குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 24, 2025

ஆர்.எச்.ஆர் - ரத்னவேல் அய்யா

2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி - காலை நேரம் - கோவை இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் ராயல் தியேட்டருக்கு ஒரு வேலை நிமித்தமாகச் சென்றிருந்தேன். அங்கு தான் திரு.ரத்னவேல் அய்யாவை முதன் முதலில் பார்த்தேன்.

(திரு.ரத்னவேல் அய்யா)

கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.





அடியேன் பிறந்தது ஆவணம் கிராமத்தில் என்பதால் எனக்குத் தெரிந்த தியேட்டர்கள் - வீட்டுக்கு வடக்குப் பக்கமாக - மாலையில் ஒலிபெருக்கியில் பாட்டுப் போட்டால், கேட்கும் தூரத்தில் இருந்த மாரிமுத்து திரையரங்கம் (ஆவணம்) இது ஒரு டூரிங்க் டாக்கீஸ்.

வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் தெற்குப் பக்கமாக ஆவணம் கைகாட்டியில் இருந்த ஸ்டார் தியேட்டர். 

அடுத்தாக மேற்குப் பக்கமாக வடகாடு தங்கம் தியேட்டர், கிழக்குப் பக்கமாக  திருச்சிற்றம்பலத்தில் ஒரு தியேட்டர். பெயர் மறந்து விட்டது.

பெரிய தியேட்டர் என்றால் கீரமங்கலத்தில் இருந்தது. அடுத்துப் பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் சாந்தி தியேட்டர். 

இப்படி ஊரைச் சுற்றிலுமிருந்த தியேட்டர்களில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் படம் பார்த்தது உண்டு. நண்பன் ஜஹாங்கீர் ஆலத்தின் வீட்டில் வீடியோ டெக் வந்து விட்டதால் - டிவியில் படம் பார்த்துக் கொள்வதுடன் தியேட்டரில் படம் பார்ப்பது ஓய்ந்தது.

ஒர் இரவில் இரண்டாம் ஆட்டம் பார்க்க நானும், ஜஹாங்கீரும் கைகாட்டி ஸ்டார் தியேட்டருக்குச் சென்றோம். நான் மாடியில் உட்கார்ந்து கேப்டன் பிரபாகாரன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவனைக் காணோம். படம் முடிவதற்குள் வந்து விட்டான். அவனின் ஒரு சில நண்பர்கள் அவனுக்கு பல முட்டுச் சந்து வழிகளைக் காட்டி, அப்பாதையில் சென்று - ஒருவழியாக மேலே போய் விட்டான்.

தியேட்டர்களுடனான எனது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.

நமது தமிழ்நாட்டின் தலையெழுத்து தியேட்டர்களின் மூலமாக துவங்கப்பட்டது என்ற அறிவெல்லாம் எனக்கு அந்த வயதில் கிடையாது.

அனுபவமும், கொஞ்சூண்டு அறிவும் வந்த பின்னால் தான் தெரிந்தது - தியேட்டர்கள் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கால் பாகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது. அதுதான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களமாக இருக்கிறது என்பதும்.


எம்.ஏ.குருசாமி நாடார், சின்னதாயம்மாள் ஆகியோரால் 1946 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ராயல் தியேட்டர். ஆரம்பத்தில் இது நாடகம் நடத்தும் தியேட்டராக இருந்தது என அய்யா என்னிடம் சொன்னார். தியேட்டரின் கீழே ஒரு பகுதியாம் அது. மேலே தியேட்டர் எனச் சொன்னார். என்னால் மூடிகிடந்த தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை. ரித்திக் நந்தா உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தான். இடிபாடுகளுடன் குடோனாக இருந்தது அந்த தியேட்டர். அய்யா அவர்கள் வெற்றி விழா கொண்டாடப்பட்ட பல படங்களில் ஷீல்டுகளை ரித்திக்கை எடுத்து வரச் சொல்லி காட்டினார். பெரிய பிரமிப்பாக இருந்தது. எந்தக் காலத்திலோ மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் கலந்து கொண்டு வழங்கப்பட்ட ஷீல்டுகள் அவை. அவைகளை நான் தொட்டுப் பார்ப்பேன் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அய்யாவின் அப்பா ராயல் தியேட்டர் மட்டும் ஆரம்பிக்கவில்லை, அத்துடன் ராயல் ஹிந்து ரெஸ்டாரெண்ட் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது ஆர்.எச்.ஆர் ஹோட்டல். ரத்னவேல் மற்றும் மாணிக்கவேல் ஆகிய இரு சகோதரர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது ராயல் தியேட்டர்.

காலத்தின் பாதையில் எது என்னவாகும் என்பதெல்லாம் எவராலும் கணிக்க முடியாது.  அய்யாவுடன் பேசிக் கொண்டிருந்த போது பல சினிமா பிரபலங்களைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு செய்தியும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் தகப்பனார் சினிமா பிரபலங்களுடன் கொண்ட நட்பு பெரிது. சிறிய வயதில் குருசாமி நாடார் காலமாகி விட, இவரின் தாய் தொடர்ந்து தியேட்டரை நடத்தி வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அய்யா அவர்கள் நிர்வாகத்திற்குள் வந்து விட்டார். 

இடையில் ஒரு சொருகலாக உங்களுக்கு ஒரு செய்தி : அது என்னவென்றால் செண்ட்ரல் தியேட்டர் இருக்கிறதே கோவையில். தெரியும் தானே உங்களுக்கு? அந்த தியேட்டரை எனது நண்பரொருவருக்காக விலை பேச சென்ற போது மறைந்து போன தம்பு நாயக்கரைப் பார்த்தேன். அவர் கொடுத்த ஆவணங்களில் சரோஜா தேவியும், தம்பு நாயக்கரின் தாத்தாவும் சேர்ந்துதான் இந்த தியேட்டரை உருவாக்கினார்கள் என்ற விபரம் தெரிந்தது.

நடிகை சரோஜா தேவியின் புண்ணியத்தில் கோவை மக்கள் செண்ட்ரல் தியேட்டரில் படமும், தியேட்டருடன் இருந்த அன்னபூர்ணா கேண்டினில் வடை, காப்பியும் ரசித்து, ருசித்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். இந்த அன்னபூர்ணா கேண்டீனுக்கு பால் சப்ளை செய்தவர் கவுண்டர் மச்சான்.  

அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் அவரைச் சந்தித்தேன். அய்யாவின் மகனார் குருசாமி எனக்கு நல்ல நண்பர். மிகச் சிறந்த மனிதர் அய்யாவைப் போல. தியேட்டரின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காஃபி வந்தது. குருசாமி அவர்கள் இதுவரையிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும் செவர்லே காரின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டேன். 

பின்னர் நானும், மகனும் அவருடன் காஸ்மோபொலிட்டன் கிளப்புக்கு மதிய உணவுக்காக சென்றோம். மாடியில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து கொண்டு பல கதைகளைப் பேசினோம். மகன் ரித்திக் நந்தாவுக்கு புதுப் புது உணவுகளை தருவித்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்குத் தாத்தா இல்லாத குறையை அவர் அன்று நிவர்த்தி செய்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் பார்த்த ஒருவர் மீது அவர் கொண்ட தூய அன்பினை எப்படி விவரிப்பது? தூய்மையான உள்ளமுடையவரே அவ்வாறு இருக்க இயலும்.

மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். அவர் ட்ரீடெமெண்ட் எடுக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார். மனையாளும், மகளும் மருத்துவரிடம் சென்று விட்டு, வீடு திரும்பிய வரை ஃபாலோ அப் செய்து கொண்டிருந்தார் என மனைவி சொல்லிக் கொண்டிருந்தார்.

பெரிய மனதுள்ளவர்களும், நல் இயல்பு உள்ளவர்களையும் இக்காலத்தில் பார்ப்பது அரிது. அவருக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. இன்று கோவையில் ஆர்.எச்.ஆர் கொடிகட்டிப் பறக்கிறது. அவருக்கு எப்படியாவது ராயல் தியேட்டரை மீண்டும் நடத்தி விட மாட்டோமா என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பத்தின் சூழலும், அவரின் உடல் நிலையும் அதற்கு ஒத்து வரவில்லை.

திரைப்பட விநியோகத்தில் அவர் சந்தித்த பல பிரச்சினைகள் என்னிடம் பகிர்ந்து கொண்டார். படம் எடுக்கலாம் என்ற ஆசையே போய் விட்டது. சினிமா என்பது பெரிய கடல், அதற்குள் என்னவெல்லாம் இருக்கும் எனத் தெரியவே தெரியாது. படகில் பயணிக்கலாம், தூண்டிலும் போடலாம். ஆனால் என்ன கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் விதியின் கையிலே.

சினிமாவில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்து வாழ்க்கையை இழந்தவர்கள் கோடானு கோடி பேர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு ஏலத்துக்கு வந்த கொடுமையெல்லாம் நாம் பார்த்தோம். 

எனக்கு அவ்வப்போது தரமத்தின் மீதும், அறத்தின் மீது நம்பிக்கையற்றுப் போகும். ஆனால் இதைப் போன்ற சம்பவங்கள் எனக்கு, “ நானும் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் வீடு ஏலம் என்பதற்குப் பின்னால் ஒரு தத்துவ ஆய்வு இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அய்யாவை மீண்டும் சந்திக்கும் நேரம் அமைந்தது. மீட்டிங்க் முடிந்து நானும் அவரும், மகள் மகனுடன் சிங்கா நல்லூர் ஆர்.எச்.ஆர் ஹோட்டலுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றார். மகள் நிவேதிதாவுக்கும், மகன் ரித்திக் நந்தாவுக்கும் வழக்கம் போல வித விதமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டினைச் சுற்றிக் காட்டி விட்டு, கையில் பல தின்பண்டங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்தார். 

அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மனம் அமைதியில் ஆழ்ந்து விடும். எதிர் எண்ணங்களோ அல்லது ஒரு மாதிரியான மன நிலையோ வராது. ஒரு தகப்பனார் அருகில் இருப்பது போன்று இருக்கும். எனக்கு என் தகப்பனாரின் அருகாமையும், அன்பும் கிடைக்கவே இல்லை. அதை அவரிடம் நான் கண்டேன். 

என்ன ஒரு பிரியம்? என்ன ஒரு பரிவு? என் மீதும், குழந்தைகள் மீதும்.

அவரின் அன்பு திக்குமுக்காட வைக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் மனித உருவில் கடவுளாக இருந்தார்.

அவரை இழந்தது என் வாழ்க்கையின் பெரும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் நிறைமனிதர், இறை மனிதர். 

அவரை என் வாழ்வில் சந்தித்த அந்த நாட்களும், அவருடனான நினைவுகளும் எனக்கு கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.

இனிய நண்பர் குருசாமி அவர்களுக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் என் நெஞ்சுக்குள் கல்வெட்டு போல பதிந்து இருக்கிறார். அவரின் நினைவாக கருடன் படத்தை எனது டிபி போட்டோவாக வைத்திருக்கிறேன். அவர் என்னிடம் கருடன் பற்றிய பல ரகசியங்களைச் சொல்லி இருக்கிறார்.


Wednesday, March 19, 2025

வீட்டுக்கு வந்த ரவுடிகள் - புதிய சட்ட நிறுவனம் துவக்கம்

சமீபத்தில் ஒரு நாள், காலை நேரம் ஒரு கார் வீட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். வீட்டுக்குள் வந்தனர். 

என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டவுடன், ஃபைனான்ஸ் தொடர்பாக பேச வேண்டும். அதற்காக வந்திருக்கிறோம் என்றனர்.

ஒரு கார்டைக் கொடுத்து, இந்த நம்பருக்கு அழைத்துப் பேசுங்கள் என்றார்கள். அதில் ஒருவன் ஷோபாவில் படுத்துக் கிடந்தான். இன்னொருவன் தாடியுடன் முறைத்துக் கொண்டிருந்தான். மற்றொருவன் கையில் போனைக் கொடுத்து, அவன் போனில் இருந்து பேசச் சொன்னான்.

நானே பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி - அந்தக் கார்டில் இருக்கும் போனுக்கு அழைத்தேன். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் என்னை மிரட்டி, அழைத்துக் கொண்டு போக வந்தது.

ஒரு கிளையண்டுக்கு - ரெவின்யூ ஆவணங்களை எடுத்துக் கொடுத்த வகையில் - கிளையண்டுடன் உண்டான பிரச்சினையில் கிளையண்டின் எதிரியின் சார்பாக, நான் தான் அவருக்கு எல்லா உதவியும் செய்கிறேன் எனக் கருதிக் கொண்டு வந்திருக்கின்றனர். 

அதன் பிறகு அடியேனைப்  பற்றித் தெரிந்தவுடன் வெளியேறி விட்டனர். அதுமட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து என் மீது பல புகார்களைக் கொடுத்தனர். அதையெல்லாம் சட்டப்படி எதிர் கொண்டேன் என்றாலும் இனிமேல் வாளாயிருந்தால் நன்றாக இருக்காது என முடிவு செய்து கொண்டேன். 

நேர்மையாக இருப்பதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டிய சூழல் இந்தியாவில் உருவாகி இருக்கிறது. நேர்மையற்றவர்களால் நியாயப்படுத்தப்படும் பொய்களை உடைத்து, சிதறடித்து வெற்றி பெற பெரும் போராட்டங்களை செய்ய வேண்டிய நிலையில் இந்தியா திகழ்கிறது. 

சட்டம் எல்லோருக்கும் சமமானது என்ற பொய்யை நான் இந்தச் சம்பவத்தின் மூலமாக கிடைத்த அனுபவத்தினால் கற்றுக் கொண்டேன். 

வக்கீல்கள் என்றால் என்ன? கோர்ட்டுகள் என்றால் என்ன? காவல்துறை என்றால் என்ன? அரசியல்வாதிகள் என்றால் என்ன? இப்படி பல என்ன என்ன ஆகியவற்றுக்கான பதிலை நன்கு தெரிந்து கொண்டேன். 

இப்போது சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கனடா ஆகிய இடங்களில் எங்களது சட்ட ஆலோசனை நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். அடியேன் நிறுவனத்தின் அட்வைசரி கவுன்சில் உறுப்பினராக இருக்கிறேன்.

CIVIL CASES, CRIMINAL CASES, LITIGATION DISPUTES, CORPORATE LAW, EMPLOYMENT LABOUR LAW, INTELLECTUAL PROPERTY RIGHTS (IPR), PRIVACY DATA PROTECTION, CYBER CRIME & CYBER LAW, PROPERTY DISPUTES, CONSUMER PROTECTION, DRT CASES, DRAT CASES, NCLT CASES, NCLAT CASED, PIL CASE 

மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் படியான வழக்குகளை எமது நிறுவனம் கையாளும். மிகச் சிறந்த, திறமையானவர்களுடன் இணைந்து நிறுவனம் மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறது.

உங்களுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, என்னைத் தொடர்பு கொள்ளவும். எமது நிறுவனத்தின் மூலமாக தேவையான அத்தனை சட்ட ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும்.

இந்தியா - பாரத் - ரூ

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் தொடர்ந்து “பாரத்” என்றே குறிப்பிடுகிறார், “இந்தியா” என்பதை தவிர்க்கிறார். இந்திய அரசியலமைப்பு முதல் பத்தியில் “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் சங்கமாக இருக்கும்” என்று கூறுவதால், இரண்டு பெயர்களும் சட்டப்பூர்வமானவை. 

ஆனால் “இந்தியா” என்பதை அவர் தனது பேச்சின் போது மறைக்க முயற்சிப்பது அரசியல் நோக்கமாக பேசப்படுகிறது.

சர்வதேச அளவில் “இந்தியா” என்பதே வழக்கமாகப் பயன்படுகிறது, ஆனால் “பாரத்” என்பது பாரம்பரியமான மரபை குறிக்கிறது. அவர் பாரத் என்றே சொல்கிறார். 

பிரதமர் “இந்தியா” என்பதற்குப் பதிலாக “பாரத்” பயன்படுத்தலாம் என்றால், தமிழ்நாடு முதல்வர் “௹” (தமிழ் நாணயச் சின்னம்) பயன்படுத்தும் உரிமை உண்டு. ரூபாய் சின்னம் பயன்படுத்துவது தமிழர்களின் மரபு. தமிழ் நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் - ரூபாயில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்காக அவர் ரூ எழுத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு தவறாகும்.

எதையாவது ஒன்றை எப்போதும் ஊதிப் பெரிதாக்குவது, அதன் பின் விட்டு விடுவது. பின்னர் வேறொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு பேசுவது என கடந்த 10 ஆண்டுகளாக பிஜேபியினர் செய்து வரும் தமிழர், தமிழ் துரோக அரசியலை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.

இதைத் தவறு என்று சொல்வோர் தமிழ் இனத்தின் துரோகிகள்.

#இந்தியாVsபாரத் #அரசியல்சட்டவிவாதம் #கூட்டாட்சி #மோடி #தமிழ்அடையாளம் #அரசியல்நோக்கம் #BJP #IndiaOrBharat

Sunday, March 16, 2025

ஹிந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்

இந்தக் கட்டுரையை எழுதியது முன்னால் காவல்துறை அதிகாரி. அதிகார மட்டத்தில் ஒரு சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதால் இப்பதிவினை இங்கு பதிப்பிக்கிறேன். நன்றி ஆசிரியருக்கு.

 "ஹிந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" -இதுதான் இந்திய தேசிய கல்விக் கொள்கை: 

ஒன்றிய கல்வி அமைச்சர் மிகத் திறமையாக மொழிக் கொள்கையை சில புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தம்மையும் குழப்பி மற்றவர்களையும் உண்மையான தேவையான மொழி கொள்கையிலிருந்து திசை திருப்ப முனைகிறார் என்பதே அவரது பாராளுமன்ற பேச்சு நமக்கு உணர்த்துகிறது. 

ஆனால், உண்மைகளை தமக்கு தகுந்தபடி வளைத்தும் நெளித்தும் பேசுவதில் ஆர் எஸ் எஸ் பயிற்சி பெற்றவர்கள் திறமையானவர்கள் என்பது நாடு அறிந்ததே. 

மொழிக் கொள்கை: 

இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மொழிக் கொள்கையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டும். 

1. ஒன்று பயிற்சி மொழி (medium of instruction).

2. மற்றொன்று ஆட்சி மொழி (official language).

3. இன்னொன்று தொடர்பு மொழி (link language). 

பயிற்சி மொழி (medium of instruction): 

பயிற்சி மொழி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பது உலகமே ஒத்துக் கொண்ட பயன் தரக்கூடிய உண்மை. ஏனெனில் தாய்மொழிக் கல்வியே சுய சிந்தனையை வளர்த்து அவர்களுடைய அடிப்படையான ஆற்றலை வெளி கொணரப் பயன்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. 

அப்படித்தான் ஜப்பானும் சைனாவும் மற்ற சில நாடுகளும் இன்று விஞ்ஞான வளர்ச்சியில் தாய்மொழி கல்வியால் உயர்ந்து நிற்கின்றன.

புதிய தேசிய கல்விக் கொள்கை "பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் ஒவ்வொரு மாநிலமும் மேல்படிப்பு வரை அவர்களின் தாய் மொழியைத்தான் பயிற்சி மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லவில்லை. அப்படி கூறியிருந்தால் வரவேற்று பாராட்டி ஏற்றுக்கொள்ளலாம். 

ஏனெனில் மேல்படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே எல்லோரும் கற்கு மிடத்து வேலைகள் அனைத்தும் அவர்களை விட்டு வெளியில் போகவோ மற்ற மொழி படித்து அவற்றை பிடுங்கவோ வாய்ப்பு இல்லை.

மாறாக "ஐந்தாவது அல்லது எட்டாவது வரை தாய் மொழியில் படித்தால் போதும்" என்று சொல்லுவது அம்மொழியை மறக்காமல் இருப்பதற்கு பயன்படுமே தவிர கல்வியை தாய்மொழியில் கற்று தமது அடிப்படை சிந்தனையை வளர்த்து மேம்படுவதற்கு உரியதாகாது; அம்மொழியை ஆதிக்க மொழியிலிருந்து காப்பாற்றவும் உதவாது.

ஆகவே மொழி பற்றிய இத்தேசிய கொள்கை ஆர் எஸ் எஸ் கண்டுபிடித்த ஒரு ஏமாற்று வித்தை.

அடுத்து ஆட்சி மொழி (official language): 

பல மொழிகள் கொண்ட குறிப்பாக 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்த அரசியல் சட்டத்தை கொண்ட இந்தியாவில் எம் மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது பற்றியது. 

விஞ்ஞானம் எல்லா மொழிகளையும் அவரவர் விரும்புகின்ற மொழியில் மொழி பெயர்த்து கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்ட பிறகு சில நாடுகளில் உள்ளது போல் அனைத்து தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்கினால் அது "பாரபட்சமற்ற, ஒரு மொழி ஆதிக்க மற்ற" தன்மையை ஏற்படுத்தி எல்லா மொழி பேசுபவர்களையும் சமமாக நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லும். 

அல்லது, "எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவாகவும் எல்லோருக்கும் உலகளாகப் பயன்படும் மொழியாகவும் இந்திய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அறிமுகமாகியுள்ள ஆங்கிலத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி யாக்கினால் அது மொழியால் பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் சமமாக நடத்துகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும்".

பழமொழிகள் பேசும் இந்திய மக்களை ஒன்று படுத்துவதற்கும் உலகளாவிய பலன்களை பெறுவதற்கும் ஆங்கில மொழி வழி வகுக்கும். 

நடைமுறையில் இன்று இந்தியாவில் அதுதான் உள்ளது.

ஆனால், இந்தி, சமஸ்கிருத ஆதிக்க சக்திகளால் அவ் சமநிலையைப் பங்கப்படுத்தி "22 தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி" என்று சட்டம் செய்து கொண்டு காலப்போக்கில் அவ் 'ஒற்றை மொழி' ஆதிக்கத்தை இந்தியா முழுதும் ஏற்படுத்துவதே இத்தேசிய கல்வி கொள்கை நமக்கு காட்டும் வழி.

பிறகு தருணம் பார்த்து "சமஸ்கிருதத்தை அந்த இடத்திற்கு கொண்டு வந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை சாதிகளாக பிரித்து படிப்பை மறுத்து சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாக்கி வதைத்த "சனாதன மனு சாஸ்திர' ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது" என்று திட்டமிடும் ஆர்எஸ்எஸ்ஸின் நச்சு எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 

மோடி அவர்கள் 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஓசை இன்றி சைனாவுடன் ஒரு கலாச்சார ஒப்பந்தம் இந்தியா போட்டுள்ளது. அதில் "சைனாவின் மேன்றி கலாச்சாரமும் இந்தியாவின் சமஸ்கிருத கலாச்சாரமும்" ஒப்பந்தம் போடுவதாக கூறப்பட்டுள்ளது.

இப்படித்தான் ஆர் எஸ் எஸ் ஓசையின்றி ரகசியமாக இந்தியா என்றால் அது சமஸ்கிருத கலாச்சார நாடுதான் என்று உலகத்துக்கு பறைசாற்றி வருகிறது. 

என்ன காரணமோ இவ் ஒப்பந்தம் பாரத மாதாவின் பிள்ளைகளாகிய ஊடகங்களை உறுத்தவில்லை, எதிர்க்கட்சிகளையும் எட்டவில்லை.

(சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றால் இறந்து போன அம்மொழிக்கு 1200 கோடி அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லையே.)

நம் கண் முன்னால் நடந்த உண்மை என்ன? ஏற்கனவே உத்திரபிரதேசம் உட்பட வடமாநிலங்களில் இருந்து வந்த தாய் மொழிகளை அழித்து இந்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறதே. அதே போல் தமிழ் உட்பட மற்ற மொழிகளையும் காலப்போக்கில் காணாமல் போகச் செய்து நமது கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் அழித்து சமஸ்கிருத ஒற்றை மொழி ஆட்சியை நிறுவி விடுவார்கள்தானே.

ஆகவேதான் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் ஹிந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை எதிர்த்து களத்தில் நிற்கின்றது.

அடுத்து தொடர்பு மொழி (link language): 

நமது நாடு மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மாநிலம் தமது அண்டை மாநிலங்களோடு தொடர்பு கொள்வதற்கு அண்டை மாநில மொழிகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தும். அப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்தின் எல்லை பகுதியிலே இருப்பவர்கள் 'இவர் அவர் மொழியையும் அவர் இவர் மொழியையும்' கற்று பேசி மகிழ்ந்து வருகிறார் கள்.

காலப்போக்கில் "தாய்மொழிக் கல்வியும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றலும்" இந்திய மக்களிடையே பாரபட்சமற்ற ஏற்றத்தாழ்வற்ற ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி உலக அரங்கில் தாய்மொழி கல்வியால் பல விஞ்ஞானிகளை உருவாக்கி இந்தியா உன்னதமான இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலும் ஒன்றிய அரசோடும் தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் நமக்கு பணி புரியும்.

இவ்வாறு "இந்தியாவின் மொழிக் கொள்கையை" கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொண்டு வரவில்லை. மாறாக"இந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" என்ற நச்சு எண்ணத்தில் வகுக்கப்பட்டது தான் இந்திய தேசிய கல்விக் கொள்கை.

ஆகவே ஒன்றிய கல்வி அமைச்சர் பாராளுமன்றத் தேர்தல் சில புள்ளி விவரங்களை காட்டி விளையாடும் விளையாட்டு கஸ்தூரிரங்கன் குழு கொடுத்த நச்சுக் கொள்கையை அமல்படுத்த செய்கின்ற சூழ்ச்சியேயாகும்.

தமிழக அரசின் கொள்கை "தமிழில் படிக்காமல் ஆங்கிலத்தில் படிப்பதை ஊக்குவிப்பது அல்ல. மாறாக தாய்மொழி தமிழில் எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்பதும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்பதே".

ஆனால் அதற்கு இத்தேசியக் கல்வி கொள்கை வழி வகுக்க வில்லை.

இப்பதிவில் யாருக்கும் ஐயம் இருந்தால் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன். 

இப்பதிவில் கூறப்பட்டுள்ளது தான் இந்தியாவிற்கு உகந்த "மொழிக் கொள்கை" என்று ஏற்றுக்கொண்டால் உங்கள் அனைத்து தொடர்புகளுக்கும் இதை அனுப்பி வைக்கவும். 

எஸ். இராமநாதன், ஐபிஎஸ், ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குனர்.  

(S. Ramanathan, IPS, ADGP, Rtd.)

15-03-2025.

Thursday, March 13, 2025

பொருளாதாரத்தில் முன்னேற ஆங்கிலம் அவசியம் ஏன்?

மும்மொழிக் கல்விக் கொள்கை என்பது தமிழ் நாட்டுக்கோ அல்லது வேறு எந்த மாநிலத்துக்கோ தேவையே இல்லை. இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் மும்மொழி தேவையில்லை என்பதறகான ஒரே பதில். இந்தியாவில் முதன் முதலாக ஒரிசா மா நிலம் மொழியின் காரணமாக பல போராட்டங்கள், உயிரிழப்பின் பிறகு உருவாக்கப்பட்ட முதல் மாநிலமாகும். 

வேறு பேச்சே இல்லை. மும்மொழிக் கொள்கை இந்தியை கொல்லைப் புற வழி திணிப்புக்கு வழி. ஆகையால் தேசியக் கல்விக் கொள்கை நிராகரிப்படல் அவசியம்.

அடுத்து ஆங்கிலம் வெளி நாட்டு மொழி, அதை ஏன் கற்க வேண்டுமென்பார்கள். அது தேசபக்தி இல்லை என்பார்கள். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழி. ஆங்கிலம் கற்றதால் தான் சுந்தர் பிச்சை கூகிள் தலைவராக இருக்கிறார் என்பது வரலாறு. 

இந்தியாவில் அதிக வருவாய் பெறுவதற்கான திறவுகோல் ஆங்கில மொழியே. இன்றைய உலகப் பொருளாதாரத்தில், ஆங்கிலத்தில் கல்வி கற்றவருக்கு ஹிந்தியுடன் ஒப்பிடும்போது அதிக வருவாயில் வேலை கிடைத்து, வருமானம் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழிலாளர் பொருளாதாரதில், இந்தியத் தொழிலாளர்கள் மணிக்கு தோராயமாக 1.50 அமெரிக்க டாலர் சம்பாதிக்கின்றார்கள். அதே நேரத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சக தொழிலாளர்கள் முறையே 2.50 மற்றும் 15 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார்கள்.

ஐடி, நிதி, சுகாதாரம் மற்றும் வணிக ஆலோசனை போன்ற அதிக ஊதியம் வழங்கும் தொழில்கள் ஆங்கிலம் பேசும் வல்லுநர்களை விரும்புகின்றன, இது சிறந்த வேலைகளைப் பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமையை அளிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள், தொலைதூர வேலை மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தை நம்பியுள்ளன, இது ஹிந்தி மட்டுமே பேசும் நபர்களை விட கணிசமாக அதிகம் சம்பாதிக்கும் திறனை தனிநபர்களுக்கு வழங்குகிறது. மேலும், ஆங்கிலத்தில் திறமையான வணிக உரிமையாளர்கள் உலக சந்தைகளில் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யலாம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம் மற்றும் அவர்களின் வருவாயை அதிகரிக்கலாம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது உலக வர்த்தகம் மற்றும் வெளி நாட்டு முதலீட்டுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, அங்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆங்கிலத்திறன் என்பது ஒட்டுமொத்தம் இந்தியா மட்டுமல்ல தனி நபர்களின் நிதி வளர்ச்சிக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். வேலைச் சந்தையில் வெற்றிபெற விரும்பும் எவருக்கும் ஒரு அத்தியாவசிய திறனாக ஆங்கில மொழி பேசுவது அவசியம். 

நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கிண்டலடித்திருக்கிறார். அவர் தமிழ் நாட்டில் பிறந்ததால் தான் ஆங்கிலம் கற்று, இன்று ஒன்றிய அமைச்சரவையில் கொல்லைப் புற வழியாக அமைச்சராக இருக்கிறார். இவரை எந்த இந்திய மக்களும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவர் மறந்து போனார்.

தர்மேந்திர பிரதான் கல்விக்கு நிதி தர முடியாது என்று சொல்வது அவருக்கு அழிவைத்தான் தருமே ஒழிய ஏற்றத்தை தராது. இவரைப் போன்ற பலரை தமிழ் நாடு பார்த்திருக்கிறது. தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது தர்மேந்திர பிரதான் அவர்கள் நம்பாத கடவுள். கடவுளை நம்பி இருந்தால், கடவுள் மீது நம்பிக்கை இருந்திருந்தால், தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கான பலனைத் தரும் என்று அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் அவர் கடவுள் மறுப்பாளர் போல, அதிகார வெறியில் நாடாளுமன்றத்தில் தமிழர்களை அவமதித்திருக்கிறார்.

தமிழ்க்கடவுளும், தமிழ் அன்னையும் அவருக்கான படிப்பினையைத் தந்தே தீரும் என நம்புகிறேன்.

தமிழைப் பற்றியும், தமிழர்கள் பற்றியும் அவதூறாகப் பேசும், அரசியல் நாகரீகம் இன்றி, தமிழருக்கு துரோகம் செய்த எத்தனையோ கோடானு கோடி ஆட்கள் கால வெள்ளத்தில் வேரும் வேறடி மண்ணும் இல்லாமல் அழிந்து போனார்கள். ஆனால் தமிழ் இன்றைக்கும் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தமிழுக்கும், தமிழருக்கும் பதவி வெறியினால், பேராசையினால் செய்யும் ஒவ்வொரு துரோகச் செயலுக்கான பலனை நீங்கள் அனுபவிக்கமாட்ட்டீர்கள். நீங்கள் எதற்கான பதவி வெறி கொண்டு, பேசுகிறீர்களோ, எதற்காக உழைக்கிறீர்களோ அது இல்லாமல் போகும். 

தமிழ் மீதும், தமிழர் மீதும் அனாவசியமாக கை வைப்பதோ அல்லது பேசுவதோ அழிவைத்தான் தரும் என்று வரலாறு காட்டிக் கொண்டிருக்கிறது.



ஒவ்வொரு தமிழனின் கடமை என்ன?

சினிமா பார்ப்பது, அதை கொண்டாடுவது. அதி நிச்சயமாக சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்தே ஆக வேண்டும். கொசுறாக சூப்பர் ஸ்டாரின் *பயங்கரமான* ரசிகராக இருத்தல் வேண்டும். அதைப் பலரிடமும் சொல்ல வேண்டும்.

சினிமா பாடல்கள் கேட்பது - ஒரே இசையமைப்பாளரான, அதிமேதாவியான, இளையராஜாவின் இசை இல்லையென்றால் நாமெல்லாம் அழிந்தே போயிருப்போம் என்று சொல்லியே ஆக வேண்டியது கட்டாயம். கடமையும் கூட.

ஒவ்வொருவரும் தீபாவளி, பொங்கல் நாட்களில் அவசியம் சூப்பர் ஸ்டாரோ அல்லது உலக நாயகனோ அல்லது சூப்பர் ஸ்டாரின் மருமகன் நடிக்கும் படமோ, அல்லது உலகமகா இயக்குனர்கள் என யூடியூப் தோறும் கருத்துக்களைத் தெரிவிக்கும் கருத்துக் கற்பழிப்பாளர்களின் பேச்சின்படி அந்த இயக்குனர்கள் இயக்கும் ஹீரோக்களின் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும். தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் முதற்கடமை இது. படத்தைப் பார்த்ததும் சான்சே இல்லை, அடிபோலி, அசத்திட்டாரு என மட்டுமே சொல்ல வேண்டும். 

சினிமாவில் காட்டப்பட்டும் ஸ்டைல்படி முடிவெட்டிக் கொள்ள வேண்டும், சிகரெட்டை சுண்டி விட வேண்டும். அதே ஸ்டைலை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் தமிழனே இல்லை என்று அவசியம் பிறரிடம் சொல்ல வேண்டும்.

கோவில்களில் பூசாரி பார்ப்பனரிடம் விபூதிக்கும், குங்குமத்துக்கும் அடித்துக் கொள்ள வேண்டும். அவசியமான ஒன்று நான் ஏன் கோவிலுக்குள் வந்து பூசை செய்யக்கூடாது எனக் கேள்வி கேட்கக் கூடாது.

யூடியூப்பில் ஹோட்டல் ரிவியூவ் பார்க்க வேண்டும். அந்தந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டே ஆக வேண்டும். ஒரு ஸ்டில் எடுத்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டே தீர வேண்டும். ஒரு சில லைக்குகள் அவசியம் கிடைத்திட வேண்டும்.

இப்படி இன்னும் பல.... அதுகள் என்னவென்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.


Friday, March 7, 2025

India’s linguistic heritage faces extinction Tamil Nadu leads battle for linguistic rights

மீடியா இந்தியா குரூப் மூலம்  INDIA&YOU, BIZ@INDIA, INDIA OUTBOUND, INDES, DESTINO LA INDIA மற்றும் INDIEN FUR SIE ஆகிய பத்திரிக்கைகள் வெளியாகின்றன. இந்த பத்திரிக்கையில் இருந்து மசரட் நபி என்பவர் தற்போது தமிழ் நாட்டில் நடந்து வரும் இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான எனது கருத்தைக் கேட்டிருந்தார்.

அது இந்த இணைப்பில் வெளியாகி இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

https://mediaindia.eu/society/indias-linguistic-heritage-faces-extinction/



மாநில மொழிகளை அழித்து விட்டு ஒரே நாடு, ஒரே மொழிக் கொள்கையை திணிக்க முயலும் பிஜேபி அரசின் கொள்கைக்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்தே ஆக வேண்டும். தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் பற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் - தங்கள் எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை. ஆகவே எனது கருத்தை மேலே கண்ட இணைப்பில் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறேன். படித்துப் பார்க்கவும்.

வளமுடன் வாழ்க..

07.03.2025