கடந்த செவ்வாய் கிழமையன்று மனையாளுக்கு கையில் ஏற்பட்ட ஜவ்வு பிரச்சினையால் போடப்பட்ட முட்டைக்கட்டினைப் பிரித்தெடுக்க பூச்சியூருக்குச் சென்றோம். பூச்சியூரில் சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் எலும்பு முறிவுகளுக்கு சிகிக்சை அளிக்கின்றார்கள். ஆக்டிவாவை ஸ்பீடு பிரேக்கரில் கொஞ்சம் வேகமாக ஏற்றி விட்டேன். படக்கென்று சற்று உயரப் போய் வந்ததால் வண்டியில் பிடித்திருந்த பிடியை இறுக பிடித்திருக்கிறார். சுருக்கென முழங்கைக்குள் வலி வந்து விட்டது. எனக்கொன்றும் ஆக வில்லை.
மறுநாள் முழங்கைக்கு மேல் பகுதியில் வீக்கமும் வலியும் ஏற்பட நீவி விட்டு வரலாமென்று சிங்கிரிபாளையத்து வைத்தியரிடம் சென்றால் கையில் சிம்புகளை வைத்து பெரும் கட்டாகப் போட்டு விட்டார்கள். வலி பின்னிப் பெடலெடுத்து விட்டது என அழுகாத குறை. அடுத்த ஐந்தாவது நாளில் மேலும் ஒரு கட்டு அடுத்த பத்தாவது நாளில் முட்டைக்கட்டு அடுத்த பத்தாவது நாளில் கட்டினைப் பிரித்து நீவி விட வலியில் கதறி விட்டார். சிங்கிரிபாளையம் வைத்தியர்கள் கைலி கட்டிக்கொண்டு பாய் மீது அமர்ந்து கொண்டு எலும்பு முறிவுகளோடு வருகின்றவர்களுக்கு சிகிக்சை அளித்து வருகின்றார்கள்.
இருபத்தைந்து நாட்களாக வீட்டு வேலை, பள்ளிக்குச் சென்று வருதல் என வேறு எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. ஒரு சிறிய நிகழ்வு ஒரு மாதம் முடக்கி விட்டது. மனிதர்களின் வாழ்க்கை என்பது இதுதான். அடுத்த நொடியில் என்ன நடக்குமென்று தெரியாத திகில் வாழ்க்கைதான். எல்லாவற்றுக்கும் தயாராக இருத்தல் வேண்டும்.
வடகிழக்குப் பருவ மழை பொய்த்து விட்டதனால் செடி கொடிகள் மரங்கள் எல்லாம் தன் பசுமையை இழந்து வெளுக்க ஆரம்பித்திருந்தன. நொய்யல் ஆற்று நீர் கொஞ்சமே கொஞ்சமாய் வடிந்து கொண்டிருந்தது. பச்சைப் பட்டாடை போல மின்னும் வெள்ளிங்கிரி மலை வெளுத்துப் போய் இருந்தது. ஆடு மாடுகளைக் காணவில்லை. விவசாயமும் சரியாக இல்லை.
ஆழ்துளைக்கிணற்று நீரை வைத்து விவசாயம் செய்ய முடியாது. ஏதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் செய்யலாம். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டார்கள். ஆனால் கடைமடைப் பகுதியான தஞ்சாவூர் பகுதிக்கு தண்ணீரே சென்று சேராமல் வயல்கள் தரிசாகக் கிடக்கின்றன. அரிசிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காவிரி நீர் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. இனி விவசாயிகளைக் கவனிக்க ஆளேது. இருந்த ஒருத்தரும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். இதற்கிடையில் கள்ளப்பணம் பிரச்சினை. இத்தனைப் பிரச்சினைகளுக்குள் மனிதன் வாழ வேண்டும்.
கவுண்டர் நண்பரின் தோட்டத்துக் கிணறு தண்ணீர் வற்றி விட விவசாயம் கருகி விட்டது. மாடுகள் தீவனமின்றி பரிதவிக்க ஆரம்பித்தன. மேலும் ஆழத்தில் தண்ணீர் எடுக்க இருந்த மாடுகளில் ஒன்றினை விற்று விட்டார். அவருக்கு அது ஒன்றுதான் வருமானம். அதுவும் இல்லையென்றால் அவரின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை.
ஒரு நாள் ஒரே ஒரு நாள் தண்ணீர் இன்றி இந்த உலகம் இருக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். உடம்பு சில்லிடும். மனிதனின் உயிர் எங்கே இருக்கிறது என்று இனி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விஷயம் அவ்வளவுதான்.