குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 29, 2021

நிலம் (88) - கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ ஃபேஸ் 4 - டிடிசிபி அப்ரூவல் ரத்தாகுமா?

சில வருடங்களுக்கு முன்பு போனில் அழைத்தவர் கோவை வீரகேரளத்தில் இருக்கும் மகாராணி அவென்யூ 4வது பார்ட் டிடிசிபி அப்ரூவல் மனையிடத்தில் மனை வாங்க லீகல் தர முடியுமா? எனக் கேட்டார். கட்டணம் கேட்டார். சொன்னேன். சார், என்ன இது? இவ்வளவு கேட்கின்றீர்கள் என்றார். எனது கட்டணம் இது. முடிந்தால் கொடுத்து லீகல் ஒப்பீனியனும், டிராப்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் எனச் சொல்லி விட்டேன். அதன் பிறகு அவர் அழைக்கவில்லை. 

அவரின் பெயர் தெரியும். வில்லங்கச் சான்றிதழில் அவர் வாங்கிய இடத்தினைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் சரி என அத்துடன் மறந்து போனேன். ஒரு சிலருக்கு மன நோய் உண்டு. அதாவது சிக்கல்களை விரும்பும் மனம் அது. புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டுமென்பது அறியாமல் மயங்கும் மனசு. எங்கு எதைப் பேச வேண்டும்? எதில் ரிஸ்க் எடுக்க கூடாது என்ற தெளிவில்லை எனில் எப்போதும் தேவையற்ற சிக்கல்கள் வந்து விடும்.


இன்றைய ஹிந்து தினசரியில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 

முதலில் இணைப்பினைக் கிளிக் செய்து செய்தியைப் படித்து விடுங்கள். சென்னை உயர் நீதிமன்றம்  கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ 4 பார்டை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டிருக்கிறது. அந்த அவென்யூவில் என்ன நடந்திருக்கிறது என்றுப் பார்க்கலாம்.

இந்த இடத்தின் டிடிசிபி அப்ரூவலில் மொத்தம் 108 வீட்டு மனைகளுக்கும் இரண்டு ரிசர்வ் சைட்டுகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது டிடிசிபி அலுவலகம். அதன் பிறகு இந்த சைட்டின் புரமோட்டர் ராமசாமிகவுண்டர் ரிசர்வ் சைட்டுகள் இரண்டினையும் இணைத்து பிளாட்டாக கன்வெர்ட் செய்து, அதை வீரகேரளம் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் அதாவது (இ.ஓ)விடம் மனை அனுமதி பெற்று பழைய டிடிசிபி பிளானுடன் இதை இணைத்து விற்பனை செய்து விட்டார்.

இ.ஓவிற்கு வீட்டு மனைப்பிரிவு அனுமதி வழங்க அனுமதி கிடையாது. வீட்டு மனைப்பிரிவு அமையும் இடத்தினை ஆய்வு செய்து, மனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய மட்டுமே அவருக்கு சட்டத்தின் வழி உரிமை உள்ளது. இது விதிமீறல். சென்னை உயர் நீதிமன்றம் இவரின் இந்த விதிமீறலைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல வில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு இ.ஓ நான்கு இடங்களில் பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்கள், பல கடைகள், இடங்கள் என கட்டி வாடகைக்கு விட்டு பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது பேக்கரி பிராஞ்சைஸ் எடுத்து கோடியில் வருமானம் செய்து கொண்டிருக்கிறார். முறைகேடான ஊழல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் ஐ.டி பிரிவு இவ்வாறான ஊழல்வாதிகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.

சரி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வீரகேரளம் கோவை கார்ப்பொரேஷன் லிமிட்டில் 2011ம் வருடத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கார்ப்போரேஷன் லிமிட்டில் இருந்த வீட்டு மனைகளின் ரிசர்வ் சைட்டுகள் கணக்கெடுப்பு நடந்த போது மகாராணி அவென்யூவில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு ரிசர்வ் சைட்டுகளையும் வேலி போட முயன்ற போது அந்த ரிசர்வ் சைட்டுகளை விலைக்கு வாங்கியவர்கள் சென்னைக் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார்கள்.

எல்லா வக்கீல்களுக்கும் தெரியும் வீட்டு மனைப்பிரிவு அனுமதியை ஒரு எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்க முடியாது என. ஆனாலும் இந்த வழக்கில் வாதிகளுக்கு ஆதரவாக வக்கீல் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு, எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்கிய ஆணை சரியானதுதான் என்றுச் சொல்லி வாதாடி இருக்கிறார்.

இவரைப் போன்றவர்களிடம் தான் லீகல் ஒப்பீனியன் வாங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது அவர்கள் பிரச்சினை.

என்ன நடந்திருக்கிறது மகாராணி அவென்யூ 4வது பேசில்? என பார்க்கலாம். டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டு மனை வரைபடத்தின் படி மனைப்பிரிவு அமைந்துள்ளதா என, அந்த வீட்டு மனை இருக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. 

ஏனென்றால் அந்த பஞ்சாயத்துக்கு வீட்டு வரி வசூல் செய்யவும். வீடு கட்ட அனுமதி கொடுக்கவும் அந்த வரைபடம் தான் மூல ஆவணம். கிராம பஞ்சாயத்தின் வருமானத்திற்காக அரசு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து வைத்திருக்கிறது.

மகாராணி அவென்யூ டிடிசிபி பிளான் நம்பருடன் இன்னும் கொஞ்சம் நிலத்தினை வாங்கி, அதனுடன் ரிசர்வ் சைட்டுகளையும் இணைத்து பிளான் போட்டு இ.ஓவிடம் கையொப்பம் பெற்று ராமசாமிகவுண்டர் சைட்டுகளை விற்று விட்டார். 

இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

இதில் தவறு செய்தது வீட்டுமனைப்பிரிவு உரிமையாளர். அதற்கு உடந்தை வீரகேரளத்தின் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர். பாதிக்கப்பட்டது ஏழு சைட் வாங்கியவர்கள். இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இ.ஓ எவன் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும்.

அந்த இரண்டு சைட்டுகளையும் பஞ்சாயத்துக்கு நன்கொடை ஆவணம் கூட எழுதிக் கொடுக்காமல், கையூட்டுப் பெற்றுக் கொண்டு ஏழு பேரின் வருமானத்தில் ஓட்டை போட வைத்த இ.ஓவினை அரசு என்ன செய்து விடும் என்று நினைக்கின்றீர்கள்? 

அவன் மயிரில் ஒன்றினைக் கூட பிடுங்க முடியாது. ஊழல்வாதிகள் இதோ இன்றைக்கும் ஒய்யாரமாய் உலா வருகின்றார்களே யாரால் என்ன செய்ய முடிந்தது?

இன்றைய ஹிந்துவில் உத்திரப்பிரதேசத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் பதினோறு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவ்வாறு நடக்கிறது. சாமியாருக்கும் நாடாள ஆசையுண்டு. அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்லித் திரிகிறார்.

இந்த உலகத்தின் பெரும்பான்மை மனிதர்கள் அயோக்கியத்தனம் செய்பவனையும், துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறது. இந்த அரசின் சிஸ்டமே குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான். நல்லவர்களைப் பாதுகாப்பது என்பது கிஞ்சித்தும் கிடையாது. அவனவன் போராடிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் மனம் பணத்தினை நோக்கியும், அதிகாரத்தின் குருதிச் சுவையினையும் விரும்ப ஆரம்பித்து விட்டது. மக்கள் மனம் இவ்வாறு எனில் மக்களின் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாறித்தான் போவார்கள். அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை அல்லவா?

ஊழலில் குளித்து கும்மாளமிடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தால் ஒரு வேளை இம்மாதிரியான குற்றம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நடக்காது. ஏனெனில் அரசை நிர்வகிக்கும் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன.

அறியாத பலர் இவ்வகைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அல்லலுறுவதைக் காணும் போது மனசுதான் வலிக்கிறது.

உங்களுக்கான லீகல் அட்வைசிங்க் பெற என்னை அணுகலாம். கோவை மட்டுமல்ல தமிழ் நாடெங்கும் சர்வீஸ் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்...!

Tuesday, September 21, 2021

நீட் தேர்வு தினமலர் முனைவர் காயத் திரி

நீட் தேர்வு குறித்து முனைவர் காயத்திரி அவர்கள் கடந்த  20.09.2021ம் தேதியன்று தினமலரில் சிந்தனைக் களம் என்ற பகுதியில் கீழே படத்தில் இருக்கும் கட்டுரையினை எழுதி இருக்கிறார்.


நன்றி : தினமலர் - முழு கட்டுரையினை இணையத்தில் படித்துக் கொள்ளவும். இந்தக் கல்வியாளரின் நோக்கம் கட்டுரையினைப் படித்ததும் தெரிந்து விடும்.

இந்தியாவில் பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்சியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றன. வேறுபட்ட கல்வித் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்தியா முழுவதுமான ஒரே தேர்வு என்றால் எப்படி சரியாகும்? எல்லாக் கல்வித் திட்டத்தினையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கேள்வித்தாளுக்கு முழுமையான பதிலை மாணவனால் எங்கனம் எழுத முடியும்? 

ஆகவே நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்பது தெளிவு. இதைப் பற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் அவர் எழுதவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற ஒரே வழி நீட் கோச்சிங்க். லட்சக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி உடையவருக்கு நீட் தேர்வில் வெற்றி கிடைக்கும். இதற்கு நீட் கோச்சிங்க் சென்டர்கள் சொல்லும் வெற்றிக் கணக்கே சாட்சி. 

இல்லையென்று இந்தக் கல்வியாளரால் எழுத முடியுமா? முடியாது. அதை மறைத்து விடுவார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழி வழி மாநிலங்களின் கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கி ஒன்றிய அரசுப்பட்டியலில் சேர்த்தது பெரும் மோசடியான அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மொழி வழி மா நிலங்கள் தனக்கென தனிப்பட்ட  வரலாறு, கலாச்சாரம் கொண்டவை. இப்படி இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் என்றால் அது மோசடி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

பிஜேபி அரசின் காவி மயக் கல்விக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. ஆரம்பமே தகராறு. இவருக்கு இதுவெல்லாம் நினைவில் இல்லை போல.

அடுத்து, முன்னைவர் காயத்திரி தன் கட்டுரையில் சுட்டுவது திமுகவின் நீட் ரத்து பற்றி. திமுக அரசு நீட் தேர்வு பற்றி ஆராய, ஒரு குழுவை உருவாக்கிய உடனே பிஜேபி கோர்ட்டிற்குச் சென்று தடை கேட்டது. 

சேப்பாக்கம் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதாக முழங்கினாராம். ஏன் செய்யவில்லை என்கிறார்.  அதிமுக துரோகி எட்டப்பனும் தான் சொன்னான். தீர்மானம் இயற்றினான். அதைப் பற்றி ஏன் இவர் எழுதவில்லை. ஏனென்றால் அதிமுக அடிமையாக படுத்துக் கிடக்கிறது. அதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. திமுக நீட் தேர்வினை ரத்துச் செய்வதாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல தோற்றத்தினை உருவாக்கி இருக்கிறார் முன்னைவர்.

நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்து அறிய குழு போட்டவுடனே பிஜேபி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் புதைத்திட நீதிமன்றப்படியேறியதே, அந்த தடங்கல் பற்றி வாயைத் திறக்காத கல்வியாளர், கல்வி படிக்க விரும்பும் மாணவர் தரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

ஒரு மாணவன் கல்வி கற்பதன் காரணமாகத்தான் தரம் உயர்கிறானே ஒழிய, கல்வி கற்கவே தரம் வேண்டும் என்று சொல்லும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்திற்கு கோடாரியாய் இருக்கிறார்கள். ஏழை மாணவன் உயர் கல்வி உரிமையைப் பெறக்கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் என்பது  அவர்களின் இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் காலம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் கல்வியினை கற்கும். ஆரம்பத்தில் நன்றாகப் படிக்காத குழந்தைகள், பின் நாட்களில் நன்கு படிப்பார்கள். 

எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. நீ ஆரம்பத்தில் நன்றாகப் படிக்கவே இல்லை, ஆகவே உனக்கு படிப்பு தர முடியாது என்றுச் சொல்லும் இந்த வகைத் தேர்வுகள் மனித மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவை அல்லவா? 

இதை வழிமொழியும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் அல்லவா?

தன் கட்டுரையில் திமுகவினை சாடு சாடு என சாடி விட்டு, கல்வியில் அரசியல் என்கிறார். கல்வியில் அரசியலைக் கலப்பது பிஜேபி தான். வேறு எவரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

பொறியியல் கல்லூரிகளில் தரம் இல்லையாம்? தரமில்லாத எந்த ஒன்றும் காலப்போக்கில் இல்லாது போகும். அதைச் சரி செய்ய கடுமையான சட்டங்கள் தான் தேவை. மாணவனைக் கல்வி தான் தரப்படுத்தும். அதை எப்படி தரமாக வழங்குவது என அரசு கல்வி நிலையங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வைத்தல் வேண்டும். அதை விடுத்து படிக்கவே தேர்வு வைப்பேன் என்பது கொடும் செயல். கொடுமைச் சிந்தனை. கொலைகார எண்ணம். மக்களை மாக்களாக்க வைக்கும் பாதகச்செயல்.

திமுவைத் திட்டி, இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்து, பொறியியல் கல்வியை தரம் தாழ்ந்து விட்டது என்றுச் சொல்லி வரும் இவர், அடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றால் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் என்கிறார்.  

இது நாள் வரை, மெடிக்கல் படிக்க எந்த கோச்சிங்க் செல்லாமலும், கட்டணம் இல்லாமலும் சீட் பெற்று படித்த மாணவர்களுக்கு இது பெரும் சுமை.

நீட் கோச்சிங்க் சென்டர்களில் குவியும் கள்ளப்பணம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. அங்கு நடத்தப்படும் தீண்டாமைகளை இவர் எழுதவில்லை. சமீப நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது பற்றியோ, பீகார் மாநிலத்தில் தேர்வு என்கிற பெயரில் நடத்தப்படும் மோசடி பற்றியோ வாய் திறக்கவில்லை. திருட்டுத் தேர்வு, கேள்வித்தாள் மோசடி செய்து வெற்றி பெரும் மாணவர்களைப் பற்றி ஒரு வார்த்தை இக்கட்டுரையில் உள்ளதா என்றால் இல்லை. 

ஐஏஎஸ் தேர்வில் ஒரு பிசி மாணவனைப் பார்த்து, தேர்வாளர் ம்... நீங்களெல்லாம் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று அரசாள வந்து விட்டீர்கள் என்றுச் சொல்லி அவரை பெயில் ஆக்கிய சாட்சி என்னிடம் இருக்கிறது. தேர்வாளர் ஒரு பிராமின் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏன் அவன் நாடாளக் கூடாது என்று அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரிந்து கொண்டீர்களா? இதைத்தான் பிஜேபி அரசு செய்ய விரும்புகிறது.

உயர்கல்வி உயர் ஜாதியினருக்கு என்கிறது பிஜேபி அரசு.

கல்வியாளர் அடுத்து பரிந்துறை செய்கிறார் இப்படி

மருத்துவம் இல்லை என்றால் என்ன? வேறு படிப்புகள் இருக்கின்றனவே என்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னவென்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஏன் பெட்ரோமாக்சே தான் வேண்டுமா? வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்கிறார். 

அதாவது நாடாளும் கல்வி, மருத்துவம் போன்றவைகள் எங்களுக்கே உங்களுக்கு கீழ் நிலைப் படிப்பு இருக்கிறது அதைப் படியுங்களேன் என்கிறார்.

அப்துல்கலாம், ரஜினியை உதாரணம் காட்டுகின்றார். ஒரே ஒரு அப்துல் கலாமும், ரஜினியும் தான் இருக்க முடியும். அவர்களைப் போல இன்னொருவர் இருக்க முடியுமா? இவருக்குத் தெரியாதா? தெரியும். சொல்ல மாட்டார். அசைன்மெண்ட் அப்படி.

சினிமாவில் சாதித்தவனை விட அழிந்தவர்கள் தான் அதிகம். கோடியில் ஒருவன் வெற்றி பெறுகிறான் அதுவும் சிறிது காலம். அவரை உதாரணமாகக் காட்டும் இவரின் பாதகச்சிந்தனைக்கு மாற்றாக வேறு எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு கல்வியாளர் என்ற போர்வையில் கல்வியில் வெற்றி பெற்றவர்களை உதாரணம் காட்டாமல் சினிமாக்காரனை உதாரணம் காட்டி, நீங்களும் சினிமாவுக்குச் சென்று அழிந்து போ என்றுச் சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.

ஏன் இப்படி பொருமலுடன் இக்கட்டுரையினை எழுதி இருக்கிறார் இவர்?

ஏழை கீழ்சாதி மாணவர்கள் மருத்துவர் ஆகி விட்டால் கீழ் சாதிக்காரனிடம்  மருத்துவம் செய்ய சனாதன தர்மமும், ஆகம விதிகளும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்ல வருகின்றார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீட் தேர்வு வைத்து உங்களை நாங்கள் வடிகட்டி விடுவோம் என்றுச் சொல்லாமல்  சொல்கிறார்கள்.

கல்வி கற்க தடை போடும் எவரும் நிரந்தரமாக வாழ்ந்தது இல்லை. கல்வி கற்றுக் கொடுப்பவனை கடவுள் என்கிறது தமிழ் கலாச்சாரம். 

பிஜேபி தன் நிலைப்பாட்டை மாற்றி நாட்டை நிர்வாகம் செய்வதை கவனிக்க வேண்டும். அதை விடுத்து கல்வி கற்க தடை ஏற்படுத்தினால் காலம் அவர்களை மொத்தமாக அழித்து விடும். 

தன் வாழ்க்கையை நிரந்தரம் செய்ய முடியாத இவர்கள், மற்றவர்களுக்கு அழிவினை உண்டாக்கும் செயல்களைச் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்பவர்களுக்கு அறம் அதற்குரிய பலனை அளிக்கும் என்பது வரலாறு சொல்லும் செய்தி. நயவஞ்சக நரிகளையும், ஓநாய்களையும் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டும்.

கல்வியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பாதகச் சிந்தனைவாதிகளை உலகம் ஒதுக்கி தள்ளி விட வேண்டும். இவர்கள் மனித குலத்தின் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் உதிர்ந்து போய் விடும்.அவர்களை இனம் கண்டு கொண்டு, இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் உதறித் தள்ளிடல் காலத்தின் கட்டாயம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடல் வேண்டும். அது ஒன்றே தர்மம்.

அது ஒன்றே அறம்.

வாழ்க வளமுடன்...!