திருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம்.
ஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.
உடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்?' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவி செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும்.
எளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது. மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது.
நிற்க.
நான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான்.
ஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.
ஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.
சஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க.
அந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப் பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம்? இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது?
ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்? என நினைத்துப் பாருங்கள்.
ஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.
ஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.
பானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.
நன்றி : சஞ்சிகை இதழ்
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.