குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, December 31, 2016

கரையை நோக்கிப் பயணிக்கும் அலைகள்

அலைகள் - இந்த வார்த்தையைப் படித்தவுடனே உங்களுக்குள் தோன்றி இருக்கும். 

உயரமான, தாழ்வான, மிகத்தாழ்வான, மிக மிக உயரமான அலைகள் கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அலைகளும் கரையை அடைந்து ஆக்ரோசமெல்லாம் இல்லாமல், வெறுமென நீராக சலம்பி பின் மீண்டும் கடலுக்குள்ளே சென்று மறைந்து விடுகின்றன. அடுத்த அலை வருகிறது. அதன் பின்னாலே அலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே கரையைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. கரை வந்தவுடன் சிறுத்துப் போய் ’உஷ்’ என்றாகிறது. பின்னர் கடலுக்குள் சென்று வந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.

காற்று விடாமல் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்க்கையும் அலைகளும் ஒன்று தான். 

புகழ், பதவி, அதிகாரம் இருந்தும் தன் உடலை தான் சொன்னபடி கேட்க வைக்க இயலாமல் ஒருவர் கரைந்தே போனார். உலக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவரின் மகளின் வாழ்க்கை இன்று கோர்ட்டில் வந்து நிற்கிறது. அவர் நடத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இதெல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிறது? 

ஓடம் தண்ணீரில் தான் செல்ல முடியும். அந்த தண்ணீர் தான் ஓடத்தை வழி நடத்தும், அந்த ஓடம் தண்ணீருக்குள் மூழ்கி விட வேண்டுமா? இல்லை கரையைத் தொட்டு விட வேண்டுமா என்பதை முடிவு செய்வது காற்றும், தண்ணீரும் தான். அந்த ஓடம் எந்தப் பக்கமாக பயணிக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் முடிவு செய்ய இயலும். ஆனால் பயணம் செய்தே ஆக வேண்டும். தண்ணீருக்குள் இருக்க முடியாது. ஓடம் சென்று சேர வேண்டிய இடம் கரை.

அதிகாரமும், பணமும், புகழும் எந்த மனிதனுக்கு எதையும் தரப்போவதில்லை. வெற்று மாயை! பணமும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும். புகழோ - வெற்றுக்கூச்சலும், வெறும் ஈகோவும் தான் தரும். அதிகாரம் அயோக்கியத்தனம் செய்ய வைக்கும். ஒன்றுமே இல்லாத வாழ்க்கையில் எல்லாமும் இருப்பதாக நினத்துக் கொண்டிருப்பது ஏமாளித்தனமானது.

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். அவனவன் வலி அவனுக்கு மட்டுமே. அதை பிறர் அனுபவிக்க முடியாது. எத்தனை உற்றார் உறவினர்கள் இருந்தாலும் தான் என்ன? வலியை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்களா? அருமை பெருமையாக வளர்த்த அம்மா அப்பா மறைந்தவுடன் அவர்களுடனேவா பிள்ளைகள் இறந்து போகின்றார்கள்? இல்லையே? உறவுகள் நிதர்சனம் என்று நினைப்பது முட்டாள்தனம். உறவுகளின் பயன் பாதுகாப்புக்கு மட்டுமே.

2016 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்றைக்கு. கடந்து வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கைப் பாதைக்கு ஒரு வழி கிடைத்தது. இந்தப் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணத்தை சிரமமில்லாமல் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்த வருடம் இது. கணிணி, ஏற்றுமதி இறக்குமதி, டிரேடிங்க், விளம்பரத்துறை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு இதுதான் உன் பாதை என 2016 காட்டிக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாகப் புரிய வைத்தது 2016. இந்த வயதில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த வரமாகவே நினைக்கிறேன்.

உறவுகள், நட்புகள், வியாபாரங்கள் என்றால் என்ன அதன் முழு அர்த்தம் என்ன? மனிதர்களை படிப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடிந்த வருடம் 2016. எந்த ஒரு உறவும், நட்பும், வியாபாரமும் பலனின்றி இல்லை என்பதினை சம்மட்டியால் அடித்துச் சொல்லியது 2016.

ஆன்மீக வாழ்க்கையில் இதுவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமான பாதையை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. தொட்டும் தொடாமலும், விட்டும் விடாமலும், இருந்தும் இல்லாமலும் இருப்பதைப் பற்றி பாடமே கிடைத்தது இந்த 2016ல். நோக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அட்சர சுத்தமாக அதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது 2016. 

நானும் ஒரு அலைதான். கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு அலைதான். நீங்கள் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் அனைவரும் சென்று சேரும் இடம் கரைதான். கரையில் உங்களின் உயரமும், எனது உயரமும் கலைந்து நாம் நீராகி விடுவோம். கடலுக்குள் கலந்து விடுவோம்.

விடைபெறட்டும் 2016. அது வந்த வேலையை நிறைவாகச் செய்து விட்டு செல்லப்போகின்றது. அதற்கு நாம் விடை கொடுப்போம்.

அடுத்து வரப்போகும் 2017ல் நாம் அன்பாயிருப்போம், அமைதியாக இருப்போம். ஆனந்தமாக இருப்போம். 

2017ஆம் ஆண்டில் எதார்தத்தை உணர்ந்து கொண்ட வாழ்க்கையினை வாழலாம் வாருங்கள்!  கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம், சூது வேண்டாம். எதனாலும் நம் வாழ்க்கை சிறப்படைய போவதில்லை. அன்பாயிருத்தலாலும், அமைதியாக இருத்தலாலும் நாம் அடைவது ஆனந்தமே!

Thursday, December 29, 2016

பகவான் ராமகிருஷ்ணரைப் பிடிக்காது

மாமனார் மருமகன் பதிவு என்னாயிற்று என்று கேட்கத்தோன்றும். எழுத இன்னும் ’மூடு’ வரவில்லை. அதற்குள் எனக்குள்ளே குருதேவர் வந்து உட்கார்ந்து விட்டார். குருதேவர் பகவான் ராமகிருஷ்ணர் மீது கொஞ்சம் வருத்தமும் எனக்கு உண்டு. இந்த விஷயத்துக்குள் போகும் முன்பு கொஞ்சம் முன்னுரை பார்த்து விடலாம்.

தற்போது மெகாடிவியில் காலையில் பேசிக் கொண்டிருக்கின்றாரே பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் இவரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியம். சரியான கலகக்காரர். கனக சுப்புரத்தினத்தையும் சந்திக்க வைத்தார். ஒரு மாலை நேரம் கனக சுப்புரத்தினம் அவர்களின் மகளையும், கனக சுப்புரத்தினத்தையும் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 23 என்று நினைவு. கரூரில் அந்தப் பெண் படித்துக் கொண்டிருந்தார். சரியான அழகி அந்தப் பெண். கூந்தல் மூன்றடி நீளம் இருந்தது. கனக சுப்புரத்தினம் என்னிடம் ஏதோ புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது.  உன்னை நாளைக்கு முக்கியமான ஒரு நபரைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன் என்றுச் சொல்லி கரூர் ராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தாவை அறிமுகப்படுத்திய போது சுவாமி நீங்கள் இங்கேயே தங்கி பணி செய்து வருகின்றீர்களா என்று கேட்க, நானும் ஆமோதித்தேன். இரண்டாம் நம்பர் அறையில் என்னைத் தங்கச் சொன்னார். ஒரு துண்டினை என்னிடம் கொடுத்தார். என்னை அறையில் விட்டு விட்டு அடுத்த வாரம் வந்து சந்திக்கிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார் சுப்பிரமணியம். இந்த சுப்பிரமணியம் கரூர் நுகர்வோர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஆத்மானந்தா சுவாமி மீது வழக்குப் போட்டவர். இத்துடன் சுப்பிரமணியம் புராணம் முடிந்தது. 

ஆசிரமத்தில் இரண்டாம் நம்பர் அறையில் என்னுடன் சின்னமனூரிலிருந்து அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் மீது மாறாப்பற்றுக் கொண்டு சன்னியாச வாழ்க்கைக்குச் செல்ல முயன்று கொண்டிருந்த பிரதர் முருகன் என்னோடு தங்கி இருந்தார். மாணிக்கவாசகம் பிரதர், குண்டு பசுபதீஸ்வரானந்தா, தற்போது கரூரில் தனி ஆசிரமம் வைத்துக் கொண்டிருக்கும் யோகேஸ்வரானந்தா, கிருஷ்ணானந்தா, பாலகிருஷ்ணானந்தா ஆகிய சன்னியாசியாசிகளுடன் தங்கி இருந்தேன். 

அவ்வப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் பரிச்சயம் கொண்டு ஊர் ஊராக சென்று இந்து மதத்தைப் பரப்பி வந்த சதாசிவானந்தா மற்றும் திருச்சி, திருப்பராய்த்துறை தபோவனத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட குகானந்தா மற்றும் கருப்புச்சாமி(இவர் பெயர் மறந்து விட்டது, இவர் தான் என்னைத் திருமணம் செய்து கொள், சாமி என்றும் எவரும் இல்லை என்றுச் சொன்னவர்) ஒருவரும் ஆசிரமத்தில் தங்கி இருந்தனர்.

கோயமுத்தூர் பள்ளப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு சாமியார்கள், கோட்டைப்பாளையத்தில் இருந்த ஆசிரமத்தில் இருக்கும் இரண்டு சாமியார்கள் என பல இடங்களில் இருந்த பள்ளிகளையும் ஆசிரமத்தினையும் நிர்வகித்து வந்த சாமியார்களுடன் தங்கி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கரூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் மேல் நிலை வகுப்பு கணிணி ஆசிரியராகவும், கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரியின் கணிணித்துறையின் மேலாளராகவும் பணியாற்றி வந்தேன். அதுமட்டுமின்றி கல்லூரிப் பெண்களுக்கு கணிணி வகுப்பு மற்றும் கணிணி சர்வீஸ் ஆகியவற்றையும் செய்து வந்தேன்.

பாலகிருஷ்ணானந்தா ஆசிரமத்தின் இரண்டாம் கட்ட தலைமை நிலையில் இருப்பவர். கணக்கு வழக்குகளைக் கவனிப்பவர். இவருக்கும் எனக்கும் சுத்தமாக ஆகாது. ஏனென்றால் இவர் என்னை பலவிதங்களில் துன்புறுத்தி வந்தார். நான் அடிக்கடி ஆத்மானந்தா சுவாமியைச் சந்திக்கச் சென்று வருவேன். இவருக்கு அது பிடிக்காது. ஆத்மானந்தா சுவாமி பல்வேறு சம்பவங்களையும், கதைகளையும் என்னிடம் சொல்லுவார். மூன்று மணி நேரம் வரை கூட இருவரும் பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் இரவு ஒரு மணி ஆகி விடும். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போவதையே மறந்து விடுவார். நானும் தான்.

பாலகிருஷ்ணானந்தா மட்டும் அல்ல அங்கிருக்கும் பல சாமியார்களுக்கும் இதன் காரணமாக என் மீது எரிச்சல். இவனிடம் சாமி என்னதான் பேசுகிறார் என்று. ஆனால் நான் எதையும் கண்டு கொள்ளவே மாட்டேன். சாப்பிட மட்டுமே தெரிந்த பசுபதி சாமியார் என்னைக் கொலை வெறியுடன் தான் பார்ப்பார். இரவில் சாமிக்கு நெல்லிக்காய் ஜூஸ் வரும். அந்த ஜூஸ் எனக்கும் தரவேண்டும். பசுபதி சாமிக்கு இந்த விஷயத்தில் என் மீது கோபம் வரும். ஒரு நாள் ஒரு டம்ளர் மட்டும் தான் இருக்கிறது என்றுச் சொன்னார். உடனே சாமி அதை இரண்டாகப் பிரித்து எனக்கும் கொடுத்து விட்டார். அதைக் கண்டு பசுபதிக்கு கோபமோ கோபம். அந்த ஜூஸில் என்ன விசேஷம் தெரியுமா? பாதிக்குப் பாதி தேன், காய்ந்த நெல்லி வற்றலின் ஜூஸ் இரண்டும் கலந்து இருக்கும். சாமிக்கு கொடுப்பது போல எனக்கும் தர வேண்டுமே அந்தக் கடுப்பு அவருக்கு. 

பஞ்சத்துக்கு சாமியாரனவர் இவர். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம் இந்த பசுபதி. அவரை ஆசிரமத்திற்கு அழைத்து வந்து தீட்சை கொடுத்த பிறகு சாப்பாடே கதி என உண்டு கொழுத்து அரை யானை சைசுக்கு பெருத்திருந்தார். அவருக்கு காவியை வேறு கொடுத்து சாமியாராக்கி படா ரகளை செய்து கொண்டிருந்தார் ஆத்மானந்தா சாமி. அடியாள் மாதிரி தான் இருந்தார். இவருக்கு ஆசிரமத்தில் ஒரே ஒரு வேலை இருந்தது. கரூர் பசுபதீஸ்வரானந்தருக்கு காலையில் பாலும் பூஜை பொருட்களைக் கொண்டு சென்று பூஜை செய்து வர வேண்டும். மற்றபடி பெரிய சாமிக்கு அவ்வப்போது மோர், ஜூஸ், உணவு பரிமாற வேண்டும். பிற நேரங்களில் சக ஆட்களுடன் வன்மத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார். சர்க்கரை நோய் வந்து தஞ்சாவூர் கரந்தையில் இருக்கும் பால்சாமி மடத்தில் கிடந்து செத்துப் போய் விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

ஆசிரம வாழ்க்கையைப் பற்றி தனியாகப் புத்தகமே போடும் அளவுக்கு சம்பவங்கள் இருக்கின்றன. முடிந்தால் எழுதுகிறேன்.

என்னை விடிகாலை ஆரத்திக்கு வரச்சொல்வார் பாலகிருஷ்ணானந்தா. ஒரு வாரம் சென்றேன். சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனக்கு ராமகிருஷ்ணரைப் பிடிக்கவே பிடிக்காது. விவேகானந்தரையோ அறவே பிடிக்காது. அகம்பாவம் பிடித்தவர் போலத் தெரிந்தார். சாரதா தேவி அம்மையாரின் மீதும் எந்தப் பற்றும் இல்லை. ஆகவே சும்மா போய் உட்கார்ந்து பாட்டுப்பாடவும் ஆரத்தியில் கலந்து கொள்ளவும் எரிச்சலாக இருந்ததால் நான் போவதை நிறுத்தி விட்டேன். இதை ஆத்மானந்தா சுவாமியிடம் சொல்லி விட்டு நான் பாட்டுக்கு தூங்கி விடுவேன்.

என்னைத் திருத்துவதற்காக ‘ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் ஆத்மானந்தா சுவாமி. அதில் சமாதி என்று எழுதி இருந்ததைப் படித்ததும் எனக்கு சுத்தமாக விளங்கவே இல்லை. என்னடா இது சமாதி அது இதுன்னு இந்த ராமகிருஷ்ணர் சுத்த லூசுத்தனமானவராக இருக்கின்றாரே என்ற சிந்தனை. செத்துப் போனால் தானே சமாதி ஆக முடியும். உயிரோடு இருக்கும் போது சமாதி நிலைக்குப் போய் விட்டார் என்று கதை பேசுகின்றார்களே, ஆளும் வேறு அசிங்கமாக இருக்கின்றார் என்று எண்ணிக் கொண்டு சும்மாவாச்சும் இரண்டு தொகுதிகளையும் படித்து வைத்தேன். புரியவே இல்லை. இருந்தாலும் ராமகிருஷ்ணரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

சென்னையில் உள்ள இராமகிருஷ்ணர் மடத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறதே யுனிவர்சல் டெம்பிள் அதன் திறப்பு விழாவின் போது பேலூர் மத்திலிருந்து வந்த தலைவர் விவேகானந்தரின் நேரடி சீடர் ரங்கநாதனந்தர் அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும் வந்த பெரும் கோடீஸ்வரர்களுடன் மந்திர தீட்சையும் பெற்றுக் கொண்டேன். இந்த டெம்பிளுக்கு கரூர் ஆத்மானந்தா சுவாமி நன்கொடை வழங்கி உள்ளார். ஆத்மானந்தா சுவாமி எனக்கு பல்வேறு வழிகளில் பல விஷயங்களை உணர்ந்து கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் காலமோ என்னை லெளகீக வாழ்க்கைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

முன்னுரை முற்றிற்று.

இரண்டு வாரங்களுக்கு முன்பு முள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி ஆசிரமத்திற்கு வழக்கமாகச் சென்றிருந்த போது சாமி பயன்படுத்திய டெஸ்கில் அழுக்கான கசங்கிய பழைய புத்தகத்தைப் பார்த்தேன். எடுத்துப் பிரித்தால் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் தொகுதி. சாமியிடம் படித்து விட்டுத்தருகிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு பக்கத்துக்கு மேல் என்னால் படிக்கவே முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணரின் சமாதி பற்றிப் படித்ததும் மனசு அங்கேயே நின்று விடுகிறது. தொடர்ந்து நகரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. மனது அந்த இடத்தில் அடங்கி அமைதியாகி விடுவதால் தொடர்ந்து படிக்க முடிவதில்லை.

ஆனால் புத்தி மட்டும் ஒரு விஷயத்தை யோசிக்க ஆரம்பித்த காரணத்தால் பகவான் மீது சற்று வருத்தமும் ஏற்பட்டது. அது என்னவென்றால் தான் மட்டுமே சமாதி நிலையினை அடைந்து விட்டு விவேகானந்தரை மட்டும் கர்மயோக வீரத்துறவியாக்கி விட்டாரே என்பதுதான். இதற்கு ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா என்ற கேள்வி எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது.

போன வாரத்தில் மனையாளின் கையை நீவி விடுவதற்காக தொண்டாமுத்தூர் போகும் வழியில் இருக்கும் பூச்சியூர் சிங்கிரிபாளையம் வைத்தியரிடம் சென்று விட்டு ஆசிரமத்திற்குச் சென்றோம்.

ஆசிரமத்திற்கு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகச் சென்று கொண்டிருந்தாலும் அருகில் இருக்கும் வீரகாளியம்மன் கோவிலுக்கோ அங்கிருக்கும் சித்தர் சாமிகளின் ஜீவ சமாதிக்கோ செல்ல முடியவில்லை. திடீரென்று இன்றைக்கு சித்தர் சாமியின் ஜீவசமாதிக்குச் சென்று வருவோம் என்று என்னையும் மனையாளையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

இந்த சித்தர் சாமி அகோரி வழியில் வந்தவர். இவர் வெள்ளிங்கிரி மலை மீது அமர்ந்து தியானம் செய்த போது ஜீவன் ஒடுங்கி சமாதி நிலைக்குச் சென்று விட்டாராம். அவர் மீது தேனீக்கள் கூடு கட்டி விட்டன. அதைக் கண்டு பிடித்தவர்கள் பால் கொண்டு அவரின் சமாதி நிலையைக் கலைத்து மீட்டனராம். அதன் பிறகு பாதாள உலகிலிருந்து வெளிவந்திருந்த மூர்த்தமான அழியாப் பேரழகி வீரகாளியம்மனுக்கு கோவில் எழுப்பி அம்மனின் அருகில் சமாதி நிலையில் அமர்ந்து விட்டார் இந்த சித்தர்.  இந்த சித்தர் சாமி வெள்ளிங்கிரி சாமியைப் பார்த்து ’மகன் வந்து விட்டான், இனி எனக்கு இங்கு என்ன வேலை?’ என்றுச் சொல்லிக் கொண்டிருப்பாராம்.

வனத்துக்குள் இருக்கிறது இந்த வீரகாளியம்மன் கோவில். கோவிலுக்கு வடகிழக்கு மூலையில் ஜீவசமாதிக்குள்ளே அமர்ந்து கொண்டிருக்கின்றார் சித்தர். அவரைத் தரிசித்து அங்கு அமர்ந்திருந்த போது ஜோதி ஸ்வாமியிடத்திலே பகவான் ராமகிருஷ்ணரைப் பற்றியும் அவர் மீதுள்ள வருத்தத்தையும் சொன்னேன்.

”கடவுளே! அந்தக் காலத்தில் இருந்த சூழல் அப்படி. கர்மயோகியாக விவேகானந்தர் உருவாக வேண்டிய கால நிர்பந்தம் அது. தான் பெற்ற சமாதி நிலையை குருதேவர் அவருக்கும் அளித்திருந்தால் விவேகானந்தர் சாமியாராக இருந்திருப்பார். அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனும் இல்லாது போயிருக்கும். ”எழுமின், விழிமின், உழைமின்” என்று இந்திய மக்களைப் பார்த்து வீர உரை ஆற்றி வீரத்துறவியாக மாறியதன் காரணமாகத்தான் பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை விடுதலை பெற வைக்க சுதந்திரப் போராட்ட வீரர்களாக பரிணமளித்தனர். அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர். இனி நூற்றாண்டுகளுக்கு இந்தியர்களுக்குத் தெய்வம் ‘பாரதமாதா’ என்றுச் சொல்லி விட்டுச் சென்றார் வீரத்துறவி விவேகானந்தர். அதற்கு விதையிட்டவர் குருதேவர்” என்றார். எனக்குள் இருந்த வருத்தம் பட்டென்று வெடித்துச் சிதறியது.

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்

Thursday, December 22, 2016

நிலம் (34) - நத்தம் பூமி அரசுக்குச் சொந்தமா?

பின் மாலைபொழுதின் ஒரு நாளில் மதுரையிலிருந்து பிளாக்கின் வாசகர் அழைத்திருந்தார். அவரின் பாட்டியும், தொடர்ந்து அவர்கள் குடும்பமும் நத்தம் பூமியில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருவதாகவும், பட்டா கோரி விண்ணப்பித்த போது அரசு அலுவலர்கள் அவர்களை இது அரசு நிலம் என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் எங்களுக்கு அந்த நிலத்தில் பாத்தியதை உரிமை உள்ளதா? என்று கேட்டிருந்தார்.

அவர்கள் எத்தனை ஆண்டுகளாக குடியிருக்கின்றார்கள்? வரி விதித்து கட்டப்பட்டிருக்கிறதா? மின்சார இணைப்பு இருக்கிறதா என்ற பல கேள்விகளைக் கேட்டேன். எல்லாவற்றுக்கும் மிகச் சரியாக பதில் சொன்னார்.

அவரிடத்தில் சொன்னேன் ”அந்த இடம் உங்களுக்கே சொந்தம்” என. காரணம் கேட்டார். இதோ காரணம் உங்களுக்காக. 

பெரும்பான்மையானோர் நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

ஒரு கிராமத்தில் நத்தம் பூமி என்பது வீட்டு மனைகள் அல்லது வீடுகள் இருக்கும் பகுதியைக் குறிப்பது. நத்தம் புறம்போக்கு என்றாலும் நத்தம் என்றாலும் ஒன்று தான். நத்தம் என்ற வார்த்தை வந்து விட்டாலோ அது அரசின் நிலம் அல்ல. கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் இருக்கும் பகுதியைக் குறிக்கும் சொல் ஆகும். ஒரு சிலர் இது ஏழைகளுக்கான பூமி ஆகவே குடியிருப்போர் இடத்தைக் காலி செய்து கொடுக்கவும் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அது உண்மையல்ல.

ஊராட்சி  வரி மற்றும் குடியிருந்ததற்கான ஆவணங்கள் இருந்தால் அந்த நிலம் அங்கு வசிப்பவருக்கே சொந்தம். 

ஆகவே நண்பர்களே, நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று கருத வேண்டாம்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவையென்றால் என்னை அணுகலாம். 

Sunday, December 18, 2016

மலைகள் இணையத்தில் தட்டான்களும் வண்ணாத்துப்பூச்சிகளும்

மலைகள் இணைய பத்திரிக்கையில் முதன் முதலாக ”தட்டான்களும் வண்ணாத்துப் பூச்சிகளும்” அனுபவப் பதிவு வெளியாகி உள்ளது. சின்னஞ்சிறு வயதிலே பதியக்கூடிய விஷயங்கள் எத்தனை காலம் கடந்தாலும் மறந்து விடுவதில்லை. அதை எழுத்தில் வடித்து பொதுவெளியில் வெளியிடும் போது அதே போன்ற அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மனதிலே சிலிர்ப்புத் தோன்றும். இறந்து போன காலத்துக்கு நினைவலைகள் சென்று மீளும். அந்த வகையில் கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். பலரும் மிக அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். ஆத்ம திருப்திக்காவும், சிறிய வயதில் செய்யும் தவறுகளில் விளையக்கூடிய அனர்த்தங்களையும் அலசி ஆராயவும், சரிப்படுத்திக் கொள்ளவும் தான் எழுதுகிறேன்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பிளாக்கில் தொடர்ந்து எழுதி வருகிறேன். திண்ணை இணைய பத்திரிக்கையில் இரண்டு பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் தொடர்ந்து அரசியல் பற்றி எழுதினேன். புனை பெயரில் அதிரடிக்கும் பல்வேறு கட்டுரைகளை இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். ஆழம் இதழில் ஒரு கட்டுரை வெளியானது. குறுஞ்செய்தி பத்திரிக்கையில் எழுதினேன். இருப்பினும் பிளாக்கில் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. காரணம் நானே ராஜா, நானே மந்திரி என்கிற வகையில் யாருக்கும் கைகட்டி, குனிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

மலைகள் இணைய இதழில் வெளியான பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும் உங்கள் மவுசை.

தட்டான்களும் வண்ணத்துப் பூச்சிகளும் - மலைகள் இணைய இதழில் வெளியான அனுபவப் பதிவு.


நன்றிகள் : சிபிச் செல்வன்

Friday, December 16, 2016

நாமக்கரும்பின் சுவையும் சேமக்கலத்தின் ஓசையும்

மார்கழி ஒன்றாம் தேதியன்று நான்கரை மணிக்கே தாதர் சேமக்கலத்தினை அடித்துக் கொண்டே சங்கு ஊதிக் கொண்டு வருவார். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்தெழுவார்கள். மார்கழி மாதம் தோறும் தினமும் சேமக்கலத்தினை இசைத்துக் கொண்டே சங்கு ஊதிக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு வருவார் தாதர். 

வாசல் தெளித்து, பெருக்கி விட்டு, சில்லிடும் குளிர் நிறைந்த விடிகாலைப் பொழுதில் தாமரைப் பூக்கோலம் போட்டு, மார்கழி முதல் நாள் அன்று பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து அதன் தலை மீது அருகம்புல் சொருகி, பிள்ளையாருக்கு விபூதி சாற்றி, குங்குமம் இட்டு, சூடம் காட்டி சாமி கும்பிடுவார்கள். அன்றைக்கு சங்கு ஊத வேண்டும். படாதபாடு பட்டு சங்கினை ஊதுவேன். கோலம் முழுமையும் பரங்கிப்பூக்கள் சாணி உருண்டையின் மீது பூத்திருக்கும்.

கோவில்களில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். பொங்கலுக்கு இன்னும் இத்தனை நாள்கள் இருக்கின்றன என எண்ணிக் கொண்டே ஒவ்வொரு நாளும் கழியும். அறுவடை முடிந்து வயல்களில் உளுந்து விதைத்திருப்பார்கள். தினம் தோறும் புதுப்புதுக் கோலங்கள் போடப்படும். பெரும்பாலும் இந்த காலத்தில் தான் தினமும் கோவிலுக்குச் சென்று வருவார்கள். அடியேன் வீட்டின் வடக்குப் பக்கமாய் இருக்கும் பழைய சிவன் கோவிலில் மழையூர் சதாசிவம் அவர்கள் பாடும் தேவாரப்பாடல்களையும், தெய்வீகப்பாடல்களையும் கேட்பதற்குச் சென்று வருவேன். பொங்கல் தருவார்கள்.

மார்கழியில் பெரும் சோதனை ஒன்று நடக்கும். குளிப்பதற்கு பிச்சனரிக் குளத்துக்குச் செல்வேன். குளிரில் பற்கள் எல்லாம் தந்தியடிக்கும். குளத்துக்குள் செல்வதற்குள் நடு நடுங்கி விடும். ஆனால் உள்ளே சென்று விட்டால் குளத்து தண்ணீர் வெதுவெதுப்பாய் இருக்கும். வெளியில் தான் குளிரடிக்கும். குளித்து முடிக்கையில் வெயில் வந்து விடும். குளித்து விட்டு தலை துவட்டி வரும் போது வெயிலில் காய்ந்து கொண்டே வருவது ஒரு சுகம்.

வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்று வருவேன். மறு நாள் போடப்படும் கோலத்தினை வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் ஐயப்பன் கோவில்களுக்குச் செல்பவர்களின் பஜனைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும். சூடான சுண்டலும், பொங்கலும் கிடைக்கும். காலையில் சாமி தரிசனம், மாலையில் பஜனைகள் என்று மார்கழி முடியும் வரை சந்தோஷம் கரைபுரண்டோடும். 

வீட்டில் மாடுகளுக்கு புதிய கயிறுகள், நெற்றியில் கட்டும் கயிறுகள் வாங்கி வருவார்கள். பொங்கலுக்கு வீட்டுச் சுவற்றின் மீது சுண்ணாம்பு தடவ கிளிஞ்சல்களை வாங்கி வந்து கணக்கான தண்ணீர் சேர்த்து குழைய வேகவிட்டு மூடி வைப்பார்கள். காவிக்கட்டியை குசவன் கொண்டு வந்து கொடுப்பான். பொங்கல் அன்று வெள்ளையும் காவியும் வரி வரியாக பட்டை தீட்டுவார்கள். கொட்டாச்சியில் செய்த அகப்பையை ஆசாரி கொண்டு வந்து தருவார். வண்ணான், அம்பட்டன் ஆகியோருக்கு வருடக் கூலியாக நெல் அளந்து கொடுப்பார்கள். தாதர் மார்கழி முடிந்ததும் வந்து கூலியை நெல்லாக வாங்கிக் கொள்வார்.

புது அரிசியை அரைத்து புடைத்து பொங்கலுக்கு தயார் செய்வார்கள். வீட்டில் காய்த்திருக்கும் பரங்கிக் காய்களில் பொங்கலுக்கு என்று சில காய்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள். 

மார்கழி மாதம் முழுவதும் வரப்போகும் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளாய்தான் தெரியும். வருடத்தில் ஓர் முறையே கிடைக்கும் சர்க்கரைப் பொங்கல், அதனுடன் பதினோறு வகை காய்கறிகள், வெண் பொங்கலோடு கலந்து சாப்பிடப்போகும் சாம்பாரின் சுவைக்காக நாக்கு ஏங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமல்ல பொங்கலன்று கிடைக்கப்போகும் நாமக் கரும்பின் தித்திப்பு இருக்கிறதே அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நாமக்கரும்பு கரு நீல நிறமாய் இருக்கும். இடையே பச்சை வண்ணக் கோடுகள் இருக்கும். இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எந்தக் கரும்புக்கும் தகுதியே இல்லை. பொங்கலன்று மாமா வாங்கி வரும் மஞ்சள் கொத்தின் வாசம் இருக்கிறதே அதன் வாசம் என்னை மயக்கியே விடும்.

மூன்று வாழை இலைகள் போட்டு அதன் மீது பொங்கல், காய்கறிகள், சாம்பார், வாழைப்பழம், தேங்காய் துருவல், வெல்லம், பால், தயிர் சேர்த்து படையலிட்டு சூரியனுக்குப் படைத்து விட்டு சாப்பிடுவது என்பது சிலிர்ப்புத் தரும் புதிய அனுபவம், அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மீண்டும் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு. விழா அவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஏங்க வைக்கும் நாள்களாக இருந்தன.

இன்னும் 29 நாட்கள் தான் பொங்கல் வரப்போகின்றது. பனி படர்ந்த விடிகாலைக் குளிரில் மாட்டு சாணத்தின் வாசத்தோடு கோலமிடும் காட்சிகளும், பொங்கலிடும் காட்சிகளும், கோவில்களும், பாடல்களும், இசையும், மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் ஓசைகளும் கண்களுக்குள் விரிகின்றன. 

Wednesday, December 14, 2016

ஆலங்கட்டி மழை

கோவையில் கடுமையான குளிர். உடல் சில்லிடுகிறது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என்கிறது. நேற்று காலையில் விளாங்குறிச்சிப்பக்கம் நனையும் அளவு தூறல் விழுந்தது. பின்னர் நாள் முழுதும் மேகமூட்டமாய் இருந்தது. அவ்வப்போது வெளியில் வந்து கருக்கி கலைந்து கொண்டிருந்த மேகங்களைப் பார்ப்பதும் பின்னே வீட்டுக்குள் செல்வதுமாய் இருந்தேன். ஆளை அடிக்கும் மழை பெய்தால் நன்றாக இருக்கும். மழை பெய்யும் போது கையை நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்து கொள்வதுண்டு. கொட்டும் மழையை ரசிக்க ஒரு மனசு வேண்டும். ஆனால் வானமோ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன பணக்காரன் ஏழை கதை போல ஏமாற்றிக்கொண்டிருந்தது.

அது என்ன கதை என்கின்றீர்களா? சொல்கிறேன்.

ஒரு நரி பெரிய ஆடு ஒன்றுடன் நட்புக் கொண்டதாம். நரி ஆட்டுடன் நட்புக் கொள்ள பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஆட்டில் இரண்டு பெரிய கொட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதை நரி பார்த்து விட்டது. அது எப்போதாவது வெளியில் விழுந்து விடும். நன்றாகச் சாப்பிடலாம் எனவும் அது எப்போது விழுமோ தெரியாது ஆகவே ஆட்டுடன் நட்புக் கொண்டு அதன் பின்னாலே திரிந்தால் கொட்டைகள் இரண்டும் விழும்போது சாப்பிட்டு விடலாம் என்ற ஆசையில் அதனுடன் சுற்றிக் கொண்டிருந்தது. கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்து விட்டு கொட்டைகள் எப்போது விழுவது நாம் எப்போது சாப்பிடுவது? என்று நினைத்துக் கொண்டே ஆட்டுடனான நட்பை விலக்கிக் கொண்டு சென்று விட்டது. ஆட்டின் கொட்டைகள் எப்போது விழுவது எப்போது நரி சாப்பிடுவது? நடக்கின்ற காரியமா? இதே போலத்தான் பணக்காரனுடன் நட்புக் கொள்வதும் அவன் உதவுவான் என்று நினைப்பதும். கதை புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். மழை இப்போதெல்லாம் பணக்காரன் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மழையும் இதே கணக்காக கோவையில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றது. என் நினைவுகளில் ஊடாட தொடங்கின மழைக்கால அனுபவங்கள்.

ஆவணம் கிராமத்தில் கொஞ்சம் வயக்காடுகள் உள்ளன. என் சிறு வயதிலெல்லாம் சைக்கிள் அல்லது மாட்டு வண்டிகளில் தான் பயணம் செய்யலாம். இப்போது இருப்பது போல வீட்டுக்கு இரண்டு மோட்டார் வாகனங்கள் அப்போதெல்லாம் இல்லை. உரம் போட, மருந்து அடிக்க, களை பறிக்க இப்படி சனி அல்லது ஞாயிறுகளில் வேலை இருந்தால் நானும் வண்டியோடு வயலுக்குச் செல்வதுண்டு. பண்ணண்டாம் குளத்திலிருந்து வரும் தண்ணீரை வயலுக்கு அருகில் மடையை உயர்த்தி கட்டினால் தண்ணீர் தேங்கி வயலுக்குள் செல்ல ஆரம்பிக்கும். பயிர்களுக்குள் நடந்தால் கணுக்கால் அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்போதுதான் உரம் போடலாம். மருந்து அடிக்க தண்ணீர் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும். 

வயல் வரப்புகளில் உளுந்துச் செடி இருக்கும். எலிகள் வயலுக்குள் நுழைந்து நெற்கதிர்களைக் கடித்திடா வண்ணம் இந்த உளுந்தங்காய்கள் எலிகளுக்கு உணவாய் மாறும். தப்பிப் பிழைத்தவைகளை ஆய்ந்து வீட்டுக்கு கொண்டு வந்து வெயிலில் காய வைத்து உளுந்தை பிரித்து எடுக்க வேண்டும். கொத்துக் கொத்தாய் கருப்புகலரில் உளுந்தங்காய்கள் இருக்கும். 

வண்டியில் இருந்து இறங்கியதும் வயலோரமாய் செல்லும் கிளை ஆற்றில் கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போடுவேன். கரையில் மண் வரப்புச் செய்து அதில் தண்ணீரை வழி மாற்றி பின்னர் ஆற்றில் செல்ல விடுவது எனது வாடிக்கை. மீன் குஞ்சுகள் மாட்டும் என்று எதிர்பார்ப்பேன். ஒன்று கூட சிக்காது. மாமா இருந்தால் நடக்காது. அமைதியாக உட்கார்ந்து கொள்ளவில்லை என்றால் முதுகு பழுத்து விடும். போஸ் இருந்தால் ஆட்டம் அதிகமாகி விடும். அவன் உரம் போட்டு வரும் வரை ஆட்டம்தான். 


இது போன்ற ஏதோ ஒரு நாளில் வயலுக்குச் சென்றிருந்த போது மழை கொட்ட ஆரம்பித்தது. மழையோடு உரமிட்டால் தண்ணீரில் சென்று விடும் என்பதற்காக உரம் போடவில்லை. வண்டியின் கீழே உட்கார்ந்து கொண்டான் போஸ். ஆனால் நானோ ஆற்றுக்குள் அமிழ்ந்து கொண்டேன். தலை மீது சுள் சுள்ளென்று மழை கொட்ட ஆற்று நீர் வெது வெதுப்பாக இருக்க மழையில் நனைந்து கொண்டே தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தேன். மழை விடுவதாகத் தெரியவில்லை. போஸ் உரத்தை மூட்டையாகக் கட்டி மேலே தார்ப்பாயைச் சுற்றி வைத்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்றுச் சொன்னான். பசி வேறு வர வண்டியில் அமர்ந்து கொண்டேன். துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

வண்டிமாடுகள் அசைந்து கொண்டிருந்தன. மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழை நிற்க சில்லென்ற காற்று வீசியது. மீண்டும் படபடவென்று மழை கொட்ட அதனுடன் வெள்ளையாக ஏதோ விழுந்தது. பனிக்கட்டி போல இருந்தது. ஆலங்கட்டி மழைடா என்றான் போஸ். திடு திடுவென கொட்டியது. வலித்தாலும் எடுத்துக் கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்வேன். சில்லென்று இருக்கும். மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

எட்டாவது படிக்கும் போது ஆலங்கட்டி மழையில் சிக்கியதுண்டு. அதன் பிறகு இதுவரையிலும் ஆலங்கட்டி மழையை நான் பார்க்கவே இல்லை. மழை பெய்கிறது. நானும் நனைகிறேன். ஆனால் ஆலங்கட்டியைத்தான் காணவில்லை. ஆலங்கட்டி என்று ஏன் அழைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 

Monday, December 12, 2016

விதை முளைக்க உமி தேவையில்லை

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே மதத்தின் வழி அடையாளப் படுத்தப்படுகின்றான். எவரும் தப்ப முடியாது. பெயராலோ, இனத்தாலோ அல்லது எதுவோ ஒன்றாலோ அவன் இன்னவன் என்கிறபடி அடையாளப் படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். மதங்கள் பிறப்பதற்கு முன்பு மனித வாழ்வு இப்படி இல்லை. அவன் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்தான். 

எப்போது மதங்கள் உருவானதோ அப்போதே அவன் வாழ்க்கையை இழந்தான். 

அவனைச் சுற்றி மதங்கள் வழிபாடுகள் என்ற சிறைக்கம்பிகளை வைத்துச் சிறைப்படுத்தின. இனி அவன் எந்தக் காலத்திலும் சிறையிலிருந்து வெளி வர முடியாது. அந்தச் சிறை அவனுக்கு கடும் துன்பத்துடன் கூடிய மரணத்தை மட்டுமே பரிசளிக்கும். வாழ்க்கை அவனை விட்டு தூர ஓடி விட்டது. இயற்கையாக மலர வேண்டிய மரணத்தை துன்பகரமாக்கி துயரத்தில் ஆழ்த்தி கொன்று விடுகிறது. மதம் என்பது அனுபவம், முன்னாள் சென்றவர்களின் வழிச் சுவடுகள் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனியாகத்தான் பயணம் செல்ல வேண்டும் என்கிறார் ஓஷோ.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடுமையான மன அழுத்தமேற்பட மன அமைதிக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். உறவுகள், நட்புகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தொழில் செய்பவர்கள் என பலராலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோமே இது என்ன விதமான உலகம் என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறினேன். முகத்துக்கு முன்னால் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் வேறொரு பேச்சு பேசுகின்ற நண்பர்களால் மனது வெம்மையாகி புழுங்கியது. பல்வேறு உடலியல் சிக்கல்களில் இருக்கும் எனக்கே மனச்சாட்சியை இழந்து துரோகங்கள் இழைக்கப்படுகிறபோது ஏற்படும் அதிர்வுகளில் மனம் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருந்தது. வாழ்வியல் சிக்கல்களை அவிழ்க்கும் முடிச்சு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எது வாழ்க்கை எனப் புரியாமல் எனக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

சிங்கா நல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் செல்லும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று ’டீ சாப்பிடலாம்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே வண்டியை விட விஜயா பதிப்பகத்தின் புக் ஸ்டால் இருந்தது. அதில் காட்சிப்படுத்தியிருந்த புத்தகத்தில் ஓஷோ கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தார். எனது கல்லூரி காலத்தில் ஓஷோவின் ’ஒரு கோப்பை தேநீர்’ புத்தகம் கிடைத்தது ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டின் ஓரமாக வண்டியில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

வீட்டுக்கு வந்தும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மனிதர்களைப் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை புரிந்து கொண்டேன். மதங்களைப் புரிந்து கொண்டேன். எல்லாம் வெளிச்சமானது போலத் தெரிந்தது. 

நேற்று ஓஷோவின் பிறந்த நாள். அவர் உண்மையைப் பட்டவர்த்தமாகச் சொன்னதால் 22 நாடுகள் சேர்ந்து விரட்டின. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவரின் உண்மையோ இன்றும் பேசிக் கொண்டே இருக்கிறது. எனக்கு வெளிச்சத்தை உணர வைத்த அவரை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லா மதங்களையும் அவர் ஆராய்ச்சி செய்தார். அதன் பலாபலன்களை விவரித்தார். இந்து மதத்தை பூசாரிகளின் ஆதிக்கம் நிறைந்தது அங்கு கடவுளே இல்லை என்றார். முஸ்லிம் மதத்தை விமர்சித்தார். கிறிஸ்து மதத்தை மரணக் குறியான சிலுவையை வணங்கும் மதம் என்று காட்டமாக விமர்சித்தார். பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இடைப்பட்ட வாழ்வில் வாழ்க்கைத்தானிருக்கிறது. அதை மனிதன் வாழ வேண்டும் என்றார். 

மதம், இனம், மொழி, தேசம் என்கிறவை எல்லாம் மனிதனுக்கான தளைகள். அவைகளால் மனிதன் சிறைப்படுகின்றானோ ஒழிய அவன் வாழ்க்கை சின்னப்படுத்தப்படுகிறதோ ஒழிய அவனுக்கு நன்மை தருவதில்லை என்கிறார். தனி மனித பிரச்சினைகளுக்கு இவையே காரணம் என்று சாடுகிறார்.

ஜைன மஹாவீரர், புத்த மதங்களையும் தத்துவங்களையும் அவர் அலசி ஆராய்ந்தார். முடிவில் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜென் என்பது மனிதனுக்கானது என்று விவரித்தார். 

ஜென் மதமும் அல்ல சித்தாந்தமும் இல்லை அது எதுவுமே இல்லை என்றார். எதுவுமே இல்லாத ஒன்று தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையைத் தருகிறது என்றார்.

சலனமற்ற, சிந்தனையற்ற மன நிலையை எவனொருவன் அடைகின்றானோ அவன் இந்த சமூக வாழ்க்கையிலிருந்து வெகு எளிதாக தன்னை மீண்டெடுத்து தனக்கான வாழ்க்கையை வாழ்வான் என்று தனது உரைகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஓஷோ.

மனிதனின் தற்போதைய வாழ்க்கையை அவர் ஒரு கதை மூலம் விவரிக்கிறார். இதோ கதை!

முல்லா நஸ்ருதீனின் சமாதியில் ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. அது அடைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. யாரும் அதற்குள் நுழைய முடியாது கதவின் வழியாக. அது அவருடைய கடைசி வேடிக்கை. அந்தச் சமாதிக்கு நான்கு சுவர்களே இல்லை. வெறும் பூட்டிய கதவு மட்டுமே. முல்லா நஸ்ருதீன் தம் சமாதியை எப்படி அமைத்தாரோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் அறியாமலேயே! வாழ்க்கை பாதுகாப்பின்மையானது. அது தான் நிதர்சனம். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். விஷயம் அவ்வளவுதான். 

அதிகாரம், பதவி, பணம், இறையருள், ஆத்மபலம் ஆகியவைகளால் உருவான கதவினால் பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதே எவ்வளவு அனர்த்தம்? இது மட்டுமல்ல மனிதன் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வதுதான் ஆகப் பெரும் முட்டாள் தனமானது. ஒவ்வொரு மனிதனும் மதத்தின் வழியாக நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எதார்த்தமான வாழ்க்கை வாழாமல் நெறி முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இறந்து போய் விடுகிறான். ஒரு கதை ஒன்று உங்களுக்காக ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி பாழ்கிணற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். “என்ன ஆச்சு?” என்று கிணற்றுக்குள் பார்த்துக் கேட்டார். “ஐயா, நான் ஓர் இலக்கணப் புலவன். துரதிர்ஷ்டமாக உள்ளே விழுந்து விட்டேன், வழி தெரியவில்லை, அதனால் தான், இப்போது நகர முடியவில்லை” என்றார் உள்ளே கிடந்தவர்.

“இரப்பா! ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்” என்றார் பக்கிரி.

“ஒரு நிமிடம்! உங்கள் பேச்சு இலக்கணப் பிழை. அதை நான் திருத்தி விடுகிறேன்” என்றார் உள்ளே விழுந்தவர்.

”ஏணியையும், கவுத்தையும் விட அது முக்கியம்னா, நான் நல்லாப் பேசக் கத்துக்கிற வரை நீ அங்கேயே கெட!” என்றுச் சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

(பிரேம் உங்களுக்குப் புரிகிறதா?)

ஓஷோ உண்மையின் உரைகல். எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான உரைகளை ஓஷோ வழங்கி இருக்கிறார். அவரை நாம் பின் தொடர வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய அவரின் கருத்துக்களை புரிந்து கொள்ளலாம். அதன் உண்மையை ஆராயலாம், எது சரி எது தவறு என்ற முடிவெடுக்கலாம். நாமும் புதிதாகச் சிந்திக்கலாம். அதன் தொடர்ச்சியாக வெளிச்சமடையலாம். 

ஒவ்வொருவருக்குள் வெளிச்சம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை!

குறிப்பு : ஜெயமோகன் அவர்கள் தனது பிளாக்கில் தமிழ் இந்துவில் எழுதப்பட்ட கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார். விசித்திர புத்தர் என்று தலைப்பிட்டிருந்தார். ஓஷோ அடையாளப்படுத்தப்படுவதைத்தான் உடைத்தார். ஓஷோ புத்தரையே சின்னாபின்னமாக்கினார். புத்தமதத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தார். ஜைன மதத்தின் ஆணி வேரையே அசைத்தார். ஓஷோ வந்து சென்றவர். புத்தரல்ல!

அதுமட்டுமல்ல ஓஷோவின் கேலியும் கிறுக்கும் இன்றைய நவீன ஊடங்களில் விரவிக்கிடக்கின்றன என வெட்டி அரட்டையும் அர்த்தமில்லா பதிவுகளையும் கொண்ட நவீனமய விளம்பர உத்திகளை தன்னகத்தே அடக்கிய இணையதள ஊடகங்களும் கருத்துக்களும் ஓஷோவின் உடைத்தல்களும் ஒன்றானவை என்பது போல எழுதி இருப்பது சரிதானா? என்றொரு கேள்வியை எனக்குள் எழுப்பி இருக்கிறது. 

Sunday, December 11, 2016

கார்த்திகை தீப பெருவிழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் இனிய வணக்கம். சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஜீவசமாதி ஆஸ்ரமத்தில் வரும் 12.12.2016 அன்று மாலையில் தென்கயிலைக்கு தீபஜோதி ஏற்றும் விழா சிறப்புற நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கீழே இணைத்துள்ளேன். அனைவரும் வருக. குருவருள் பெறுக. தங்கள் குடும்பத்தோடு வந்து குருவின் ஆசீர்வாதம் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறேன்.


Wednesday, December 7, 2016

வாழ்க்கை சொல்லும் நியதி - ஜெயலலிதா அம்மா

நேற்று இரவு 7 மணி வரை டிவி முன்பு உட்கார்ந்து விட்டேன். ஆறாம் வகுப்புப் படிக்கும் போது என நினைவு. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டார் என்ற ரேடியோ தகவல் வர நான் படித்த ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உடனடியாக லீவு விட்டு விட்டார்கள். ஆனால் கண்டிப்பாக மறு நாள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளியின் சார்பாக அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று வாத்தியார்கள் சொல்லி இருந்தார்கள். 

மறுநாள் பள்ளிக்குச் சென்ற போது ஹெச்.எம். என்னை அழைத்து ஊர்வலத்தின் முனையில் மூன்று சக்கர வண்டியில் தான் போட்டோவை வைத்து அலங்கரித்து செல்ல இருக்கிறோம் என்றுச் சொன்னார். அதன்படி சைக்கிளில் அம்மையார் இந்திராவின் போட்டோவை முன்புறம் வைத்து பூக்களால் அலங்கரித்து நடுவில் அடியேன் உட்கார ஊர்வலம் கிளம்பியது. பின்னால் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் வரிசையாக வந்தனர். வழியெங்கும் மக்கள் சைக்கிள் முன்பாக வீழ்ந்து வணங்கினர். சிலர் கும்பிட்டனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆவணம் கடைத்தெரு தாண்டி பள்ளி வாசல் வழியாக கைகாட்டி வரை சென்று ஆலமரங்கள் இருக்கும் பகுதியில் இருந்த டிவைடரைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் ஆவணம் கடைத்தெருவுக்கு வந்து போட்டோவைக் கழற்றி, அங்கு கொடிக்கம்பினருகில் வைக்கப்பட்டிருந்த அம்மையார் இந்திராவின் போட்டோவின் முன்பு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் மறைவின் போது இதே போன்று அமைதி ஊர்வலத்தில் முனையில் அடியேனின் சைக்கிளில் போட்டோ வைத்து கலந்து கொண்டேன். மதியம் போல ஐயோபி பேங்க் அருகில் இருந்த முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இருந்த பிளாக்கண்ட்வொயிட் டிவியில் லைவ் ரிலே பார்த்தேன். சிறிய வயதில் எனக்கு எம்.ஜி.ஆரின் மறைவும், இந்திராவின் மறைவும் மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை. ஆனால் ஜெவின் மறைவு பெரும் மனத்துன்பத்தைத் தந்து கொண்டே இருந்தது. 

நேற்றைக்கு முழுமையும் மனதுக்குப் பாரமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிய வயதில் வீட்டுக்குள்ளும்,  மாட்டு வண்டியிலும் புகைப்படமாக பார்த்து வளர்ந்தவன். மனதுக்குள் பதிந்த அதீத ஆளுமையாக இருந்தார். தாய் மாமா அம்மாவின் பக்தர். அவரின் வளர்ப்பு நான். மாமாவைப் போலவே அம்மாவின் மீது பேரன்பு கொண்டவன்.

சாதாரண மனிதர்கள் விதி என்பார்கள். நானும் அதைத்தான் நம்புகிறேன். விதி அவருக்கான வாழ்க்கையை முற்றிலுமாய் ஆக்கிரமத்திருந்திருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கான விதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. எப்படி என்றுச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர் மறைவின் போது தனியாளாக நின்று கொண்டிருந்தவரை கடைசி நிமிடத்தில் ராணுவ வண்டியில் ஏற விடாமல் விரட்டியது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சட்டசபையில் தாக்கப்பட்டது. முதலமைச்சரான போது தத்து எடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டது. கும்பகோணத்தில் சாமி கும்பிடப்போன இடத்தில் கூட விதி தன் விளையாட்டைக் காட்டியது. இரண்டாம் முறை முதலமைச்சரானபோது பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் பதவி போனது, பின்னர் மீண்டும் முதலமைச்சரானது. முதலமைச்சராய் இருந்த போது கைதானது. இதோ தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சரான போது ஆயுள் முடிந்தது.

அவரின் வாழ்க்கை நமக்கு பல்வேறு உண்மைகளைச் சொல்கிறது. எதுவும் எவருக்கும் முழுமையாக கிடைத்து விடுவதில்லை. அதிகாரம், புகழ் அனைத்தும் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு மகிழ்வான தருணத்திலும் தொடர்ந்து துன்பங்களும் அவருக்கு வந்து கொண்டே இருந்தன. இன்பத்தையும் துன்பத்தையும் அவர் ஒன்றாகவே அனுபவித்து வந்துள்ளார். 

அவர் தனக்காக வாழவே இல்லை. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த உண்மையான அம்மா அவர் மட்டுமே. 

Tuesday, December 6, 2016

அம்மா அம்மா அம்மாகடந்த 75 நாட்களாக மனதைக் கனக்கச் செய்த நிகழ்வு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எனது மாமா ஜெயின் தீவிர ரசிகர். ஆவணம் கிராமத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவருடன் மேடையில் ஒன்றாக அருகில் நின்றிருக்கிறார். அக்கா அதிமுக தஞ்சாவூர் மாவட்ட பிரதிநிதி. ஒவ்வொரு தேர்தலின் போதும் வீடு முழுவதும் அதிமுக கொடிகளும், இரட்டை இலை பொறித்த சின்னங்களும் கிடக்கும். நான் அவைகளை எடுத்து, “போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையைப் பார்த்து” என்று கூட்டமே இல்லாத இடத்தில் கத்திக் கொண்டிருப்பேன்.

வருடம் தோறும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று மாமா எம்.ஜி.ஆரின் புகைப்படத்தினையும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தினையும் கொண்டு வந்து வீட்டினுள் சுவற்றில் பாங்காக பிரமேட்டு வைப்பார்.

மாட்டு வண்டியில் ஒரு புறம் எம்.ஜி.ஆர் புகைப்படம், மறுபுறம் அம்மா புகைப்படத்தினை ஆர்ட்டிஸ்ட் வைத்து வரைந்து வைத்திருப்பார். சிறிய வயது முதலே அம்மாவைப் பார்க்க வைக்கப்பட்டு வளர்ந்தவன். 

முதன் முதலாக அடியேனுக்கு ஓட்டுப் போடும் வயது வந்து முதல் ஓட்டு போட்டது அதிமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சிக்குதான். அது முதல் என் ரத்தத்திலேயே ஊறிய நிகழ்வு ஓட்டுப் பெட்டியைப் பார்த்ததும் கைகள் தானாக இரட்டை இலை நோக்கிச் சென்று விடும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அந்த நிறுவனத்தின் காப்பாளர்தான் அம்மாவும் அப்பாவும் ஆக இருப்பர்.அதே போல கிட்டத்தட்ட இரண்டு கோடி பேரின் உள்ளத்தில் அம்மாவாக வாழ்ந்து வந்தவர் அவர். மனதைக் கனக்கச் செய்யும் நிகழ்வு நடந்து விட்டது. இந்த வயதிலா இறக்க வேண்டும் என்ற பதைபதைப்பு ஏற்பட்டுக் கொண்டே மனதைக் கீறிக் கொண்டே இருக்கிறது. 

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக் கொள்கிறேன்.


Saturday, December 3, 2016

உயிர் எங்கே இருக்கிறது?

கடந்த செவ்வாய் கிழமையன்று மனையாளுக்கு கையில் ஏற்பட்ட ஜவ்வு பிரச்சினையால் போடப்பட்ட முட்டைக்கட்டினைப் பிரித்தெடுக்க பூச்சியூருக்குச் சென்றோம். பூச்சியூரில் சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் எலும்பு முறிவுகளுக்கு சிகிக்சை அளிக்கின்றார்கள். ஆக்டிவாவை ஸ்பீடு பிரேக்கரில் கொஞ்சம் வேகமாக ஏற்றி விட்டேன். படக்கென்று சற்று உயரப் போய் வந்ததால் வண்டியில் பிடித்திருந்த பிடியை இறுக பிடித்திருக்கிறார். சுருக்கென முழங்கைக்குள் வலி வந்து விட்டது. எனக்கொன்றும் ஆக வில்லை. 

மறுநாள் முழங்கைக்கு மேல் பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட நீவி விட்டு வரலாமென்று சிங்கிரிபாளையத்து வைத்தியரிடம் சென்றால் கையில் சிம்புகளை வைத்து பெரும் கட்டாகப் போட்டு விட்டார்கள். வலி பின்னிப் பெடலெடுத்து விட்டது என அழுகாத குறை. அடுத்த ஐந்தாவது நாளில் மேலும் ஒரு கட்டு அடுத்த பத்தாவது நாளில் முட்டைக்கட்டு அடுத்த பத்தாவது நாளில் கட்டினைப் பிரித்து நீவி விட வலியில் கதறி விட்டார். சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் கைலி கட்டிக்கொண்டு பாய் மீது அமர்ந்து கொண்டு எலும்பு முறிவுகளோடு வருகின்றவர்களுக்கு சிகிக்சை அளித்து வருகின்றார்கள். 

இருபத்தைந்து நாட்களாக வீட்டு வேலை, பள்ளிக்குச் சென்று வருதல் என வேறு எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. ஒரு சிறிய நிகழ்வு ஒரு மாதம் முடக்கி விட்டது. மனிதர்களின் வாழ்க்கை என்பது இதுதான். அடுத்த நொடியில் என்ன நடக்குமென்று தெரியாத திகில் வாழ்க்கைதான். எல்லாவற்றுக்கும் தயாராக இருத்தல் வேண்டும்.

வடகிழக்குப் பருவ மழை பொய்த்து விட்டதனால் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் தன் பசுமையை இழந்து வெளுக்க ஆரம்பித்திருந்தன. நொய்யல் ஆற்று நீர் கொஞ்சமே கொஞ்சமாய் வடிந்து கொண்டிருந்தது. பச்சைப் பட்டாடை போல மின்னும் வெள்ளிங்கிரி மலை வெளுத்துப் போய் இருந்தது. ஆடு மாடுகளைக் காணவில்லை. விவசாயமும் சரியாக இல்லை.

ஆழ்துளைக்கிணற்று நீரை வைத்து விவசாயம் செய்ய முடியாது. ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் செய்யலாம். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டார்கள். ஆனால் கடைமடைப் பகுதியான தஞ்சாவூர் பகுதிக்கு தண்ணீரே சென்று சேராமல் வயல்கள் தரிசாகக் கிடக்கின்றன. அரிசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காவிரி நீர் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. இனி விவசாயிகளைக் கவனிக்க ஆளேது. இருந்த ஒருத்தரும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். இதற்கிடையில் கள்ளப்பணம் பிரச்சினை. இத்தனைப் பிரச்சினைகளுக்குள் மனிதன் வாழ வேண்டும். 

கவுண்டர் நண்பரின் தோட்டத்துக் கிணறு தண்ணீர் வற்றி விட விவசாயம் கருகி விட்டது. மாடுகள் தீவனமின்றி பரிதவிக்க ஆரம்பித்தன. மேலும் ஆழத்தில் தண்ணீர் எடுக்க இருந்த மாடுகளில் ஒன்றினை விற்று விட்டார். அவருக்கு அது ஒன்றுதான் வருமானம். அதுவும் இல்லையென்றால் அவரின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு நாள் ஒரே ஒரு நாள் தண்ணீர் இன்றி இந்த உலகம் இருக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். உடம்பு சில்லிடும். மனிதனின் உயிர் எங்கே இருக்கிறது என்று இனி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விஷயம் அவ்வளவுதான்.

Tuesday, November 29, 2016

கண்ணில் தெரியும் கபாலிகள்

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது, உப்புக்கு வரி விதித்தார்கள். அதை எதிர்த்து காந்தி உப்புச் சத்யாகிரகத்தைத் ஆரம்பித்தார். வேதாரண்யத்தில் ராஜாஜி தங்கி இருந்து உப்புச் சத்யாகிரகத்தை நடத்த திட்டமிட்டார். காவல்துறையினர் இவரை உப்பு எடுக்க விடாது தடுக்க வேண்டும் என்று கருதி அதற்கென முன்னேற்பாடுகளில் இருக்கும் போது இரவே தண்ணீர் எடுத்து உப்புக் காய்ச்சி உப்பை எடுத்து விட்டாராம் ராஜாஜி. அப்போராட்டத்தின் போது போலீஸார் அடிதடி நடத்த கையிலெடுத்த உப்பை விடாது பிடித்துக் கொண்டு போராடினாராம் ஒருவர். அவர் கையை மண்ணில் வைத்து மிதிக்க கட்டை விரல் தனியாக துண்டாகப் போய் விழுந்ததாம். இப்படி ஒரு காட்சியை ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர் ந.சிதம்பர சுப்ரமணியன். இன்றைக்கு ஒரு நாள் வங்கி வாசலில் நிற்பதுக்கு கூட வலிக்கிறது. அன்றைக்கு தன் உயிரைக் கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் எங்கே? ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே? வெட்கமாக இல்லையா?

அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு தன் நாட்டு மக்களையே அடித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இல்லை. நம்மவர்கள் தான். நம் இந்திய மன்னர்கள் தான் வயிற்றைக் கழுவுவதற்காக பிரிட்டிஷாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தன் சகோதரனை அடித்து உதைத்து மண்டைகளைப் பிளந்து பலரை பரலோகம் போக வைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரனிடம் தன்மானத்தை அடகு வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அவன் காலை நக்கிக் கொண்டு ஊழியம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

இதே நாவலில் ஒரு இடத்தில் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவும் கலந்து கொண்டதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். போர் காலமாகையினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தினசரி பதிவு செய்து ஒரு வருடம் நடத்தினால் அரசே தினசரிக்கான பேப்பரை மானிய விலையில் கொடுக்கும். (இன்றைக்கும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கிறது எவருக்காவது தெரியுமா?) அவ்வாறு கொடுக்கப்பட்ட பேப்பர் பண்டிலை கள்ளமார்க்கெட்டில் விற்று கறுப்புப்பணத்தை உருவாக்கினார்கள் என்று நாவலில் பதிவு செய்திருக்கிறார். அந்த இதழின் ஆசிரியர் ஒருவர் காந்தியின் பால் பற்றுக் கொண்டவர் என்றும் மற்றொருவர் வியாபாரி என்று எழுதி உள்ளார்.

காந்தி காங்கிரஸ்ஸைக் கலைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எவரும் கேட்கவில்லை. பதவிக்கு வந்ததும் அரசு நிலங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொண்டனர் என்றும் ஒரு விஷயத்தை நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நாவலின் முன்னுரையில் எழுதப்பட்ட ஆண்டு 1969 என்று தேதியிடப்பட்டுள்ளது. அன்றைக்கே ஆரம்பித்து விட்டனர் தம் ஆட்டத்தினை சுய நலக்கும்பல்கள். கதர் உடுத்தி மக்களிடையே வேஷம் போட்ட அந்த நயவஞ்சகக் கும்பல் தன் குடும்பத்தினையும் தன் நலத்தினையும் மட்டுமே உத்தேசித்து இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுக்க ஆரம்பித்தனர். அதைத்தான் அந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.

இந்தியா சுதந்திரம் அடையப் போராடி எத்தனையோ உயிர்கள் போராட்டக்களத்தில் பலியாயின. அப்போது  பலியாகக் காரணமாயிருந்த காவல்துறையிலும், ராணுவத்திலும் இருந்தவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே. அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக போராட்ட வீரர்களை அடித்துக் கொன்றனர். பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்வதைக் கவுரவம் என்றுச் சொல்லித் திரிந்தார்கள் பல சுயநலவாதிகள் அன்றைக்கு.

சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்தியாவில் இன்னும் தெருவில் படுத்திருக்கும் ஏழைகள் குறையவில்லை. எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பலனை தன் சுய நலத்தினால் குவித்து வைத்துக் கொண்டு இந்திய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாக இருக்கும் சுய நலக்கும்பல்கள் குபேரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் எரிகிறது. 

60 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளையடித்து குவித்து வைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் பல சுயநலநரிகள் போக வழி தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடிகளில் சம்பளம் பெற்று கள்ளப்பணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். கல்வித் தந்தைகள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமரை கடும் கோபத்துடன் தனிமைகளில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் அரசு அலுவலர்கள் தங்கள் அநியாயமாக திரட்டி வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இருக்க வீடே இல்லாதவர்கள் பலர் இருக்க ஒருவன் பல வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கின்றான். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? என்றால் அது கள்ளப்பணம். கறுப்பு பணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 

அரசின் சட்டம் 250000க்கும் மேல் சம்பாதித்தால் கணக்கு காட்டு என்கிறது. ஆனால் எவரும் காட்டுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தைக் கணக்கு காட்டியே தீர வேண்டும் என்றால் குதிக்கின்றார்கள். சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.  தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள். 

தெருவோரம் படுத்து இருக்கும் ஏழைகளுக்காக என்றைக்காவது போராடினார்களா இந்த வெள்ளை வேட்டி குறு நில மன்னர்கள்? இல்லையே? ஊழலில் குவித்த பணம் வெற்றுக் காகிதமாய் போய் விடுமே என்பதற்காக கூட்டம் கூட்டி கூப்பாடு போடுகின்றார்கள்.

கள்ளப்பணத்தை வைத்துக் கொண்டு நிலத்தின் விலையை ஏற்றுகிறார்கள், பொருட்களை வாங்கிப் பதுக்குகின்றார்கள். பொருட்களின்  விலையேறுகிறது. கள்ளப்பணத்தினால் தான் சாதாரண நேர்மையான ஒருவனால் இடம் கூட வாங்க முடிவதில்லை. இதையெல்லாம் சரி செய்ய அரசு முடிவெடுத்தால் குதிக்கின்றார்கள். போராடுகின்றார்கள். ஊழல் பணத்தால் தன் ஆசை நிறைவேற அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குகிறார்கள். அதே விலைக்கு சாதாரண மக்களும் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது. நான் சொல்லும் இந்த விஷயம் உண்மையா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

இதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.

http://www.vikatan.com/news/india/73668-reason-behind-decrease-in-dal-prices.art

ஊழல் பணத்தினால் தங்கள் குழந்தைகளுக்கு விலைக்கு படிப்பினை வாங்கி விடுகின்றார்கள். கள்ளப்பணத்தினால் தங்கள் மகன் மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து கோடிகளில் சம்பாதிக்கின்றார்கள். இப்படி இந்தியாவெங்கும் ஊழல்வாதிகளும், சுய நலக்கும்பல்களும் அக்கிரமமாகச் சம்பாதித்த பணத்தினால் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியர்கள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். விலைவாசியும் விண்ணில் ஏறிக் கொண்டிருக்கின்றது. வீட்டு வாடகை 1000 ஆக இருந்தது இன்றைக்கும் 10000 ஆகி விட்டது. இந்த உயர்வு யாரால் ஏற்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உழைப்பவர்களின் பணத்தினை தான் ஊழல் செய்த பணத்தினால் வைத்து இருக்கும் சொத்துக்களை வைத்து மேலும் உறிஞ்சுகின்றார்கள். 

அன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது தன் சகோதரனையே கொன்றொழித்த பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்த இந்தியர்களையும், இன்றைக்கு கள்ளப்பணத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் சுதந்திர இந்தியர்களுக்கும் ஏதாவது வேறுபாடுகள் தெரிகின்றனவா? 

இந்திய அரசின் இந்த நடவடிக்க பாமர மக்களுக்கு பல சிரமங்களைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அந்தச் சிரமங்கள் எதிர்கால தம் சந்ததியினருக்கு நல்லதைக் கொண்டு வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர் சுகமாக வாழ நாம் இந்தச் சிரமங்களை ஏற்று இந்திய அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும். கருப்புப்பண கோட்டான்களும், ஊழல் பெருச்சாளிகளும் மக்களை திசை திருப்ப தாங்கள் வைத்திருக்கும் அதர்ம பணத்தினைக் கொண்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுப்பார்கள். அந்தக் கபாலிகளிடம் ஜாக்கிரையாக இருக்க வேண்டும். 

சினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை. படியுங்கள். உண்மையை உணருங்கள்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

நன்றி:- பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் ந.சிதம்பர சுப்பிரமணியன்

இந்த சமயத்தில் இந்தப் பாடல் சொல்லும் அர்த்தங்கள் பல. கண்ணில் தெரியும் கபாலிகளைப் பாருங்கள். கபாலிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப்போரினை நம் பாரத அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு கபாலிகளுக்கு எதிராகப் போராடுவோம் வாருங்கள்.

இந்தியத் தாய்க்கு வணக்கம் !


Saturday, November 26, 2016

காயகப்பல்

சமீபத்தில் சித்தர் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்த போது கிடைத்த அறிய பாடல் இது. பாடல் புரியும் என்று நினைக்கிறேன். எவ்வாறு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது போனதோ அதே போல ஒரு நாள் செல்லாது போகும் இந்த உடலை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சித்தரொருவர் பாடி வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். 

சிந்தை குலைந்து மனம் சிதறி நிற்கையில் கொஞ்ச நேரம் இப்பாடல்களைக் கேளுங்கள். சிந்தை தெளிந்து சீராவீர்கள்.

இனி சித்தரின் அபூர்வ பாடல் :

ஏலேலோ ஏகரதம் சர்வரதம் 
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ. 

பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து 
பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி 
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம் 
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து 

ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி 
ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி 
நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி 
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து 

தஞ்சலான வெள்ளத்தில் தானே 
அகண்டரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ. 
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல் 

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் 
மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு 
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல் 

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு 
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல் 
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு 
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ ஏலேலோ

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து 
பதினாலு லோகமும் தனையும் மறந்து

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி 
அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ.

பாடல் பாடிய சித்தர் அடியினைப் பணிந்து இப்பாடலை பதிவிடுகிறேன். 
நன்றி குருவே !

Wednesday, November 23, 2016

கரட்டான்

இன்னும் வங்கிகளில் கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. சிறுவாட்டுப் பணத்தை எப்படி மாற்றுவது என்று கிழவிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த பாட்டி சிறுவாட்டுப்பணமாய் பத்தாயிரம் வைத்திருக்கிறது. பாட்டியின் பக்கத்து வீட்டுக்காரர் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் கமிஷன் கேட்க பாட்டிக்கு ஆக்சிலேட்டர் எகிறி இருக்கிறது. பாட்டிக்கு சரியான கோபம் வந்து விட்டது. ஒன்றுமே சொல்லாமல் முறைத்துக் கொண்டு போய் விட்டது. ஆனால் அந்த கமிஷனால் ஏற்பட்ட கோபத்தில் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் இப்போது தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டும் பாட்டியைப் பார்த்தாலே எமனைப் பார்ப்பது போல எகிறிக் குதித்தோடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியிடம் மொத்த காசையும் வாங்கி, அது வைத்திருக்கும் கேஸ் கனெக்‌ஷன் அக்கவுண்டில் போட்டு, பாஸ்புக்கில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்து விட்டார். பாட்டி இன்னொரு பக்கத்து வீட்டுக்காரருக்கு எள்ளுருண்டை, எள்ளடை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுக்கிறார். அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி என்னெவெல்லாம் பேச வேண்டுமோ அதையெல்லாம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் கிழவிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறது. தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது கமிஷன் விஷயம். இவரைப் பார்க்கும் கிழவிகள் எல்லாம் என்னவோ பெரிய குற்றம் செய்து விட்டதாக தங்களுக்குள் அவரைப் பார்த்து ஆள் காட்டி விரலைக் காட்டிப் பேசப் பேச ஆள் என்னவோ மாதிரியாகத் திரிகின்றார்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். பாட்டியின் வாயில் விழுந்து தினம் தினம் வறுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் இப்போது சோகமாகத் திரிந்து கொண்டிருக்கின்றாராம். அவரிடம் கொஞ்சம் பெண் தன்மை அதிகம். ஆகையால் அவர் பாட்டியிடம் வாங்கிய பேச்சுக்களை மோடியிடம் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்துக் கொண்டு தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மனைவிக்கோ இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 

இப்படியெல்லாமா மனிதனுக்கு பிரச்சினைகள் எழும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. யாராவது கிராமத்துப் பாட்டியிடம் முயற்சித்துப் பாருங்களேன்.

இளம் வயதில் நான் செய்த ஒரு செயல் இப்போது என்னை பீதியில் தள்ளி விட்டிருக்கிறது. விஷயம் தெரியாத வயதில் செய்த செயலுக்கெல்லாம் இப்போது பயந்தே ஆக வேண்டிய சூழல். விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். 


வீட்டின் வடக்குப் பக்கமாக கிணற்றடி. கிணற்றின் கிழ புறமாக காசாலட்டு மாமரம் விரிந்து பரந்து இருக்கும். தாழ்ந்த கிளைகள் உண்டு. அதில் கயிறு கட்டி ஊஞ்சல் செய்து ஆடிக் கொண்டிருப்பேன். மாமரத்தின் வடபுறமாக வேலி. வேலியில் ஓங்கி வளர்ந்த பனைமரம் ஒன்று இருந்தது. ஒரு நாள் மதியம் போல இருக்கும். ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவன் பனைமரத்தின் உச்சியில் பார்க்க அகலமான கண்களுடன் சாம்பல் நிறத்தில் பெரிய பறவை ஒன்றினைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்குள் நடு நெஞ்சில் சிலீர் என்று பயம் ஏற்பட்டது. சரியாக அது தலையை நான்கு புறமும் சுத்த அதைக் கண்டு பயந்து அம்மா அம்மா என்று அலறிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அம்மாகிட்டே கேட்டால் அது ஆந்தை என்றார்கள். அன்றிலிருந்து ஆந்தை என்றாலே எனக்கு ஆகாது. இருந்தாலும் யாராவது விளையாடுவதற்கு கூட வந்தால் மாமரத்தின் ஊஞ்சலுக்குச் சென்று விடுவேன். கண் ஒரு பக்கம் பனைமரத்தைப் பார்த்தாலும் உச்சியினைப் பார்க்காது. அவ்ளோ பயம்.


இன்னொரு சம்பவமும் எனக்கு ஏற்பட்டது. காசாலட்டு மாமரத்தில் காய்கள் பிடித்தவுடன் தொரட்டி வைத்து மாங்காய்களைப் பிடுங்கி வைக்கோல் போருக்குள் வைத்து விடுவேன். தினமும் எந்த மாங்காயாவது பழுத்து இருக்கிறதா என்று பார்ப்பேன். மாங்காய் பழுத்து விட்டால் நன்றாக அழுத்திப் பிசைந்து விட மாம்பழம் கொழ கொழவென ஆகி விடும். நுனியில் ஒரு ஓட்டையைப் போட்டு விட்டு உறிஞ்சினால் மாம்பழ ஜூஸ். அடியேன் கண்ட மேனிக்கு மாம்பழத்தைத் தின்பதுண்டு. வீட்டில் வியாபாரிக்கு விற்றது போக மீதமுள்ள மாங்காய்களை வேப்பந்தழையில் போட்டு பழுக்க வைப்பார்கள். அந்தக் கணக்கு வேறு. ஆனால் யாருக்கும் தெரியாமல் நான் கொஞ்சம் மாங்காய்களை வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்து சாப்பிடுவதுண்டு. மாம்பழத்தின் ருசி அப்படி. அப்படி ஒரு நாள் பதுக்கி வைத்திருந்த மாங்காய்களை வைக்கோல் போருக்குள் கையை விட்டு பார்க்க ஏதோ தட்டையாக இருந்தது. யாரோ விளையாண்டு விட்டானே என்ற கோபத்தில் அதை இழுத்து வெளியில் போட மல்லாக்க விழுந்தது அந்த வஸ்து. என்ன வஸ்து என்று தெரியாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதை குப்புற தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் அது மெதுவாக நகன்றது. பயத்தில் அம்மா என்று அலற அனைவரும் ஓடி வர பார்த்தால் அது ஆமை. அம்மா என்னைக் கண்ட மேனிக்குத் திட்ட ஒரு வழியாக ஆமையை தீயை வைத்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்தார்கள். இனிதான் விஷயமே இருக்கிறது.

(கரட்டான் என்றழைக்கும் ஓணான்)

ஞாயிற்றுக் கிழமைகளில் மாமா பையன் விட்டியன் என்னுடன் விளையாட வந்து விடுவான். அவனுக்கு ஏன் விட்டியன்னு பெயர் வந்துச்சுன்னு தெரியாது. விட்டிப்பயலைக் கூப்பிடு என்றுதான் சொல்வார்கள். நானும் அவனும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு கரட்டானுக்குச் சமாதி என்று அர்த்தம். அவன் கைகாட்டி தோட்டத்து வீட்டில் இருந்து வரும் போதே தென்னை ஓலையின் ஈர்க்கைக் கொண்டு வந்து விடுவான். ஈர்க்கு நரம்பு போலவே இருக்கும். நுனியில் சுறுக்குப் போட்டால் அவ்வளவு எளிதில் கண்ணுக்குப் புலப்படாது. வேலியில் பதுங்கி இருக்கும் கரட்டானைச் சுறுக்குப் போட்டுப் பிடித்து அடித்துக் கொன்று விடுவோம். பின்னர் அதற்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து மண்ணுக்குள் புதைத்தால் தான் இருவருக்கும் விளையாட்டு முடியும்.


பட உதவி சிறுகதைகள் தளம்

இப்படி பல கரட்டான்களைக் கொன்று கொன்று விளையாடிய நாட்கள் எப்போதாவது நினைவுக்கு வந்து செல்லும். கடந்த வாரம் ஒரு நாள் நானும் மனையாளும் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு வந்த போது நடு ரோட்டில் கரட்டான் நின்று கொண்டிருந்தது. சற்றே பெரிய கரட்டான் அது. நடு ரோட்டில் தலையைத் தூக்கிக் கொண்டு என்னை முறைத்துக் கொண்டு நின்றது. வண்டியை நிறுத்தி விட்டேன். மனையாள் ஒதுங்கிப் போங்க என்றார். இடது பக்கம் ஒதுங்கினால் இடது பக்கம் வந்தது. வலது பக்கம் திருப்பினால் வலது பக்கம் வந்தது. இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டு பின்னாலும் முன்னாலும் பார்த்தால் அந்த நேரம் பார்த்து ஒரு வண்டியும் வரவில்லை. கரட்டான் என்னைத் தடுக்க எனக்கோ பழைய நினைவுகள் வர சிலீரென்று பயமேற்பட்டது. நானும் விட்டிப்பயலும் கொன்ற கரட்டான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு புதிய பிறப்பாக பிறந்து இப்போது நேருக்கு நேராக மோத வந்து விட்டதோ என்று நினைத்தேன். விட்டியனுக்கும் எனக்கும் பாதிப் பங்கு ஆகவே கரட்டானே இருவரையும் ஒன்றாகப் பார்த்து தான் நீ சண்டைக்கு வர வேண்டும், இப்போது சென்று விடு என்று அதைப் பார்த்துச் சொன்னேன். அது அசைவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து லாரி ஒன்று வர கரட்டான் சாலையோரம் ஒதுங்கியது. விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த போது வேப்பமரத்தின் மீது ஒரு கரட்டான் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்ப்பதும் பின்னர் தலையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தது. விடாது கரட்டான் போல! என நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டேன். இப்போது வேப்பமரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கரட்டானைத் தேடுகின்றன. அதைக் காணவில்லை. என்னை மன்னித்து விட்டதா? என்று தெரியவில்லை.

Sunday, November 20, 2016

ஆட்டுக்குட்டியும் புற்களின் வாசமும்

சின்னஞ் சிறிய பிராய மனசு. தெளிந்த நீரோடை போல இன்றைக்கு நினைத்தாலும் மனதை வருடும். அத்தகைய மனசு இருந்த இடத்தில் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் மனசு இருக்கிறது. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்து அனுபவித்து தெளிந்த நீரோடை போன்ற மனதை அழுக்கு நிறைந்த சாக்கடையாக மாற்றிக் கொண்டே வருகிறோம். 

எனக்குள் உறைந்து கிடக்கும் அற்புதமான ஓவியம் சின்னஞ் சிறிய வயதில் நான் வளர்ந்த வீடு. என் வீடு அல்ல அது. என் தாய் பிறந்த வீடு அது. அகலமான கற்கள் பாவிய வாசல். மூன்று புறமும் செங்கற்கள் வைத்து அழகாக பூசப்பட்டிருக்கும். தெற்கு வாசல் வீடு. வடக்கேயும் வாசல் இருக்கும். வடக்குப் பக்கம்  குடத்தடி. வரிசையாக குடங்கள் தண்ணீர் நிரம்பி இருக்கும். குடத்தடியில் ஒரு மாமரம் இருக்கும். அழகான பூக்களைச் சொரிந்து கொண்டிருக்கும். இடது பக்கமாய் குப்பைக் கிடங்கு. கிடங்கினை ஒட்டியவாறு தென்புறமாய் கிழமேலாய் ஒரு கூரை வீடு. வேலைக்காரர்கள் தங்கிக் கொள்ளவும், ஆட்டுக்குட்டிகளையும், மாடுகளையும் கட்டி வைப்பதற்கு இருக்கும். குடத்தடியைத் தாண்டி கிழமேலாய் பெரிய வைக்கோல் போர் இருக்கும். இதற்கு வடக்குப் பக்கமாய் நான்கு பேர் சேர்ந்து கட்டிப்பிடித்தாலும் அடங்காத அளவில் பெரிய மாமரம். அதன் வடக்கே காசாலட்டு மாமரமும், ஒட்டு மாமரமும், பாவற்காய் போலவே காய்க்கும் ஒரு மாமரமும் வட மேற்கு மூலையில் தண்ணீர் வற்றவே வற்றாத கிணறும் அதைத்தாண்டி ஒரு பெரிய பனைமரமும் இருந்தது. 

பெரிய அகலமான ஓட்டு வீடு. திண்ணை, நடு வீடு, இரண்டு பக்கமும் இரண்டு அறைகள், பிறகு சமையல் கட்டு என்று பார்ப்பதற்கே படு ரகளையாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் அந்த வீட்டினை இடிக்கப் போகிறார் மாமா. அருகில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். பழையது ஆனால் குப்பைக் கூடைக்குத்தானே போக வேண்டும். 


வீட்டில் மாடுகளும், செம்மறி ஆடுகளும் அதிகம். பால் மாடும், கன்றுகளும் இருக்கும். வண்டி மாடுகள் இரண்டு ஜோடி இருக்கும். மழைக்காலங்களில் வயற்காடுகளில் இருந்து புற்கள் அறுத்துக் கொண்டு வந்து ஆட்டுகுட்டிக்கும் மாடுகளுக்கும் போடுவார்கள். கரக் கரக் என்று வாய் கொள்ளாமல் ஆட்டுக்குட்டிகளும் மாடுகளும் தின்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வாய் பேசாத ஜீவன்களுக்கு உணவிடுவதையும், அதுகள் வாய் கொள்ளாமல் தின்பதையும் காண்பதை விட மகிழ்ச்சியான தருணங்கள் ஏதுமில்லை. 

கோடைக்காலங்களில் ஆட்டுக்குட்டிகளையும், மாட்டு மந்தையினையும் வேலைக்காரர்கள் புல் மேய அழைத்துச் சென்று மாலையில் அத்தனையையும் கொண்டு வந்து கயிற்றில் கட்டி வைப்பார்கள். 

(உழவாரம் - புகைப்பட உதவி : ஜஃப்னா ஹெரிடேஜ்)

ஒரு கோடை நாள் என்று நினைக்கிறேன். வீட்டில் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று விட்டனர். ஜெயராசு எங்கோ சென்று விட்டான். நான் மட்டுமே இருந்தேன். கொட்டகைப் பக்கம் வந்து பார்த்தால் பசியில் ஆட்டுக்குட்டிகள் கத்திக் கொண்டிருந்தன. எனக்கு மனசுக்குப் பொறுக்கவில்லை. ஜெயராசு எங்காவது ஒதுங்கப்போயிருப்பான் போல. கொலுசு ராவுத்தர் வீட்டின் அருகில் தரையில் படர்ந்து இருக்கும் புற்களைச் செத்தி எடுத்து வந்து கொடுக்கலாம் என்று நினைத்து உழவாரத்தை வைத்து தரையோடு தரையாக படர்ந்து கிடந்த புற்களை செத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக செத்தச் செத்த புற்கள் கையோடு வந்தன. எடுத்து மண்ணை உதறி விட்டு அருகில் வைத்திருந்த கூடையில் போட்டுக் கொண்டே வந்தேன். புற்களைப் பூமியில் இருந்து பறித்த போது அதன் வேர்கள் அறுந்து கூடையில் விழும் போது எழுந்த அற்புதமான வாசம் என்னைத் தழுவியது. மனது சிலிர்த்தது. மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் புற்களைச் செத்தினேன். கொண்டு வந்து ஆட்டுக்குட்டிகளிடையே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு செத்தையாக எடுத்து ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கொடுக்கையில் அதுகள் கடித்து மெல்லுகையில் எழுந்த வாசம் இன்றைக்கும் என்னை விடாது சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்து போன ஒரு நாளில், பெரியசாமி கவுண்டர் தன் வீட்டுத் தோட்டத்தில் சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டியைக் கட்டி வைத்திருந்தார். அழகான சிறு ஆட்டுக்குட்டி அது. அருகில் வேப்பந்தழைகளைக் கட்டி வைத்திருந்தார். இழந்து போன எதையோ மீண்டும் பார்த்தைப் போல இருந்தது. அதைப் பிடித்துக் கொண்டு நானமர்ந்திருந்த கட்டிலில் கட்டி வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் அதன் தலையில் கையால் தட்டிக் கொண்டிருந்தேன். அது கோபமாய் பின்னே போவதும் பின்னர் முன்னே வந்து கால்களை உயரத் தூக்கி முட்டுவதுமாய் இருந்தது. நீண்ட நேரம் அது கூட விளையாடிக் கொண்டிருந்தேன். ஆனால் புல்லைத்தான் காணவில்லை. கவுண்டர் எங்காவது உழவாரம் வைத்திருக்கின்றாரா என்று தேடின என் கண்கள். 

“அங்கே என்னத்தை அப்படித் தேடுறீங்க?” என்றாள் மனைவி. 

பிளாக்கைப் படிக்கும் அன்பு நண்பர்களே! ஒரு நிமிடம் கண்ணை மூடி உங்களின் சின்னஞ் சிறிய பிள்ளைப் பிராயத்து நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வாருங்கள். ஏதோ ஒரு வாசம் அந்தப் பிராயத்திலிருந்து விடாது உங்களையே சுற்றிக் கொண்டிருப்பது நினைவில் வருகிறதா? வரும்!

இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது உழவாரமும் அந்தப் புற்களின் வாசமும்? 

Tuesday, November 15, 2016

கைகொடுத்த பத்ரகாளியம்மன்

இந்தியாவெங்கும் புரோக்கர்கள் ”சார் இத்தனை கோடி இருக்கிறது எத்தனை பர்செண்டேஜ்” என்று ஆரம்பிக்கின்றார்கள். பணம் வைத்திருப்பவர் யார்? பணம் மாற்றிக் கொடுப்பவர் யார்? என்று எவருக்கும் தெரியாது. ஆனால் கோடிகளில் தான் பேசுகின்றார்கள். பெட்டிக்கடை முதற்கொண்டு மாலில் இருக்கும் காஃபிக் கடை வரைக்கும் இதுதான் நான்கு நாட்களாகப் பேச்சு. என்னிடமும் பல நண்பர்கள் ”என்னப்பா இப்படி மோடி செஞ்சுட்டாரு” என்று வருத்தப்பட்டார்கள்.

மோடி தான் இரண்டு மாதங்கள் டயம் கொடுத்தார் அல்லவா? அப்போதே சூதானமாக சிந்திக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது ’செஞ்சுட்டாருன்னா என்ன அர்த்தம்?’ என்றால் பதில் பேச்சு வரவில்லை.

ஒரு சிலர் என்னதான் வழி? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த வழியும் இல்லை என்று அவர்களுக்கு புரியும் படி பாடம் எடுத்த போது வலிக்காத மாதிரி பேசினார்கள்.

வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் படா குஷியில் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். மஞ்சப்பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி வீடு வீடாக அலைந்து கொண்டிருக்கின்றாராம். வீட்டுக்காரருக்கு உடம்பு முடியவில்லையாம். ஹாஸ்பிட்டல் செலவுக்குப் பணமில்லையாம். ”வீட்டுக்காரர் என்ன வேலை செய்கிறார்?” என்று கேட்டேன். ”பத்திரப்பதிவாளராக வேலை செய்கிறார்” என்றார். 

”விதி வலியது” என்றுச் சொல்லி சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தார். ”நன்றாகத் தூங்கினேன் தங்கம்” என்றார் தொடர்ந்து. ”ஏன் இத்தனை நாளா தூங்கவில்லையா?” என்ற போது ”பக்கத்து வீட்டு அரசு அதிகாரி கோடி கோடியாய் சம்பாதிக்கின்றான், அவனின் நண்பரான நானோ அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறேனே என்று எல்லா கடவுள்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி முடிக்கையில் விடிந்து விடும் தங்கம் என்றார்” சிரிப்புடன். 

”இப்போது அந்தக் கடவுகளை தினமும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன். திட்டத்தான் நேரமாகிறது. பாராட்ட ஒரு நிமிடம் கூட ஆவதில்லை” என்றார் நண்பர். சூடாக காஃபியைப் பருகி விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கிளம்பினார்.

இன்னொரு நண்பர் வீட்டுக்கு வந்து ”சில்லறை கொடுங்க” என்றார். ”இன்னும் பிரிண்ட் வரவில்லை, வந்ததும் கொடுத்து விடுகிறேன்” என்றேன். கடுப்பில் ”வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சுப்பா, நூறாவது கொடேன்” என்றார். அம்மணியிடம் திரும்பினால் எரிமலைகளைக் கண்களில் பார்க்க வாயை மூடிக் கொண்டேன். ”கையில் எவ்வளவு இருக்கு?” என்றேன். ஆயிரமென்றார். ”சரி என்னுடன் வாருங்கள்” என்றுச் சொல்லி இருவரும் நண்பரின் பெட்ரோல் பங்குக்குச் சென்றோம். நண்பரை ”இங்கேயே இரும்” என்று சொல்லி விட்டு, நான் மட்டும் பங்குக்குச் சென்று 200 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டேன். ”மீதி நாளை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சத்தமாகச் சொன்னவர் கையில் 800 ரூபாயைச் சில்லரையாகக் கொடுத்தார். சத்தம் காட்டாமல் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். நண்பரிடம் கொடுத்தால் ”மீதிப்பணம் எங்கே?” என்று அதிர்ந்து போய் கேட்டார். ”கமிஷன்” என்றவுடன் “நீங்களுமா?”என்றுக் கேட்டு சோகமானார். விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு அழைந்து வந்து மனையாளிடம் 200 ரூபாயை வாங்கிக் கொடுத்தேன். 

”இதே பங்கில் பத்து நிமிடத்துக்கும் முன்பு நான் கேட்டால் இல்லையென்றார்களே?” என்றார். ”என்ன செய்கிறேன் பார்?” என்று கோபமாக கிளம்ப ”அவங்க நாளைக்கு தான் பாக்கி தருகிறேன் என்றார்கள்” என்றேன். ”அப்போ இது?” என்றார். “அதான் இது?” என்றேன். முறைத்து விட்டு கிளம்பினார். வீதியில் போற ஓணானை வேட்டிக்குள் விடுவது என்பது இதுதான். பழமொழியை அனுபவித்த சந்தோசத்தில் நம்ம விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

வங்கியில் பணம் எடுக்க முடியாது. வரிசை கட்டி நிற்க வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்தையே நம்மால் எடுக்க முடியவில்லை ஆனால் வீட்டுச் செலவுக்கு குறைந்தது தினமும் 100 ரூபாயாவது வேண்டும். கையிலிருந்த சில்லறை எல்லாம் முடிய வேறு வழி இன்றி குல தெய்வம் பத்ரகாளியம்மன் தான் கை கொடுத்தார். அவ்வப்போது நூறு, ஐம்பதாக போட்டு வைத்தது இன்றைக்கு உதவுகிறது. அதற்காக அவருக்கு வட்டி கொடுத்து விடலாம் என்று முடிவு கட்டிக் கொண்டு கையேந்தி நிற்கையில் என்னை எடுத்துக்கோ என்று கையில் வந்து விழுந்தது அவரின் பணம். 

துன்பம் வரும் போது  கடவுள் தான் கை கொடுப்பார் என்பதை மோடிஜியால் அறிந்து கொண்ட நேரம் இது.