குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வாசியோகம். Show all posts
Showing posts with label வாசியோகம். Show all posts

Friday, October 21, 2016

குடும்பத்தில் இருப்போர் வாசியோகம் கற்கலாமா?

நான்கு வருடங்களுக்கு முன்பு வாசியோகப்பயிற்சி செய்ய தீட்சை பெற்ற போது இருந்த அறிவுக்கும் நேற்றைக்கு எனது இரு நண்பர்களுக்கு வாசியோகப் பயிற்சி பெற அழைத்துச் சென்ற கிடைத்த அறிவுக்கும் வித்தியாசமிருந்தது. பக்குவமும் உணர்ந்து கொள்ளும் திறனும் அதிகரித்திருந்ததை உணர்ந்தேன்.

முதல் நாள் வியர்வையோடு அவசரமாக முகத்தை கழுவி விட்டேன். நீர் கோர்த்துக் கொண்டது. கண்கள் இரண்டும் வெடித்து விடுவது போல கனகனவென மூக்கில் நீர் ஒழுக ஆரம்பித்தது. தலை விர்ரென்று கணக்க ஆரம்பித்தது. தலையில் குடைச்சல், உடல் முழுவதும் வலி பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்தது. இந்தப் பிரச்சினையோடு தான் ஆசிரமத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன். 

ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.

வாசி என்றால் சிவா. சிவா என்றால் சிவம். அந்தச் சிவத்தை மனிதர்கள் அனைவரும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை வீணாக்கி விடாமல் சேகரம் செய்து உடலைத் தூய்மையாக்கி மனதை நிச்சலமாக்கி கடவுள் தன்மை அடைய இந்த வாசியோகப் பயிற்சி உதவுகிறது.

இட வல மூச்சை ஒன்றாக்கி அதனை சுழுமுனையில் செலுத்தி சிவமடைதலே வாசியோகம். நம் கோவில்களில் இந்த வாசியோகத்தை தான் சிலைகளாகச் செதுக்கி வைத்துள்ளனர். ஆனால் புரிந்து கொள்வார் யாருமில்லை. புரிந்து கொண்டவர்கள் எவரிடமும் சொல்வதுமில்லை.

வாசியோகத்தின் போது மூச்சை சீராக்க வேண்டும். அதற்கு நாடி சுத்தி செய்தல் வேண்டும், பிறகு கப சுத்தி செய்ய வேண்டும். பின்னர் வாசியோகப்பயிற்சி செய்தல் வேண்டும். பயிற்சி முடிந்ததும் சாந்தி செய்தல் வேண்டும். வாசியோகப் பயிற்சியின் போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அறிதல் வேண்டும். வீட்டில் பயிற்சி செய்யும் போது சரியாகச் செய்கின்றீர்களா என்பதை கண்டுணர்ந்து சரி செய்யும் குரு வேண்டும்.

இந்தப் பயிற்சியை எம் குரு நாதர் கற்றுக் கொடுக்கிறார். அவரின் குருதட்சினை நன்கு பயிற்சி செய்வது மட்டும் தான். 

ஜோதி சுவாமி : 98948 15954
இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி, முள்ளங்காடு, பூண்டி, கோயம்புத்தூர்

அவரிடம் போனில் பேசி, நேரம் முடிவு செய்து செல்லவும். இந்தப் பயிற்சியைப் பற்றி நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வார். நன்கு புரிந்து தெளிந்து கொண்டு பயிற்சியைத் தொடங்குங்கள். சித்தர்கள் நம் வழித்துணையாக நின்று வழி காட்டுவார்கள்.

குடும்பஸ்தர்கள் வாசியோகம் கற்றுக் கொள்ளலாமா? என்று பலருக்கும் உட்கேள்விகள் இருக்கும். ஆன்மீக வழியில் நின்று தன் பாரம்பரியத்தையும், குடும்பத்தையும், நல் வழியில் நடத்தி வர குடும்பஸ்தர்கள் தான் இந்தப் பயிற்சியை செய்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் நேராது. 

என் மனைவி வாசியோகத்தில் நல்ல நிலையில் முன்னேறி பயிற்சியை விடாது செய்து வருகிறார். இதனால் எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆகவே எந்த வித சந்தேகமும் இன்றி குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவியரோடு சென்று பயிற்சி செய்ய முயற்சியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது நல்ல ஆரோக்கியமும், அமைதியாக வாழும் முறைகளையும்தான்.

நண்பர்கள் இருவரும் பயிற்சி செய்வது பற்றி தெரிந்து கொண்டார்கள். மதியம் போல வீட்டுக்கு வந்தால் தலை கிர்கிர்ரென்று கனக்க ஆரம்பித்தது. அசதியில் பாய் விரித்துப் படுத்து விட்டேன். ஒரு இளநீர் கொண்டு வந்து கொடுத்தார் மனையாள். அருந்தினேன். சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு சுளைகளைத் தந்தார். இரவில் முருங்கைகீரை சூடான சூப் ஒரு கப் அருந்தினேன். தன் விரலால் வயிற்றில் ஏதோ ஒரு இடத்தில் அழுத்தி விட்டார் மனையாள்.  இதோ விடிகாலையில் எழுந்து அமர்ந்து கொண்டு இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

கனத்த தலை இப்போது நன்றாக உள்ளது. மூக்கில் இடது பக்கம் மட்டும் அடைத்தது போல இருக்கிறது. உடல் வலி நின்று விட்டது. இன்று இரவு மீண்டும் ஒரு கப் சூடான முருங்கை இலை சூப் மற்றும் ஒரு இள நீர் மேலும் கொஞ்சம் ஆரஞ்சு சுளைகள் சளி என்னை விட்டு விட்டு ஓடி விடும்.

அனைவரும் வாசியோகத்தைக் கற்றுக் கொண்டு நம் சித்தர்கள் வழி நின்று தம் தம் குடும்பங்களை நல் வழிப்படுத்தி ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ பிரார்த்திக்கின்றேன்.

Monday, August 18, 2014

பொன்போலப் பிரகாசிக்கும் உடம்பு வேண்டுமா?

துருத்தி உண்டு; கொல்லன் உண்டு; சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் 
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே

கொல்லனுடைய துருத்தி ஒழுங்காக இருந்து விட்டால் இரும்பைப் பழுக்க வைத்து எந்த வடிவம் தேவையோ அதைப் பெற்று விடலாம்.  நம் உடம்பினிலே உயிரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்ள மூச்சுக்காற்றை ஒழுங்குப் படுத்தினால் ஜோதியாய் மாறிடும் என்கிறார் சிவவாக்கியர் சித்தர் அவர்கள்.

தியானம், யோகம், தவம் என்பன மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவதில் உள்ளது. தினம் தோறும் பிராணயாமம் செய்தால் ஈளை, இரைப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவை நீங்கி உடல் சுத்தமடையும். மூச்சுக்காற்றினைச் சுத்தப்படுத்தி கபாலத்தில் ஏற்றினால் உண்டாகும் யோகமே வாசியோகம். முதுமை அண்டாது, இளைமை எய்தி உடம்பு பொன் போல பிரகாசிக்கும். 

இதோ சிவவாக்கியரின் அடுத்த பாடல் அதைச் செப்புகிறது.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே !


அவசியம் நண்பர்கள் அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

பட்டினத்தார் நம் உடலைப் பற்றி எழுதி இருப்பதைக் கீழே படியுங்கள்.

நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழியில் விழாது
ஏறும்படி அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.


மேற்கண்ட பயிற்சியை எனது குரு ஜோதி ஸ்வாமி அன்பர்களுக்கு வழங்குகிறார். விருப்பமுள்ளோர் அவரை அணுகவும். கட்டணம் ஏதுமில்லை. ஒழுங்காகப் பயிற்சி செய்தால் போதும். குரு இல்லாமல் செய்யவே முடியாது. அப்படிச் செய்வது ஆபத்தை அழைப்பதுக்கு ஒப்பாகும்.

Monday, January 13, 2014

வாசியோகமும் வெட்கமும்

நேற்று வாசியோகப் பயிற்சியில் இருக்கும் எனது மனையாளை அழைத்துக் கொண்டு, குருநாதரின் முள்ளங்காடு ஆஸ்ரமம் சென்றிருந்தேன். மனையாளின் பயிற்சி சரியாகச் செல்கிறதா என்பதை ஜோதி சுவாமி கண்காணித்து ஒழுங்கு படுத்துவார். அதற்காக வேண்டி ஆஸ்ரம் செல்வோம். 

கரூரில் இருக்கும் போது வாரா வாரம் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்வேன். அதன் பிறகு கரூராரின் ஜீவசமாதிக்குச் செல்வேன்.

கோவைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடம் சென்ற பிறகுதான் சற்குரு சுவாமி வெள்ளிங்கிரி அவர்களின் ஜீவசமாதிக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. அமைதி தவழும் அற்புதமான வனத்தில் குரு நாதரின் ஜீவசமாதியில் பத்து நிமிடம் அமர்ந்து இருந்தாலே போதும் மனம் செத்துப் போய் விடும். மனம் செத்தால் தன்னிருப்பு மறைந்து போய் இயற்கையோடு ஒன்றிடுவோம். அந்த இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இயற்கையோடு அல்லது இறைவனோடு ஒன்றிடுதலே தவம்.


நேற்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு குடும்பம் ஆஸ்ரமம் வந்திருந்தது. ஒரு பெரியவர் தன் இளைய மகனுக்கு வாசியோக உபதேசம் வழங்கிட ஜோதி சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். அக்குடும்பமே வாசியோகப்பயிற்சியில் இருப்பார்கள் போல. அப்பெரியவரின் பெண் ஒருவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நீண்ட நேரம் ஆகி விட்டது என்று அவரின் கணவர் அவரை எழுப்பி விட்டு விட்டார். அப்பெண் கண்கள் சிவந்து தியான அறையிலிருந்து வெளியில் வந்து விட்டார். அவர் மெதுவாக வெளியேறி வனத்தில் உலாவ ஆரம்பித்தார்.

அப்போது அங்கு வந்த ஜோதி ஸ்வாமி அப்பெண்ணின் கணவரிடம் தியானத்தில் இருக்கும் போது எழுப்பி விடக்கூடாது என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்ணின் கணவருக்கோ சங்கடம் வந்து விட்டது. அவர் மனது வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, சுவாமியிடம் ”சாமி அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு” என்றேன்.

ஜோதி சாமி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ வெட்கம் வந்து விட்டது.

ஏனென்றால் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் வாசியோகப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அம்மணி ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் உட்கார்ந்து விட்டார். எனக்கோ பயம் வந்து விட்டது. குரு நாதரின் சிஷ்யர் ஜோதி சுவாமிகள் தியானத்திலிருந்து வந்து விட மனையாளோ எழுந்திருக்க காணோம்.மேலும் அரை மணி நேரம் ஆனது. எனக்கோ திகிலடிக்க ஆரம்பித்து விட்டது. மனையாளோ அசைவற்று உட்கார்ந்திருந்தார். கண்கள் மேலே நோக்கி நிலை குத்தியிருக்க, மெதுவாக விசில் சத்தம் வந்து கொண்டிருந்தது. சத்தம் கொடுத்து அவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். 

கண்கள் சிவக்க மனையாள் எழுந்தார். ஜோதி சுவாமி தியானத்தில் இருப்பவரை திடுக்கென்று எழுப்பி விடக்கூடாது என்றும், அது பெரிய பிரச்சினையை உண்டு செய்து விடும் என்றுச் சொல்ல அன்றிலிருந்து மனையாள் எத்தனை மணி நேரம் தியானத்தில் அமர்ந்தாலும் பார்த்துக் கொண்டுதானிருப்பேன். அப்பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட பிரச்சினை தான் அன்று எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் அவரிடம் நானும் உங்களைப் போலத்தான், அதற்காகத்தான் சிரிக்கின்றார்கள் என்று விளக்கம் கொடுத்தேன்.

அது என்ன வாசியோகம் என்கின்றீர்களா?

வாசியோகம் ஸ்வாசம் அல்லது மூச்சு பற்றியது. இயல்பாக நாம் நாசி வழியாக காற்றை உள்வாங்கி பிறகு வெளிவிடுவதை ஸ்வாசம் என்கிறோம். சரியாக சொல்லவேண்டுமானால் இது வெளிமூச்சு. வாசியோகத்தில் நாம் கட்டுபடுத்தி பயிற்சி செய்வது உள் மூச்சு என்று அழைக்கப்படுகிறது. வெளிமூச்சுக்கும் உள் மூச்சுக்கும் மற்றபடி ஏதும் தொடர்பில்லை. 

வாசியோகம் மூலம் பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கும், இப்பிறவியில் சேர்த்துக்கொண்டிருக்கும் வினைப்பயங்களை எரித்துவிடலாம். வாசியோகம் பயிலாதவர்கள் வினைப்பயன்களை அனுபவித்துத் தான் தீர்க்க முடியும். ஒன்று முடியும் முன் மற்றொன்று சேர்ந்துவிடும். முடிவில்லாமல் பல பிறவிகளை மனிதன் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். இந்த சுழற்சியை கட்டுப்படுத்தி முழுதுமாக துண்டித்து பிறவிக்கான காரணங்களை அறவே எரித்துவிட்டு பிறவிக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலைக்கு மீள்வதற்கு வாசி யோகம் வழிகாட்டுகிறது. 

இதை புத்தகத்தில் படித்தோ அல்லது பிறர் சொல்லி கேட்டோ பயில முடியாது. இதுகுருமுகமாக பயிலவேண்டிய ஒன்று. வேறு மாற்றுவழி கிடையாது. ( நன்றி ஆனந்தவள்ளல் இணையதளம் - www.anandavallal.com )

சுருக்கமாகச் சொன்னால் வாசி = சிவா