குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஊட்டி. Show all posts
Showing posts with label ஊட்டி. Show all posts

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Thursday, January 13, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச தொடர்)

இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம். 

கிழக்கு தலைவாசல் :

கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கு தலைவாசல :

மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.  மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.  மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு

ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள். 

எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.

10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.

மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.

இமெயில் : info@fortunebricks.net அல்லது info@fortuneenterprise.in அல்லது covaimthangavel@gmail.com

தொலைபேசி எண் : + 91 422 4275976 

மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் /  ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி

எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================



Wednesday, November 5, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 3

போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.





சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.

தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.

அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.

தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.

வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?

ஏன் ???????????????????????????????????????????????????????????

Wednesday, October 22, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 2

எனக்கு மக்களைப் பற்றியும் அவர்களின் பார்வைகள் பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை. காசே இல்லை என்றால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள். காசு பணம் வந்தால் கொள்ளை அடிக்கிறான் என்பார்கள். இவர்களின் பார்வை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை போல இருக்கும். இந்த மக்களால் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பள்ளியில் படித்த போது முதல் மார்க் வாங்குவேன். எனக்கும் என் மச்சானுக்கும் தான் போட்டி. மாலையில் டியூசன் முடித்து மூன்று சக்கர வண்டியில் முக்கி முனகியபடி வருவேன். அந்த நேரம் பார்த்து கடையில் வெறும் வாய் மெல்ல வருபவர்கள், ”ஏண்டா, உன் மாமனை கடை கன்னி வச்சுத் தரச்சொல்லி சம்பாதிக்கலாம்ல. எதுக்குடா, எங்க பையனுவ படிப்பையும் சேர்த்துக் கெடுக்கிறே” என்பார்கள். இவர்கள் எல்லாம் என்மீது கோபம் கொண்டவர்கள். இவர்களின் பையன்கள் முதல் மார்க் வாங்க முடியவில்லை என்று தனக்குள் கருவிக் கொண்டு சொல்லால் குளவியாய் கொட்டும் உன்மத்தர்கள். மாமனும், மச்சானுமே முதல் மார்க்கும் இரண்டாம் மார்க்கும் எடுத்தா நம்ம பயலுக எப்படி முதல் மார்க்கு எடுக்கிறது என்ற ஏக்கம். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் எனக்குள் வன்மம் எழும். முறைத்து விட்டு இன்னும் வேகமாக சைக்கிளைச் சுற்றுவேன்.




கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் செல்ல மூன்று பஸ் மாற வேண்டும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டின் ஆரம்பத்தில் நிற்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி எச்சிலும், கோழையும் துப்பி காய்ந்து கிடக்கும் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை இழுத்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் என்னைப் பார்த்ததும், ”டேய் உனக்கு அறிவில்லை. இதே எழவா போச்சு. வேற பஸ்ஸைப் பாரு” என்றார். கண்டக்டரை கர்ண கடூரமாக முறைத்தேன். அதே சமயத்தில் ஒரு முக்காடு போட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் 25 பைசா காசை கையில் வைத்தார். அவர்களை என்னதான் செய்வது ? அவர்களைப் பொறுத்த வரை அது உதவி. ஆனால் அது எனக்கு என் தன்மானத்துக்கு விடப்படும் சவால். அந்த அம்மாவிடமே காசை திரும்பக் கொடுத்து வேண்டாம் என்று மறுத்தேன். அது என் முகத்தையே உற்று உற்றுப் பார்த்தபடி வந்தது. கண்டக்டர் அருகில் வந்து மன்னிக்கவும் என்றார். மன்னிப்பாம் மன்னிப்பு. என்னாங்கடா ஒருத்தனை கேலி பண்ணி அவனிதயத்தை குத்தி கிழித்து விட்டு மன்னிப்பாம். புண்ணாக்கு. இவனுகளை நிக்க வச்சு பழுக்க காய்ச்சிய கடப்பாரையை குண்டியில சொருகனும் போல வன்மம் வரும். ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யக்கூட திராணியில்லாதவர்கள். கொலை செஞ்சா அந்த நிமிடத்தோடு வலியும் போகும் உயிரும் போகும். ஆனால் இதயத்தைக் கிழித்தால் சாகும் வரை அல்லவா அந்த வலி இருக்கும்.

இதையாவது ஒரு வழியா மன்னிக்கலாம். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே ரத்தம் கொதிக்கும். மிகப் பெரிய ஹோட்டலில் மூன்று நாள் வாசம். நானும் நண்பரும் ஒரு பெரிய பிசினஸ் சம்பந்தமாக வந்து பேச்சு வார்த்தையெல்லாம் முடித்து விட்டு ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்டில் பத்து லட்சரூபாய் காரில் வந்து இறங்கினோம். என்னை இறக்கி விட்டவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். பஸ்ஸில் ஏற இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள்ளாக காரில் வந்த ஒரு மகாத்மா ஒரு ரூபாய் காசை என் மீது விட்டெறிந்தார். எனக்கு அது சகஜமான நிகழ்ச்சி. என் நண்பருக்கோ கோபம். காசை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டாப் என்று கத்தினார். கார்காரர் என்னவோ ஏதோவென்று நிறுத்த அவரிடம் சென்ற என் நண்பர், “ஏன்யா அவர் உன்னிடம் காசா கேட்டார்” என்று சொல்லி முறைத்து விட்டு வந்தார். கார்காரர் ”சாரி” கேட்டார். என் நண்பருக்கு படபடப்பு அடங்க வெகு நேரமானது.

இப்படிப்பட்ட மனிதர்களால் சில நேரங்களில் தன்மானம் கிழித்தெறியப்படும் போது உள்ளுக்குள் சமூகத்தின் மீது வன்மம் பற்றி எரியும். அது தவறு என்று இப்போதைய மனநிலை சொல்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எழும் மனநிலை அதை உணருமா ? கொதிக்கும். இப்போது நான் எவரின் மீதும் வன்மம் கொள்வதில்லை. காரணம் வாழ்க்கை. எனக்குள் இருக்கும் வன்மம் இன்று ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. மகிழ்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியைப் பெறலாம். துன்பத்தைக் கொடுத்தால் துன்பத்தைப் பெறலாம். இது தான் மனித வாழ்வின் அடி நாதம். ஆனால் யாரும் அதை உணருவதாய் இல்லை. அதைப் பற்றி எனக்கும் கவலையும் இல்லை.

கதை எங்கேயோ சென்று விட்டது. என்ன செய்வது சில நேரங்களில் இப்படியும் ஆகிவிடும். சாலை ரிப்பேர் செய்யப்படுகிறது மாற்று வழியில் செல்லுங்கள் என்ற போர்டினைப் பார்த்து மாற்று வழி மூலமாக சேருமிடம் போவோமில்லையா அதைப் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெகு ஆழமான பகுதி. ஓரத்தில் மீன்கள் துள்ளிக் குதித்தன. பார்க்கும் போது பரவசமாய் இருந்தது. என் இதயமே துள்ளிக் குதித்ததாய் கற்பனை கரைபுரண்டோடியது. தம்பி “அண்ணே, மான் பாரு “ என்றான். பார்த்தேன். சிறையில் மான். வாழ்க்கைக்குள் மனிதன். இரண்டும் பொறுந்தி வருவதாய் தோன்றியது.




இயற்கையைச் சுற்றிப் பார்க்க வந்து விட்டு, புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..................

Tuesday, October 21, 2008

ஊட்டி சென்று வந்த கதை 1

சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் அழைப்பு. நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன். ஊட்டி போகனும். கார் ரெடி பண்ணி வை என்றான். கூடவே அவன் அம்மணியும் வருவதாகச் சொன்னான்.

கோவையில் டிராவலிங் கம்பெனியில் கார் வாடகை பேசினேன். நாள் ஒன்றுக்கு 800 ரூபாய். 12 மணி நேரக் கணக்காம். கிலோ மீட்டருக்கு 6.50 ரூபாய். ஏசி என்றால் ஒரு ரூபாய் அதிகம். டிரைவருக்கு நாள் ஒன்றுக்கு 150 மற்றும் சாப்பாட்டு செலவு நம்முடையது. ஆக நாள் ஒன்றுக்கு 1600+150+100 சேர்த்து 1850.00ரூபாய். அதை விடுத்து கிலோமீட்டருக்கு காசு வேறு. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2250.00 ரூபாய் தனி. மூன்று நாட்கள் 5550ம் 2250ம் சேர்த்தால் 7800 ரூபாய் காருக்கு மட்டும் செலவாகும். அசந்து விட்டேன். அட நொக்கா மக்கா, இங்கே இருக்கும் ஊட்டிக்குச் சென்று வர மூன்று நாளுக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாயா ?

எனது நண்பர் வேறொரு கார் கம்பெனியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கார் கம்பெனியில் வாடகைக்கு கார் எடுத்த விபரத்தைக் கீழே பார்க்கவும். இதயமே நின்று விடும். படித்துப் பாருங்கள். டிராவலிங்க் கம்பெனிகள் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் கார் கம்பெனியில் கார் எடுக்க வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நம்பர் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.

டாட்டா இண்டிகோ, ஏசி கார். நாள் ஒன்றுக்கு (24 மணி நேரம்) 1450 ரூபாய் வாடகை. டீசல் செலவு நம்முடையது. கார் வரும்போது டீசல் நிரப்பி வரும். காரை விடும்போது டீசலை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிரைவர் பேட்டா, சாப்பாட்டு செலவு கிடையாது. இது தான் நான் வாடகை பேசி எடுத்த காரின் வாடகை விபரம். முதல் நாள் பத்தரைக்கு கிளம்பி மூன்றாம் நாள் நான்கு மணிக்கு வீடு திரும்பியதால் வாடகையும் டீசலும் சேர்த்து ஊட்டிக்குச் சென்று வந்த கார் செலவு 3995.00 ரூபாய். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் மிச்சமானது.

தம்பியும் அவன் மனைவியும் விடிகாலையில் வீட்டில் ஆஜர். டேய் கிளம்புடா என்றான். அடேய் விளங்காத பயலே.. உனக்குதானடா ஹனிமூன் டிரிப். தனியாப் போயிட்டு வா என்றேன். முடியாது என்று மறுத்து விட்டான். சப்ளையர் ஒருவர் மதியம் பதினொன்றரைக்கு சந்திக்க வருவதாக கூறியிருந்தார். எல்லாம் சொல்லிப் பார்த்தேன். முடியாது என்று மறுத்துவிட்டான். மகள், மகன், மனைவி, தம்பி, தம்பி மனைவியுடன் ஊட்டிக்குப் பயணம்.

வழியில் டீ கூட குடிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டிவிடுமென்று தம்பி தடுத்து விட்டான். இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். மிகவும் நல்ல ஹோட்டலாக செல்லுங்கள் என்று டிரைவரிடம் சொன்னேன். அவர் சென்ற இடம் ஹோட்டல் நஹர். காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள். எனக்கு தயிர்சாதம் கட்டி வாருங்கள். காரிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். தம்பி விடவில்லை. காரின் பின்புறம் டிக்கியில் மடித்து வைத்திருந்த சக்கர நாற்காலியினை எடுத்து வந்து உட்கார வைத்து ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.



நான் எங்கும் செல்வது கிடையாது. காரணம் என் உடல் பிரச்சினை. முடிந்த அளவுக்கு மறுத்து விடுவேன். சாருதான் என்னை முதலில் வெளிக் கொணர்ந்தவர். ஒரு நாள் சாரு என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தங்கம், வீல்சேர் இருக்கிறதா உங்களிடம் என்று கேட்டார். இல்லை சார். நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றேன். அடப்பாவி என்று அதிர்ந்தார். இதை அவர் நண்பர் நிக்கியிடம் சொல்லி இருக்கிறார். அவர் உடனே செக்கை நீட்டியிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் மனுஷ்யபுத்திரனிடமிருந்து சக்கர நாற்காலி வந்திறங்கியது.

இப்படிப்பட்ட வசதிகள் இருப்பது தெரியாமல் கல்லூரிப்படிப்பின் போது தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கல் ரோட்டில் தவழ்ந்து சென்று படித்தது நினைவுக்கு வந்தது. மழை பெய்தால் சகதியில் தான் தவழ்ந்து போவேன். கட்டிடத்தின் வெளிப்புறமாய் இருக்கும் பைப்பில் கால்களையும், கைகளையும் கழுவிக்கொண்டு மாடி ஏறுவேன்.

சக்கர நாற்காலி வந்தவுடன் எனக்கு கால் முளைத்து விட்டதாய் கருதினேன். அதற்கு காரணம் சாரு நிவேதிதாவும், அவரின் நண்பர் நிக்கியும் மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரும். சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது சக்கர நாற்காலி வெகுவாக உதவியது. ஊட்டியில் சக்கர நாற்காலியின் பயனால் போட்டிங்க், வாக்கிங் என்று இயற்கையை என்னுள் உணர முடிந்தது. எங்கு சென்றாலும் சாருவும், நிக்கியும், மனுஷ்யபுத்திரனும் கூடவே வருவதாகவே இருக்கும். சாரு, நிக்கி மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவருக்கும் நன்றிகள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சாப்பாட்டில் உப்பும், மணமும் இருந்தது. சுத்தம் இருந்தது. சுவை எங்கே??? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அது தான் பெரிய ஹோட்டலின் நிலமை போல. ஊறுகாய் மட்டும் சுறுக்கென இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மனைவி கண்ணில் ஜாடை காட்டினார். அடிப்பாவி. அதற்குள்ளாகவா ? என்று நினைத்து கண்ணாலேயே மிரட்டினேன். அருகில் தம்பி உடகார்ந்திருந்தான். எதிரில் தம்பி மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் மனைவியை மிரட்டிதை தம்பி மனைவி பார்த்து விட என்ன ? என்ன ? என்று விசாரிக்க அப்போதான் எனக்கு உண்மை தெரிந்தது. எனக்குப் பின்னாலே ஒரு ஜோடி உட்கார்ந்து இருந்தது. அந்தப் பெண் சரியான அழகு. மாநிறத்தில் கைகளில் மெஹந்தி போட்டு பார்க்க படு அசத்தலாக இருந்தாள் போலும். என் மனைவிக்கு அவளை உடனடியாக என்னிடத்தில் காட்ட வேண்டும் என்ற ஆவல். விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் மெதுவாக (சபை நாகரீகம் !) திரும்பினேன். அந்தப் பெண்ணின் நெஞ்சின் மீது பார்வை பதிந்தது. திக்கென்றது. இதென்னடா வம்பு பார்வை அங்கே போவுது என்றபடி தலையைத் திருப்பி விட்டேன். அந்த அம்மணி மார்பைக் காட்டும்படி டிரெஸ் செய்திருந்தார். பார்ப்பவரின் பார்வை அங்கே செல்வது இயல்பு. நாகரீகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் என்னென்ன விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்று நினைத்தபடி,

மெதுவாக தம்பியின் காதைக் கடித்தேன். அவன் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான். சென்னையில் இருக்கிறான் அல்லவா ? இதைவிட எதையெதையோவெல்லாம் பார்த்திருப்பான் போல. சாப்பிட்டு முடித்த பின்னர்
லாட்ஜில் இரு அறைகள் எடுத்தோம். சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் போட் ஹவுஸ் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம். போட்டிங் வர மறுத்தேன். தம்பி விடவில்லை. மறுபடி வீல்சேரில் அமரவைத்து போட்டிங் அழைத்துச் சென்றான். அவ்விடத்தில் என் தகப்பனாய் மாறி விட்டான் என் தம்பி. மகனும், மகளும் அருகருகே நடந்து வந்தனர். இடது பக்கம் மனைவி, வலது பக்கம் தம்பி மனைவி. சேரைத் தள்ளியபடி தம்பி. தம்பியின் பின்புறமாய் டிரைவர். மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.

தொடரும்.............