குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 29, 2014

கும்பகோணம் டிகிரி காபி

சமீப காலமாக என்.எச் சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபி - மட்டும் என்றெல்லாம் அழைப்புகள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் அன்னூர் தாசில்தார் அலுவலகம் சென்று விட்டு வரும் போது ஒரு கும்பகோணம் டிகிரிக் காபிக்கடையின் அருகிலேயே பசு மாடுகளைப் பார்த்தேன். சரி கறந்த பாலில் காபி ஒன்றினைக் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு காபிக்கடைக்குள் சென்றேன்.

முதலில் டிகிரி காபி என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

தஞ்சாவூர் பக்கம் ஐயங்கார் ஆத்தில்(வீட்டில்) இந்த டிகிரிக் காபி பிரபல்யம். ஐயர்கள் என்றால் டிகிரி காபி நினைவுக்கு வந்து விடும். 

ஒரிஜினல் நயம் காபிக் கொட்டைகளை வாங்கி வந்து, விறகு அடுப்பில் மண்சட்டியில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது காபி கொட்டையிலிருந்து கசியும் ஒரு வித எண்ணெய் வெளிப்படும் முன்பு பக்குவமாய் எடுத்து ஆற வைக்க வேண்டும். வறுபட்ட காபிக் கொட்டைகளை கொரகொரப்பாக அறைத்து காபி பில்டரில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி வைத்தால் காபி டிகாஷன் இறங்கும். கறந்த காராம் பசு மாட்டின் பாலை ரொம்பக் காய்ச்சாமல் பக்குவமாய் ஒரு கொதி கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பித்தளை டம்ளரில் சர்க்கரை  போட்டு, அதில் காபி டிகாஷனை ஊற்றி அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பாலைச் சேர்த்து டபராவில் ஒரு ஆற்று ஆற்றி குடித்தால் கிடைக்கும் கசப்பும், இனிப்பும், பாலின் நறுமணமும், காபியின் சுவையும் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் இன்பத்தினை சொல்ல முடியாது. அனுபவித்துக் குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமை.

திருவையாற்றில் இருக்கும் எனது ஐயாராத்து தோழியின் வீட்டில் இந்தக் காபி கிடைக்கும். அப்பக்கம் போகும் வாய்ப்புக் கிடைத்தால் காபிக்காவே தோழியைப் பார்க்கச் செல்வதுண்டு. கடைகளில் நான் காபி குடிப்பது கிடையாது.

சில நண்பர்கள் வீடுகளில் கிடைக்கும் காபியைக் குடித்து விட்டு “இன்றைக்கு நாள் நன்றாக இல்லை” என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். என்ன செய்வது? பிறர் மனம் நோகக்கூடாது என்ற கொள்கையால் அடிக்கடி நான் நொந்து போய் விடுவேன்.

சரி கோவை கும்பகோணம் டிகிரி காபிக் கடைக்குள் செல்வோம்.

பித்தளை டம்ளரில் காபிக் கொண்டு வந்து கொடுத்த போதே ஒரு வீச்சம் அடித்தது. பாக்கெட் பாலில் தான் இந்த வீச்சம் இருக்கும். ஒரு வித கவுச்சி வாடை. பெயரில் தான் கும்பகோணமே தவிர இந்தக் காபி கலனித் தண்ணீர் .

காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் ”பசுமாட்டுப்பாலா?” என்று கேட்க, அவர் ”இல்லை சார் பாக்கெட் பால் ”என்றார். அத்துடன் தெரியாத்தனமாக சாம்பார் வடையொன்றும் ஆர்டர் செய்ய அதுவும் வந்து விட்டது. வடை ரசத்தில் மிதந்தது. மேலே கொத்தமல்லி கிடந்தது. 

கும்பகோணம் டிகிரி காபி எனக்குள் மறக்க முடியாத நினைவினைப் பதிப்பித்தது.

Monday, January 13, 2014

வாசியோகமும் வெட்கமும்

நேற்று வாசியோகப் பயிற்சியில் இருக்கும் எனது மனையாளை அழைத்துக் கொண்டு, குருநாதரின் முள்ளங்காடு ஆஸ்ரமம் சென்றிருந்தேன். மனையாளின் பயிற்சி சரியாகச் செல்கிறதா என்பதை ஜோதி சுவாமி கண்காணித்து ஒழுங்கு படுத்துவார். அதற்காக வேண்டி ஆஸ்ரம் செல்வோம். 

கரூரில் இருக்கும் போது வாரா வாரம் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்வேன். அதன் பிறகு கரூராரின் ஜீவசமாதிக்குச் செல்வேன்.

கோவைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடம் சென்ற பிறகுதான் சற்குரு சுவாமி வெள்ளிங்கிரி அவர்களின் ஜீவசமாதிக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. அமைதி தவழும் அற்புதமான வனத்தில் குரு நாதரின் ஜீவசமாதியில் பத்து நிமிடம் அமர்ந்து இருந்தாலே போதும் மனம் செத்துப் போய் விடும். மனம் செத்தால் தன்னிருப்பு மறைந்து போய் இயற்கையோடு ஒன்றிடுவோம். அந்த இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இயற்கையோடு அல்லது இறைவனோடு ஒன்றிடுதலே தவம்.


நேற்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு குடும்பம் ஆஸ்ரமம் வந்திருந்தது. ஒரு பெரியவர் தன் இளைய மகனுக்கு வாசியோக உபதேசம் வழங்கிட ஜோதி சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். அக்குடும்பமே வாசியோகப்பயிற்சியில் இருப்பார்கள் போல. அப்பெரியவரின் பெண் ஒருவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நீண்ட நேரம் ஆகி விட்டது என்று அவரின் கணவர் அவரை எழுப்பி விட்டு விட்டார். அப்பெண் கண்கள் சிவந்து தியான அறையிலிருந்து வெளியில் வந்து விட்டார். அவர் மெதுவாக வெளியேறி வனத்தில் உலாவ ஆரம்பித்தார்.

அப்போது அங்கு வந்த ஜோதி ஸ்வாமி அப்பெண்ணின் கணவரிடம் தியானத்தில் இருக்கும் போது எழுப்பி விடக்கூடாது என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்ணின் கணவருக்கோ சங்கடம் வந்து விட்டது. அவர் மனது வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, சுவாமியிடம் ”சாமி அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு” என்றேன்.

ஜோதி சாமி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ வெட்கம் வந்து விட்டது.

ஏனென்றால் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் வாசியோகப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அம்மணி ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் உட்கார்ந்து விட்டார். எனக்கோ பயம் வந்து விட்டது. குரு நாதரின் சிஷ்யர் ஜோதி சுவாமிகள் தியானத்திலிருந்து வந்து விட மனையாளோ எழுந்திருக்க காணோம்.மேலும் அரை மணி நேரம் ஆனது. எனக்கோ திகிலடிக்க ஆரம்பித்து விட்டது. மனையாளோ அசைவற்று உட்கார்ந்திருந்தார். கண்கள் மேலே நோக்கி நிலை குத்தியிருக்க, மெதுவாக விசில் சத்தம் வந்து கொண்டிருந்தது. சத்தம் கொடுத்து அவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். 

கண்கள் சிவக்க மனையாள் எழுந்தார். ஜோதி சுவாமி தியானத்தில் இருப்பவரை திடுக்கென்று எழுப்பி விடக்கூடாது என்றும், அது பெரிய பிரச்சினையை உண்டு செய்து விடும் என்றுச் சொல்ல அன்றிலிருந்து மனையாள் எத்தனை மணி நேரம் தியானத்தில் அமர்ந்தாலும் பார்த்துக் கொண்டுதானிருப்பேன். அப்பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட பிரச்சினை தான் அன்று எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் அவரிடம் நானும் உங்களைப் போலத்தான், அதற்காகத்தான் சிரிக்கின்றார்கள் என்று விளக்கம் கொடுத்தேன்.

அது என்ன வாசியோகம் என்கின்றீர்களா?

வாசியோகம் ஸ்வாசம் அல்லது மூச்சு பற்றியது. இயல்பாக நாம் நாசி வழியாக காற்றை உள்வாங்கி பிறகு வெளிவிடுவதை ஸ்வாசம் என்கிறோம். சரியாக சொல்லவேண்டுமானால் இது வெளிமூச்சு. வாசியோகத்தில் நாம் கட்டுபடுத்தி பயிற்சி செய்வது உள் மூச்சு என்று அழைக்கப்படுகிறது. வெளிமூச்சுக்கும் உள் மூச்சுக்கும் மற்றபடி ஏதும் தொடர்பில்லை. 

வாசியோகம் மூலம் பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கும், இப்பிறவியில் சேர்த்துக்கொண்டிருக்கும் வினைப்பயங்களை எரித்துவிடலாம். வாசியோகம் பயிலாதவர்கள் வினைப்பயன்களை அனுபவித்துத் தான் தீர்க்க முடியும். ஒன்று முடியும் முன் மற்றொன்று சேர்ந்துவிடும். முடிவில்லாமல் பல பிறவிகளை மனிதன் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். இந்த சுழற்சியை கட்டுப்படுத்தி முழுதுமாக துண்டித்து பிறவிக்கான காரணங்களை அறவே எரித்துவிட்டு பிறவிக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலைக்கு மீள்வதற்கு வாசி யோகம் வழிகாட்டுகிறது. 

இதை புத்தகத்தில் படித்தோ அல்லது பிறர் சொல்லி கேட்டோ பயில முடியாது. இதுகுருமுகமாக பயிலவேண்டிய ஒன்று. வேறு மாற்றுவழி கிடையாது. ( நன்றி ஆனந்தவள்ளல் இணையதளம் - www.anandavallal.com )

சுருக்கமாகச் சொன்னால் வாசி = சிவா

Friday, January 10, 2014

சுரைக்காயும் நாட்டுப் பொன்னாங்கண்ணியும்


எனது பிறந்த ஊரான தஞ்சைப் பக்கம் நாட்டுச் சுரைக்காய் போட்டு இரால் குழம்பு வைப்பார்கள். சுவை என்றால் சுவை அப்படி ஒரு சுவையாக இருக்கும். எனது பைங்கால் சித்தி அபூர்வம் அவர்களின் கைப்பக்குவம் என்றால் பக்குவம் தான். சித்தியின் சமையலைச் சாப்பிட்டு விட்டு வேறு எங்கேயும் சாப்பிடவே பிடிக்காது. சுரைக்காயுடன் இராலை உறித்துப் போட்டு தேங்காய் சோம்பு அரைத்து ஒரு குழம்பு வைப்பார்கள் பாருங்கள். அடடா ! அதற்குப் பெயர் தான் குழம்பு. எங்களூர் பக்கம் இக்குழம்பு அடிக்கடி வைப்பார்கள்.

கோவை வந்ததிலிருந்து நானும் தேடாத இடமில்லை. கேட்காத ஆளில்லை. நாட்டுச் சுரைக்காயைத் தேடித் தேடி அலுத்துப் போய் விட்டது. 

ஒரே ஒரு முறை வரதராஜபுரம் சந்தையில் ஒரு பாட்டி ஒரு நாட்டுச் சுரைக்காயை விற்பனைக்கு வைத்திருந்தார். அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு சென்றேன்.

சிங்கா நல்லூர் உழவர் சந்தை, கணபதி சந்தை என்று ஒவ்வொரு சந்தையாக தேடியும் காய்கறிக் கடைகளிலும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டது. கணிணியில் வேலை செய்வதால் கண்ணுக்கு நல்லது என்று சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத் தேடி ஒரு வழியாக பச்சைப் பொன்னாங்கண்ணிக் கீரையை உக்கடம் சந்தையில் பிடித்து விட்டேன். தொடர்ந்து கிடைக்கவில்லை.

எங்கள் வீட்டு குப்பைக்கிடங்கின் ஓரமாக விதை போட்டு விட்டால் செடி வளர்ந்து அழகழகாய் சுரைக்காய்கள் காய்க்கும். காலையில் ஒரு சுரைக்காயை பறித்து வந்து தோல் சீவி அம்மா பொறியல் செய்து தருவார்கள். தட்டில் சுடச்சுட சாதத்தைப் போட்டு, வெண்ணெய்  கடைந்த மோர் ஊற்றி தட்டில் சுரைக்காய் பொறியலை வைத்துச் சாப்பிட்டால் அந்த சுவைக்கு எந்த உணவுப் பொருளும் ஈடாகாது. குண்டுச் சுரைக்காயின் சுவையே அலாதியானது.

ஆனால் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சுரைக்காய் இருக்கிறதே அது ஒரு கொடுமை. சக்கையை போன்று இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்கு வாந்திதான் வரும். 

என்னடா சுரைக்காயைப் பற்றி இவ்வளவு எழுதுகின்றாரே என்று உங்களுக்குத் தோன்றும். சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். தோல் மினுமினுப்பாக மாறும். கபத்தைப் போக்கும். அது என்ன கபம் என்கின்றீர்களா? நம் உடம்பில் நமக்குத் தேவையே இல்லாத நம்மை நோயில் தள்ளும் சளியைத் தான் கபம் என்கிறேன். இந்தக் கபத்தை நீக்கினால் உடன் திண்மை பெரும். பித்தமிருப்பவர்களுக்கு இது உதவாது. பகலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இரவில் தவிர்த்து விடுங்கள். 

கபத்தை நீக்கும் செயல்முறைதான் “எண்ணெய்க் கொப்பளிப்பு”. தொண்டையில் இருக்கும் சளியை நீக்கி விட்டால் உடல் நல்ல ஆரோக்கியமாய் இருக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை கணிணியில் வேலை செய்யும் அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டும். சந்தைகளில் விற்கும் பொன்னாங்கண்ணி சரியில்லை. இந்தப் பொன்னாங்கண்ணிக் கீரையில் இலையின் முன்புறம் பசுமையாகவும், பின்புறம் பிங்க் நிறத்திலும் இருக்கும். படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


கீரையில் பொன்னைப் போன்றது. பொன் என்றால் தங்கம். இக்கீரை கண்ணுக்குத் தங்கம். உடலுக்கு அமிர்தம் போன்றது. அவசியம் அனைவரும் சாப்பிடுவதற்கு முயற்சியுங்கள்.

இந்தக் கீரை கிடைத்தால் எங்கு கிடைக்கிறது என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள். அப்படி சுரைக்காய் பற்றியும் தகவல் கிடைத்தால் எழுதுங்கள்.

* * *