குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.