குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 18, 2016

ஆப்ஸ் மூலம் வரும் ஆபத்துக்கள்

ஒரு மாதமிருக்குமென்று நினைவு. ஒரு பிரபலமான ஆப்ஸ் ஒன்றினை எனது ஐபோனில் இன்ஸ்டால் செய்தேன். ஒரு மணி நேரமிருக்கும். புதியதாக ஒரு குறுஞ்செய்தியை போன் கொண்டு வந்தது. புதிய ஆப்ஸ் வழியாக ஒரு சினேக வேண்டுகோள்.  ஏற்றுக் கொண்டு அந்த முகம் தெரியாதவரிடம் சாட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்ற பிறகு அது ஒரு பெண் என்று தெரிந்தது. 

சாட்டிங்கில் இருந்தவர் திடீரென்று வீடியோ அழைப்பு கொடுத்தார். ஏற்றுக் கொண்டு பார்த்தால் அது அவரின் படுக்கை அறை. முதலில் கையை மட்டும் காட்டினார். பின்னர் கால் என்று தொடர்ந்த காட்சியில் அவர் முழு நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டேன். சிரிப்புத்தான் வந்தது. அவரிடம் கேட்டேன்.

“என்ன ஆயிற்று உங்களுக்கு? முன்பின் தெரியாதவரிடம் இவ்வாறு தன் உடம்பைக் காட்டலாமா? “

“காட்டக்கூடாதுதான், ஆனால் என் தேவையை என் கணவனால்  நிறைவேற்ற முடியவில்லையே? நான் என்ன செய்ய? “ என்று அவரொரு கேள்வி கேட்டார்.

அவரொரு மேலை நாட்டுப்பெண். கல்யாணம் ஆகி விட்டது. குழந்தைகள் இருக்கிறார்கள்.  

அவரின் இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. 

வாழ்வியல் சூழலில் ஆண்கள் சுயச்சார்பு உடையவர்கள். ஆனால் உளவியல் முறையிலும், உடல் முறையிலும் பெண்கள் சார்பு நிலை கொண்டவர்கள். காலச் சூழலின் காரணமாக பெண்களின் உள்ளக்கிடக்கையை ஆண்கள் உணர்ந்து கொள்ள தவறி விடுகின்றார்கள். பிரச்சினை வேறு மாதிரியாக வடிவமெடுத்து விஸ்ரூவமாகிக் கொண்டிருக்கிறது.

அப்பெண்ணின் பிரச்சினையை தீர்க்கவே முடியாது. எந்த வழியாக தீர்க்க முயன்றாலும், அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற உபப் பிரச்சினைகள் உருவாகி அப்பெண்ணின் வாழ்க்கையே வீணாகப் போய் விடும் ஆபத்துகள் அதிகம். இது போன்ற கணவர்களால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இந்த செக்ஸ் என்ற உளவியல் பிரச்சினை காரணமாக சின்னாபின்னமாகி விட்டது. நண்பர் ஃப்ரான்சில் வசிக்கிறார். தன் பிள்ளைகள் படிப்புக்காக குழந்தைகளையும், மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறார். வந்த இடத்தில் நண்பரின் மனைவிக்கும் யாரோ ஒருவருக்கும் தொடர்பு ஆகி அது பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எந்த வயதில் வழிகாட்டியாக பெற்றோர் இருக்க வேண்டுமோ அந்த வயதில் அந்தக் குழந்தைகளுக்கு இருவரும் அருகில் இல்லை. நண்பரும் சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கைக்கும் பணம் வேண்டுமென்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. ஆனால் யாரோ ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு உழைக்கும் நேரத்தில் மனைவிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தால் இந்தச் சூழல் வந்திருக்குமா?

உடனடியாக அந்த ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்தேன். பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்து விடும் இது போன்ற ஆபத்தான ஆப்ஸ்களை வெகு கவனமுடன் கையாள வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விட்டு விடும்.

மிக நல்ல குடும்பங்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி சிதறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிட சபலம் தீர்க்கவே முடியாத சிக்கல்களில் கொண்டு போய் தள்ளி விடும்.

போன் என்பது இப்போது மிகப் பெரிய ஆபத்தான ஒரு கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது. போனைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. இல்லையென்றால் ஆபத்துதான்.