குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 22, 2009

அக்காவும் தங்கையும்

அக்காவுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். தங்கைக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் கழிந்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லை. இப்படி இருக்க ஒரு நாள் அக்காவைப் பார்க்க சென்றாள். தங்கையை வரவேற்று இன் வார்த்தைகள் சொல்லி விருந்துச் சமையல் செய்து பரிமாறினாள் அக்கா. அப்போது தங்கையின் மனவோட்டத்தை ஒருவாறாக ஊகித்து விட்டாள். குழந்தைகளோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தங்கை. குழந்தைகள் சாப்பிடும் அளவை விட அதிகமாக உணவு பரிமாறினாள் அக்கா. குழந்தைகள் சாப்பிட்டு தட்டில் மிச்சம் வைத்து விட்டு எழுந்து விட்டனர். குழந்தைகள் மிச்சம் வைத்த உணவினை ஒவ்வொரு தட்டாக எடுத்து சாப்பிட்டு விட்டு, போதாமல் கொஞ்சம் சட்டியில் இருந்து உணவையும் எடுத்துப் போட்டு சாப்பிட்டாள் அக்கா. தங்கையைப் பார்த்து இன்னொரு குழந்தை இருந்தால் எனக்கு சாப்பாடு நிறைவாயிருந்திருக்கும் என்று சொன்னாள். தங்கை தான் என்ன நினைத்து வந்தாளோ அது நடக்காது என்று தனக்குள்ளே ஊகித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இக்கதையில் தங்கையின் எண்ணம் அக்காவிடமிருந்து ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்பது. ஆனால் அக்காவுக்கோ அப்படி குழந்தையைக் கொடுக்க மனமில்லை. அதை தங்கையிடம் எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டாள் என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

எனது அண்ணா அதாவது அப்பாவின் ஒன்று விட்ட தம்பிக்கு பிறந்தவர் கிராமியக் கதைகள் சொல்வதில் மன்னர். நேற்றைக்கு மீன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுச் சென்றார். கோயமுத்தூர் பக்கம் மீன் குழம்பில் தேங்காயை சேர்த்து சப்பென்று சமைத்து விடுவார்கள். அந்த டேஸ்ட் இவருக்குப் பிடிக்காது. பட்டுக்கோட்டைப் பக்கம் காரம், புளிப்பு என்று மீன் குழம்பு ரத்தக் கலரில் இருக்கும். மனைவிக்கு எங்கள் ஊர் சமையல் பக்குவம் அத்துப்படி. வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் பிறந்தாலும் எனது ஊர் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு விட்டாள். அண்ணா சாப்பிடும் முன்பு சொன்ன கதைதான் மேலே இருப்பது.

பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. வண்டி எப்படி அச்சாணி இன்றி இயங்க முடியாதோ அப்படித் தான் பெண் இன்றி எந்தக் குடும்பமும் இயங்க முடியாது. அந்தப் பெண்ணின் சகிப்புத் தன்மைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

1 comments:

துபாய் ராஜா said...

"பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. வண்டி எப்படி அச்சாணி இன்றி இயங்க முடியாதோ அப்படித் தான் பெண் இன்றி எந்தக் குடும்பமும் இயங்க முடியாது. அந்தப் பெண்ணின் சகிப்புத் தன்மைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது."

அப்படியே ஆமோதிக்கிறேன்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.