குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 4, 2014

நிலம் (9) மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா? தொடர்ச்சி

வெகு நீண்ட நாட்களாகி விட்டன. தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும் பணிச்சுமை அதிகமானதால் இந்தத் தாமதம். நிலம் தொடரைப் படித்து பல நண்பர்கள் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஒரு சில விஷயங்களுக்கு ஆலோசனை சொல்லலாம். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை சொல்ல இயலாது. ஏனென்றால் தகுந்த ஆவணங்கள் இன்றி ஆலோசனை சொல்வது பெரிய துன்பத்தைக் கொண்டு வந்து விடும். ஆகவே என்னை ஆலோசனைக்காக அணுகும் நபர்கள் தகுந்த ஆவணங்களை அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு ஆலோசனை கேட்கவும்.

மூதாதையரிடமிருந்து பாகமாக வந்த சொத்தினை தந்தை ஒருவர் காலமான பிறகு, அந்தத் தந்தையின் வாரிகளுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது. இந்தச் சொத்தில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு என்கிறது இந்து வாரிசுரிமைச் சட்டம். தந்தையின் ஆண் வாரிசுகளுக்கும், பெண் வாரிசுகளுக்கும் மேற்படிச் சொத்தில் முழு உரிமை உண்டு. அது தான் உண்மை என்றாலும் கூட ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.

சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு நபர் என் தங்கை என் மீது வழக்குப் போட்டிருக்கிறார். அவரின் கல்யாணத்துக்கு தந்தை தன் சொத்தை விற்று தான் செலவு செய்தார். தந்தை இறப்புக்குப் பிறகு, என் பங்குச் சொத்திலும் அவருக்கு பங்கு வேண்டுமென்று கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார் என்று கண்ணீர் மல்க பெருத்த சோகத்துடன் சொன்னார். என் தங்கை பெரிய பணக்காரி. நானோ மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். வழக்கு நடத்தக்கூட வசதியில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்ல தங்கம் என்று புலம்பினார். 

அவரின் சொத்து பத்திரங்களை அனைத்தையும் கொண்டு வரச் சொன்னேன். கொண்டு வந்து கொடுத்தார். அனைத்தையும் படித்தேன். இதுவரை நீதிமன்றங்களில் நடந்து பாகப்பிரிவினை வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தேன். அதில் ஒரு தீர்ப்பில், ஒரு கூட்டுக்குடும்பச் சொத்தை குடும்பத்தலைவர் என்கிற முறையில் குடும்பத்தின் நியாயமான தேவைகளுக்காக விற்பனை செய்தால் அந்த விற்பனை, அனைத்து பங்கு உரிமை உள்ளவர்களையும் கட்டுப்படுத்தும் என்றுச் சொல்லப்பட்டிருந்தது.

என்னிடம் வந்த நபரின் தந்தை சொத்தினை விற்கும் போது வெகு தெளிவாக தன் மகளின் பங்கினை அவரின் திருமணத்திற்காகத்தான் விற்பனை செய்கிறேன் என்று தெளிவாக எழுதியிருந்தார். அந்தப் பாயிண்டைக் குறித்து வைத்துக் கொண்டு அவரிடம் தெளிவாக, உங்கள் தங்கைக்கு உங்கள் சொத்தில் பங்கு இல்லை என்று சொன்னேன். எனது வழக்கறிஞர் நண்பரிடம் அனுப்பி ஒரே ஒரு நோட்டீஸில் பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன்.

இப்போது தெரிந்திருக்கும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதில் இருக்கும் விதி விலக்கு.


விரைவில் அடுத்த பகுதி


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.