கேபிராமலிங்கம் - பிஜேபி மா நில துணைத்தலைவராக இருக்கலாம். ஆனால் மனசாட்சியை விற்று விட்டு, இந்தி மொழி திணிப்பை ஆதரிக்கும் நிலைக்கு கட்டுரை எழுதுகிறார் என்பது வேதனை. துரோகிகளுக்கும், காட்டிக் கொடுப்பவர்களுக்கும் வரலாறு தண்டனை கொடுத்திருக்கிறது. தினமணி பார்ப்பனிய பத்திரிக்கை. பார்ப்பனியர்களுக்காக உழைக்கும் பத்திரிக்கை. அவர்கள் அதைத்தான் செய்வார்கள். ஆனால் அண்ணன் கேபி.ராமலிங்கம் ஏன் இப்படி மாறிப்போனார் என்றால் பதவி மோகம் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? அவரின் கட்டுரைக்கு - பதில் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது. நான் எழுதி இருப்பதில் ஏதேனும் தவறு இருப்பின் கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.
உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் பிரதமர் - தினமணி கட்டுரை ( நன்றி தினமணி)
புதிய சட்டங்கள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் இருக்கவேண்டும். அது நீதி கிடைப்பதற்கான எளிமைத் தன்மையை ஏற்படுத்தும். அத்தகைய சட்டங்கள் ஏழை மக்களாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நீதித்துறையின் மொழியானது அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு நீதியை எளிதில் கிடைக்கச் செய்வதில் உள்ளூா் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதி மன்றங்களிலும் உள்ளூா் மொழியின் பயன்பாடடுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சட்டப் படிப்புகளை உள்ளுா் மொழியில் வழங்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. உச்சநீதி மன்றம், உயா்நீதிமன்றங்கள் வழங்கிய முக்கியத் தீா்ப்புகள் உள்ளூா் மொழிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இளைஞா்களுக்கு எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் இணைய நூலகங்களிலும் அவை இடம்பெற வேண்டும்’ என்று குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சா்கள் - சட்டத்துறை செயலாளா்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை அண்மையில் தொடங்கி வைத்த பிரதமா் கூறியிருக்கிறாா். (வடை)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, எட்டாம் வகுப்பு வரை உள்ளூா் மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. (உள்ளூர் மொழிக் கொள்கை எங்கே போச்சு? உயர்கல்வி வரை உள்ளூர் மொழியில் படித்தால் என்ன? அதென்ன எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி? மேலே இருக்கும் பத்திக்கும் இந்த வரிக்கும் உள்ள வேறுபாடு ஏன்?
சா்வதேச அளவில் இந்திய மருத்துவத்துறையில் ஒரே விதமான தரத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக்கி இருக்கிறது மருத்துவ உலகம். தனியாா் மருத்துவக் கல்லூரிகள் ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் விலை நிா்ணயம் செய்து, எம்.பி.பி.எஸ் எனும் இளநிலை மருத்துவக் கல்வியை கடந்த காலத்தில் சந்தைப்படுத்தின. (சர்வதேச அளவில் ஆங்கிலம் கொடிக் கட்டிப் பறக்கிறது. உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் ஆங்கிலேயத்திலேயே இருக்கின்றன. எவரும் இந்தியில் எழுதுவதில்லை. உள்ளூர் மொழியில் படித்து விட்டு இந்திக்காரர்கள் போல ஏழையாய் அலைய வேண்டுமா? தனியார் மருத்துவக்கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயிப்பதை விட்டு விட்டு, கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்காக பார்ப்பனியர்களின் நன்மைக்காக, மறைமுகமாக் கொண்டு வந்து, உள்ளூர் மக்களின் பிள்ளகளை மருத்துவராக படிக்க விடாமல் சதி செய்யும் சமூக நீதிக்கும், அறத்துக்கும் எதிரான நீட் தேர்வு - அக்கிரமானது. கல்வி படிக்க விடாமல் செய்யும் பிஜேபியின் எதிர்காலம் என்னவென்று உலகம் பார்க்கத்தான் போகிறது)
இதில் உள்ளூா் அரசியல் ஆளுமைகள் கோடி கோடியாக தனியாா் மருத்துவக் கல்லூரி முதலைகளிடம் கொள்ளையடித்து குளிா் காய்ந்தன. மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ தோ்வுமுறையால் கிராமப்புற மாணவா்கள் மருத்துவக் கல்வி பயில்கின்றனா். உள்ளூா் மொழியிலேயே நீட் தோ்வு எழுதும் வாய்ப்பையும் மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. (மாநிலப் பாடத்திட்டங்களில் கேள்வி கேட்காமல், கோடீஸ்வரர்கள் குழந்தைகள் படிக்கும் சி.பி.எஸ்.ஸி போன்ற கல்வி திட்டத்தில் கேள்விகள் கேட்பதும், நீட் கோச்சிங்க்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதும், அப்படி பணம் வசூலிக்கும் நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடை விபரத்தைக் கூட மறைத்து வைக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை பல்வேறு சிந்தனையாளர்கள் எழுதி இருக்கிறார்கள். நீட் தேர்வு மறைமுகமாக பார்ப்பனியர்களுக்கு உதவி செய்கிறது. உள்ளூர் மக்களின் பிள்ளைகள் மருத்துவராக விடாமல் தடுக்கிறது என்பதை உலகம் அறிந்திருக்கிறது)
உயிரி வேதியியல், உடற்கூறியல், மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழி பெயா்க்கப்பட்டு, பாடப் புத்தகங்களை வெளியிட்டுள்ளாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. (ஐந்து மாநிலங்களுக்கு உள்ளேயே மருத்துவம் பார்த்துக் கொள்வார்களா?)
மத்திய பிரதேச மாநிலத்தில் அக்டோபா் 16-ஆம் தேதி அம்மாநில முதலமைச்சா் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையில் நடந்த விழாவில், மத்திய அரசின் முன்னெடுப்பு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் உள்ளாா்ந்த மொழி உணா்வை ஏற்படுத்தி இருக்கிறது. உதட்டளவு முழக்கமாக இல்லாமல் உள்ளூா் மொழியை உயா்த்திட வழிகாட்டியிருக்கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட மாநிலங்கள் விழித்தெழ வேண்டும். (எதுக்கு விழித்து எழணும்? ஏற்கனவே விழிப்பாய் தான் இருக்கிறார்கள். அமித்ஷா தான் இந்தி மொழியை தூக்கிப் பிடிக்கிறார். இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வர துடிப்பது பிஜேபி)
ஹிந்தி மொழியிலான மருத்துவ நூல்களை வெளியிட்டுப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்தவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதர எட்டு மொழிகளில் மருத்துவம், தொழில்நுட்பப் படிப்புகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. (அவர் சொல்வது எதுவும் நடக்காது, ஏனென்றால் நடக்க விடமாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம் இந்தி மொழி வளர்ப்பது)
தேசிய கல்விக் கொள்கையின் அங்கமாக தற்போது ஹிந்தியில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதா மொழிகளிலும் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படும். இதனால் ஆங்கிலம் தெரியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை மாணவா்களுக்கு இருக்காது. தங்கள் சொந்த மொழியில் பெருமிதத்துடன் அவா்கள் படிக்கலாம்’ என்று அமித்ஷா விளக்கியுள்ளாா். ரஷியா, உக்ரைன், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டு தாய்மொழியில்தான் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (ஆங்கிலம் படித்ததால் தான் இன்று உலகெங்கும் இந்தியர்கள் கோலோச்சுகிறார்கள். பிரிட்டன் திடீர் பிரதமர் சுனக் இந்தி மட்டும் படித்திருந்தார் என்றால் எப்படி பிரதமர் ஆகி இருக்க முடியும். இன்று அமெரிக்காவில், கனடாவில், பிரிட்டனில் சாஃப்ட்வேர் துறையில் பெரும் பங்களிப்பு ஆற்றி வரும் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் ஆங்கிலம் படித்தவர்களே. பெரும்பாலான பார்ப்பனியர்கள் ஆங்கிலம் படித்ததால் தான் ஆங்கிலேயர் ஆட்சியில் பங்கு பெற்றனர். இன்று உலகெங்கும் பரவி இருக்கின்றனர். இந்தி மொழியைப் படித்து இருந்தார்கள் என்றால், வேலைக்கு ஒவ்வொரு மாநிலமாய் சென்று துன்பப்பட்டிருப்பார்கள்)
‘மருத்துவப் படிப்பு ஹிந்தியில் தொடங்கப்படுவது நாட்டில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் தங்கள் தாய் மொழியில் மாணவா்களால் படிக்க முடியும். அவா்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மருத்துவப் படிப்புக்கான ஹிந்தி மொழி நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டா் பதிவில் புளங்காங்கிதம் அடைந்திருக்கிறாா். (ஒரு புண்ணாக்கும் நடக்காது. உலகளவிலிருந்து இந்தி மொழியில் மருத்துவம் படித்தவர்கள் ஒதுக்கப்படுவார்கள் என்பது உண்மை)
இந்திய ஆட்சி மொழி சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் மருத்துவப் படிப்பை கற்பிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. மருத்துவக் கல்வி, தொழில் கல்வி ஆகியவற்றில் உள்ளூா் மொழியைப் பாட மொழியாகக் கொண்டு வருவது என்பது இந்திய அரசியல் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மகத்தான கல்விப் புரட்சியாகும். அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்த மத்திய அரசு முன்வந்திருப்பதை, 140 கோடி இந்திய மக்களும் மனமார வரவேற்று இருக்கின்றனா். (ஒன்றிய அரசு கல்வியில் தலையிடுவது ஜன நாயக விரோதம். மொழி வழி மாநிலங்களை, இந்தி மொழியினை திணித்து, இந்தியாவின் ஒற்றுமையை அழிக்கப் பார்க்கிறது. எவரும் மனமார வரவேற்கவும் இல்லை. பாராட்டவும் இல்லை. போகிற போக்கில் ஒரு போடு)
23 ஐஐடிக்கள், 20 ஐஐஎம்கள், 1,043 பல்கலைக்கழகங்கள், 25 ஐஐஐடிக்கள், தேசிய அளவில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், 596 மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் படிப்புக்கான 89,000 இடங்கள் என இந்திய நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அறிவுக் கூடங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியில் கல்வி என்பதை யாா்தான் வரவேற்க மாட்டாா்கள்? அப்படியும் சிலா் மறுத்தால் அவா்கள் இதுவரை ‘மொழி’ ‘மொழி’ என்று முழக்கமிட்டதெல்லாம் அரசியல் பிழைப்புக்காக நடத்தப்பட்ட மோசடி நாடகம் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடாதா? (ஏற்கனவே தாய் மொழியில் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே ஆங்கிலத்திலும் படிக்கிறார்கள். மோசடி நாடகம் நடத்துவது பிஜேபி)
1976-ஆம் ஆண்டு அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்திதான் அப்போது பிரதமராக இருந்தாா்.அலுவல் மொழிச் சட்டம் 1963-இன் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் 20 மக்களவை உறுப்பினா்கள், 10 மாநிலங்களவை உறுப்பினா்கள் என மொத்தம் 30 போ் உள்ளனா். இந்தக் குழு அலுவல் நடவடிக்கைகளில் ஹிந்தியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, பல்வேறு பரிந்துரைகளுடன் குடியரசு தலைவரிடம் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்பது ஆட்சி மொழிச் சட்டத்தின் அறிவுரை. (என்ன அறிவுரை? இந்தி மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துங்கள் என்றிருக்கிறது. இதோ இணைப்பு படித்துப் பார்க்கவும். http://rajbhashasamiti.gov.in/pdf/president-order.pdf)
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அறிக்கையை குடியரசு தலைவருக்கு சமா்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை மனதில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு, தனது 11-ஆவது அறிக்கையை குடியரசு தலைவா் திரௌபதி மும்முவிடம் அண்மையில் சமா்ப்பித்திருக்கிறது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டவை. இவற்றில் ஒரே அரசியல் சாசனம்; ஒரே பாராளுமன்றம்; ஒரே பிரதமா்!
நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை இந்த எம்.பி.க்கள் குழு தெரிவித்து இருக்கிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் - உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், தில்லி மற்றும் அந்தமான் - நிகோபா் தீவுகள் உள்ளன.
‘பி’ பிரிவில், குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், சண்டீகா், டாமன் - டையூ மற்றும் தாத்ரா - நகா் ஹவேலி மாநிலங்கள் உள்ளன. இதர பகுதிகள் அதாவது தமிழகம் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு மாநிலங்கள் ‘சி’ பிரிவில் உள்ளன. முன்பு 46 % ஆக இருந்த ஹிந்தி பேசும் மக்கள் எண்ணிக்கை தற்போது 52 % ஆக உயந்தது இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் உயா்ந்து வருகிறது!
‘ஏ’ பிரிவு மாநிலங்களில் 100 % போ் ஹிந்தி மொழியை தாய்மொழியாகக் கொண்டவா்கள். ‘பி’ பிரிவு மாநிலங்களில் 30 % போ் மட்டுமே ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவா்கள்; ‘சி’ பிரிவு மாநிலங்களில் 20 % - க்குக் குறையாமல் ஹிந்தியைக் கற்றுக்கொண்டவா்கள் உள்ளனா்.
இந்தியா விடுதலை பெற்ற 1947-ஆம் ஆண்டிற்கு முன்பிலிருந்தே அரசியல் நிா்ணய சபை உருவாக்கப்பட்டு சட்டமேதை டாக்டா் அம்பேத்கா் தலைமையில் இந்தியாவை ஒழுங்குபடுத்திட முனைந்தது. சுதந்திர இந்தியாவில் 1963-இல் ஆட்சி மொழி சட்டத்தையும் நிறைவேற்றியது.
டாக்டா் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி மொழிக்குழு, பலமுறை கூடி விவாதித்தது. இந்தியாவின் மத்திய ஆட்சி மொழியாக எந்த மொழியைக் கொண்டு வருவது? மாநிலங்கள் மொழிவழியாக அமைக்கப்பட்டிருக்கின்றன - அவற்றுக்கு என்ன வழிகாட்டுதல்? சிக்கல் இல்லாத இந்தியாவை எப்படி வளா்த்தெடுப்பது போன்ற விவாதங்கள் ஆட்சி மொழிக்குழுவில் நடந்தன.
பலநாள் மேற்கொண்டஆய்வுகளுக்கு பின்பு, இந்திய அரசின் ஆட்சி மொழி குறித்து வாக்கெடுப்பு நடத்தி தீா்மானிப்பது என்பதை ஆட்சி மொழிக்குழுவில் இடம்பெற்ற அறிஞா் பெருமக்கள் ஏற்றுக்கொண்டனா். வாக்கெடுப்பில் 11 போ் ஹிந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை ஆதரித்து வாக்களித்தனா்; எதிா்த்தும் 11 போ் வாக்களித்தனா். சமமான நிலையில் மொழிக்குழு தலைவா்டாக்டா் ராஜேந்திர பிரசாத் தன்னுடைய வாக்கை ஹிந்தி மொழிக்கு ஆதரவாக அளித்தாா்.
ஒரு வாக்கு வித்தியாசத்தால் இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி என்ற சட்டம் உருவானது! எதிா்த்து வாக்களித்தவா்களிடையே ஹிந்திக்கு மாற்றாக எந்த மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாகக் கொண்டு வருவது என்பதை வெளிப்படுத்திட ஒற்றுமை இல்லை. தமிழ்நாட்டிலிருந்து காயிதே மில்லத்தும் இந்த ஆட்சி மொழிக்குழுவில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஹிந்தி மொழி இந்திய அரசியல் சாசனப் பிரிவு 343-இன்படி ஹிந்தி அதன் தேவநாகரி எழுத்து வடிவத்தில் இந்தியாவின் அலுவலக மொழியாக அதாவது ஆட்சி மொழியாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் தொடா்ந்து பயன்படுத்தப்படும். அதன்பின் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி அதன் மூலம் ஆங்கிலத்தைத் தொடரலாம்’ என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில்தான் நாடாளுமன்ற அலுவலக மொழிகள் சட்டம் 1963-இல் இயற்றப்பட்டது. இந்தச்சட்டத்தின்படி அமைக்கப்பட்டதுதான் 30 போ் கொண்ட எம்.பி.க்கள் குழு. அது 1976, 1987, 2007 ஆண்டுகளில் கூடி விவாதித்து ஹிந்தி மொழியை எப்படியெல்லாம் இந்திய மக்களிடையே வளா்த்தெடுப்பது என்பதற்கான ஆலோசனைகள் இந்தியாவின் குடியரசு தலைவருக்கு சமா்ப்பித்தது. அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் என்ன குறை? ‘அமித் ஷா மொழித்திணிப்பை ஊக்கப்படுத்துகிறாா்’ என்று கூப்பாடு போடுவோா், அதனைபொதுமக்களுக்கு தெளிவுப்படுத்திட வேண்டும்.
(தமிழ் படித்த மக்கள் மேலே இருக்கும் நான்கு பத்திகளைப்படித்துப் பாருங்கள். அமித் ஷா இந்தி மொழியை திணிக்க முயலவில்லையாம். கேபிராமலிங்கம் கட்டுரையில் எப்படியெல்லாம் இந்தி மொழியை இந்திய மக்களிடையே வளர்த்தெடுப்பது என்று ஆலோசனை சொல்வார்களாம். ஆனால் இது இந்தி மொழி திணிப்பு இல்லையாம்)
ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஐஐடிக்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரியா வித்யாலய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிற்று மொழியாக உள்ளூா் மொழி இருக்க வேண்டும் என்பது அதாவது தமிழ்நாட்டில் தமிழ்வேண்டும் என்பது ஹிந்தி மொழித் திணிப்பா? இது வேடிக்கையாக இல்லையா? (ஏற்கனவே உள்ளூர் மொழியில் தான் படிக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழ் இருக்கிறது, தமிழில் படிக்கிறார்கள். கூடவே ஆங்கிலத்திலும் படிக்கிறார்கள். யாரும் தமிழ் வேண்டாமென்றுச் சொல்லவில்லை. ஆனால் இந்தியில் தான் படிக்க வேண்டுமென்பதும், சமஸ்கிருதத்தில் படிக்க வேண்டுமென்பதும் தேசியக் கல்வி கொள்கை என்பதினை கட்டுரையாளர் மறைத்திருக்கிறார்)
விருப்பம் இருந்தால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆள் சோ்ப்பு தோ்வுகளில் உள்ளூா் மொழி; உயா்நீதிமன்ற உத்தரவுகள், தீா்ப்புகள் உள்ளூா் மொழியில்; மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் போன்றவை உள்ளூா் மொழியில். (அரசு வங்கிகளில் இந்தி, இந்தி மொழி பேசுபவ்ரகள் வேலை செய்வது இதெல்லாம் பிஜேபியின் கைங்கர்யம்)
இவையெல்லாம் இந்திய மக்களின் சகோதரத்துவத்தைசிதைக்கக்கூடிய சிறுமைச் செயல்களா? ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் பிற்போக்குத்தனமா? ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்குமா? முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையா? (இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது பிஜேபி மட்டுமே)
1938, 1948, 1964 ஆகிய ஆண்டுககளில் ஹிந்தி திணிக்கப்பட்டது; இன்றைக்கு மாநில மொழிகள் வளா்க்கப்படுகின்றன. இது தவறா? தமிழகத்தில் சிலா் கிளம்பி இருக்கின்றனா். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலோ அரசு அலுவலகங்களிலோ மத்திய அரசு ஹிந்தி மொழியை நேரடியாகவோ மறைமுகமாகவோ திணிக்காத நிலையில், சிலா் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று, கொட்டி முழக்குவதை என்ன பெயரிட்டு அழைப்பது?
தி.மு.க.வினா் நடத்தும் தனியாா் பள்ளிகளில் தமிழ் பாடமொழியா? அரசு அலுவலகங்களில், காவல்துறை நிா்வாகத்தில் தமிழ் இருக்கிறதா? (அரசு தமிழில் தான் உத்தரவு போடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தமிழும் ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகிறது. கட்டுரையாளர் பொய் சொல்ல இப்படி எழுதி இருக்கிறார்)
கடந்த 55 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் ஒரு தீவுக்குள சிக்கிக் கொண்டதைப் போல சிக்கித் தவிக்கின்றனா். மொழியை சொல்லி, சமூகநீதியைச் சொல்லி, இனத்தைச் சொல்லி ஏமாற்றி பிழைத்திடவும் ஒரு துணிச்சல் தேவைதான். (கட்டுரையாளரின் கட்டுரை தினமணியில் வெளியாகி இருப்ப்தே சமூக நீதிதான். கோவில்களின் கருவறைக்குள் செல்ல முடியாத சாதிய வன்முறை தமிழகத்தில் இன்றும் இருக்கிறதே. ஏன் அதைப் பற்றி இவர் சொல்லவில்லை? வாழ வைத்த தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும் தீங்கு நினைப்போர், வேரின்றி அழிவர். தர்மம் வேடிக்கைப் பார்க்காது.)
ஆனால்அது எப்போதும் நடக்காது. ‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன், புலி வேஷம் போடுகின்றான். பொதுமக்களுக்கு புல்லளவும் மதிப்பேனும் தருகின்றானா’ என்ற பாரதிதாசனின் பாட்டு வரிகளை மறந்து விடாதீா்கள்.
(டாலர் விலையைக் குறைப்பேன், பெட்ரோல் விலையைக் குறைப்பேன், சிலிண்டர் விலையைக் குறைப்பேன், பதினைந்து லட்சம் போடுவேன் என்றுப் பொய் சொல்லி ஏமாற்றியவர்கள் யாரென்று உலகிற்கே தெரியும்)
இனத்தையும் மொழியையும் பாதுகாப்பதாக சொல்லி தங்களைப் பாதுகாத்துக்கொண்டவா்கள் கதையை நாட்டு மக்கள் நன்கு அறிவாா்கள். (பார்ப்பனியர்களின் அடிமைகளாய், மெய் வாய் பொத்தி, பதவிக்காக, வயிற்றிப் பிழைப்புக்காக வாழும் மண்ணைச் சீரழிக்க இப்படியான பொய்களை எழுதுபவர்களுக்கு தமிழ் நாடு வாழ்வழிக்கிறது என்பது படித்த, நல் எண்ணம் கொண்டவர்களுக்கு தெரியும்)
நன்றி : தினமணி மட்டும் கட்டுரையாளர் கேபி.ராமலிங்கம்.
இந்தி மொழி திணிப்புக்கான ஒரு சாட்சி கீழே. 22 மொழிகளில் இணையதள மொழிகள் இருக்காமல் இந்தி மொழியிலும் - ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் இருக்கிறது? 21 மொழி பேசுபவர்கள் வரிப்பணத்தில் தானே பிரதமரும் ஊதியம் பெறுகிறார்? இணையதளமும் நடத்தப்படுகிறது? இதர மொழி பெயர்ப்பு ஆப்சனை வைக்க வேண்டியதுதானே? ஏன் வைக்கவில்லை. பாஜகவின் ஒரே நோக்கம் இந்தி மொழி திணிப்பு மட்டுமே.