

இந்த முறை ஹோட்டலில் தங்காமல் ஏதாவதொரு பிரைவேட் ஹெஸ்ட் ஹவுஸில் தங்கலாமென்று நினைத்தேன். கடமைக்கு என்று சிரிக்கும் ரூம்பாய்களையும், சர்வர்களையும் சற்றே பார்க்காமல் தவிர்க்கலாம் என்று நினைத்தேன். ஃப்ரான்சில் வசிக்கும் எனது நண்பர் திரு ஆட்னன், ஒரு முறை கேரளா வந்து ஹெஸ்ட் ஹவுசில் தங்கியதாகவும், அதைப் பற்றிய அனுபவத்தை சிலாகித்தும் சொன்னது நினைவுக்கு வர அவருக்கு மெயில் அனுப்பி வைத்தேன். மறு நாள் விபரமாக அவரிடமிருந்து பதில் வந்தது. கொச்சியில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸைப் பற்றிய விபரக் குறிப்புகளை அனுப்பி இருந்தார். போட் ஹவுஸிலிருந்து நேராக அந்த ஹெஸ்ட் ஹவுசுக்குச் சென்றோம்.
மிஸ்டர் பேசில் எங்களை வரவேற்றார். பேக் வாட்டர் ஹோம் என்ற பெயரில் அருமையான பழங்காலத்து வீடு. கிட்டத்தட்ட 70 வருடங்கள் ஆகி விட்டது என்று சொன்னார். இரண்டு குளிர் சாதன வசதி கொண்ட அறைகள். பெரிய பாத்ரூம். பின்புறம் ஆற்றுத் தண்ணீர். சுற்றிலும் செடிகள், மரங்கள், மாமரம், கொய்யா என்று வித விதமான மரங்கள். வாசலின் இடது பக்கம் தோட்டம் என்று அமைதியான சூழலில் அழகான வீடு. வாசலின் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு நானும் அவரும் பழங்கதைகள் எல்லாம் கதைத்தோம். வெகு சுவாரசியமான மனிதர். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். என்ன சாப்பிடலாமென்று அட்வைஸ் வேறு. ஃபாரினர்ஸ் அவருடன் தங்கிய கதைகளையும், புகைப்படங்களையும் காட்டினார். சமீபத்திய மலையாள மேகசினில் வெளிவந்த அவரைப் பற்றிய கட்டுரையினையும் காட்டினார்.


இரவு மெனுவை விசாரித்துக் கொண்டு, டிரைவருடன் அவரும் கூடவே ஹோட்டலுக்குச் சென்று கூடவே, ஹாட்பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று டிஃபன் வாங்கி வந்து அவரே சூடாகப் பரிமாறினார். சாப்பிடும் போது ஷாம்பெயின் கொண்டு வந்து கொடுத்தார். மறுத்து விட்டோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தோட்டத்தில் பழுத்த மாம்பழம் பரிமாறினார். வெகு இனிப்பு. வீட்டுச் சாம்பாரும் வந்தது. அட்டகாசம். அவரின் மனைவி அன்போடு பழகினார்.

இரவில் நல்ல தூக்கம். விடிகாலையில் சுடச்சுட காஃபி வந்தது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டே குளிர்ச்சியான அந்த சூழ்நிலையில் காஃபியும் சுவையோடு இருக்க அந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்ன டிஃபன் வேண்டுமென்று கேட்டார். இடியாப்பம், சன்னா மசாலா என்று சொன்னேன். காலையில் எல்லாம் தயார். பூவரச இலையின் மீது வேக வைத்த இடியாப்பமும், சன்னா மசாலாவும் வெகு அருமை. குடும்பத்தோடு புகைப்படமெடுத்துக் கொண்டோம். மனைவியிடம் மாங்காய், ஜாதிக்காய் கொடுத்தார் திருமதி பேசில். கூடவே சன்னா மசாலா செய்முறை விளக்கத்தையும் கொடுத்தார். கேட்பதோடு சரி. செய்தெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று அப்போதே முடிவு கட்டிக் கொண்டேன். நல்ல பிள்ளைகளாக தம்பி மனைவியும், என் அம்மணியும் இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். மன நிறைவோடு வீகா லேண்ட் கிளம்பினோம் மறுநாள்.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் நல்லா இருங்க என்று எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
2 comments:
sir,
Please provide the address details for other also.
hello anonymous, contact me through my email id. covaimthangavel@gmail.com. then i will provide details of this guest house.
best wishes
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.