இந்தக் கட்டுரையை எழுதியது முன்னால் காவல்துறை அதிகாரி. அதிகார மட்டத்தில் ஒரு சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதால் இப்பதிவினை இங்கு பதிப்பிக்கிறேன். நன்றி ஆசிரியருக்கு.
"ஹிந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" -இதுதான் இந்திய தேசிய கல்விக் கொள்கை:
ஒன்றிய கல்வி அமைச்சர் மிகத் திறமையாக மொழிக் கொள்கையை சில புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தம்மையும் குழப்பி மற்றவர்களையும் உண்மையான தேவையான மொழி கொள்கையிலிருந்து திசை திருப்ப முனைகிறார் என்பதே அவரது பாராளுமன்ற பேச்சு நமக்கு உணர்த்துகிறது.
ஆனால், உண்மைகளை தமக்கு தகுந்தபடி வளைத்தும் நெளித்தும் பேசுவதில் ஆர் எஸ் எஸ் பயிற்சி பெற்றவர்கள் திறமையானவர்கள் என்பது நாடு அறிந்ததே.
மொழிக் கொள்கை:
இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மொழிக் கொள்கையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டும்.
1. ஒன்று பயிற்சி மொழி (medium of instruction).
2. மற்றொன்று ஆட்சி மொழி (official language).
3. இன்னொன்று தொடர்பு மொழி (link language).
பயிற்சி மொழி (medium of instruction):
பயிற்சி மொழி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்பது உலகமே ஒத்துக் கொண்ட பயன் தரக்கூடிய உண்மை. ஏனெனில் தாய்மொழிக் கல்வியே சுய சிந்தனையை வளர்த்து அவர்களுடைய அடிப்படையான ஆற்றலை வெளி கொணரப் பயன்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அப்படித்தான் ஜப்பானும் சைனாவும் மற்ற சில நாடுகளும் இன்று விஞ்ஞான வளர்ச்சியில் தாய்மொழி கல்வியால் உயர்ந்து நிற்கின்றன.
புதிய தேசிய கல்விக் கொள்கை "பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் ஒவ்வொரு மாநிலமும் மேல்படிப்பு வரை அவர்களின் தாய் மொழியைத்தான் பயிற்சி மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லவில்லை. அப்படி கூறியிருந்தால் வரவேற்று பாராட்டி ஏற்றுக்கொள்ளலாம்.
ஏனெனில் மேல்படிப்பு வரை அவரவர் தாய் மொழியிலேயே எல்லோரும் கற்கு மிடத்து வேலைகள் அனைத்தும் அவர்களை விட்டு வெளியில் போகவோ மற்ற மொழி படித்து அவற்றை பிடுங்கவோ வாய்ப்பு இல்லை.
மாறாக "ஐந்தாவது அல்லது எட்டாவது வரை தாய் மொழியில் படித்தால் போதும்" என்று சொல்லுவது அம்மொழியை மறக்காமல் இருப்பதற்கு பயன்படுமே தவிர கல்வியை தாய்மொழியில் கற்று தமது அடிப்படை சிந்தனையை வளர்த்து மேம்படுவதற்கு உரியதாகாது; அம்மொழியை ஆதிக்க மொழியிலிருந்து காப்பாற்றவும் உதவாது.
ஆகவே மொழி பற்றிய இத்தேசிய கொள்கை ஆர் எஸ் எஸ் கண்டுபிடித்த ஒரு ஏமாற்று வித்தை.
அடுத்து ஆட்சி மொழி (official language):
பல மொழிகள் கொண்ட குறிப்பாக 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்த அரசியல் சட்டத்தை கொண்ட இந்தியாவில் எம் மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது பற்றியது.
விஞ்ஞானம் எல்லா மொழிகளையும் அவரவர் விரும்புகின்ற மொழியில் மொழி பெயர்த்து கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விட்ட பிறகு சில நாடுகளில் உள்ளது போல் அனைத்து தேசிய மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக்கினால் அது "பாரபட்சமற்ற, ஒரு மொழி ஆதிக்க மற்ற" தன்மையை ஏற்படுத்தி எல்லா மொழி பேசுபவர்களையும் சமமாக நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லும்.
அல்லது, "எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவாகவும் எல்லோருக்கும் உலகளாகப் பயன்படும் மொழியாகவும் இந்திய மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அறிமுகமாகியுள்ள ஆங்கிலத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி யாக்கினால் அது மொழியால் பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் சமமாக நடத்துகின்ற ஒரு நிலையை ஏற்படுத்தும்".
பழமொழிகள் பேசும் இந்திய மக்களை ஒன்று படுத்துவதற்கும் உலகளாவிய பலன்களை பெறுவதற்கும் ஆங்கில மொழி வழி வகுக்கும்.
நடைமுறையில் இன்று இந்தியாவில் அதுதான் உள்ளது.
ஆனால், இந்தி, சமஸ்கிருத ஆதிக்க சக்திகளால் அவ் சமநிலையைப் பங்கப்படுத்தி "22 தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி" என்று சட்டம் செய்து கொண்டு காலப்போக்கில் அவ் 'ஒற்றை மொழி' ஆதிக்கத்தை இந்தியா முழுதும் ஏற்படுத்துவதே இத்தேசிய கல்வி கொள்கை நமக்கு காட்டும் வழி.
பிறகு தருணம் பார்த்து "சமஸ்கிருதத்தை அந்த இடத்திற்கு கொண்டு வந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை சாதிகளாக பிரித்து படிப்பை மறுத்து சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாக்கி வதைத்த "சனாதன மனு சாஸ்திர' ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது" என்று திட்டமிடும் ஆர்எஸ்எஸ்ஸின் நச்சு எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
மோடி அவர்கள் 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு ஓசை இன்றி சைனாவுடன் ஒரு கலாச்சார ஒப்பந்தம் இந்தியா போட்டுள்ளது. அதில் "சைனாவின் மேன்றி கலாச்சாரமும் இந்தியாவின் சமஸ்கிருத கலாச்சாரமும்" ஒப்பந்தம் போடுவதாக கூறப்பட்டுள்ளது.
இப்படித்தான் ஆர் எஸ் எஸ் ஓசையின்றி ரகசியமாக இந்தியா என்றால் அது சமஸ்கிருத கலாச்சார நாடுதான் என்று உலகத்துக்கு பறைசாற்றி வருகிறது.
என்ன காரணமோ இவ் ஒப்பந்தம் பாரத மாதாவின் பிள்ளைகளாகிய ஊடகங்களை உறுத்தவில்லை, எதிர்க்கட்சிகளையும் எட்டவில்லை.
(சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றால் இறந்து போன அம்மொழிக்கு 1200 கோடி அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லையே.)
நம் கண் முன்னால் நடந்த உண்மை என்ன? ஏற்கனவே உத்திரபிரதேசம் உட்பட வடமாநிலங்களில் இருந்து வந்த தாய் மொழிகளை அழித்து இந்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறதே. அதே போல் தமிழ் உட்பட மற்ற மொழிகளையும் காலப்போக்கில் காணாமல் போகச் செய்து நமது கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் அழித்து சமஸ்கிருத ஒற்றை மொழி ஆட்சியை நிறுவி விடுவார்கள்தானே.
ஆகவேதான் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் ஹிந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை எதிர்த்து களத்தில் நிற்கின்றது.
அடுத்து தொடர்பு மொழி (link language):
நமது நாடு மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மாநிலம் தமது அண்டை மாநிலங்களோடு தொடர்பு கொள்வதற்கு அண்டை மாநில மொழிகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தும். அப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்தின் எல்லை பகுதியிலே இருப்பவர்கள் 'இவர் அவர் மொழியையும் அவர் இவர் மொழியையும்' கற்று பேசி மகிழ்ந்து வருகிறார் கள்.
காலப்போக்கில் "தாய்மொழிக் கல்வியும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றலும்" இந்திய மக்களிடையே பாரபட்சமற்ற ஏற்றத்தாழ்வற்ற ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி உலக அரங்கில் தாய்மொழி கல்வியால் பல விஞ்ஞானிகளை உருவாக்கி இந்தியா உன்னதமான இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலும் ஒன்றிய அரசோடும் தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் நமக்கு பணி புரியும்.
இவ்வாறு "இந்தியாவின் மொழிக் கொள்கையை" கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொண்டு வரவில்லை. மாறாக"இந்தி இப்போது சமஸ்கிருதம் எப்போதும்" என்ற நச்சு எண்ணத்தில் வகுக்கப்பட்டது தான் இந்திய தேசிய கல்விக் கொள்கை.
ஆகவே ஒன்றிய கல்வி அமைச்சர் பாராளுமன்றத் தேர்தல் சில புள்ளி விவரங்களை காட்டி விளையாடும் விளையாட்டு கஸ்தூரிரங்கன் குழு கொடுத்த நச்சுக் கொள்கையை அமல்படுத்த செய்கின்ற சூழ்ச்சியேயாகும்.
தமிழக அரசின் கொள்கை "தமிழில் படிக்காமல் ஆங்கிலத்தில் படிப்பதை ஊக்குவிப்பது அல்ல. மாறாக தாய்மொழி தமிழில் எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்பதும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்பதே".
ஆனால் அதற்கு இத்தேசியக் கல்வி கொள்கை வழி வகுக்க வில்லை.
இப்பதிவில் யாருக்கும் ஐயம் இருந்தால் அதற்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன்.
இப்பதிவில் கூறப்பட்டுள்ளது தான் இந்தியாவிற்கு உகந்த "மொழிக் கொள்கை" என்று ஏற்றுக்கொண்டால் உங்கள் அனைத்து தொடர்புகளுக்கும் இதை அனுப்பி வைக்கவும்.
எஸ். இராமநாதன், ஐபிஎஸ், ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குனர்.
(S. Ramanathan, IPS, ADGP, Rtd.)
15-03-2025.