குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 31, 2008

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புத் தலைவி. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திராகாந்தி அவர்கள் இறந்து விட்டார் என்று பள்ளியில் விடுமுறை விட்டார்கள். ஆனால் நாளை காலை அவசியம் அனைவரும் வந்து விட வேண்டுமென்று உத்தரவு.

மறு நாள் காலை ஆஜர். என் மூன்று சக்கர வண்டியில் இந்திராகாந்தி அவர்களின் புகைப்படத்தை முன்புறம் இணைத்து மாலைகள் போட்டு, வண்டி முழுவதும் பூக்களால் தோரணம் அமைத்தார்கள். வண்டிக்குள் நான். வண்டியைத் தள்ள இரு தோழர்கள். என் பின்னால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அணி வகுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஊர்வலம் சென்றது. வழியில் யார் யாரோ சாலையில் விழுந்து கும்பிட்டார்கள். ஊர்வலத்தை எங்கள் ஊர் கடைத்தெருவில் முடித்தோம். நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியே என் பின்னால் வந்தது அல்லவா. மாலையில் இந்திராக் காந்தி அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி குளத்தில் குளித்து விட்டு வந்தது எங்கள் ஊர்.

வாழ்ந்தால் அவர் மாதிரி வாழனும். மக்கள் இந்திராக்காந்தி அவர்களின் மேல் காட்டிய அன்பினை நினைத்தால். எங்கோ ஒரு பட்டிக்காட்டு மக்கள் அவர் மீது காட்டிய வெறித்தனமான பாசம்.. மனிதர்கள் பாசத்தால் கட்டப்பட்டவர்கள்.
இப்பதிவை எழுத காரணமாயிருந்தவர் : திவ்யா. நன்றி திவ்யா.

Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

Tuesday, October 28, 2008

நான்ஸி அஜ்ரமின் பாடல் எம்பி3 வடிவில்...

நான்ஸி அஜ்ரமின் பாடலைக் எம்பி3 வடிவில் கேட்க.... கேட்க......

கடவுளின் மொழி:நான்ஸி அஜ்ரம்:சாரு நிவேதிதா

என் இனிய நண்பர், எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்று காலையில் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.

”தங்கம், அடுத்து வரும் கட்டுரைக்கான பாடல் தொகுப்பு இவைகள். அதற்கான வேலைகளை ஆரம்பிக்கின்றீர்களா ?”

எண்ணிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். அட நொக்காமக்கா, இன்னிக்கு பெண்டு நிமிரப் போகுது என்று நினைத்தபடி, பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன்.
நான்ஸி அஜ்ரமின் இந்தப் பாடலைக் கேட்டேன். மெய் மறந்தேன். செல் போன் ரிங்காகி விட்டது இந்தப் பாடல். அண்ணனைக் கூப்பிட்டு போனுக்கு ரிங்க் பன்னுங்கள் என்று சொன்னேன். நான்ஸி அஜ்ரம் பாடினாள். காற்றில் மிதந்தேன். மிதந்தேன்...

பசி மறந்தோடியது. குளிக்கும் அறைக்குள் நுழைந்தேன். என்னைச் சுற்றி சுற்றி நான்ஸி அஜ்ரமின் குரல்கள் ஆரவாரித்தன.

குளியலை அரைகுறையாக முடித்து விட்டு வெளி வந்தேன். மனைவி புரூட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

”எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிய படி கணிணி அறைக்குள் நுழைந்தேன்.

”ஏங்க, பைத்தியம் பிடிச்சிருச்சா உங்களுக்கு“ என்றாள்.

சிரித்தேன். நான்ஸி அஜ்ரமின் குரலைக் கேட்க கேட்க என்னை மறந்தேன். இதோ நான்ஸி அஜ்ரம் தன் காதலனுக்காக பாடிக் கொண்டிருக்கிறாள்.

பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். சாரு அவர்களுக்கு நன்றி...

Sunday, October 26, 2008

நேரமாகிக் கொண்டிருக்கிறது !!!!

எவ்வளவோ ஆசைகள்...
என்னென்னவோ விருப்பங்கள்...
இதனிலும்
படிக்க பல மணி நேரம்...
வேலைக்காக பல மணி நேரம்..
ஆன்மீகத்துக்காக பல மணி நேரம்..
மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக,
நண்பனுக்காக என்று பல மணி நேரம்...
இப்படி எத்தனையோ மணித்துளிகள்
பிறருக்காய்...
எனக்கான நேரம் வந்த போது,
என் வாசலில்
மரணம் வந்து நின்றது....

ஆகையால், எனக்கான நேரத்தில்
என்னை வாழவிடு விதியே....
நேரமாகிக் கொண்டிருக்கிறது.......

Thursday, October 23, 2008

Survival of fitness

எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.

மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.

எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.

ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.

“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.

இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.

ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.

Wednesday, October 22, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 2

எனக்கு மக்களைப் பற்றியும் அவர்களின் பார்வைகள் பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை. காசே இல்லை என்றால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள். காசு பணம் வந்தால் கொள்ளை அடிக்கிறான் என்பார்கள். இவர்களின் பார்வை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை போல இருக்கும். இந்த மக்களால் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பள்ளியில் படித்த போது முதல் மார்க் வாங்குவேன். எனக்கும் என் மச்சானுக்கும் தான் போட்டி. மாலையில் டியூசன் முடித்து மூன்று சக்கர வண்டியில் முக்கி முனகியபடி வருவேன். அந்த நேரம் பார்த்து கடையில் வெறும் வாய் மெல்ல வருபவர்கள், ”ஏண்டா, உன் மாமனை கடை கன்னி வச்சுத் தரச்சொல்லி சம்பாதிக்கலாம்ல. எதுக்குடா, எங்க பையனுவ படிப்பையும் சேர்த்துக் கெடுக்கிறே” என்பார்கள். இவர்கள் எல்லாம் என்மீது கோபம் கொண்டவர்கள். இவர்களின் பையன்கள் முதல் மார்க் வாங்க முடியவில்லை என்று தனக்குள் கருவிக் கொண்டு சொல்லால் குளவியாய் கொட்டும் உன்மத்தர்கள். மாமனும், மச்சானுமே முதல் மார்க்கும் இரண்டாம் மார்க்கும் எடுத்தா நம்ம பயலுக எப்படி முதல் மார்க்கு எடுக்கிறது என்ற ஏக்கம். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் எனக்குள் வன்மம் எழும். முறைத்து விட்டு இன்னும் வேகமாக சைக்கிளைச் சுற்றுவேன்.
கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் செல்ல மூன்று பஸ் மாற வேண்டும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டின் ஆரம்பத்தில் நிற்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி எச்சிலும், கோழையும் துப்பி காய்ந்து கிடக்கும் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை இழுத்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் என்னைப் பார்த்ததும், ”டேய் உனக்கு அறிவில்லை. இதே எழவா போச்சு. வேற பஸ்ஸைப் பாரு” என்றார். கண்டக்டரை கர்ண கடூரமாக முறைத்தேன். அதே சமயத்தில் ஒரு முக்காடு போட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் 25 பைசா காசை கையில் வைத்தார். அவர்களை என்னதான் செய்வது ? அவர்களைப் பொறுத்த வரை அது உதவி. ஆனால் அது எனக்கு என் தன்மானத்துக்கு விடப்படும் சவால். அந்த அம்மாவிடமே காசை திரும்பக் கொடுத்து வேண்டாம் என்று மறுத்தேன். அது என் முகத்தையே உற்று உற்றுப் பார்த்தபடி வந்தது. கண்டக்டர் அருகில் வந்து மன்னிக்கவும் என்றார். மன்னிப்பாம் மன்னிப்பு. என்னாங்கடா ஒருத்தனை கேலி பண்ணி அவனிதயத்தை குத்தி கிழித்து விட்டு மன்னிப்பாம். புண்ணாக்கு. இவனுகளை நிக்க வச்சு பழுக்க காய்ச்சிய கடப்பாரையை குண்டியில சொருகனும் போல வன்மம் வரும். ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யக்கூட திராணியில்லாதவர்கள். கொலை செஞ்சா அந்த நிமிடத்தோடு வலியும் போகும் உயிரும் போகும். ஆனால் இதயத்தைக் கிழித்தால் சாகும் வரை அல்லவா அந்த வலி இருக்கும்.

இதையாவது ஒரு வழியா மன்னிக்கலாம். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே ரத்தம் கொதிக்கும். மிகப் பெரிய ஹோட்டலில் மூன்று நாள் வாசம். நானும் நண்பரும் ஒரு பெரிய பிசினஸ் சம்பந்தமாக வந்து பேச்சு வார்த்தையெல்லாம் முடித்து விட்டு ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்டில் பத்து லட்சரூபாய் காரில் வந்து இறங்கினோம். என்னை இறக்கி விட்டவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். பஸ்ஸில் ஏற இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள்ளாக காரில் வந்த ஒரு மகாத்மா ஒரு ரூபாய் காசை என் மீது விட்டெறிந்தார். எனக்கு அது சகஜமான நிகழ்ச்சி. என் நண்பருக்கோ கோபம். காசை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டாப் என்று கத்தினார். கார்காரர் என்னவோ ஏதோவென்று நிறுத்த அவரிடம் சென்ற என் நண்பர், “ஏன்யா அவர் உன்னிடம் காசா கேட்டார்” என்று சொல்லி முறைத்து விட்டு வந்தார். கார்காரர் ”சாரி” கேட்டார். என் நண்பருக்கு படபடப்பு அடங்க வெகு நேரமானது.

இப்படிப்பட்ட மனிதர்களால் சில நேரங்களில் தன்மானம் கிழித்தெறியப்படும் போது உள்ளுக்குள் சமூகத்தின் மீது வன்மம் பற்றி எரியும். அது தவறு என்று இப்போதைய மனநிலை சொல்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எழும் மனநிலை அதை உணருமா ? கொதிக்கும். இப்போது நான் எவரின் மீதும் வன்மம் கொள்வதில்லை. காரணம் வாழ்க்கை. எனக்குள் இருக்கும் வன்மம் இன்று ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. மகிழ்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியைப் பெறலாம். துன்பத்தைக் கொடுத்தால் துன்பத்தைப் பெறலாம். இது தான் மனித வாழ்வின் அடி நாதம். ஆனால் யாரும் அதை உணருவதாய் இல்லை. அதைப் பற்றி எனக்கும் கவலையும் இல்லை.

கதை எங்கேயோ சென்று விட்டது. என்ன செய்வது சில நேரங்களில் இப்படியும் ஆகிவிடும். சாலை ரிப்பேர் செய்யப்படுகிறது மாற்று வழியில் செல்லுங்கள் என்ற போர்டினைப் பார்த்து மாற்று வழி மூலமாக சேருமிடம் போவோமில்லையா அதைப் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெகு ஆழமான பகுதி. ஓரத்தில் மீன்கள் துள்ளிக் குதித்தன. பார்க்கும் போது பரவசமாய் இருந்தது. என் இதயமே துள்ளிக் குதித்ததாய் கற்பனை கரைபுரண்டோடியது. தம்பி “அண்ணே, மான் பாரு “ என்றான். பார்த்தேன். சிறையில் மான். வாழ்க்கைக்குள் மனிதன். இரண்டும் பொறுந்தி வருவதாய் தோன்றியது.
இயற்கையைச் சுற்றிப் பார்க்க வந்து விட்டு, புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..................

Tuesday, October 21, 2008

ஊட்டி சென்று வந்த கதை 1

சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் அழைப்பு. நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன். ஊட்டி போகனும். கார் ரெடி பண்ணி வை என்றான். கூடவே அவன் அம்மணியும் வருவதாகச் சொன்னான்.

கோவையில் டிராவலிங் கம்பெனியில் கார் வாடகை பேசினேன். நாள் ஒன்றுக்கு 800 ரூபாய். 12 மணி நேரக் கணக்காம். கிலோ மீட்டருக்கு 6.50 ரூபாய். ஏசி என்றால் ஒரு ரூபாய் அதிகம். டிரைவருக்கு நாள் ஒன்றுக்கு 150 மற்றும் சாப்பாட்டு செலவு நம்முடையது. ஆக நாள் ஒன்றுக்கு 1600+150+100 சேர்த்து 1850.00ரூபாய். அதை விடுத்து கிலோமீட்டருக்கு காசு வேறு. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2250.00 ரூபாய் தனி. மூன்று நாட்கள் 5550ம் 2250ம் சேர்த்தால் 7800 ரூபாய் காருக்கு மட்டும் செலவாகும். அசந்து விட்டேன். அட நொக்கா மக்கா, இங்கே இருக்கும் ஊட்டிக்குச் சென்று வர மூன்று நாளுக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாயா ?

எனது நண்பர் வேறொரு கார் கம்பெனியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கார் கம்பெனியில் வாடகைக்கு கார் எடுத்த விபரத்தைக் கீழே பார்க்கவும். இதயமே நின்று விடும். படித்துப் பாருங்கள். டிராவலிங்க் கம்பெனிகள் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் கார் கம்பெனியில் கார் எடுக்க வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நம்பர் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.

டாட்டா இண்டிகோ, ஏசி கார். நாள் ஒன்றுக்கு (24 மணி நேரம்) 1450 ரூபாய் வாடகை. டீசல் செலவு நம்முடையது. கார் வரும்போது டீசல் நிரப்பி வரும். காரை விடும்போது டீசலை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிரைவர் பேட்டா, சாப்பாட்டு செலவு கிடையாது. இது தான் நான் வாடகை பேசி எடுத்த காரின் வாடகை விபரம். முதல் நாள் பத்தரைக்கு கிளம்பி மூன்றாம் நாள் நான்கு மணிக்கு வீடு திரும்பியதால் வாடகையும் டீசலும் சேர்த்து ஊட்டிக்குச் சென்று வந்த கார் செலவு 3995.00 ரூபாய். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் மிச்சமானது.

தம்பியும் அவன் மனைவியும் விடிகாலையில் வீட்டில் ஆஜர். டேய் கிளம்புடா என்றான். அடேய் விளங்காத பயலே.. உனக்குதானடா ஹனிமூன் டிரிப். தனியாப் போயிட்டு வா என்றேன். முடியாது என்று மறுத்து விட்டான். சப்ளையர் ஒருவர் மதியம் பதினொன்றரைக்கு சந்திக்க வருவதாக கூறியிருந்தார். எல்லாம் சொல்லிப் பார்த்தேன். முடியாது என்று மறுத்துவிட்டான். மகள், மகன், மனைவி, தம்பி, தம்பி மனைவியுடன் ஊட்டிக்குப் பயணம்.

வழியில் டீ கூட குடிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டிவிடுமென்று தம்பி தடுத்து விட்டான். இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். மிகவும் நல்ல ஹோட்டலாக செல்லுங்கள் என்று டிரைவரிடம் சொன்னேன். அவர் சென்ற இடம் ஹோட்டல் நஹர். காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள். எனக்கு தயிர்சாதம் கட்டி வாருங்கள். காரிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். தம்பி விடவில்லை. காரின் பின்புறம் டிக்கியில் மடித்து வைத்திருந்த சக்கர நாற்காலியினை எடுத்து வந்து உட்கார வைத்து ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.நான் எங்கும் செல்வது கிடையாது. காரணம் என் உடல் பிரச்சினை. முடிந்த அளவுக்கு மறுத்து விடுவேன். சாருதான் என்னை முதலில் வெளிக் கொணர்ந்தவர். ஒரு நாள் சாரு என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தங்கம், வீல்சேர் இருக்கிறதா உங்களிடம் என்று கேட்டார். இல்லை சார். நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றேன். அடப்பாவி என்று அதிர்ந்தார். இதை அவர் நண்பர் நிக்கியிடம் சொல்லி இருக்கிறார். அவர் உடனே செக்கை நீட்டியிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் மனுஷ்யபுத்திரனிடமிருந்து சக்கர நாற்காலி வந்திறங்கியது.

இப்படிப்பட்ட வசதிகள் இருப்பது தெரியாமல் கல்லூரிப்படிப்பின் போது தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கல் ரோட்டில் தவழ்ந்து சென்று படித்தது நினைவுக்கு வந்தது. மழை பெய்தால் சகதியில் தான் தவழ்ந்து போவேன். கட்டிடத்தின் வெளிப்புறமாய் இருக்கும் பைப்பில் கால்களையும், கைகளையும் கழுவிக்கொண்டு மாடி ஏறுவேன்.

சக்கர நாற்காலி வந்தவுடன் எனக்கு கால் முளைத்து விட்டதாய் கருதினேன். அதற்கு காரணம் சாரு நிவேதிதாவும், அவரின் நண்பர் நிக்கியும் மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரும். சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது சக்கர நாற்காலி வெகுவாக உதவியது. ஊட்டியில் சக்கர நாற்காலியின் பயனால் போட்டிங்க், வாக்கிங் என்று இயற்கையை என்னுள் உணர முடிந்தது. எங்கு சென்றாலும் சாருவும், நிக்கியும், மனுஷ்யபுத்திரனும் கூடவே வருவதாகவே இருக்கும். சாரு, நிக்கி மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவருக்கும் நன்றிகள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சாப்பாட்டில் உப்பும், மணமும் இருந்தது. சுத்தம் இருந்தது. சுவை எங்கே??? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அது தான் பெரிய ஹோட்டலின் நிலமை போல. ஊறுகாய் மட்டும் சுறுக்கென இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மனைவி கண்ணில் ஜாடை காட்டினார். அடிப்பாவி. அதற்குள்ளாகவா ? என்று நினைத்து கண்ணாலேயே மிரட்டினேன். அருகில் தம்பி உடகார்ந்திருந்தான். எதிரில் தம்பி மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் மனைவியை மிரட்டிதை தம்பி மனைவி பார்த்து விட என்ன ? என்ன ? என்று விசாரிக்க அப்போதான் எனக்கு உண்மை தெரிந்தது. எனக்குப் பின்னாலே ஒரு ஜோடி உட்கார்ந்து இருந்தது. அந்தப் பெண் சரியான அழகு. மாநிறத்தில் கைகளில் மெஹந்தி போட்டு பார்க்க படு அசத்தலாக இருந்தாள் போலும். என் மனைவிக்கு அவளை உடனடியாக என்னிடத்தில் காட்ட வேண்டும் என்ற ஆவல். விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் மெதுவாக (சபை நாகரீகம் !) திரும்பினேன். அந்தப் பெண்ணின் நெஞ்சின் மீது பார்வை பதிந்தது. திக்கென்றது. இதென்னடா வம்பு பார்வை அங்கே போவுது என்றபடி தலையைத் திருப்பி விட்டேன். அந்த அம்மணி மார்பைக் காட்டும்படி டிரெஸ் செய்திருந்தார். பார்ப்பவரின் பார்வை அங்கே செல்வது இயல்பு. நாகரீகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் என்னென்ன விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்று நினைத்தபடி,

மெதுவாக தம்பியின் காதைக் கடித்தேன். அவன் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான். சென்னையில் இருக்கிறான் அல்லவா ? இதைவிட எதையெதையோவெல்லாம் பார்த்திருப்பான் போல. சாப்பிட்டு முடித்த பின்னர்
லாட்ஜில் இரு அறைகள் எடுத்தோம். சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் போட் ஹவுஸ் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம். போட்டிங் வர மறுத்தேன். தம்பி விடவில்லை. மறுபடி வீல்சேரில் அமரவைத்து போட்டிங் அழைத்துச் சென்றான். அவ்விடத்தில் என் தகப்பனாய் மாறி விட்டான் என் தம்பி. மகனும், மகளும் அருகருகே நடந்து வந்தனர். இடது பக்கம் மனைவி, வலது பக்கம் தம்பி மனைவி. சேரைத் தள்ளியபடி தம்பி. தம்பியின் பின்புறமாய் டிரைவர். மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.

தொடரும்.............

Saturday, October 18, 2008

சூர்யவம்சம் - பாடல்

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒருங்கே ஒரு கோட்டில் இணைந்ததன் விளைவு இந்தச் சுவையான பாடல்.

Saturday, October 11, 2008

கந்தசாமி முத்துவைக் கலங்க அடித்த கதை

முக்கியமான வேலையாக வெளியில் சென்ற போது எதிரே வண்டியில் கந்தசாமி.

”எங்கேப்பா தங்கம்?”

“வண்டி சரி பண்ணனும், அதான்“ இழுத்தேன்.

”சரி நானும் வருகிறேன்“ சொல்லியபடி என்னுடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்தார்.

மெக்கானிக் முத்து தீபாவளிக்கு வாங்கிய பேண்ட் சர்ட்டினைக் காட்டினார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்தவனாகிய அடியேன் வழக்கம்போல விலை பற்றிக் கேட்க,

“ஜீன்ஸ் 1200, சர்ட் 800 “ என்றார் முத்து.

அசந்து போனேன். 1200 எனது ஒரு மாத நெட் வாடகை. 800 ஒரு மாத மளிகை சாமான் பட்ஜெட். கந்தசாமி என் முகத்தைப் பார்க்க, நானும் பார்க்க பெருமூச்செறிந்தேன்.

”தங்கம், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” வில்லங்கத்தை அங்கேயே ஆரம்பித்தார் கந்தசாமி.

ஏதாவது வில்லங்கமா சொல்லி ஏதாவது பிரச்சினையைக் கொண்டு வந்து விடப்போகிறார் என்றெண்ணி பயந்து கொண்டே ஈனஸ்வரத்தில் “ சொல்லுங்க”

”இந்த ஜீன்ஸ் விலை 300 ரூபாய் இருக்கும். சர்ட்டின் விலை 250 ரூபாய் இருக்கும். ஆனா பாரு, 1450 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறாங்க மக்கள்” என்றார்.

அதிர்ச்சியாகி ”என்ன கந்தசாமி, ஒரேயடியாய் கபடி ஆடுறீங்க” என்றேன்.

இதைக் கேட்ட முத்துவோ அதிர்ச்சியில் சிலையாகி விட்டிருந்தார்.

”ஆமாப்பா, நான் டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்தது தான் உனக்குத் தெரியுமே. ஐந்து டாலர், எட்டு டாலருக்கு மேலே ஜீன்ஸ் பேன்டெல்லாம் கிடையாதுப்பா. அவ்வளவு தான் அடக்க விலை. வெளி நாட்டுக்கு இன்வாய்ஸ் அனுப்பும்போது பார்த்திருக்கிறேன். சரக்கு அனுப்பும் கம்பெனிக்கு 20% லாபம் சேர்த்துதான் விலை குறிப்பிட்டிருப்பார்கள்”

“அப்போ, 250 லிருந்து 400 வரைதான் என்று சொல்கின்றீர்களா? “ என்றேன்.

”ஆமாப்பா. அவ்வளவுதான் விலை. பிராண்டுக்கு என்று ஒரு விலை சேர்த்து வெளி நாட்டுக்காரன் கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். நம்ம ஊரு ஜவுளி கடையெல்லாம் நாளுக்கு ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கெல்லாம் எப்படி காசு வரும். இதோ இப்படித்தான்”

நம்பமுடியாமல் அவரையே பார்த்தேன்.

முத்துவோ புலம்ப ஆரம்பித்தார். ”அழுக்கு உடையோடு கஷ்டப்பட்டு, ஸ்பேனர் பிடித்து உழைத்துச் சம்பாதிக்கிற காசையெல்லாம் இப்படித் திருடுறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் கந்தசாமி என்னை மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு கிளம்பினார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது முத்துவின் நிலை.

Friday, October 10, 2008

கந்தசாமியுடன்(10.10.2008)

கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.

ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.

கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.

” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.

அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.

”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “

“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”

ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.

“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.

“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”

சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்

Wednesday, October 8, 2008

உயிர்கள் படும் வேதனை

எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் என் மனதை அம்பு போல் துளைத்து விட்டது. விஷயம் இதுதான். மாட்டுச் சந்தைகளில் மாடுகள் ஏலம் போடுவது பெரிய திருவிழா மாதிரி நடக்கும். மீடியாக்களில் செய்திகள் வெளியிடுவார்கள். அந்த மாட்டுச்சந்தைகளில் மாடுகளை மனிதர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளில் சொல்வது எளிதல்ல. சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.

1. பல் போன மாடுகளுக்கு, இறந்த மாட்டின் பற்களை எடுத்து வந்து, கோணி ஊசியால் துளை போட்டு அந்த பற்களை பதிப்பார்களாம். மாட்டின் விலை பற்களை வைத்துக் கணக்கிடுவார்கள்.

2. மாட்டின் கால்களை கட்டி போட்டு விட்டு அதன் வாலை பிடித்து கடித்து வைப்பார்கள் முழுவதும். மாட்டை தொட்டவுடன் துள்ளுவதற்காக. ஏனென்றால் மாடு இளமையாக இருப்பதாக காட்டி அதிக விலை விற்க வேண்டுமென்பதற்காக.

3. முட்டும் மாட்டின் கொம்புகளில் விடாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். வலி தாங்காமல் அந்த மாடு முட்டாது.

4. மாட்டின் வயிறு புடைத்தது போல் இருக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வலுக்கட்டாயமாக செலுத்துவார்கள். புடைத்த வயிறுடன் காட்ட வேண்டுமென்பதற்காக.

5. மாடு வாங்கும் போது சுழி முதன்மையாக இருக்கும். வேண்டாத சுழி இருக்கும் மாட்டை, கட்டி போட்டு நெருப்பை பத்த வைத்து கோதுமை மாவின் உதவியால் சுழி இல்லாதவாறு செய்து விடுவார்கள்.

மாடாய் பிறந்து வளர்ந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்து, அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் தாங்கி அதன் பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அவன் வயிற்றுக்குள்ளே பிரியாணியாக செல்லும் மாடுகளை நினைத்தால் ...

இதை விடவா மனிதன் துன்பப்படுகிறான்... சொல்லுங்கள்...

இலவச புத்தகங்களின் தொகுப்பு

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, எப்போது வருமென்று காத்திருந்து புத்தகங்கள் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. உலக மொழிகளில் வெளிவந்த சில புத்தகங்களை இந்தத் தளத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபத்திரண்டாயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ் மொழியில் ஒன்றும் இல்லை. படிக்க விரும்பும் நண்பர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் டவுன்லோடு செய்து பின்னர் படித்து வையுங்கள்.

http://www.gutenberg.org

Monday, October 6, 2008

உங்களில் யார் பிரபுதேவா ?

ஸ்ரீதர் - டான்ஸ் மாஸ்டரின் மேற்பார்வையில் உங்களில் யார் பிரபுதேவா நடனப் போட்டிக்குத் தேர்வானவர்களுக்கு நடனப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு துரதிர்ஷடமான நேரத்தில் விஜய் டிவியைப் பார்க்க நேர்ந்தபோது கண்களில் பட்டது இந்தக் காட்சி.

சல்சா என்பது ஒரு வகை நடனமாம். மேல் பகுதி உடம்பு ஆடாமல் இடுப்பு மட்டும் அசைய வேண்டுமாம். மைக்கில் இன்ஸ்டரக்‌ஷன் கொடுத்தவாறு ஆடிக்காட்டினார் ஒருவர். கிட்டத்தட்ட நூறு ஆண்களும் பெண்களும் இருக்கும். தனித்தனியாக ஆடினர். ஸ்ரீதர் மைக்கில் அடுத்து யாருக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவரவர்கள் ஜோடியாய் நின்று ஆட வேண்டும் என்றார்கள். ஹி..ஹி... அவனவன் கிடைத்தது சான்ஸ் என்று இடுப்பில் ஒரு கை. தோளில் ஒரு கை என்று அணைத்துப் பிடித்தவாறு ஆட ஆரம்பித்தார்கள். பின்புறங்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு சிறுவன் வேறு மாட்டிக் கொண்டான். வெட்கத்தில் அவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்க இடுப்பை ஆட்டினான்(டான்ஸ்ப்பா!).

விடிகாலையில் எழுந்து குளிரில் குளித்து மட மடவென மடிப்புக் கலையாத சட்டைப் போட்டு சைக்கிளில் அரக்கப் பரக்க மிதித்து அவள் வருவதற்கு முன்பே சென்று காத்திருந்து அவள் வரும் வரை அவளுக்காக உருகி உருகி வந்தவுடன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கிறாளா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்தும் பார்க்காதவாறு அவளையேக் கவனித்து காதல் செய்து, கட்டிலில் கண்ணாமூச்சி விளையாடிய காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு.

சின்னத்திரை மீடியாக்கள் இன்று ஜோடிகளை சேர்த்துச் சேர்த்து ஆட விட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு எழுத்தாளர் சொன்ன கருத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

அந்த எழுத்தாளர் பெயர் : ஜேம்ஸ் ஜாய்ஸ்
நாவலின் பெயர் : A PAINFULL CASE
கருத்து : ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை.
உதவி : திரு ஆர்பி.ராஜநாயஹம்

உடனே அம்மா, அக்கா, தங்கை என்று ஆரம்பிக்க கூடாது. மனசுக்கு பட்டுச்சு எழுதிவிட்டேன். குறிப்பு : எனக்குள் இருக்கும் கலாச்சாரக்காவலனின் ஆசை இது. வேறு வழியின்று எழுதி தொலைக்க வேண்டிய கட்டாயம். எழுதிவிட்டேன்.

அன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008

ரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.
ஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.

சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.

வாழ்த்துக்கள் ரித்தி...

அன்பு அப்பா