குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 26, 2015

ரத்தம் கசியும் நினைவுகளூடே உப்புவேலி

எனக்குக் காந்தி மீது ஆற்றவே முடியாத கோபம் இருக்கிறது. எனது தாத்தா மறைந்த மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி செய்தவர். அவர் வம்சத்தில் வந்தவன் என்பதால் கூட காந்தி மீது கோபம் வர காரணமாக இருக்கலாம். 

தாத்தா மலேசிய சிறையிலிருந்து இந்தியா வந்த பிறகு அவர் கூடவே கொண்டு வந்திருந்த ராணுவ சட்டையை நான் மார்கழி மாதக் குளிருக்கு அணிந்து கொள்வேன். சொரசொரப்பான மடக்குக் கத்தி ஒன்றினை அவர் இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அதுவும் ராணுவத்தில் இருந்து கொண்டு வந்ததுதான் என்பார். அதை விரிக்க என் சிறு வயதில் வலுப் போதவில்லை. 

ஒரு முறை முயற்சித்து ஆள்காட்டி விரலின் நடுவில் கத்தி பிளந்தது போல வெட்டி விட்டது. அதன் பிறகு அந்தக் கத்தியைப் பார்த்தாலே எனக்குள் விரலில் இருந்து கொட்டிய இரத்தம் நினைவுக்கு வந்து விடும். ராணுவத்தின் கத்தி என்பதை அது சரியாக நிரூபித்தது. அதன் பிறகு எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை விரித்துப் பார்க்கவே இல்லை. அந்தக் கத்தியில் ஒரு குத்தூசி போல ஒரு பகுதி இருக்கும். அதை வைத்துதான் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கும் வீரர்களுக்கு மோட்சம் கொடுப்பார்களாம். நிற்க !

இந்திய வரலாற்றுச் சரித்திரத்தில் மறைந்து போன ஒரு விஷயம் என்பதாய் ஜெயமோகன் தனது இணையதளத்தில் உப்புவேலி என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தார். எனது நண்பரிடம் சொல்லி உடனடியாக அந்தப் புத்தகத்தை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சாதாரண கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழையும் போது வளமுடன் இருந்த இந்தியாவை, ஏழை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும், கல்வியையும் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்கிற வரையில் வரலாறு சொல்லிக் கொடுத்தது. ஆனால் இந்த உப்புவேலி காட்டும் இன்னொரு முகம் மேற்கண்ட சீரழிவை விடவும் கொடூரமான ஒன்றாய் இருக்கிறது. 

உப்புக்கு வரி, அதனால் உருவான வேலி (சுங்கம்) அதனால் மாண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பிரிட்டன் இந்தியாவை ஒரு இடம் விடாமல் சீரழித்து சின்னப்படுத்தி அழித்ததை ஒரு பிரிட்டன்வாசி எழுதி இருப்பதைப் படிக்கையில் நினைவுகளில் ரத்தம் துளிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

காந்தியின் அஹிம்சை மீது எனக்கு வெறுப்பு மண்டுகிறது. அதனால் அவர் மீது எனக்கு எல்லையில்லாக் கோபம் கொப்பளிக்கிறது. அஹிம்சை என்பது கெஞ்சுவது, இறைஞ்சுவது என்ற எண்ணம் உதித்தபடியே இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உண்மை என்னை அப்படிச் சிந்திக் வைக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புதமான ஒரு நூல் “உப்புவேலி”. சிறில் அலெக்சின் மொழிபெயர்ப்பில் இந்தியாவின் வழிந்தோடிய ரத்தம் உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகள் படம் போல விரிகின்றன. எழுத்து பதிப்பகத்தின் அற்புதமான படைப்பு.