குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, September 16, 2014

நிலம் (11) - செக்குபந்தி

எனது நண்பரொருவர் விற்கிரைய உடன்படிக்கை பத்திரம் ஒன்றினைக் கொண்டு வந்து கொடுத்தார். மனை ஒன்றினை வாங்குவதற்காக அக்ரிமெண்ட் அது. படித்துக் கொண்டே வந்தேன். சொத்து விபரத்தில் மனை எண், நீளம், அகலம், செக்குபந்தி விபரமெல்லாம் வெகு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது எந்த சர்வே எண், கிராமம் என்று குறிப்பிட மறந்து விட்டார் ஆவண எழுத்தர்.

இந்த அக்ரிமெண்டிட் எழுதி வாங்கியவர் கதியை நினைத்தால் “அய்யோ பாவம்”.

ஒவ்வொரு பத்திரத்திலும் சொத்து விபரமென்பது பத்திரத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தச் சொத்து விபரத்தில் சொத்து இருக்கும் மாவட்டம், தாலுக்கா, கிராமம், சர்வே எண், சப்டிவிஷன் எண்கள், மொத்த ஏரியா, அதில் எழுதக்கூடிய டைட்டிலுக்கு கட்டுப்பட்ட சொத்தின் அளவு, அது மொத்த ஏரியாவில் எந்தப் பக்கம் இருக்கிறது என்ற செக்குபந்தி விபரங்கள் இருக்கும்.

இந்தச் செக்குபந்தியில் ஒரு முக்கியமான, அவசியமான விபரத்தை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

அந்தக் காலங்களில் பத்திரங்கள் எழுதும் போது, செக்குபந்தியில் பக்கத்து பூமியின் சொந்தக்காரர் யாரோ அவரின் பெயரைக் குறிப்பிட்டு, இவருக்குப் பாத்தியப்பட்ட பூமிக்கும் கிழக்கு, வடக்கு என்று எழுதப்பட்டிருக்கும். இந்தச் செக்குபந்தி கிராமப்பக்கம் சரியாக இருக்கும். கிராமத்தில் யார் சொத்து யாருக்குச் சொந்தம் என்று பரம்பரையாகத் தெரியும். ஆனால் நகர்புறங்களில் அது சாத்தியமில்லை. யார் யாரோ வாங்குவார்கள், விற்பார்கள். ஒவ்வொரு முறையும் பெயர்கள் மாறிக் கொண்டே இருக்கும். என்ன வழி என்று கேட்பீர்கள். இதோ அந்த வழி.

செக்குபந்தியில் சொத்து விபரம் குறிப்பிடும் போது நிலத்தின் கிழ, மேல், தென், வடல் பகுதிகளின் சர்வே நெம்பரைக் குறிப்பிட்டு விட்டால் போதும். சர்வே எண் மாறாது அல்லவா? ஆகவே இனிமேல் சொத்துக்கள் வாங்கும் போது செக்குபந்தியில் கொஞ்சம் கவனம் வைக்கவும். மனையிடங்கள் வாங்கும் போது சொத்து விபரத்தில் இன்ன சர்வே நெம்பரில் வரக்கூடிய மனை எண் என்று குறிப்பிட்டு கிழமேல், வடதென் மனைகளைக் குறிப்பிட வேண்டும்.

புரிந்து விட்டதா? 

தொடரும் விரைவில்....


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.