குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

Thursday, February 13, 2020

நிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா? இதைக் கொஞ்சம் படியுங்க

வீடு என்பது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை. வேறு எந்தச் சொல்லுக்கும் இல்லாத விசேஷங்கள் பல உண்டு இந்தச் சொல்லுக்கு. வீடு என்பது எளிதில் கடந்து போகும் சொல் அல்ல. உணர்வு, வாழ்க்கை, வரலாறு என இந்தச் சொல்லின் பின்னால் மறைந்து கிடப்பவை அனேகம். வீடு என்பது ஒருவரின் வரலாறு மட்டும் அல்ல. சூரிய உலகில் பூமி எப்படி மனிதர்களுக்கு ஆதாரமோ அதைப் போல வீடு, ஒவ்வொரு மனிதர்களின் ஆதாரம். வீடின்றி மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. 

வீடுகளுக்கு இலக்கணம் ஒன்றே ஒன்று தான். மறைப்பு. அது பத்து அடி அளவில் இருக்கலாம். குடிசையாக இருக்கலாம். மாளிகையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது வீடு தான். வீடு முழுமை அடைவது நல்ல தகப்பன், தாய், பிள்ளைகளால் மட்டுமே. யோசித்துப் பார்த்தால் வீடு பிள்ளைகளுக்காகத்தான் இருக்கும். தான் மட்டும் வாழ ஒருவர் வீடு கட்ட மாட்டார். தன் பிள்ளைகள், மனைவிக்காக, உறவினர்களுக்காக, அந்தஸ்துக்காக என்று பல காரணிகள் இருப்பினும் பிள்ளைகள் முதல் காரணமாக இருக்கும்.

சம்பாதித்து, வீடு கட்டி வாழ்வது என்பது சமூக அந்தஸ்து என முன்னாட்களில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாற மாற வீடு மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கின்றது.

பொருளாதாரத்தை முன்வைத்து சமூக அந்தஸ்து இப்போது முன்னிலைப் படுத்தப்படுகிறது. வல்லவர்களை முதன்மை மனிதர்களாக கருத ஆரம்பித்திருக்கிறது சமூகம். அவர்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் சரி, அது பற்றிய பிரக்ஞை சமூகத்தின் பால் பெரிதாக எடுபடுவதில்லை. பணம் இருந்தால், அவன் உயர்ந்தவன் என கருத ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற மனிதர்கள் தங்கள் நல்லியல்புகளை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். நல்லியல்புகள் மறைய மறைய, சமூகத்தில் குற்றங்களும், அக்கிரமங்களும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. பிறரின் வார்த்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை, சந்தோஷத்தை இழப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன் மட்டுமே.

மனிதர்கள் எப்போதும் தன் வயத்தில் சிந்திப்பது இல்லை. யாரோ ஒருவரின் சிந்தனைக்கு உட்பட்டு தான் தனது செயல்களையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்து தனக்கான வாழ்க்கையை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்க முடியும். கட்டுப்பாட்டை மீற வேண்டுமானால் பெரும் தனக்காரனாக இருந்தால் தான் சாத்தியமாகும். இப்படியான சூழலில் ஒருவன் வீடு கட்டி வாழ்வது என்பது எதன் அடிப்படையில் என்றொரு கேள்விக்கு விடையைத்தான் கீழே எழுதி இருக்கிறேன். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தம். மன்னர் கட்டிய கோட்டைகள் சிதிலமடைந்து கிடப்பது கண்முன்னாலே இருக்கும் சாட்சி. இதை மறந்து விடாதீர்கள். என்றைக்கும் இது உங்கள் நினைவிலிருக்க வேண்டிய உண்மை.

எனது அனுபவத்தில் ஒருவரின் வீடு பற்றிய சம்பவத்துக்கு வரலாம்.

சமீபத்தில் எனது நண்பரின் வேண்டுகோளுக்காக விற்பனைக்கு வந்திருக்கும் வீடு ஒன்றினைப் பார்வை இடச் சென்றிருந்தேன். வீட்டின் உரிமையாளரை வரச் சொல்லி இருந்தார் நண்பர். வீடு அல்ல அது. மாளிகை. ஒவ்வொரு சதுர அடியையும் செதுக்கி இருந்தார் உரிமையாளர். 

இது என் அறை, இது மகனுக்காக, மகள்களுக்காக என அவர் காட்டிய ஒவ்வொரு அறைகளிலும் பணம் கொட்டப்பட்டிருந்தது. நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அந்த வீடு தூசு படிந்து காணப்பட்டது. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் வசிக்க மகனும் மகளும் மறுத்து விட்டார்கள். 

என் ரசனை வேறு, அப்பாவின் ரசனை வேறு என்றுச் சொல்லி வேறு வீடு கட்டிச் சென்று விட்டார்கள். கோடிகளைக் கொட்டி யாருக்காக கட்டினாரோ அவர்களுக்கு அந்த வீடு பிடிக்கவில்லை.  மனைவிக்கோ இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டி மாளவில்லை என சலிப்புத் தட்டி விட, அவரின் கனவு வீடு அவரின் முன்னால் நின்று சிரித்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இப்போது விற்பனைக்கு வந்து விட்டது. அவர் அந்த வீட்டின் மீது கொண்ட அன்பு, ஆர்வம் விலை சொல்லும் போது கண்ணீராக வழிந்தது.

நான் வேறு, என் கனவுகள் வேறு. என் வாரிசுகளின் கனவு வேறு தங்கம். இதைப் புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகாலம் பிடித்து விட்டது. இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டியதற்கான செலவில் பாதியை வங்கியில் வைத்திருந்தால் இன்றைக்கும் ஏதாவது கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருக்கும். அறிவு அப்போது வேலை செய்யவில்லை. உணர்ச்சிதான் என் அறிவை மழுங்க அடித்து விட்டது என்றார். 

இன்றைய காலத்தில் பொருளாதாரத்தை மிகத் துல்லியமாக கணித்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. படாடோபம் அழிவைத் தரும். சேமிப்பு நிம்மதியைத் தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். முதலீடு என்பது எதிர்காலத்தில் வளர்ந்து இருக்க வேண்டும்.

வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு அவ்வீடு, முதலீட்டில் 4 சதவீதம் கூட சம்பாதித்து தருவதில்லை என்பது புரிவது இல்லை. புதிய வீடு பழைய வீடாகும், செலவுகள் வந்து கொண்டே இருக்கும் என்று புத்திசாலிகளுக்குப் புரியும். அக்கிரமம் செய்து சம்பாதிப்பவர்களின் கதை வேறு. அவர்களின் கதையே வேறு. பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களைப் பற்றி இங்கு சொல்கிறேன். வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அது 20 பர்செண்டேஜ் லாபம் தருமென்றால். முதலீடு குறைவாக இருத்தல் அவசியம், அந்த முதலீட்டின் மூலம் வரக்கூடிய வருமானம் நிறைவானதாக இருக்க வேண்டும். 

அதற்கு என்ன செய்யலாம் என இனி எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்காக வீடு கட்ட வேண்டும். அவ்வீடு நீங்கள் அர்த்தத்துடன் வாழ்வதற்காக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செலவுகள் வந்து மிரட்டுவதாக இருக்க கூடாது. கடன் வாங்கி வீடு கட்ட கூடாது. எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் வீடு கட்டவே கூடாது என்று பல கூடாதுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு கூடாதுகளைக் கருத்தில் கொண்டு வீடு கட்டினால் மிகச் சந்தோசமாக வாழலாம். அது சாத்தியமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முடியாதது என ஒன்று இவ்வுலகில் உண்டா? டீக்கடைக்காரர் நாட்டை ஆளும் காலம் இது என்பதை மறந்து விடாதீர்கள். அவர் முடியாது என்று நினைத்திருந்தால் பிரதமராக முடிந்திருக்குமா?

பல முடியாதுகளை முடியும் என்ற கனவுகளோடு நாங்களும் உங்களுடன் பயணிக்க இருக்கிறோம். வீடு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. 

காலங்கள் மாற மாற வீடும், அதைப் பற்றிய தேவைகளும் மாறக்கூடும். ஆனால் மனிதர்கள் என்றைக்கும் அதே ஆசா பாசங்களுடன், தேவைகளுடன் தான் பிறக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  மனிதர்களின் மாறாத அந்தக் குணங்களுடன் இயைந்து வீடு இருப்பின் அதை விட சந்தோஷம் வேறொன்றும் இருக்காது அல்லவா?

வாழ்க வளமுடன்....!

Friday, February 7, 2020

இறகா? சிறகா?

கோவை, சிவானந்தா மில் சாலையில் வாகனங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் இருந்த கீரைத் தோட்டம் காணாமல் போய், பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இடங்கள் வெப்பத்தால் சுடுகிறது. 

மூன்றாவது தெருவின் மூலையில் அழுக்கேறி கிடக்கும் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவை உண்டு, அவ்விடத்திலேயே தங்கி ஒரு நாய் சில குட்டிகளை ஈன்று வளர்த்து வருகிறது. தாய் நாயின் உடம்பெல்லாம் வங்கு பிடித்தது போல இருக்கும். ஆனால் குட்டிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு. வீட்டில் ஏற்கனவே இரண்டு லேப்ராடர்கள் இருப்பதால் இவைகளுக்கு இடம் கொடுக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது. அம்மணி ஓகே சொல்லனும்.

தினமும் அக்குட்டிகளை பார்ப்பது வாடிக்கை. 

காலை ஒன்பதரை இருக்கும். அத்தெருவினைக் கடக்கும் போது சிறு செவலைக் குட்டி, வாலை ஆட்டியபடி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் மேரி பிஸ்கட் கட்டு ஒன்றினைப் பிரித்து, கால்களால் புற்களைச் சமப்படுத்தி, அதன் மேல் வைத்தார். 

“இந்தா, சாப்பிடு” என்றார்.

அச்சிறு குட்டி, வாலை ஆட்டிக் கொண்டு, அவசர அவசரமாக பிஸ்கட்டுகளை விழுங்கியது. அவர் குட்டையாக இருந்தார். நெற்றியில் விபூதி பூசி இருந்தார். கண்களில் கருணை. அக்குட்டி பிஸ்கட் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்தேன். மனதுக்கு இதமாய் இருந்தது. 

ஜீவகாருண்யம். உலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உணர்ச்சி.

சக உயிர்களின் மீதான கருணை எல்லோருக்குள்ளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் தெய்வமாய் வணங்கப்படுகிறார். எத்தனை எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் துயரப்படுபவர்களுக்கு பொருளாகவும், பணமாகவும் கொடுக்கிறார்கள். பிறரின் துயரம் கண்டு உள்ளம் துடிப்பவர்கள் மனிதர்கள். கண்டும் காணாது செல்பவர்கள் மிருகங்கள்.

ஆந்திராவில் ஒரு ஏழைப் பாட்டி ரூ.2.50க்கு தோசை கொடுக்கிறது. கோவையில் சாந்தி கேண்டீன் 10 ரூபாய்க்கு அறுசுவை உணவு கொடுக்கிறது. அவர் பணத்தைப் பார்த்து விட்டார். புகழையும் அடைந்து விட்டார். இவை எதுவும் அவருக்கு எதையும் தரப்போவதில்லை. பணக்காரர்களிடம் பெயரும், புகழும் பெற்றதனால் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. சாந்தி கேண்டீன் சண்முகம் அவர்களுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருப்பது ஜீவகாருண்யம்.

கலெக்டரிடம் பல ஹோட்டல்காரர்கள் புகார் கொடுத்தனராம். ”விலை குறைத்து தான் கொடுப்பேன், விலை இல்லாமலும் கொடுப்பேன் , அது என் விருப்பம்” எனச் சண்முகம் சொன்னதாகச் செவிவழிச் செய்தி. ஜீவகாருண்யத்தையும் அரசாங்கம் தடுக்கும் என்பது நிதர்சன உண்மை.

மீண்டும் ஒரு ஹோலோஹாஸ்ட்டை (ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய வதைக்கூடம்) உருவாக்க நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை காலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. கலிபுருஷன் அழிவு நடனம் ஆடுகிறான்.

(இன்று உலகையே வேவு பார்க்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களின் மூதாதையர்களான ஜூவிஸ்கள் இவர்கள். இவர்களைப் படுகொலை செய்த மாபெரும் தலைவர் ஹிட்லர்)

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அனைத்து உலக நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன. இலங்கையில் குருடூ ஆயில் இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு இருக்கும். நேச நாடுகள் போர்ப்படைகளை அனுப்பி இருக்கும். ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கும். ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் உலக நாடுகளும், பத்திரிக்கையாளர்களும், அமைப்புகளும் கதறி இருப்பார்கள். அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் உலகமே வாளாயிருந்தது. வேடிக்கை பார்த்தன. தமிழும், தமிழர்களும் உலகில் வாழவே முடியாத, கூடாத உயிரினமாக மாறிக் கொண்டிருக்கிற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.



(இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைகள்)

சமையற்கட்டில் இன்று அடியேனுக்கு காய்கறிகள் நறுக்கும் வேலை இல்லை. காலையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த ’ரேமண்ட் கார்வரின்-இறகுகள்’ சிறுகதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  இட்லியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தக்காளிச் சட்னியும் சாப்பிட்டு விட்டு (எவன் இந்தத் தக்காளியைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் தக்காளி, தக்காளி. இது இல்லாத உணவு இல்லையென்று ஆகிவிட்டது) படுக்கையில் படுத்துக்கொண்டே கதையை  படிக்க  ஆரம்பித்தேன்.

உள்ளூர் சரக்கே விற்பனை ஆகவில்லை, இதில் வெளி நாட்டுச் சரக்கை எங்கே விற்பது என்பார்கள். அடியேனுக்கு வெளி நாட்டு நாவல்கள், சிறுகதைகள் மீது ஈர்ப்பே இருந்ததில்லை.

தமிழக எழுத்தாளர்கள் பெண்களின் கவட்டிக்குள்ளிருந்தும்,  ஜாதிய புனைவுகளிலுருந்தும், ஏழைப் புனைவுகளில் இருந்தும் வெளிவராத நிலையில், வெளி நாட்டுக்காரர்கள் புதிதாக என்ன எழுதி இருக்கப்போகின்றார்கள் என்ற நினைப்பு.

ஏனோ தெரியவில்லை இன்றைக்கு வெளி நாட்டு எழுத்தாளரின், அக்கதையைப் படித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. படித்து முடித்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. இதற்குள் மனைவி, “என்னங்க, என்ன யோசிக்கிறீங்க? என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொன்னிறக்கூந்தல் ஃபிரானும், அவள் கணவன் ஜேக்கும், தன்னுடன் வேலை செய்யும் பட்டின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். பட்டின் மனைவி ஓலா. ஃபிரானுக்கும் ஜேக்கிற்கும் குழந்தை இல்லை. பட் வீட்டில், பட்டின் அவலட்சனமான குழந்தை ஹெரால்டை இருவரும் பார்க்கிறார்கள். வீடு திரும்பிய பிறகு ஃபிரானும் ஜேக்கும் கலவி கொள்கிறார்கள். குழந்தையோடு வாழ்கிறார்கள். அதன் பிறகு ஜேக் பட்டின் வீட்டிற்குச் செல்லவில்லை. ஜேக்கும், பட்டும் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அக்கதையில் வரும் ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.

”பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து சென்ற அது, அப்புறம் காணவேயில்லை, திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான் போகிறான், பார்த்துக்கொண்டேயிரு,” என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவதென்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

(நன்றி:காலச்சுவடு, ரேமண்ட் கார்வர், ஜி.குப்புசாமி)

இக்கதையில் வரும் ஜோயி என்கிற மயில் ஹெரால்டோடு விளையாடும். கருப்பு கலரில், கைப்பெருசில், அவலட்சமான குயிலுக்கு இனியகுரலைக் கொடுத்த இறைவன், அழகிய நீண்ட தோகைகளை விரித்தாடும் போது, காண்பவரின் உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் அழகின் உருவமான மயிலுக்கு கர்ண கடூரமான குரலைக் கொடுத்திருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு? இயற்கைப் படைப்பின் ரகசியம் அது.

அவலட்சனமான குழந்தையின் தகப்பனான பட்டிடம் ஜேக், ஹெரால்டைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்க்க நினைக்கிறான். பட்டிற்கு ஹெரால்ட் மகன். அவலட்சணமானவன். இருப்பின் அவன் மகன்.

அவர்களுக்குள்ளான தயக்கங்கள் அழகு பற்றிய உளவியல் பிரச்சினையாக இருக்கிறது. ஜேக்கின் மன நிலையும், பட்டின் மன நிலையையும் என்னுள் உணர முடிந்தது. அதை நிகழ்த்தியது இறகுகள் கதை. வெறும் வார்த்தைகள் தான். ரேமண்ட் படிப்பவரின் மனதுக்குள் கதை மாந்தர்களின் உள்ளத்தை உணர வைத்திருக்கிறார். நீண்ட நேரமாக நானும் பட்டைப் போலவும், ஜேக்கைப் போலவும் உணர்ந்தேன்.

திடீரென இறகுகள், சிறகுகள் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன என எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது.

ஆமாம், பறவைகளுக்கு இருப்பது இறகா? சிறகா? எந்த வார்த்தைச் சரி?

உங்களுக்குத் தெரியுமா?

* * *

விடை : சிறகு - இறகுகளின் தொகுதி