குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!துணைவேந்தர்களா? அரசியல்வாதிகளா? யார் நீங்கள்?

இன்றைய 12.06.2023 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆளுநர் ரவிவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தனித்தனியாக துணை வேந்தர்களுடனான மீட்டிங்கை நடத்தியதாகவும், பங்கு பெற்ற துணை வேந்தர்கள் யார் சொல்வதைக் கேட்பது என்று புரியாமல் திணறுவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.  தலைப்பு என்ன தெரியுமா? யார் உங்கள் பாஸ்? 


உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆளுநரின் பணி என்ன என்பது பற்றித் தெளிவாக விளக்கி உள்ளது. துணை வேந்தர்கள் அச்செய்தியைப் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆளுநர் என்பவர் ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார். 

ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக்கூடாது என்ற பிஜேபியின் கொள்கையை செயல்படுத்தி வருபவர் என்றும் அனைவருக்கும் தெரியும். முடிந்தால் கலவரத்தையே உருவாக்கும் அளவுக்கு அவர் செல்வார் என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இதுவெல்லாம் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் கல்வியாளர்களுக்குத் தெரியாத ஒன்றா?

தேசியக் கல்வித் திட்டமானது ஒரே தேசம், ஒரே கல்வி என்ற நிலையை நோக்கி நகர்த்தும் அயோக்கியத்தனம் என்பது இவர்களுக்குத் தெரியாதா? மொழி வழி மாநிலங்களின் கூட்டாட்சியான இந்தியாவில் எப்படி ஒரே கல்வி சாத்தியமாகும் என்று கல்வியாளர்களான துணை வேந்தர்களுக்குப் புரியாத ஒன்றா?

இந்தியா என்பது யூனியன் ஆஃப் இந்தியா என்று கூட தெரியாத அளவிற்கா துணை வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே?

எது சரி? எது தவறு என்று புரியாத நிலையில் இருப்பவர்கள் ஏன் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? வெளியே சென்று விடுங்கள்.

புனிதமான கல்விப் பணியில் இருக்கும் ஆசிரியர்களான இவர்கள் தங்கள் அறிவு கொண்டு தமிழ் நாட்டுக்கு எது நன்மை என ஆட்சியாளர்கள் சொல்வதை கேட்காமல், கை கால்களை ஆட்டும் பொம்மை என்கிற நிலையில் இருக்கும் ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

ஆளுநர் ரவியா உங்களுக்கு சம்பளம் தருகிறார்? அவருக்கும் சேர்த்து தமிழர்கள் தான் தண்டம் அழுகிறார்கள். சோறு போடும் தமிழர்களுக்கு துரோகம் ஒன்றே தொழிலாய் வைத்திருக்கும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மண்ணுளிப் பாம்பாய் கிடப்பது ஏனோ? வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம்? 

ஒரு கவளம் சோற்றினை எடுத்து உண்ணும் போது உங்களுக்குத் தெரியாதா இது சுப்பனும் குப்பனும் நமக்கு உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம் என்று? 

தமிழ்நாட்டு மக்கள் ரவியையா தேர்ந்தெடுத்தார்கள் ஆட்சி செய்ய? கொஞ்சமேனும் அறிவு இருப்பவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சினைக் கேட்பார்களா? எங்கள் அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதைத் தான் செய்வோம் என்று சொல்லாமல், வாய் மூடி மவுனமாக இருந்தால் நீங்கள் துணை வேந்தர் அல்ல அரசியல்வாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமெனில், பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரவியின் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். துணை வேந்தர்களாக தமிழ் நாட்டு மக்கள் வேறு நபர்களை நியமித்துக் கொள்வார்கள்.

ஆளுநர் ரவி நாளை சென்று விடுவார். ஆனால் நீங்கள் தமிழ் நாட்டில் தான் வாழணும் என்பதை மறந்து போனீர்களா? தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்த பிரதமர் மோடியும், பிஜேபி அரசும் நிரந்தரமானவர்கள் அல்ல. காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலை, நாளை பிஜேபிக்கும் ஏற்படும். 

ஆகவே கல்வியாளர்களான நீங்கள் அரசியல்வாதிகளா? இல்லையா? என்பதினை மக்கள் மன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள். தமிழ் நாடு அரசு பெரும்பான்மை தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வாளாயிருப்பதாயிருந்தால் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் மக்கள் உங்களை வெளியேற்றும் சூழல் உண்டாகும் என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன்.