குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Thursday, April 20, 2017

கிட்னியில் கல் நீக்க மருந்து

எனது நண்பரின் மகன் திடீர் வயிற்று வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்த போது ஸ்கேனில் கிட்னியில் கல் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது. ஆபரேசன் அது இதுவென்று பத்தாயிரத்துக்கும் மேல் செலவாகும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். கிட்னி கல்லை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் சொல்ல பையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லி இருக்கின்றான். அட லூசுப்பயலே, இதுதானா பிரச்சினை, கவலையை விடு, சரி செய்து விடலாம் என்றுச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த ஒரு நாட்டு மருந்து கொடுப்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

600 ரூபாய் விலையாம். அடுத்த இரண்டொரு நாட்களில் கிட்னியிலிருந்த கல் உடைந்து சிறு நீருடன் வெளியேறி இருக்கிறது. பையன் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறான். பத்து எம்.எம். கல் இருந்தாலும் உடைந்து சிறு நீரோடு வெளியேறி விடுமாம். 

சாதாரண கிராமத்தில் இருந்து கொண்டு அந்த நாட்டு மருந்தினை பிரச்சினை இருப்பவருக்கு உடனுக்குடன் செய்து கொடுக்கின்றார்களாம். 

உங்களுக்குத் தெரிந்தவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்றால் என்னை அழைக்கச் சொல்லவும். மருந்து வாங்கித் தர ஏற்பாடு செய்து தருகிறேன். வெளியூரில் இருப்போர்கள் அவசியம் கோவை வர வேண்டும். பார்சலில் மருந்து வாங்கி அனுப்ப இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் வர வேண்டுமென்பது கட்டாயம்.

தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே அழைப்புகளை எடுக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Thursday, April 6, 2017

அம்முவுக்குச் சொன்ன அப்பத்தாவின் வாழ்க்கை

பத்து வீடு தள்ளி இருக்கும் பள்ளி வாசலிலிருந்து வரும் பாங்கழைப்புக் கேட்டு நான்கரை மணிக்கு எழுந்து குடத்தடிக்குச் சென்று குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவி விட்டு, அடுப்புச் சாம்பல் எடுத்து பல் துலக்கி, வாய் கொப்பளித்து விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று சவுக்கில் பின்னப்பட்ட கூடையில் சாணியை வழித்து எடுத்து குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு, அதில் கொஞ்சம் சாணியை எடுத்துக் கொண்டு வந்து வாளியில் வைத்து தண்ணீர் ஊற்றி கையால் தெளிக்கும் அளவுக்குக் கரைத்து வாசலுக்குக் கொண்டு வந்து பதவிசாக தெளித்து விட்டு, வாளியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கும் இலை தழைகளையும் குப்பைகளையும் பெருக்கிக் குப்பைக் கிடங்கில் சேர்த்து விட்டு நிமிர்ந்து கட்டுத்தறிக்குச் செல்லும்.

கட்டுத்தறியில் கட்டிக் கிடக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவி எடுத்து வந்து தீனி போட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் குடத்தடியில் போட்டு விட்டு அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விட்டு, அடுப்படிக்கு வந்து அடுப்புச் சாம்பலை ஒரு தட்டில் வறண்டி எடுத்து வைத்து விட்டு சோத்துப் பானையில் முக்கால் திட்டம் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீது வைத்து விறகை எடுத்து அடுப்பினுள் வைத்து அதனுள்ளே பதவிசாக தீக்குச்சி உரசி விறகைப் பற்ற வைத்து விட்டு குடத்தடிக்கு வரும்.

சாம்பலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கையில் தேங்காய் நாரை எடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு சாம்பலைத் தொட்டுக்கொண்டு அத்தனை பாத்திரங்களையும் விருட் விருட் என்று துலக்கி தண்ணீர் விட்டு அலசி சுத்தமாகக் கழுவி எடுத்து அடுப்பங்கரைக்குள் நுழைந்தால் அடுப்பில் இருந்த உலைப்பானையில் தண்ணீர் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும்.

இரண்டு படி அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி, கழனித் தண்ணியை மாட்டுப்பொக்கையில் விட்டு களைந்தெடுத்த அரிசியைக் கொண்டு வந்து உலையில் போட்டு விட்டு, பக்கத்து அடுப்பினை மூட்டி அதில் முதல் நாள் மீந்திருந்த குழம்புகளைச் சுட வைத்து இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் காய்கறிகளை எடுத்து நறுக்கி பொறியலோ அல்லது கூட்டோ செய்து விட்டு, வடகம், மிளகாய் வத்தல்களை பொறித்து எடுத்து வைத்து விட்டு, அதற்குள் வெந்த சோறுப்பதம் பார்த்து கஞ்சியை வடித்து விட்டு, ஈரத்துணியில் சோற்றுப்பானையைச் சுற்றிலும் துடைத்து பிருமனையின் மீது வைத்து விட்டு, வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பையை அள்ளி குப்பைக்கிடங்கில் சேர்த்து விட்டு நிமிரும்.

கதறும் மாட்டின் கன்றினை அவிழ்த்து விட்டு, மடியில் பால் சுரந்ததும் கன்றினைக் கட்டிப் போட்டு கொஞ்சம் பாலைக் கரந்து கொண்டு வந்து அடுப்பில் வைத்து சுட வைத்து விட்டு, மோர்ப்பானையை எடுத்து மத்தை வைத்து கரகரவென கடைந்து திரளும் வெண்ணையை வழித்தெடுத்து, அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தங்கத்தின் வாயில் வெண்ணெய் உருண்டையில் கொஞ்சம் போட்டு விட்டு மோரை எடுத்து பாத்திரத்தில் வைத்து விட்டு பெரிய தவளைப் பானையை எடுத்து அதில் சோற்றினைப் போட்டு மோர் ஊற்றி உப்புச் சேர்த்து வயக்காட்டில் வேலை செய்பவர்களுக்கு கஞ்சியை தயார் செய்து, தொட்டுக்கொள்ள வெந்தய மாங்காய் ஊறுகாய், அடமாங்காய், மிளகாய் வத்தல், வடகம் எடுத்து வைத்து, பனை ஓலை நறுக்கை ஆள் கணக்குக்குத் தகுந்தாற் போல எடுத்து கட்டி வைத்து விட்டு, வீட்டு ஆட்களுக்கு சோறு போட்டு கொடுத்து விட்டு தலையில் சும்மாடு வைத்து தவளைப் பானையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பில் கூடையில் சைடு டிஷ் வகையறாக்களுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் வயலுக்குச் செல்லும்.

வயலில் இருந்து திரும்பி வரும் போது கையோடு காய்கறிகளோ அல்லது மீனோ அல்லது நண்டோ இருக்கும். மீன் இருந்தால் அதை சிலாம்பு நீக்கி தலையை அரிந்து, சட்டியில் போட்டு உப்புச் சேர்த்து உரசி, தண்ணீர் விட்டு அலசி, வெள்ளிக்கம்பி போல மின்னும் மீனுடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து கைப்பக்குவத்தின் மகிமையில் வீடே மணக்கும் மீன் குழம்போ அல்லது காய்கறிக் குழம்போ தயார் செய்து வைக்கும்.

வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வேலைக்காரர்களுக்கு சோறு போட்டு மீன் குழம்பினை ஊற்றிக் கொடுக்க அவர்களும் வயறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு ’போய்ட்டு வாரேன், தேவச்சியாரே!’ என்றுச் சொல்லி விடை பெறுவர். 

பள்ளி சென்று வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு கிணற்றடிக்குச் சென்று பொக்கையில் இருக்கும் தண்ணீரில் குளித்து விட்டு மாலை மயங்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்தால் மணக்கும் மீன் குழம்போடு சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும். சாப்பிட்டு விட்டு பாடப் புத்தகத்தை விரித்து வைத்து படித்து விட்டு எட்டு எட்டரைக்கெல்லாம் தூங்கப் போய் விடுவேன்.

மறு நாள் காலையில் பாங்கழைக்கும் நேரத்தில் அருகில் அம்மா இல்லாததைக் கண்டு திரும்பிப் படுப்பேன்.

காய்ந்து போன இலைச்சருகுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் ’வரட், வரட்’ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். விடிகாலைக் குளிர் தூக்கம் சுகமானது. தாலாட்டுவது போல அம்மா கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் சத்தம் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும்