வேண்டும்" என்பதுதான். 

இது பாரதிராஜாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக வரலாறும், மனித வாழ்க்கையும் நமக்கு உணர்த்தும் எதார்த்த உண்மை. யாரும் தப்பித்துப் போகவே முடியாது.

அவருடைய மறைவின்போது, "சினிமா உலகம் ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்துவிட்டது" என்று திரையுலகினர் கண்ணீர் வடித்தனர். பல முன்னணி நடிகர்கள் கதறி அழுததையும், அவரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து இன்று பெரிய இயக்குனர்களாக இருக்கும் பலரின் நாடகத்தனமான அஞ்சலிகளையும் நாம் பார்க்க முடிந்தது.

நாளைக்கு இறக்கப் போகும் நபர்கள், இன்று அழுது கொண்டிருக்கிறார்கள் என்பார்கள். வந்தோமா, அஞ்சலி செலுத்தினோமா, சென்றோமா என்று இல்லாமல் பாரதிராஜாவின் செயல்களைப் பற்றி பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது அவருடன் இவர்கள் இருந்தார்கள் என்பதுதான் பேச்சின் சாராம்சம்.

பவா செல்லத்துரை என்றொரு எழுத்தாளர் அஞ்சலிக்காக பேசிய போது பாரதிராஜா பற்றி டவுசர் போட்டுக்கிட்டு நின்றார், சாப்பிட்டார், தூங்கினார், பேசினார் என்பது போலவே தனி மனித செயல் துதியைப் பேசினார். அப்படிப் பேச அவருக்கு வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. அவர் நடந்தது, பார்த்தது, பேசியது, தின்றது, திட்டியது பற்றி விலாவரியாகப் பேசினார். இதை ரசித்துக் கேட்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம். 

நாம் அவர் இயக்கிய முதல் மரியாதை படத்தை ஆராயலாம்.

வயதான சிவாஜிக்கும், இளம் பெண் ராதாவுக்கும் இடையே மலரும் காதல் தான் கதையின் கரு. 

இக்கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை என பாரதிராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார். இளையராஜா வயதான ஹீரோவுக்கும், இளமையான ஹீரோயினுக்கும் காதல் டூயட் பாடல்களை இசையமைக்கவில்லையா என்று கேட்டால் என்ன சொல்வாரோ? அது ஒரு பக்கம் இருக்கும்.

இந்தப் படத்தில் பாரதிராஜா கையாண்ட ஓர் அருமையான விஷயம் இருக்கிறது. சிவாஜிக்கு அவரின் மனைவியுடன் இல்லற வாழ்க்கை கிடையாது. அவர் தனது மாமன் மகன் வேறு எவனுடனோ உறவு கொண்டதால் வயிற்றில் குழந்தை. மாமனின் வேண்டுகோளுக்காக அவளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளையும் பிறந்தது. அம்புட்டுதான் இருவரின் வாழ்க்கையும். சொத்து மாமன் கொடுத்தது. பெண்ணும் தான். குழந்தையோ தனக்கு உரிமையில்லாதது. ஒரு அவல வாழ்க்கையின் பிம்பமாக சிவாஜி. ஊருக்கு ராஜா, வீட்டுக்குள் கையாலாகாதவர். 

இந்த நிலையில் ராதா மீது அவர் கொண்ட காதல் நேர்தன்மை கொண்டது. 

மனைவி இருக்கையில் மற்றொரு பெண்ணுடன் காதல் கொள்வத் கள்ளக்காதல். பாரதிராஜா இக்கதையில் காதலை நேர்மைப்படுத்தினார். இன்றைக்கு கள்ளகாதல் ஒழுக்கத்தில் சேர்த்தி.

எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளாத ஹீரோ, தனக்குப் பிடித்த ஒரு பெண்ணின் அன்பின் காரணமாக காதல் கொள்வது என்பது எதார்த்தமே. வயது வித்தியாசமென்பது காதலுக்கு கிடையாது.

இதுதான் இயக்குனரின் திறமை. பாரதிராஜா இப்படத்தில் சொன்ன காதல் உண்மையான காதலே. 

அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமானவை. ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியாதவை.

புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகம், தனிமையில் இருக்கும்போது கைவிட்டுவிடும் என்பதற்கு பாரதிராஜாவின் வாழ்க்கையே ஒரு சாட்சி.

வந்தார், வாழ்ந்தார், சென்றார். 

இயற்கையை வெல்ல எவராலும் முடியாது அல்லவா?


எல்லோருக்கும் எல்லாமும் - ஒரு சிறந்த ஜனநாயகத்திற்கான மக்கள் பங்களிப்பு (2)



"எல்லோருக்கும் எல்லாமும்" என்ற நிலையை எட்ட, ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாட்டில் மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

"மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழி" என்பார்கள். அதைப்போல, மக்களின் தேவைகள், மனநிலை மற்றும் எண்ணங்கள் எவையோ, அவைதான் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும்; அதற்கு அடிப்படையான காரணமாகவும் இருக்க முடியும்.

இந்த அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றை ஒன்றுதான்: முதலில் கதை கேட்பதையும், கதை சொல்வதையும் நிறுத்துங்கள். உலகிலேயே மிக மிக பிரபலமான, அதிகாரம் மிக்க, ஆனால் முழு உண்மையற்ற ஒரு விஷயம் உண்டென்றால் அது கதை சொல்வதும் கதை கேட்பதும்தான்.

மனிதர்கள் தோன்றி எத்தனையோ காலங்கள் ஆகிவிட்டன.

ஆரம்ப காலத்தில் மனிதர்களுக்கு எழுத்தறிவோ, இலக்கண அறிவோ எதுவுமே இருந்ததில்லை.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் பின்னரே ஒலிகள், குறிகள், மொழிகள், எழுத்துக்கள் போன்றவை உருவாகி, தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றன.

இந்த வடிவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை கதைகள்தான்.

கதைகள் என்பவை சாதாரணமானவை அல்ல. அது ஒரு மிகச்சிறந்த, அதிகாரம் மிக்க, ஒவ்வொருவருக்குள்ளும் மிக அந்தரமாக ஊடுறுவும் தன்மை கொண்ட, மிக மிக வலுவான ஊடகம் (Medium) ஆகும்.

இந்தக் கதை கேட்பதையும் கதை சொல்வதையும் மனிதன் எப்போது நிறுத்துகிறானோ, அப்போதே அவன் பிறரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கதைகளில் நாம் அவ்வாறு கேட்பதில்லை. அது கதை என்று நிறுத்தி விடுகிறோ. நிலாவில் பாட்டி கதை இன்றைக்கும் பலரின் மனதில் அச்சாணி போல பதிந்திருக்கும். இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்றால் இல்லை. ஆனால் நிலாவைப் பார்த்ததும் பாட்டி கதை நினைவுக்கு வந்து விடும். இப்படித்தான் இந்தக் கதைகள் மனிதர்களின் வாழ்வியலை சீர்குலைக்க ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் தாய், தந்தையரும் கதைகள் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகளின் உண்மை என்னவென்று யாருக்கேனும் தெரியுமா? என்றால்  தெரியாது. தேவையில்லை ஏனெனில் அது கதை. அப்படியான கதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய அழிவை உண்டாக்கி இருக்கின்றன என வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒரு நல்ல ஜனநாயகத்தையும், நல்லதொரு அரசாட்சியையும் நாம் உருவாக்க வேண்டும் என்றால், நாம் முதலில் இந்தக் கதை சொல்வதிலிருந்தும், கதை கேட்பதிலிருந்தும் விடுபட வேண்டும்.

உண்மையான ஜனநாயகம் என்பது ஒவ்வொரு மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படித்தான் ஜன நாயக ஆட்சி உருவாக்கப்பட்டிருக்கிறதா?

சிந்தியுங்கள் !

எல்லோருக்கும் எல்லாமும் - உண்மையான ஜனநாயகத்திற்கான தேடல் (1)




ஒரு நாட்டின் தலையாய கடமை என்பது, தன் நாட்டு மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும். 

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஓர் அரசு, தன்னுடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் மூலமாக மக்களுக்கு மிகச்சிறந்த வாழ்வியலைத் தர வேண்டும். 

அந்த நோக்கத்துடன்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கே வருகிறார்கள். 

அதற்காகவே மக்களிடம் சென்று தங்களுடைய கொள்கைகளை விவரித்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படைத் தேர்தல் முறை என்பதை நாம் அறிவோம்.

ஆனால், ஓர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, (இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும்) அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நிறைவான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட சமூகமும், குறிப்பிட்ட சில பிரிவினரும் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்" என்ற கோட்பாடு இந்தியாவில் இதுவரை நிறைவேறவே இல்லை.

இதன் காரணத்தை யோசித்துப் பார்த்தால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஆட்சியாளர்களின் தவறான வழிநடத்துதலே முதன்மைக் காரணமாகத் தெரிகிறது. 

மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை; 

தங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். இவர்களின் கொள்கைகள் மக்களின் அன்றாடப் பசியைத் தீர்க்கவோ அல்லது அவர்கள் நிம்மதியாக உறங்குவதற்குக் தங்குமிடம் (வீடு) தரவோ பயன்படவில்லை என்பதே உண்மை.

இதைச் சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இனிவரும் பதிவுகளில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  

இப்பதிவைப் போலவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், எழுதி இருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இந்தப் பதிவினால் என்ன பயன் என்று நினைக்க கூடும். 

இது பலர் எழுதிய பதிவல்ல. இது வித்தியாசமானது. வேறுபாடானது. அவசியம் தொடர்ந்து படியுங்கள்.

Sunday, May 31, 2026

மறக்க முடியாத சில பயணங்கள்

பயணம் என்றால் என்னவென்று தெரியும் தானே? ஒரு இடத்துக்குச் செல்வது. எல்லோருக்கும் பயணம் செல்வது பிடித்தமானது. ஒரே இடத்தில் இருப்பதை விட புதிய புதிய இடங்கள், மனிதர்களைப் பார்ப்பது என்பது மனதுக்குள் மலர்ச்சியை உண்டாக்கும். அலுத்துச் சலித்துப் போன ஒரே மாதிரியான வாழ்க்கையில், இவ்வகையான பயணங்கள் உற்சாகத்தை தரக்கூடியவை. சில பயணங்களால் வாழ்க்கையே மாறிப் போய் விடும். 

ஒரு சில பயணங்கள் மனதில் பதிந்து விடும். அப்படியாகத்தான் எனது இந்தப் பயணமும் இருந்தது. 

விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து குளித்து, உடைகள் உடுத்தி, மனைவியுடன் கோவை ஏர்போர்ட் சென்றேன். வீட்டிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரம் விமான நிலையம். இடையில் டிராபிக் என்றால் போச்சு என்பதால் சீக்கிரம் கிளம்பி விடுவதுண்டு.

ஏர்போர்ட்டில் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். காலை 6.10க்கு இண்டிகோ பிளைட்டில் சென்னைக்குப் பயணம்.  தனியாக வழக்கம் போல.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக விமானப் பயணங்களில் மனதில் பதிந்து விடுமளவுக்கு பிரமாதமான நிகழ்வுகள் கொண்ட நினைவுகள் ஏதுமில்லை. பல சினிமாக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். இவர்களை ஒருவர் கூட கண்டு கொள்ளவே மாட்டார்கள். செத்த பாம்பு போல சீட்டில் உட்காந்திருப்பார்கள்.

தமிழர்கள் பார்த்தாலே அலறிக் கொண்டிருப்பார்களே சினிமா நடிகைகள் - அவர்களை பலமுறை பயணத்தில் பார்த்திருக்கிறேன். யாராவது ஓரிருவர் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான் தான். 

ஒரு சிலருக்கு விமானப்பயணத்தால் பெருமை பிடிபடாது. மன்னர்கள் போல பார்வைகளை பறக்க விடுவார்கள். ஒரு சிலர் விதியேன்னு உட்கார்ந்திருப்பார்கள். இதில் குழந்தைகள் இருந்தால் - அது என்னென்ன சேட்டை செய்யுமென முன்பே முடிவு செய்யமுடியாது. ஆனால் கேபின் க்ரூ - விமானப் பணிப்பெண்கள் (வேலைக்காரிகள்) பாடுதான் பெருசு. குழந்தையின் கன்னத்தில் தட்டிச் சிரிக்க வேண்டும். அதெப்படி இப்படி ஒரு டெம்ப்ளேட் சிரிப்பை முகத்தில் தேக்கி வைத்திருக்கிறார்களோ எனத் தெரியவில்லை. காசுன்னா எல்லாச் சங்கடங்களையும் சகித்துக் கொள்ளத்தானே வேண்டும்.

பஸ்ஸில் உரசினால் பட்டையைக் கிளப்பி விடுவார்கள். விமானத்தில் வேறு வழியே இல்லை. உரசல் இருந்தே ஆகும். எனக்கு அல்ல நண்பர்களே. என்னைக் கொண்டு போய் விஐபி சீட்டில் உட்கார வைத்து விடுவார்கள். ஒன்றையும் பார்க்க முடியாத ராசியில்லாதவன். 

ஒரு முறை ஹைதராபாத் சென்ற போது ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தார். சரியான மப்பு போல. சரக்கு வாடை. சீட்டில் மல்லாந்து கிடந்தது. இந்தப் பக்கமாய் ஒரு வயதான அரசு அதிகாரி பெண். இந்தம்மா சீட்டில் நெட்டைக் குத்தலா உட்கார்ந்திருந்தார். சேலை என் மீது பட்டு விட்டால், கற்பு பறிபோய் விடுமென பதைப்பில் இருந்தார் போல. அவ்வப்போது உடைகளை ஒதுக்கிக் கொண்டிருந்தார். நடுவில் நான். அவ்வளவுதான் என் அதிர்ஷடமெல்லாம். 

பேசக்கூட முடியாது. கெத்தாய் இருக்கனுமே. யாரும் தவறாய் நினைத்து விடக்கூடாதே. இப்படி பல கட்டுப்பாடுகள் நமக்குள்ளே இருக்கும். உடல் நமது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?

எல்லாரும் எல்லாவற்றையும் பேசவும், செய்யவும் முடியாது. மரணம் வரையிலும் இப்படித்தான் போகும். படிக்க கஷ்டமாக இருக்குமே? அதுதான் எதார்த்தம்.

செக் இன் செய்து,போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய நாளில் சுமார் 50 பேர்தான் சென்னைக்கு சென்றோம். 

கேபின் க்ரூ நல்லபடியாக கவனித்துக் கொண்டார்கள். 😉

முகங்களைப் பார்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஏனெனில் நானொரு நாவல் எழுத முயன்று கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் வரும் ஹீரோயினுக்கு என் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன். அந்த வடிவம் கொண்ட ஒரு பெண் முகத்தை நானும் கடந்த நான்கைந்து வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. 

ஆனால் இந்தப் பயணம் வேறொரு முகத்தை எனக்குக் காட்டியது. நான் விரும்பியது ஒன்று, கிடைத்தது ஒன்று. 

கருங்குயிலுக்கு தோகையில்லை ஆனால் இனிய குரலுண்டு.

கொள்ளை அழகுடைய தோகை கொண்ட மயிலுக்கு இனிய குரலில்லை.

இப்படித்தான் இயற்கை உயிர்களைப் படைத்திருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்குமென நினைத்துப் பார்க்கிறேன். விடை தெரியவில்லை.

ஒரு குறை, ஒரு நிறை - முழு வடிவம். இரவு பகல் போல. 

ஆனால் இரவும் பகலும் உயிர்களுக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லை அல்லவா? காலம் என்பதும் இயற்கைக்கு இல்லை. இயற்கை படைத்திருக்கும் உயிர்களுக்கு மட்டுமே காலம். 

சரி போகட்டும் வேதாந்தம். 

மீட்டிங்க் முடித்து விட்டு அரக்கப் பரக்க மீண்டும் கோவை நோக்கி கிளம்பினேன். கத்திபாரா பாலம் அருகில் கையில் புறாவோடு நின்றிருப்பாரே நேரு அவரைச் சுற்றிலும் பாலங்கள். பாலங்களுக்கு கீழே அப்டவுன் என்றொரு நிறுவனத்தைப் பார்த்தேன். அரசிடம் உபயோகமாய் இல்லாத இடங்களில் பொழுது போக்கு மற்றும் உணவகம் நடத்துகிறார்கள் போல. 

அங்கே இருந்த ஒரு உணவகத்தில் இரண்டு சப்பாத்தியும், சைவ குருமாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நான்கரை மணி வாக்கில் போர்டிங்க் பாஸுடன் கேட் நம்பர் 101 முன்னால் இருந்த சேரில் உட்கார வைக்கப்பட்டேன்.

விமானங்கள் சிட்டுக் குருவி போல பறந்து கொண்டிருந்தன. ஆட்கள் ஏறினார்கள், இறங்கினார்கள். சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கமாய் ஒரு குரல் கேட்டது. 

திரும்பினேன்.

அவளைப் பார்த்தேன்.


அச்சு எடுத்தால் போல இதே முகம் தான். ஆனால் ஒரு சில மிஸ்ஸிங்க். நெற்றிப் பொட்டில் குங்குமம், மூக்கில் லோலாக்கு. கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் போட்ட காட்டன் சேலை. 

வயது முப்பத்தைந்து இருக்கும்.

அவள் என்னைப் பார்த்தாள். 

என்னுடன் விமானத்தில் பயணித்தாள். 

என் அதிர்ஷ்டம் தான் எனக்கு முன்னே நிற்குமே. 

நான் விஐபி சீட்டில், அவளோ விமானத்தின் பின் சீட்.

அந்தக் கண்களுக்குள் சிறை கொண்ட மனதைப் பிடித்து, எதார்த்தத்துக்கு கொண்டு வர இந்த நொடி வரை முயன்று கொண்டிருக்கிறேன்.

அந்தக் கண்கள். 


பாரசீக கவிஞன் சாதி ஷிராசி எழுதினானே இப்படி - ஒரு வேளை அவனும் என்னைப் போல கண்களைப் பார்த்திருப்பானோ???

நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றபோது,

என் கண்கள் உன்னையே பின்தொடர்ந்து வந்தன.

இப்போது என் கண்கள் வெறும் கண்ணீரால் மட்டுமே நிரம்பவில்லை,

உன் நினைவுகளால் உறைந்து போயிருக்கின்றன


என் பிரியத்துக்குரிய கவிஞன் ஜலாலுதீன் ரூமியின் கவிதை இதோ கீழே

உன் கண்களை மூடு,

அப்போதுதான் 

உன்னால் இதயத்தின் 

கண் கொண்டு பார்க்க முடியும்.


பயணங்கள் முடிவதில்லை. 

அவளை நான் இனி பார்க்க முடியாது. எனக்கு அது தேவையுமில்லை. அந்த நொடியில் நிகழ்ந்த ஒரு பார்வை. அவ்வளவுதான் வாழ்க்கை.

வாழ்க்கையில் எல்லாமே துன்பம் தான். ஏதோ ஒரு நொடியில் ஏற்படும் புன்னகையைத்தான் நாம் இன்பம் என்கிறோம்.

அந்த ஒரு நொடிக்காகத்தான் வாழ்கிறோம். அந்த வாழ்க்கை எப்போதும் துன்பமே..

புரியாதவர்கள் விலகி விடுங்கள். புரிந்தவர்கள் புன்னகை செய்வார்கள்.

அது இந்த நொடியில் மலரட்டும்.

வளமுடன் வாழ்க.


Wednesday, May 27, 2026

பிரதமர் மோடி ஆட்சியின் 12 ஆண்டுகள் பயணம் - ஒரு பார்வை



உலக அரசியலில் சில தலைவர்கள் தேர்தலை வெல்வார்கள். சிலர் ஆட்சியை நடத்துவார்கள். ஆனால் மிக அரிதான சிலர் மட்டும் — ஒரு தேசத்தின் மனநிலையையே மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட தலைமைத்துவத்தின் பெயர் நரேந்திர மோடி.

2014க்கு முன்பிருந்த இந்தியாவை நினைத்துப் பாருங்கள். ஊழல் குற்றச்சாட்டுகள், முடங்கிய நிர்வாகம், உலக அரங்கில் மந்தமான நிலை, மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை. “இந்தியா இப்படி தான்” என்ற விரக்தி பலரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் வந்தவர் மோடி. ஒரு அரசியல்வாதியாக அல்ல. இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் உருவமாக.

அவர் முதலில் மாற்றியது அரசாங்கத்தை அல்ல — மக்களின் மனநிலையை.

அரசு அலுவலக வாசல்களில் அலைந்து திரிந்த ஏழை மக்களுக்கு, “உங்களுக்கு உரியது நேராக உங்கள் கைக்கே வரும்” என்ற நிலையை உருவாக்கியது அவர். முன்பு மானியம் எங்கே போகிறது என்று தெரியாது. இப்போது உதவித்தொகை நேராக வங்கி கணக்கில். அதுவே நிர்வாக மாற்றம்.

முத்ரா யோஜனா மூலம் வேலை தேடும் இளைஞர்களை, வேலை கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஒரு தேநீர் கடை, ஒரு சிறிய தொழில், ஒரு பெண்மணியின் சுயதொழில் — இவைகளையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக பார்த்தார்.

உஜ்வாலா திட்டத்தில் கிராமத்து பெண்களின் சமையலறையில் புகை குறைந்தது. தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் அவமானம் குறைந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தில் பல பெண்களின் பயம் குறைந்தது.

அரசியல் என்பது வெறும் தேர்தல் அல்ல; மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருவது என்பதை நிரூபித்த ஆட்சி இது.

UPI பற்றி உலகம் இன்று பேசுகிறது.

ஒரு காலத்தில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்த இந்தியா, இன்று தனது தொழில்நுட்பத்தை உலகிற்கு காட்டுகிறது. ஒரு டீக்கடையிலும் QR Code. காய்கறி விற்கும் அம்மாவிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை. இதெல்லாம் சாதாரண மாற்றமல்ல. இது சமூக மாற்றம். காலத்தின் அடுத்தடுத்த மாற்றங்களை அவதானித்து, அதை மக்களின் கையில் கொண்டு சேர்க்கும் திட்டத்தினைச் செயல்படுத்திவர் பிரதமர் நரேந்தர மோடி.

வந்தே பாரத் ரயில் பாய்வதைப் பார்க்கும் போது, அது வெறும் ரயில் போல தெரியவில்லை. “நாமும் முடியும்” என்று ஓடும் இந்தியா போல தெரிகிறது. நெடுஞ்சாலைகள் நீள்கின்றன. விமான நிலையங்கள் பெருகுகின்றன.சிறிய நகரங்களும் உலக வரைபடத்தில் இணைகின்றன. ஒரு தேசம் நகர்கிறது என்ற உணர்வு உருவாகியுள்ளது. உலக அரசியலிலும் இந்தியாவின் குரல் மாறியுள்ளது. முன்பு உலக நாடுகள் இந்தியாவை “ஒரு பெரிய சந்தை” எனப் பார்த்தன. இன்று “ஒரு முக்கிய சக்தி” என பார்க்கின்றன.

G20 Summit மாநாட்டில் இந்தியா காட்டிய தலைமைத்துவம் சாதாரண விஷயம் அல்ல. உலக சக்திகள் மத்தியில் தன்னம்பிக்கையுடன் நின்ற இந்தியா — அது கடந்த சில ஆண்டுகளில் உருவான புதிய காட்சி. கொரோனா காலத்தில் உலகமே தடுமாறிய போது, இந்தியா தன்னைத்தானே காத்ததோடு நிற்கவில்லை. பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பியது. அப்போது தான் உலகிற்கு புரிந்தது — இந்தியா வெறும் மக்கள் தொகை கொண்ட நாடல்ல; மனிதநேய சக்தியும் கொண்ட நாடு.

தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசின் அணுகுமுறை இன்னும் வேறுபட்டது. “தாக்கினால் பதில் வரும்” என்ற புதிய மனநிலையை இந்தியா உலகிற்கு காட்டியது. Article 370 நீக்கம் போன்ற முடிவுகள், பல ஆண்டுகளாக யாரும் தொடத் தயங்கிய விஷயங்கள். அதை செய்து காட்டிய துணிவு — ஆதரிப்பவர்களையும், எதிர்ப்பவர்களையும் ஒரே நேரத்தில் வியக்க வைத்தது.

ஒரு தலைவரின் உண்மையான வெற்றி என்ன?

அவர் சென்ற பிறகும், அவர் உருவாக்கிய நம்பிக்கை மக்களிடம் வாழ்ந்தால் — அதுதான் உண்மையான வெற்றி.

இன்று இந்தியாவின் சாதாரண மனிதனும், “நம் நாடு உலகத்தில் உயர முடியும்” என்று நம்புகிறான் என்றால், அதில் மோடி என்ற மனிதரின் தாக்கம் மிக அதிகம்.

12 ஆண்டுகள் என்பது கால அளவு மட்டும் அல்ல. ஒரு தேசத்தின் தன்னம்பிக்கையை மீண்டும் எழுப்பிய காலம்.

விமர்சனங்கள் இருக்கலாம்.அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மறுக்க முடியாது.

நரேந்திர மோடி என்ற பெயர், இந்திய அரசியலில் ஒரு காலத்தை மட்டும் அல்ல — ஒரு மாற்ற மனநிலையையும் குறிக்கிறது.

வரலாறு சிலரை பதிவு செய்யும். சிலரை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

பிரதமர் மோடி — அந்த இரண்டாவது வகை.

அவர் நீண்ட ஆயுளுடன், நிலைத்த புகழுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அவர் என்னளவில் ஒரு கடவுளின் அவதாரத்தினைப் போல எப்போதும் ஒரு ஹீரோ. இந்தியாவின் நாயகன்.

வளமுடன் வாழ்க. 


#12YearsOfModiEra #BuildingNewIndia #ViksitBharat2047

Saturday, May 16, 2026

இந்திய மாநிலங்களால் நிதித் தன்னாட்சியைப் பெற முடியுமா?

இந்தியாவின் நிதி கூட்டாட்சி கட்டமைப்பு கொண்டது. நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசுகள், மத்திய அரசைச் சார்ந்திருக்கும் தங்களின் வருவாய் நிலை குறித்து தொடர்ந்து பல கவலைகளை எழுப்பி வருகின்றன — குறிப்பாக ஜிஎஸ்டி (GST) இழப்பீடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிப் பகிர்வு விகிதாசாரங்களின் ஏற்ற இறக்கங்கள், கடன் வரம்புகள் மற்றும் மாநில அளவிலான சீர்திருத்தங்களுக்கான நிர்வாக அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் ஆகியவை இதில் முதன்மையானவை.

ஆனால், அரசியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியமான பொருளாதாரக் கேள்வி இதுதான்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வை மட்டுமே அதிகம் நம்பியிருக்காமல், இந்திய மாநிலங்கள் எவ்வாறு நிலையான, சுதந்திரமான வருவாய் கட்டமைப்பை உருவாக்க முடியும்?

மாநிலங்களை வெறும் "வரியைச் சார்ந்திருக்கும் நிர்வாகங்களாக" பார்க்காமல், "செல்வத்தை உருவாக்கும் பொருளாதார இயந்திரங்களாக" மாற்றுவதில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது என VSJ அசோசியேட்ஸ் (VSJ Associates) நம்புகிறது. 

அதற்கான முக்கிய வழிகள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

சொத்துக்களைப் பணமாக்குதல் (Asset Monetization): மாநிலங்களிடம் பயன்படுத்தப்படாத பெருமளவிலான நிலங்கள், போக்குவரத்து சொத்துக்கள், தொழில்பேட்டைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) உள்கட்டமைப்புகள் உள்ளன. முறையான குத்தகை, பொது-தனியார் கூட்டு (PPP) மாதிரிகள் மற்றும் மறுசீரமைப்பு மூலம் நீண்ட காலத் தொடர் வருவாயை ஈட்ட முடியும்.

டிஜிட்டல் மற்றும் கண்டுபிடிப்புப் பொருளாதாரங்கள் (Digital & Innovation Economies): உள்ளூர் பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பை விரிவாக்க, ஃபிண்டெக் (Fintech), மின்சார வாகனங்கள் (EVs), செமிகண்டக்டர்கள், ஏஐ (AI), பசுமை ஆற்றல் மற்றும் டீப்-டெக் உற்பத்தி ஆகியவற்றில் மாநிலங்கள் பிரத்யேக கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

மாநில முதலீட்டு நிதியங்கள் (Sovereign-Style State Investment Funds): சுரங்கம், துறைமுகங்கள், எரிசக்தி அல்லது தொழில்துறைகளில் இருந்து கிடைக்கும் உபரி வருவாயை, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான எதிர்கால வருமானத்தை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யலாம்.

பசுமைப் பத்திரங்கள் மற்றும் காலநிலை மூலதனம் (Green Bonds & Climate Capital): உலகளாவிய ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை) மற்றும் காலநிலை நிதிச் சந்தைகள், மாநிலங்கள் தங்களின் நிலையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நேரடியாக மூலதனத்தை திரட்டுவதற்கான பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

வரி அல்லாத வருவாய் விரிவாக்கம் (Non-Tax Revenue Expansion): சுற்றுலா, தளவாடங்கள் (Logistics), துறைமுகங்கள், நகர்ப்புற சேவைகள், சுரங்க ராயல்டி, நீர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் ஆளுகை சேவைகள் ஆகியவை பாரம்பரிய வரி விதிப்புக்கு அப்பாற்பட்டு மாநில நிதியை கணிசமாக வலுப்படுத்த முடியும்.

இருப்பினும், நிதித் தன்னாட்சிக்கு சட்டரீதியான அனுமதி அவசியமாகும். நிர்வாகத் தடங்கல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, பொருளாதார சீர்திருத்தங்கள் சட்டப்பூர்வமாக வலுவானதாகவும், கொள்கை சார்ந்ததாகவும்  இருக்க வேண்டும். இந்திய கூட்டாட்சியின் அடுத்த கட்டம் வெறும் வரிப் பகிர்வால் மட்டும் தீர்மானிக்கப்படாது — மாநிலங்கள் எவ்வளவு திறம்பட சுதந்திரமான பொருளாதார மதிப்பை உருவாக்குகின்றன என்பதைக் கொண்டே அமையும்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற தொழில்மயமான மாநிலங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்கனவே பெற்றுள்ளன.

மாநிலத்தின் நிதி ஆலோசகர்கள் மாநில வருவாய் இனங்களைப் பகுத்து பிரித்து - புதிய வரி விதிப்புகளை, புதிய முதலீடுகளை உருவாக்குவது சாத்தியமா? அது இந்தியக் கூட்டாட்சி சட்டமைப்புக்குள் வருகிறதா என ஆராய்ந்து அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும்.

இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமென்றால், படிக்கும் உங்களுக்கு போரடிக்கும் என்பதால் இத்துடன் முடித்து விடுகிறேன்.

நான் எழுதும் பொருளாதார ஆய்வுகள் பற்றிய பதிவுகளை எனது லிங்க்டு இன் தளத்தில் பார்க்கலாம். அது ஆங்கிலத்தில் இருக்கும்.

முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்து இங்கும் பதிவு செய்ய முயல்கிறேன்.

வளமுடன் வாழ்க