குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 6, 2016

நிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு தினத்தந்தியில் ஒரு செய்தி. அன்னூரைச் சேர்ந்தவர்கள் தமிழக இந்து அறநிலையத்துறைக்கு  பாத்தியமான நிலத்தைப் பட்டா பெற்று அதனை தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு விற்பனை செய்து விட்டார்கள் என்றும், அதை அறிந்தவுடன் தூத்துக்குடிக்காரர் காவல்துறையில் புகார் கொடுத்து, ஏமாற்றியவர்களை கைது செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வினைப் பற்றி இங்கு பதிந்தால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலம் அது. கோவிலின் பெயரில் பட்டா இருந்தது. ஆனால் அந்த நிலம் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்களால் குறிப்பிட்ட கோவிலில் பணிபுரியும் பூசாரிக்கு இனாமாக வழங்கப்பட்டிருந்தது என்றும் ஆகவே அந்தப் பூசாரிதான் அந்த நிலத்துக்கு உரிமையாளர் என்றும், தமிழக அரசு அந்த நிலத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொண்ட போது அந்தப் பூசாரிக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கியது என்றும் சொல்லிக் கொண்டு ஒரு ஆவணத்தை நண்பர் கொண்டு வந்து கொடுத்தார். அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில் செட்டில்மெண்ட் தாசில்தாரால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், கந்தாய ரசீது போன்றவற்றை பூசாரி தன் பெயரில் செலுத்தி வந்திருக்கிறார் என்பதையும், கோவிலின் பெயரில் உரிமையாளராக அந்தப் பூசாரி இருந்து வந்திருக்கிறார் என்பதையும் அறிய நேர்ந்தது. 

இருப்பினும் அதில் மற்றொரு மறைந்து போன தகவலையும் அறிய நேர்ந்தது. செட்டில்மெண்ட் தாசில்தாரால் கொடையாக அளிக்கப்பட்ட அந்த நிலம் அந்தப் பூசாரியின் தகப்பனாரால் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் அறிய நேர்ந்தது. அனுபோகத்தில் இருந்து வந்த பூமியைத்தான், செட்டில்மெண்ட் தாசில்தார் கோவில் இனாமாக வழங்கி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த பூமியானது அவர்களின் அனுபோகத்தில் எத்தனை காலம் என்பதை அறிய முடியவில்லை. அதற்கான ஆவணங்களைத் தேடினால் கிடைத்து விடும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறு அந்த ஆவணங்கள் கிடைத்து விட்டால் செட்டில்மெண்ட் தாசில்தாரின் உத்தரவினை  ரத்து செய்தும், இந்து அற நிலையத்துறையின் கீழ் பதிவாகி இருப்பதையும் நீதிமன்றம் மூலம் நீக்கி விடலாம் என்று முடிவு செய்தேன். 

எல்லாம் செய்து கொடுக்கலாம், ஆனால் அவர்கள் என்னை செலவு செய்து மீட்டெடுத்துத்தாருங்கள் என்றார்கள். என் வேலை என்னவோ அதைத்தான் என்னால் செய்ய முடியும்? என்றும் எனக்குரிய கட்டணத்தை அளித்தால் மீட்டெடுக்க உதவுகிறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து கோடி விலை இருக்கும். அந்தப் பூசாரியின் வாரிசுகள் ஏழ்மையில் உழல்கிறார்கள். இருப்பினும் நான் என்ன செய்ய முடியும்? 

கோர்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை எல்லாம் செய்து கொடுத்து அவர்களிடமிருந்து செலவு தொகையைத் திரும்பப் பெறுவது சாதாரண காரியமா? காரியம் ஆகும் வரை நன்றாக இருக்கும், காரியம் முடிந்த உடன் வேறு மாதிரியாகப் பேசும் உலகமல்லவா இது? அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் ரிஸ்க் எடுக்க முடியுமா? விதியின் வலிமையினைப் பார்த்தீர்களா? கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது ஆனால் என்ன பயன்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கோவிலுக்குப் பாத்தியமான சொத்துக்களை வாங்கினால் அது எந்தக் காலத்திலும் செல்லத்தக்கதல்ல. எப்படி கோவில் நிலங்களை அடையாளம் காண்பது என்று நினைக்கின்றீர்கள்? அதற்கு கிரையம் பெற உள்ள ஆவணங்களைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடியும். இப்படி பல முறைகளில் ஒரு சொத்தின் தன்மையானது என்ன என்று கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து பல தடையின்மைகளை பற்றி அலசி ஆராய்ந்து பார்த்து நிலத்தின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடித்தல் அவசியம்.

அந்த தூத்துக்குடிகாரருக்கு கோவையில் இருக்கும் நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள அவ்வளவு எளிதில் முடியாது. ஒரே ஊர்க்காரராக இருந்தால் ஓரளவு நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெளியூரில் சொத்துக்கள் வாங்க நினைப்போர் லீகல் கருத்துரு பெறுவதற்காக ஒரு தொகையினை தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உழைப்பு வீணாகிப் போகும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.