குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, June 25, 2012

என்ன சொல்ல ஒன்றும் புரியவில்லை

பாஸ்போர்ட் ரினீவல் வந்து விட்டது. முதன் முதலில் பாஸ்போர்ட் எடுக்க ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து ஒரு வருடம் ஏமாந்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இனி என்ன பாடோ தெரியவில்லையே என்று திகிலடித்தது பாஸ்போர்ட் ரினீவல்.

அவினாசி சாலையில் இருக்கும் புதிய இடத்து பாஸ்போர்ட் ஆஃபீசுக்குச் சென்றால் அங்கு ஆன்லைனில் பதிவு செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வர வேண்டுமென்று சொன்னார்கள். ஆஹா வேலை எளிதாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட் தளத்திற்குள் நுழைந்தால் ஆரம்பித்தது வினை.

இரண்டு நிமிடம் கழித்து தான் திரை வரும். ஒரு வழியாக முதன் முதலாய் பதிவு செய்து, எல்லா விபரங்களையும் பதிவு செய்து, மீண்டும் அப்லோட் செய்தால் மாலை நான்கு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் பெறுங்கள் என்ற செய்தி கிடைக்க, மூன்று மணிக்கே இணையதளத்தை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தால் “அடேய் பயலே என்னிடமா? “ என்று எதுவுமே கிடைக்க வில்லை. இப்படியே நான்கு நாட்கள் சென்றன. எரிச்சலில் கஸ்டமர் கேருக்கு போன் செய்து விசாரித்தால் நேரிடையாகச் செல்லுங்கள் என்றார்கள்.

அப்ளை செய்த அடுத்த நாள் பாஸ்போர்ட் கையில் வந்து விட்டது. மத்திய அரசின் அலுவலகமான பாஸ்போர்ட் ஆஃபீஸ் அசத்தலாய் இருக்கிறது. அட்டகாசமான சர்வீஸ் வழங்குகிறார்கள். எல்லாமே கணிணி மயம்.

வாசலில் செக்யூரிட்டி ஒரு பெண். சுடிதாரில் மிரட்டிக் கொண்டிருந்தார். பார்க்க படு ரகளையாய் இருந்தது. அலுவலகத்தின் உள்ளே போன் சனியன் தான் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்காத சில மனிதர்களுடன் அங்கு சிலர் போராடினார்கள். அரை மணி நேரம் கூட செல் போனை அணைத்து வைக்க முடியாத அற்பங்களை அங்குதான் பார்த்தேன்.

பாஸ்போர்ட் ரினீவல் செய்ய சில டிப்ஸுகள்.

1) இருப்பிட அடையாளத்திற்கு இரண்டு ஆவணங்கள்
2) ஐடெண்டிக்கு இரண்டு ஆவணங்கள்
3) திருமணமானால் கண்டிப்பாக அஃபிடவிட்
4) கல்விச் சான்றிதழ்கள் 
5) முந்தைய பாஸ்போர்ட்

போட்டோ தேவையில்லை. அவர்களே விரல் ரேகை, போட்டோவெல்லாம் எடுத்து விடுகின்றார்கள்.

பாஸ்போர்ட் அலுவலகம் போல மா நில அரசு அலுவலகங்களும் இருந்து விட்டால் மக்கள் சிரமம் இன்றி தங்கள் வேலைகளை முடித்துக் கொள்வார்கள். அரசு செய்ய வேண்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்